Wednesday, October 5, 2022

1987 ஆம் ஆண்டு “ஐ. நா.” சபையின் உலக பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாதுகாப்பு அமைப்பால் இக்கோயில் “பாரம்பரிய முக்கியத்தும் கொண்ட இடம் மற்றும் நினைவு சின்னம்” என்று அறிவிக்கப்பட்டது.

உலக அதிசயமான தஞ்சை பெரிய கோயில்"... -  
   

தஞ்சைப் பெரிய கோயில் தஞ்சாவூரில் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவ ஸ்தலமும், இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். சோழ மன்னர்களின் பரம்பரையில் தோன்றிய ராஜ ராஜ சோழன் சிவபெருமான் மீது, தான் கொண்ட அளவு கடந்த பக்தியால் தஞ்சையில் கி.பி 1010இல் கட்டி முடிக்கப்பட்டது தஞ்சை பெரிய கோயில்.

இந்த கோயிலுக்கு ராஜராஜன் வைத்த பேர் ராஜராஜேஸ்வரம் பெருவுடையார் கோயில். பிறகு மாராத்தியர்கள் ஆண்ட போது அது பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைக்கப்பட்டது. இன்று அதை நாம் தஞ்சை பெரிய கோயில் என்று அழைக்கிறோம். கருவூர் சித்தர் அறிவுரைப்படியே ராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. மூலவர் சன்னதியின் பின்புறம் கருவூர் சித்தருக்கும் சந்நிதி அமைத்துள்ளது.

தஞ்சை பெரிய கோயில் தென் இந்திய வரலாற்றில் தலை சிறந்த சின்னமாகும். கட்டடக் கலை, சிற்பக் கலை, செப்புத் திருமேனிகள் வார்ப்புக்கலை, ஓவியக் கலை, கல்வெட்டுகள் கூறும் செய்திகள் ஆகிய அனைத்துக்கும் சிறப்பிடமாகத் திகழ்கிறது. இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பும் கொண்டது.

1987 ஆம் ஆண்டு “ஐ. நா.” சபையின் உலக பாரம்பரியம் மற்றும் கலாச்சார பாதுகாப்பு அமைப்பால் இக்கோயில் “பாரம்பரிய முக்கியத்தும் கொண்ட இடம் மற்றும் நினைவு சின்னம்” என்று அறிவிக்கப்பட்டது.
உலக வரலாற்றுச் சின்னங்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோயில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால், சீரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் பெரியகோவிலின் அதிசயங்கள்:

பெரிய கோபுரம்:

தஞ்சாவூர் பெரியகோவிலின் சிறப்பே அதன் கலைநயம் மிக்க கட்டமைப்பு, கோபுரம் வடிவமைக்கப்பட்டிருப்பது தான். பூமியிலிருந்து செங்குத்தாக மேல் நோக்கி உள்ளது. ஒரு டிகிரி கோணம் கூட சற்று சாய்வு இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. அதாவது சூரிய ஒளி பட்டு, கோபுரத்தின் உச்சி நிழல் கீழே படாதவாறு உள்ளது. இது பழந்தமிழர்களின் விஞ்ஞானபூர்வமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டாகும்.

இக்கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 13 தளங்களையும், 216 அடி உயரமும் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. உயர்ந்து காணப்படும் விமானம், “தட்சிணமேரு” எனச் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.

சிவலிங்கம்:

கருவறையில் உள்ள சிவலிங்கம் ஆறு அடி உயரமும் ஐம்பத்து நான்கு அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், மற்றும் பதிமூன்று அடி உயரமும் இருபத்திமூன்று அரை அடி சுற்றளவும் உள்ள லிங்கம் ஆகியன தனித் தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் உள்ள துவார பாலகர்களை பதினெட்டு அடி உயரத்திற்கு ஒரே கல்லில் செதுக்கியுள்ளனர்.

மகாநந்தி:

இங்கு சிவபெருமானுக்கு எதிரில் உள்ள பெரிய நந்தி சிலையும் ஒரே கல்லால் செதுக்கப்பட்டது. இந்த நந்தியின் உயரம் பன்னிரெண்டு அடி, நீளம் பத்தொன்பதரை அடி, அகலம் எட்டேகால் அடி.

ராஜ ராஜன் வைத்த நந்தி சிலை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றதால், அதில் அதிர்ச்சியும், பிரமிப்பும் அடைந்த மராட்டியர்கள் அந்த நந்தி சிலையை அகற்றிவிட்டு புதிய நந்தி சிலை வைத்துள்ளனர். இப்போது ராஜ ராஜன் வைத்த பழைய நந்தி சிலை கோயில் பிரகாரத்தில் வடதிசை நோக்கியவாறு வைக்கப்பட்டுள்ளது.

கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ கலசம்:

கோயில் விமானத்தின் உச்சியில் உள்ள பாறை போன்ற அமைப்பு ஒரே கல்லால் ஆனது என்றும், 80 டன் எடை கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வட்டவடிவ கலசம் பல கற்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இருந்தாலும் ஒரே கல் போன்று தோற்றமளிக்கும் வகையில் அவ்வளவு நேர்த்தியாக இவை ஒன்றுகொன்று இணைக்கப் பட்டுள்ளது என்று வரலாற்று ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்தது.

