தமிழகத்தில் செஸ் தோன்றியதற்கான சான்றாக பார்க்கப்படும் 1,500 ஆண்டுகள் பழமையான சதுரங்க வல்லபநாதர் கோயில்
Tiruvarur Sadhuranga Vallabanathar Temple : 44வது 'செஸ் ஒலிம்பியாட்' தொடரையொட்டி, தமிழகமெங்கும் சதுரங்க ஜூரம் பிடித்திருக்க, சிவன் சதுரங்கம் விளையாடியதாக கூறப்படும் புராதன சிறப்புமிக்க கோயில் ஒன்று, கவனிப்பார் இன்றி உள்ளது. அதுபற்றி ஒரு சிறப்புத் தொகுப்பை பார்க்கலாம்.
செஸ் போட்டி இந்தியாவில் தோன்றி, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பிரபலமான கூறப்படுகிறது. அதேவேளையில், செஸ் போட்டி தமிழகத்தை பாரம்பரியமாக கொண்டது என்று, ஓர் கோயிலின் தல வரலாறு கூறுகிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே மன்னார்குடி சாலையில் பூவனூர் என்ற கிராமத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான சதுரங்க வல்லபநாதர் கோயில் அமைந்துள்ளது.
ஆதிகாலத்தில் வசுசேனன் என்ற பாண்டிய மன்னனுக்கு, அன்னை பார்வதி தேவியே மகளாகப் பிறந்தார் என்றும், அவர் ராஜேஸ்வரி என்ற பெயருடன் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. சதுரங்கப் போட்டியில் வல்லமை படைத்தவராக விளங்கிய ராஜேஸ்வரியை, வயதான சித்தர் வேடத்தில் வந்த சிவபெருமான் வெற்றி கொண்டதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பின்னர், தனது திருவுருவத்தைக் காட்டி ராஜேஸ்வரியாக வளர்ந்த பார்வதி தேவியை, சிவபிரான் ஆட்கொண்டார் என்பது இந்த கோயிலின் தல வரலாறாக உள்ளது..
செஸ் ஒலிம்பியாடுக்காக தமிழகமெங்கும் விழாக்களும், போட்டிகளும் களை கட்டியிருக்கும் சூழலில் சிவபிரான் சதுரங்கம் விளையாடிய வல்லபநாதர் ஆலயத்தை புனரமைத்து, ஆதிகால வரலாற்றை வருங்கால சந்ததியினர் அறியும்படி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது..
வல்லபநாதர் கோயிலில் இருந்து 11 கல்வெட்டுகளை மத்திய அரசின் தொல்லியல் துறையினர் கண்டறிந்து பதிவுச் செய்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, இந்த கோயில் பூவனூர் என்று அழைக்கப்படுவதும், பழமையான கோயில் என்பதும் உறுதியாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த பழமையான கோயிலில், சிவன் சதுரங்கம் விளையாடினார் என்பது ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் ஒரு செவிவழிச் செய்தியாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சிவபிரான் சதுரங்கம் ஆடிய சிற்பமும் கோயிலில் இன்றளவும் காணப்படுகிறது.
சிவன் சதுரங்கம் ஆடிய சிலை இருந்தாலும் கல்வெட்டுகள் இல்லை என கூறப்படுகிறது. அதே வேளையில், எல்லோரா குகையில் சிவனும், பார்வதியும் சதுரங்கம் போன்ற 'டைஸ்' எனப்படும் 'சொக்கட்டான்' விளையாடுவது சிற்பமாகவே செதுக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்...
No comments:
Post a Comment