Monday, October 31, 2022

காகத்திற்கு ‘தீர்க்கத் துண்டன்’ என்ற பெயரிட்டுச் சிவகணங்களில் ஒன்றாக இருக்கச் செய்தார்.

நமசிவாய வாழ்க

 காகம் சிவகணங்களில் ஒன்றான கதை – அவிநாசி அற்புதங்கள் – 
*******************************************
இறைவன் மீது பக்தி செலுத்துவதில் மனிதர்களை விட சில சமயம் விலங்குகள் ஒரு படி மன்னிக்க பல படிகள் மேலே நிற்பதுண்டு. சில நேரங்களில் அறிந்தும் சில நேரங்களில் அறியாமலும் அவை பக்தி செலுத்தும். அதன் பலனாக நாம் ஆண்டுக்கணக்கில் தவமிருந்தாலும் பெற அரிதான சிவகடாக்ஷத்தை அவை எளிதாக பெற்றுவிடும்.

சிவ வழிபாட்டை பொறுத்தவரை அறிந்து செய்தாலோ அல்லது அறியாமல் செய்தாலோ அணுவளவு இருந்தால் கூட அதற்கு மலையளவு பலன் உண்டு. சிவ வழிபாடு ஒன்றுக்கு மட்டும் தான் இப்படிப்பட்ட தன்மை உண்டு.

வானரம் ஒன்று சிவலிங்கத்தின் மீது இலைகளை போட்டு விளையாடி அதன் பலனாக முசுகுந்த சக்கரவர்த்தியாக பிறந்ததும், சிவாலயம் ஒன்றில் அணையவிருந்த விளக்கின் திரியை தன்னையுமறியாமல் தூண்டிவிட்ட காரணத்தால் மூஷிகமானது அடுத்த பிறவியில் நாடாளும் மகாபலிச் சக்கரவரதியாக பிறந்ததும் இதற்கு உதாரணம்.

==================================

அப்படிப்பட்ட பட்டியலில் காகம் ஒன்றும் உள்ளது. அதுவும் நம் அவிநாசி தலத்துடன் தொடர்புடைய ஒன்று.
சிவானுக்கிரகத்தை பெற இந்த காகம் என்ன செய்தது?

கொ ங்கு நாட்டில் காவிரியும் பவானியும் கூடுமிடத்தில் சிவபூமி என்னும் ‘வதரிகாசிரம்’ என்ற ஒரு வனம் உள்ளது. அது தவசிகளுக்கு சிறந்த இடமாக திகழ்ந்தது. அங்கு துர்வாச முனிவர் சில காலம் தங்கியிருந்து சிவபூஜை முதலிய தவங்களை செய்யும்போது ஒரு நாள் காமதேனு பசுவானது சிவபூஜைக்கு பால் அளிக்க தாமதமாக வந்தது.

சினம் கொண்ட முனிவர் அதனை, “நீ மற்ற மிருகங்களை போல் திரியக் கடவாய்” என்று சபித்தார். உடனே காமதேனு மிக வருந்தி ‘நான் உய்யும் வகையினை அருளவேண்டும்’ என்றபோது முனிவர் ‘நீ பழனி மலை சென்று பூசித்தால் உய்யலாம்’ என்று கூறினார். அதன் பிறகு அவர் கந்தபுரி என்னும் திருமுருகன் பூண்டியை வந்தடைந்து திருமுருகநாதரை பூசித்தார்.

அருள்மிகு ஆவுடை நாயகி சமேத திருமுருகநாதர் திருக்கோவில், திருமுருகன்பூண்டி
கந்தபுரி பிதுர்க்கிரியை செய்வதற்கு சிறந்த இடம் என்பதை உணர்ந்தார்.

 மறுதினம் தை அமாவாசை புண்ணியகாலமாக இருந்தது. எனவே தை அமாவாசை விடியற்காலம் சிவதீர்த்ததில் ஸ்நானம் செய்து நியம அனுட்டானங்களை முடித்து ஆலயத்திற்கு அருகே நிருருதி திக்கிலுள்ள ஒரு பூந்தோட்டத்தில் சிவபூசை ஹோமம் முதலியவைகளை புரிந்து அன்னத்தை நிவேதனம் செய்து பிதுர்களுக்கு மந்திர பூர்வமாக உணவு அளிக்கும் முன்பு காகத்திற்கு பலி (சோற்றுருண்டை) வைத்தார். 

அப்போது ஒரு காகம் வந்து மற்றைய காகங்களையும் கூவி அழைத்துச் சாப்பிட்டு தன் குஞ்சுக்கு கொடுக்க வாயில் உணவை அடக்கிக் கொண்டு தன் இருப்பிடம் செல்ல அவிநாசிக் கடைவீதி வழியாக பறந்து சென்றது.
அச்சமயம் திருப்பிக்கொளியூர் என்னும் அவிநாசியிலுள்ள மற்றொரு காகம் அக்காகத்தை வந்து எதிர்த்து சோற்றைப் பறித்தது. அச்சோற்றில் ஒரு பருக்கை சோறு சிவவேடம் பூண்ட ஒரு பரதேசியின் பிட்சா பாத்திரத்தில் விழுந்தது. அதனை அவன் அறியாது ஒரு இடத்தில் போய் தங்கிச் அந்தச் சோற்றை உண்டு மகிழ்ந்தான்.

சோற்றை இழந்த காகம் வேறிடம் சென்று அன்னம் தேடி தன் குஞ்சுக்கு கொண்டு வரும்போது, ஒரு வேடன் சிறு வில்லில் களிமண் உருண்டையை வைத்து அக்காகத்தை அடித்தான். உடனே அது அலறிக் கீழே திருப்புக்கொளியூர் எல்லையில் விழுந்து இறந்தது.

அப்போது அந்த காகம் தேவவுருப் பெற்று தேவ விமானத்தில் திருக்கைலையை அடைந்து, உமாதேவியரோடு சிவபெருமான் எழுந்தருளிய சந்நிதியின் முன் நின்று வணங்கி எழுந்து கை குவித்து நின்றது.

சிவபெருமான் புன்முறுவல் பூத்து, திருப்புக்கொளியூர் அவிநாசியில் வசித்து வந்த காகம் தனது மூக்கினால் கொத்தி விழுந்த சோற்றை ஒரு சிவனடியார் உண்டதனால், இக்காகம் இங்குவர ஏதுவாயிற்று என்று சிவகணங்களுக்கு கூறினார்.

 காகத்திற்கு ‘தீர்க்கத் துண்டன்’ என்ற பெயரிட்டுச் சிவகணங்களில் ஒன்றாக இருக்கச் செய்தார்.

சிவனடியாருக்கு ஒரு சோற்றுப் பருக்கையை தன்னையுமறியாமல் அளித்து திருப்புக்கொளியூரில் மரித்த ஒரு காக்கைக்கே இந்த நற்கதி என்றால்!

 சிவ வழிபாட்டின் மகத்துவத்தை என்னவென்று சொல்ல?

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...