அஸ்திவாரம்:

மொத்தம் ஒன்றரை லட்சம் டன்கள் எடை கொண்ட கருங்கற்களை உடைய கோயிலைத் தாங்கி நிற்பதற்கு ஆழமான அடித்தளம் (அஸ்திவாரம்) அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இக்கோயிலின் ஆயிரக்கணக்கான அதிசயங்களில் ஒன்றாக கோயிலுக்கான அடித்தளம் வெறும் 5 அடி ஆழம் மட்டுமே போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோயிலின் அஸ்திவாரம் மரபுவழி கட்டுமானமான ஆற்று மணல் படுகையைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. கோயில் அமைந்துள்ள இடம் சுக்கான் பாறை பகுதி. கோயிலின் கட்டுமான அளவுக்குப் அந்தப் பாறையை ஆழமாகத் தோண்டி தொட்டியாக வெட்டி அதில் பரு மணலை நிறைத்து அதன் மீது கோயிலைக் கட்டியிருக்கிறார்கள். கருங்கல் தொட்டி, மணல் விலகாமல் இருக்க உதவும். அதேசமயம், மணல் இயல்பாக அசைந்துகொடுக்கும் தன்மை உடையது. பூமித் தகடுகளின் எதிர்பாராத அசைவுகளின்போது மணலின் அசைந்து கொடுக்கும் தன்மையால் மேற்பகுதியில் இருக்கும் கட்டுமானம் விலகாது. அதாவது, பூகம்பம் வந்தாலும் கோயிலுக்கு எந்த பாதிப்பும் நேராது. இது தலையாட்டி பொம்மையின் தொழில்நுட்பத்துக்கு ஒப்பானது. அசையுமே தவிர விழாது. அதனால்தான் தலையாட்டி பொம்மைகள் தஞ்சாவூரில் செய்தார்களோ!!

கிரானைட் கற்கள்:

மன்னர் ராஜ ராஜ சோழன் இக்கோவில் முழுவதையும் கிரானைட் கற்களால் கொண்டு கட்டியுள்ளார். ஏறக்குறைய 1,30,000 டன் கற்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. கோவில் கட்டுமானத்தில் மரம், சுடு செங்கல், பூராங்கல் இல்லாமல் மொத்தமும் நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த உயர்ந்த கிரானைட் கற்கள் மட்டுமே. அருகே மலைகள் இல்லாத நிலையிலும், மற்றும் நவீன போக்குவரத்து வசதிகள் இல்லாத நிலையிலும் சுமார் 50 கல் தொலைவில் இருந்து கோயிலுக்கான கற்கள் எடுத்து வரப்பட்டிருப்பது அதிசயமாகும்.

இக்கோவிலை ராஜராஜ சோழனின் ஆணைப்படி கட்டி கொடுத்த சிற்பிகள் 1.வீரசோழன் குஞ்சரமல்லனான ராஜராஜப் பெருந்தச்சன், 2.குணவன் மதுராந்தகனான நித்தவினோதப் பெருந்தச்சன், 3.இலத்திச் சடையனான கண்டராதித்தப் பெருந்தச்சன் என்ற இம்மூவரும் ஆவர். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளில், மூன்று சிற்பிகளின் பெயர்களும் காணப்படுகின்றன.

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள்:

தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகள் பல வகைகளில் தனித்தன்மை மற்றும் சிறப்பு பெற்றவை. குறைந்தது எண்பைத்தைந்து கல்வெட்டுகள் இங்கு இருக்கின்றன. இவை நமக்கு பல அரிய விஷயங்களைத் தருகின்றன. மொத்தம் கோவில் பணியில் ஈடுபட்ட ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் எல்லாம் கல்வெட்டுகளில் உள்ளன. இதையெல்லாம் நுணுக்கமாக கல்லில் பொறித்து வைத்த மன்னரின் நிர்வாகம் எவ்வளவு சீரும் சிறப்புடனும் நடந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. நாள்தோறும் அபிஷேகத்திற்கும், விளக்குகள் எரிப்பதற்கும், கோவில் பணிக்காக தளிச்சேரிப் பெண்கள் நியமிக்கப்பட்டதையும், மெய்க்காவலர்கள் - பரிசாரகர்கள் நியமிக்கப்பட்டதையும், திருக்கோவிலில் பணியாற்றியவர்கள் பற்றியும், நடந்த திருவிழாக்கள் பற்றியும் இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகள், மிக அழகாகப் பொறிக்கப்பட்டுக் காணப்படுகிறது. தஞ்சைப் பெரிய கோவிலுக்கு மெய்க்காப்பாளர்கள் நியமிக்கப்பட்ட விபரமும் கல்வெட்டில் காணப்படுகிறது. மற்றும் மன்னன் ராஜராஜனுக்கு இந்த ஆலயம் எழுப்பிட பலர் உதவியிருக்கிறார்கள். இவ்வாலயம் எழுப்ப உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. கோவிலைப் பற்றிய அநேக தகவல்களை கல்வெட்டில் காண்பது என்பது இந்த கோயிலின் சிறப்பு. இத்தகு கல்வெட்டுகளின் மூலம் ஓர் ஒழுங்கான ஆவணத்தை அழியாத வகையில் நமக்கு விட்டு சென்றிருக்கிறார் இராஜராஜ சோழன் என்றே சொல்ல வேண்டும். இவற்றை ஆவணங்களாக அல்லது செப்பு பட்டயங்களாக உருவாக்கியிருந்தால் அவை அழிந்து போக வாய்ப்பு உண்டு. ஆனால் கல்வெட்டுகளாக பொறித்ததன் மூலம் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் அவை நமக்கு காணக் கிடைப்பது சிறப்பாகும்.

