Sunday, September 25, 2022

சிவபெருமானுக்கு ஒரு ராத்திரி 'சிவராத்திரி". அம்பாளுக்கு ஒரு ராத்திரி 'நவராத்திரி"

நவராத்திரி ஆரம்பம்... கொலு வைப்பது எப்படி? உகந்த நேரம் இதோ...!!
                நவராத்திரி ஆரம்பம்...!!
சிவபெருமானுக்கு ஒரு ராத்திரி 'சிவராத்திரி". அம்பாளுக்கு ஒரு ராத்திரி 'நவராத்திரி" என்பது ஆன்றோர்களின் வாக்கு.

அம்பிகையை வழிபடுவதற்கு பல விழாக்கள் இருந்தாலும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அம்பிகையை மூன்று வடிவங்களில் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக விரதம் இருந்து வழிபடக்கூடிய ஒரு விழாவாக, நவராத்திரி விழா விளங்குகின்றது.

முக்கிய விரதங்களில் ஒன்றான நவராத்திரி விழா நாளை (26.09.2022) திங்கட்கிழமை ஆரம்பமாகின்றது. 

நவராத்திரி :

மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும்.

நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.

தனம், தானியம், நிலையான இன்பம், ஆரோக்கியம், சொர்க்கம் மற்றும் வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரிக்கு கொலு வைப்பது ஏன்?

ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி மற்றும் மனிதர் என எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளை காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.


முதல் படி, அதாவது கீழ் படியில் - ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்.

இரண்டாம் படியில் - இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.

மூன்றாம் படியில் - மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள்.

நான்காம் படியில் - நான்கறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.

ஐந்தாம் படியில் - ஐந்தறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள்.

ஆறாம் படியில் - ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.

ஏழாம் படியில் - சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள்.

எட்டாம் படியில் - தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.

ஒன்பதாம் படியில் - பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.

கொலு வைக்க சிறந்த நேரம் :

காலை - 06.15 மணி முதல் 07.15 மணி வரை

நண்பகல் - 12.05 மணி முதல் 02.05 மணி வரை

மாலை - 06.05 மணி முதல் 09.05 மணி வரை
நவராத்திரி சிறப்புகள் :

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சர்க்கரை பொங்கல், உளுந்து வடை போன்ற நெய்வேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி நாட்களில் வீட்டில் அரிசி மாவை பயன்படுத்தி கோலமிட வேண்டும். இவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சிறந்த வழிபாடாகும்.

தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கல பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தான தர்மங்கள் தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவி புரிகின்றன.

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...