Friday, October 7, 2022

ஐயாராப்பர் சுவாமிக்குப் ‘பஞ்சநதேஸ்வரர்’ என்னும் பெயர் வந்தமைக்குரிய வரலாறு வருமாறு :-

ஐயாறப்பர் கோவில் - திருவையாறு...!

பஞ்சநதேஸ்வரர்
மூலவர் சிவலிங்கத் திருமேனி. 

இக்கோவிலின் பிராகாரத்தின் கோடியில் ஒலி கேட்கும் இடம் என்று குறிப்பிட்டுக் காட்டியுள்ள இடத்தில் நின்று, கற்சுவரில் அமைக்கப்பட்டுள்ள சிறிய குழியில் வாய்வைத்து, உரத்த குரலில் ‘ஐயாறா’ என்று அழைத்தால் அவ்வொலி பன்முறை பிரதிபலிப்பதைக் கேட்கலாம். ( உரத்து அழைத்தால் ஏழுமுறை கேட்பதாகச் சொல்கிறார்கள்.)

“ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே” என்னும் அப்பர் வாக்கு இங்கு நினைவிற்கொள்ளத் தக்கது.

இப்பிராகாரத்தை வலமாக வந்து, கொடிமரத்தைத் தாண்டி, படிகள் ஏறினால் மிகப்பெரிய மண்டபம் உள்ளது. நீண்ட விசாலமான மண்டபம். மூலவர் நுழைவு வாயிலுக்குப் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் - சந்நிதியில் ஓர் இரும்புப் பேழையில் மரகத லிங்கம், ஸ்படிக லிங்கம், ஸ்படிக அம்பாள் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கு நாள்தோறும் காலையில் பூஜை நடைபெறுகின்றது. சுவாமி தன்னைத்தானே பூசிப்பதாக ஐதீகம். இது தொடர்பாகச் சொல்லப்படும் வரலாறு ...

இக்கோயில் பூஜைமுறை உள்ள சிவாசாரியார் ஒருமுறை காசிக்குச் சென்றார். அவருடைய பூஜை முறைக்காலம் வந்து விட்டது.  

ஆனால் அதற்குள் அவரால் திரும்பி வர முடியவில்லை. அந்நிலையில் இறைவனே அந்த சிவாசாரியார் போல சிவவேடமணிந்து அவருடைய பூஜை முறையைத் தவறாது செய்து வந்தார்.  

திரும்பி வந்த சிவாசாரியார் தன்னைப்போலவே ஒருவர் தன் முறையைச் செய்து வருவதறிந்து அவரைப் பார்த்து ‘நீ யார்?’ என்று கேட்க, அவரும் ‘நீ யார்?’ என்று கேட்டுவிட்டு, ‘உள்ளே வா காட்டுகிறேன்’ என்று கூறிச் சென்றார்.  

சிவாசாரியார் பின்தொடர்ந்து செல்ல, உள்ளே சென்ற உருவம் மறைந்தது. அப்போது இதுகாறும் பூஜை செய்து வந்தவர் இறைவனே என்று தெரிய வந்தது.  

ஆகவேதான் “தன்னைத் தானே வழிபடுவது” என்ற ஐதீகத்தில் இரு லிங்கங்களும் ஓர் அம்பாளும் அப்பேழையுள் வைத்துப் பூசிக்கப்படுகின்றன. இந்த அற்புதத்தையொட்டியே இன்றும் இக்கோயிலில் சித்திரை ஆயில்யத்தன்று சுவாமி புறப்பாடும் செய்து, இறைவனாக வந்த சிவாசாரியார், பூஜை முறையினராகிய சிவாசாரியார் என்கிற ஐதீகத்தில் இரு சிவாசாரியார்களுக்கும் பரிவட்டம் சார்த்தி, சுவாமியுடன் வலம் வரும் சிறப்பு விழா நடைபெறுகின்றது.

இந்த அதிசயத்தையே மாணிக்கவாசகர் தம் அமுதவாக்கில் “ஐயாறு அதனில் சைவனாகியும்” என்று குறித்துள்ளார்.

ஆதி விநாயகர், முன்பு ஒரு கல்வெட்டு உள்ளது. இச்சந்நிதியில் இரவு பகல் எந்நேரமும் எரியும் விதத்தில் எட்டு இழையாலான திரிஇட்டு நேத்திர தீபம் ஏற்றும் தர்மத்திற்காக நிபந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ள செய்தி இதில் சொல்லப்படுகிறது.

இத்தீபத் தொண்டு தடைப்படுமாயின் இன்ன முகவரிக்குத் தெரிவித்தால் அது தொடர்ந்து செய்ய மேற்கொள்ளப்படும் எனும் குறிப்பும் உள்ளது.  .

மூலவர் தரிசனம். பஞ்சநதேஸ்வரர் அழகான திருமேனி. சுயம்பு மூர்த்தி, மூலவர் முன் கவசமிடப்பட்டுள்ளது. இக்கவசத்தில் பசுவின் உருவமும் அதன்மீது சூலமும் பொறிக்கப்பட்டுள்ளது.  

இதனால் சுவாமிக்குத் ‘திரிசூலி’ என்ற பெயரும் சொல்லப்படுகிறது. “வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்” என்னும் திருமுறைத் தொடர் இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது. அலங்காரம் செய்து பார்க்கும் நிலையில் சிவலிங்கத் திருமேனி, பாம்பு படமெடுப்பது போலவும், கொண்டை போட்டிருப்பது போலவும் பலவித வடிவங்களில் தோன்றுவதைக் காணலாம்.

சுவாமிக்குப் புனுகு சட்டம் மட்டுமே சார்த்தப்படுகிறது. அதுவும் கைபடாமல் சார்த்தப்பட வேண்டும். மற்ற அபிஷேக மெல்லாம் ஆவுடையார்க்கே.

மூலவரின் கருவறை அகழி அமைப்புடையது. கோஷ்டமூர்த்தமாகத் தட்சிணாமூர்த்தி உள்ளார். இதைத் தட்சிணாமூர்த்தி பிராகாரம் என்கின்றனர். சுவாமி ஜடாபாரமாக இருப்பதாக ஐதீகம். ஆதலால் இவ்வுள் பிராகாரத்தில் எவரும் நுழைந்து வலம் வரக்கூடாது என்பர்.

சுவாமிக்குப் ‘பஞ்சநதேஸ்வரர்’ என்னும் பெயர் வந்தமைக்குரிய வரலாறு வருமாறு :-

இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள அந்தணக்குறிச்சி என்னுமிடத்தில் பங்குனித் திருவாதிரையில் சிலாதமகரிஷிக்கு நந்தியெம்பெருமான் அவதரித்தார்.  

அன்று மாலையே இறைவன் நந்தியை இங்கு அழைத்து வந்து, ஐந்துவித தீர்த்தங்களால்  

((1) சூரியதீர்த்த நீர் 

2) சந்திரதீர்த்த நீர்  

(3) நந்தி வாயில் ஒழுகிய நுரை நீர்  

(4) காவிரி நீர் 

(5) அம்பாளின் திருமுலைப்பாலாகிய நீர்)

அவருக்கு அபிஷேகம் செய்து, ‘அதிகார நந்தி’ பட்டஞ்சூட்டிக் காவற் பொறுப்பை ஒப்படைத்தார்.

No comments:

Post a Comment

Followers

திருவாரூர் சூட்சுமபுரீஸ்வரர் சிறுகுடி...

அருள்மிகு சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், சிறுகுடி,  சரபோஜிராஜபுரம் அஞ்சல், வழி பூந்தோட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் –  609 503...