கோயிலில் உள்ள கல்வெட்டில் கோயிலை கட்ட யார் பணியாற்றினார்களோ, கட்டடக்கலை நிபுணர்களிலிருந்து அவர்களின் துணிகளை சலவை செய்தவர்கள், முடி திருத்தியவர்கள் என கோயில் பணி செய்ய உதவியவர்களின் பெயர் கூட கல்வெட்டில் பதிவு செய்திருப்பது ராஜ ராஜ சோழனின் பெருந்தன்மையும், மக்கள் மீது அவர் வைத்திருந்த அன்பும், ராஜ ராஜ சோழன் மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் புலப்படுகிறது.

மன்னன் ராஜராஜன் பொறித்த ஒரு கல்வெட்டு சொல்லும் செய்தி பிரமிப்பானது. “இந்தக் கோயிலை மக்கள் பாதுகாக்க வேண்டும். எனக்குப் பின்னால் இந்தக் கோயிலைக் காப்பவர்களின் காலில் நான் இப்போதே விழுந்து தொழுகிறேன்” என்று எழுதி வைத்திருக்கிறார்.

பழமையான அற்புத ஓவியங்கள்:

இங்கு ராஜராஜனுடன் அழகிய உருவத்துடன் கருவூர்த்தேவர் என்னும் சித்தரும் காட்சியளிக்கும் ஓவியம் உள்பட பல ஓவியங்களும் உள்ளன. இவை அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையான சிறப்பு வாய்ந்தவை.

மழைநீர்சேகரிப்புத் திட்டம்:

மழைநீர் சேகரிப்புத் திட்டத்துக்கும் ராஜராஜ சோழனுக்கும் சம்பந்தம் உண்டு என்றால் ஆச்சரியப் படுவீர்கள். மழைநீர் சேகரிப்பை முதன் முதலில் செயல்படுத்திய மன்னர் ராஜராஜசோழன்தான்! பெரியகோயிலில் விழும் மழைநீரை துளியும் வீணாக்காமல் அப்படியே கோயிலுக்கு அருகிலுள்ள சிவகங்கை குளத்துக்குக் கொண்டு செல்லவேண்டும் என்று திட்டம் போட்டார். மழை நீர் செல்வதற்கு இரண்டு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் விழுகிற மழைநீர், தரையில் உள்ள அழுக்கோடு நந்தவனத்திற்குச் செல்லும். பின்னர் நல்ல நீர், சிவகங்கைப் பூங்காவில் உள்ள குளத்திற்குச் செல்லும். அந்தக் காலத்திலேயே மழை நீரைச் சேமிக்கும் வியக்கத்தக்க முறையை ராஜராஜசோழன் பெரியகோயிலில் அறிமுகப் படுத்தியிருக்கிறார்.

மன்னர் ராஜராஜசோழன் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரை ‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்துள்ளார்.

மன்னர் ராஜராஜனின் பிறந்த நட்சத்திரம் ஐப்பசி மாத சதய நட்சத்திரம். அதனால் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாத சதய நட்சத்திர தினத்தை ராஜராஜனின் சதய விழாவாக தஞ்சையில் கொண்டாடப்படுகிறது.

கும்பாபிஷேகம்:

மன்னர் ராஜராஜ சோழனுக்கு பிறகு அரியணை ஏறிய ராஜேந்திர சோழனும், பின்னர் வந்த சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், நாயக்கர்களும், தஞ்சை பெரிய கோவிலை நன்கு பராமரித்து அவ்வப்போது செப்பனிட்டு பாதுகாத்து கும்பாபிஷேகமும் செய்து வந்துள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், கடந்த 1980ஆம் ஆண்டிலும், அதற்கு அடுத்ததாக 1997ஆம் ஆண்டிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றன. அதன் பின்னர் 23 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வருடம் 2020-ல் பிப்ரவரி மாதம் 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது  

உலக அதிசயமான தஞ்சை பெரிய கோயில் என்கின்ற மாபெரும் பொக்கிஷத்தை தந்த மன்னர் ராஜராஜ சோழனின் பெருமையை உலகம் முழுவதும் பரவட்டும்…

No comments:

Post a Comment

Followers

சங்கர நாராயணன் மேலராஜவீதி தஞ்சாவூர்..

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில் மேலராஜவீதி தஞ்சாவூர் மாவட்டம் இறைவன் :- சங்கர நாராயணர் இறைவி :- பாலாம்பிகா தாயார்   த...