புஞ்சை (திருநனிபள்ளி)
கிடாரங்கொண்டான் அஞ்சல் - 609304
மயிலாடுதுறை மாவட்டம்.
தலம் :- திருநனிபள்ளி (தற்போது இத்தலம் புஞ்சை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது)
இறைவன் பெயர்:- நற்றுணையப்பர்
இறைவி பெயர்:- மலையாள் மடந்தை, பர்வதராஜ புத்திரி
தலமரம்: வில்வம், செண்பகம்.
தீீர்த்தம்: சொர்ண தீர்த்தம்
இது மூவராலும் பாடப் பெற்ற சிறப்புத் தலம் :-
திருநாவுக்கரசர் - 1பதிகம்
திருஞானசம்பந்தர் - 1பதிகம்
சுந்தரர் - 1பதிகம்
மயிலாடுதுறை - திருக்கடவூர் சாலையில் திருசெம்பொன்பள்ளி சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தூரத்தில் இத்தலம் உள்ளது.
"கிடாரம் கொண்டான் புஞ்சை" : பெயர் காரணம்: சோழப் பேரரசனான ராஜேந்திர சோழன், இன்றைய மலேசிய நாட்டிலுள்ள பண்டைய ‘கெடா’ என்ற நகரத்தை வென்றதன் நினைவாக ‘கடாரங்கொண்ட சோழீச்சுரம்’ என்ற ஊரை சோழ நாட்டினில் உருவாக்கினான். கடாரங்கொண்டான் என்பதே மருவி கிடாரங் கொண்டான் ஆகிவிட்டது.
*அகத்தியரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தை விநாயகர் தட்டி விட்டதால் அவருக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க விநாயகர் இங்குள்ள குளத்தில் நீராடி வழிபாடு செய்துள்ளார். இதனால் இத்தலம் "பொன்செய்' ஆனது. இதுவே காலப்போக்கில் மருவி "புஞ்சை' ஆனது என்றும் கூறுவர்.
*காவிரி நதி இங்கு கிழக்கு முகமாக வந்து மேற்கு முகமாக திரும்பி செல்கிறது. இதனை பஸ்வமாங்கினி என்பர்.
*சமணர் பள்ளிகள் இங்கு மிகுதியாகக் காணப்பட்டதால் நனிபள்ளி எனப் பெயர் வந்தது.
*இவ்வூரே திருஞானசம்பந்தரது தாயார் பகவதியம்மை பிறந்த தலமாகும்.
* மூன்றாம் வயதில் திருஞானசம்பந்தர் தன் திருவடி நோக நனிபள்ளி நோக்கி நடந்தார். ஆளுடைய பிள்ளையார் கால்கள் நோக நடப்பதைக் கண்ட அவரது தந்தை சிவபாத இருதயர் ஞானசம்பந்தரை தனது தோளில் அமர்த்திக் கொண்டு சென்றார். தந்தையார் இது தான் திருநனிபள்ளி தலம் என்று கூற "காரைகள் கூகைமுல்லை களவாக ஈகை" எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிக் கொண்டே நனிபள்ளி ஆலயத்தை அடைந்த சம்பந்தர் இறைவனை வணங்கிப் போற்றினார். இப்பதிகமே பாலை நிலமாக இருந்த திருநனிபள்ளியை அவ்வூர் வாழ் மக்கள் வேண்டுகோளின்படி நெய்தல் நிலமாக மாற்றியருளிய பதிகம் என்று கூறப்படுகிறது.
தனது தந்தை தோள் மீதமர்ந்து திருநனிபள்ளி அடைந்ததை சம்பந்தர் தனது பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுகிறார்.
* விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி. எனவே இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர தனி சன்னதியில் அம்மனுடன் கல்யாணசுந்தரேஸ்வரர் அருளுகிறார். எனவே திருமணத்தடை நீங்க இங்கு வழிபடுதல் பலனளிக்கும்.
*பெரும்பாலான கோயில்களில் எருமைத்தலையின் மீது நின்ற கோலத்தில் அருளும் துர்க்கை, இத்தலத்தில் கையில் மான் மற்றும் சிங்கத்துடனும், சும்பன், நிசும்பனை சம்ஹாரம் செய்த கோலத்தில் அருளுகிறார்.
*முன்வினை காரணமாக முன்னேற்றம் இன்றி தவிப்போர் இங்கு வந்து பரமனையும் அம்பிகையையும் வழிபட நன்மையுண்டாகும்.
*இக்கோவில்
1000 வருடங்களுக்கு மேல் பழமையானது. முதலாம் பராந்தக சோழன் (கி.பி. 907-950) கட்டிய திருக்கோவில்களில் திரு நனிபள்ளி நற்றுணையப்பர் கோவிலும் ஒன்று.
*ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 7-ம் நாள் முதல் 13-ம் நாள் வரை சூரியனின் கதிர்கள் சிவலிங்கத்தின் மீது படுகிறது.
*இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே ரிஷப வாகனத்தின் மீதமர்ந்த சிவன் பார்வதி, மூஞ்சூறு வாகனத்தின் மீதமர்ந்த விநாயகர், மயில் வாகனத்தின் மீதமர்ந்த முருகப் பெருமான் ஆகியோர் சுதைச் சிற்பங்கள் வடிவில் காட்சி அளிக்கின்றனர்.
*கர்ப்பகிரகம் மிகவும் விசாலமானது. ஒரு யானை வலம் வரும் அளவிற்கு உட்பரப்பு அதிகம் உடையது. அதன் நடுநாயகமாக வழவழப்பான பாணத்தோடு பிரகாசமாய் லிங்கத் திருமேனி கொண்டு நமக்குப் பேரருள் புரிகின்றார் நற்றுணையப்பர்.
* சுவாமியின் கருவறை "விமானமும்" மிகவும் பிரமிப்பூட்டும்படி பெரியதாக உள்ளது. சோழர்களின் சிறந்த கலைப் படைப்புகளுக்கு இது சான்றுகளாக விளங்குகின்றது.
*மூலவரை வணங்கிய பின் அருகிலுள்ள பர்வதபுத்திரி அன்னையை வணங்குகிறோம்.
*முன் மண்டபத்தில் நால்வர், விநாயகர், சூரியன், நடராஜர் சந்நிதிகளும் உள்ளன.
*கோஷ்ட மூர்த்தங்களாக அகத்தியர், விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளன.
*பிராகார வலம் வருகையில் தெற்கு பிராகாரத்தில் மேற்கு நோக்கியபடி அன்னை மலையான் மகள் சந்நதியுள்ளது.
*அருகே அம்பாளுடன் கூடிய கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நதியும் உள்ளது. அம்பாள் இங்கே சுவாமிக்கு எதிராக மாலை மாற்றும் கோலத்தில் வீற்றருள்கின்றாள்.
*திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாணசுந்தரரை வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், நற்றுணையப்பரை வணங்கினால் செல்வ செழிப்பு, குழந்தைகளின் படிப்பு சிறக்கும் என்பதும் நம்பிக்கை.
🙏 சிவாயநம
No comments:
Post a Comment