Friday, September 30, 2022

ஆடி மாதம் அம்மன் சிறப்புகள் அம்மன் மாதம்

ஆடி ஸ்பெஷல் ! ஆடி மாத  சிறப்புகள்!
தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கு கின்ற மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவிற்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை.
பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி  வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.
‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.
அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்யம் கைகூடும், நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி கூர்மையுடன் கூடிய குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி அன்று அம்பாள் குளிர்ந்த மனத்துடன் வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.
அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது!   ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய் ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. ஆடியின் சிறப்பு அளவில்லாதது; அனைத்து நலன்களையும் வழங்குவது.
இதில் ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.அவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடுவது.ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை அதுக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.  நெல்,கரும்பு முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதைஎன்ற பழமொழியும் வந்தது.  ‘ஆடிப்பெருக்கு’ அன்று பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள்.
நதிகள் ஓடும் இடங்களில் இன்றும் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபாடு செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைப்பர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுவர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து மகிழ்ச்சியாக உணவை சாப்பிடுவார்கள். இப்பொழுதெல்லாம் ஆற்றில் நீர் வரத்தும் குறைந்து விட்டது, நகரங்களில் மக்கள் அதிகமாகக் குடியேறி இருப்பதால் பழக்கமும் குறைந்து வருகிறது.
திருநெல்வேலி அருகில் உள்ள சங்கரன்கோவிலில் ஆடி தபசு பிரசித்தி பெற்றது. சங்கன், பதுமன் என்ற இரு நாக அரசர்கள் சிவபெருமானையும், திருமாலையும் முழுமுதற்கடவுளாக வழிபட்டு வந்தனர். ஒருநாள் இருவருக்கும் சிவபெருமான் பெரியவரா அல்லது திருமால் பெரியவரா என சண்டை மூண்டது. அனைத்தையும் அறிந்த ஆதிசக்தியிடம் விடைபெறுவதற்காக கைலாசம் சென்று முறையிட்டனர். சிவபெருமானே திருமால் என்பதை சங்கனுக்கும் பதுமனுக்கும் உணர்த்த விரும்பிய ஆதிசக்தி கோமதியம்மனாக வடிவமெடுத்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தார். கோமதி அம்மனின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார்.
ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து செந்தில் ஆண்டவனை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும். அம்பிகையின் அம்சமே வேல் என்றும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு. அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.
குரு பூர்ணிமா  ஆடி மாதப் பௌர்ணமி அன்று மாணவர்கள் தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய ஆசிரியர போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாச பூஜை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.
மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணன், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுஜர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர். ஆடிப் பௌர்ணமி அன்றுதான் ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது. இவர் கல்விக்குரிய கடவுள். இவர் வழிபாடு தொன்மையானது. புத்தர்கள் புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.
ஆடிப்பூரம் ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரம். கன்னிப் பெண்களும் திருமண பாக்யம் கைகூடாமல் இருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் ஆண்டாள் அருளிச் செய்த ‘வாரணமாயிரம்’ என்று  தொடங்கும் பாசுரத்தை பாடி வர திருமண உறவு கூடிவரும். பார்வதி தேவி ருதுவான நாளும் ஆடிப் பூரமே. அதனால் சிவன் கோவில்களிலும் ஆடிப் பூரம் அன்று அம்பாளுக்கு சிறப்பான வழிபாடுகள் உண்டு.
வரலட்சுமி நோன்பும் ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று வரும். இதுவும் பெண்கள் மிகவும் போற்றி வழிபடும் ஒரு பண்டிகை. வீட்டில் சௌகர்யங்கள் பெருகவும், இல்லத்தரசிக்கு மாங்கல்ய பலம் கூடவும் பெண்கள் மேற்கொள்ளும் நோன்பு இது. வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று பூஜை செய்து உபசரித்தாள் அவள் அருள் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் கோவில்களில் திருவிளக்குப் பூஜையும் நடைபெறும். நாகதேவதைக்குப் பால் தெளித்து விசேஷ பூஜையும் செய்வார்கள்.
இத்தனை சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது, செய்யக் கூடாது என்ற கருத்து நிலவுவதற்கும் காரணம் உண்டு. இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம். இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது.
ஆடியின் மகத்துவத்தை அறிந்து கொண்டோம் அல்லவா? இந்த நாட்களில் நம் மனதை தெய்வ சிந்தனைகளில் செலுத்தி, மன சுத்தியுடன் பூஜை முறைகளை க்ரமங்களுடன் செய்து, தெய்வ கடாக்ஷத்தினைப் பெறுவோம் !
ஓம் சக்தி ! பராசக்தி !

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...