Monday, August 1, 2022

மூலிகை மலையும் ஆடி பதினெட்டும்

ஆடி 18 என்றாலே கரூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்ட மக்களுக்கு நினைவிற்கு வருவது... கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியிலிருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ரங்கமலை. 
கரூர், திண்டுக்கல் மாவட்டத்தின் எல்லை யில் உள்ள இந்த மலையின்  தென்பகுதி திண்டுக்கல் வனத்துறை மேற்பார்வையிலும், வடபகுதி கரூர் மாவட்ட வனத்துறை பாதுகாப்பிலும் உள்ளது. சுமார் ஆயிரத்து 500 அடி உயரம் கொண்ட இந்த ரங்கமலையை பசுமையான காடு சூழ்ந்துள்ளது. ரங்கமலை மீது அமைந்துள்ள மல்லீஸ்வரன் கோவிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, கிருத்திகை நாட்களில் சிறப்பு பூஜை ஆகியவை நடைபெறுவது வழக்கம். 
மேலும், ஆண்டுதோறும் ஆடி 18-ந் தேதி ஆடி பெருக்கு விழாவின் போது சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் ரங்கமலைக்கு வந்து மல்லீஸ்வரரை தரிசனம் செய்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு செல்வதற்கு முன்பு பக்தர்கள் மலையின் அடிவாரத்தில் உள்ள விநாயகரை தரிசனம் செய்து விட்டு பின்னர் மலை ஏறி மல்லீஸ்வரர் கோவிலுக்கு செல்கின்றனர்.
கோவிலின் சிறப்புகள்
இக்கோவிலில் கழுத்தை பிடித்த நிலையில் மேற்கு நோக்கிய சுயம்பு லிங்கம் உள்ளது. மேலும் இந்த கோவிலில் கிண்ணாரக்கல், தோரக்கல், தங்கம்-வெள்ளி ஆறு, கருடன் வலம், கருநொச்சி குச்சி, விராலி மூலிகை, சஞ்சீவி மூலிகை, கைலாயக்குகை, நுழையாம்பாளி, காணாச்சுனை என பல்வேறு சிறப்புகள் உள்ளது. மேலும், இம்மலையில் மூலிகைகள் அதிகமாக உள்ளதால் சிலர் தேக நலன் கருதி மலையில் சில நாட்கள் தங்கி விட்டு செல்வதும் உண்டு. ரங்கமலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு மலை மீது நடந்து சென்றால் கோவிலுக்கு சற்று கீழே பாதாளத்தில் பாறையில் நீர் ஊற்று உள்ளது. இந்த கோவிலுக்கு வந்து சென்றால் திருமணம் கைகூடும் என்பதும், குழந்தைப்பாக்கியம் ஏற்படும் என்றும், நினைத்த காரியம் கைகூடும் என்றும் பெரியோர்கள் கூறுகின்றனர். அதனால் புதுமணத்தம்பதிகள் இந்த கோவிலுக்கு அதிக அளவில் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த மலையில் ஏறும்போது பச்சை பசேலென்ற அழகான இயற்கை அழகு பக்தர்களின் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று இங்கு வருபவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...