Sunday, November 27, 2022

திருநல்லூர்ப் பெருமணம், சிவலோகத்தியாகர் திருக்கோயில். ஆச்சாள்புரம் - 609101 மயிலாடுதுறை மாவட்டம்.

திருநல்லூர்ப் பெருமணம், சிவலோகத்தியாகர் திருக்கோயில்.       ஆச்சாள்புரம் - 609101          
மயிலாடுதுறை மாவட்டம்.

*புராண பெயர்கள்:
சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர்.

*இறைவர் திருப்பெயர் : 
சிவலோகத் தியாகர், சிவலோக தியாகேசர்

*இறைவியார் திருப்பெயர் :
திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி, விபூதி கல்யாணி

*தல விருட்சம்:
மாமரம். 

தீர்த்தம் : -  பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம்

*வழிபட்டோர் : பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சந்திரன், திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார், வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமதிக்கனி முனிவர், கங்கா தேவி, காக முனிவர்.

*பாடல்பெற்றதலம்: தேவாரப் பாடல்கள்  பாடியவர்  திருஞானசம்பந்தர்.  

*திருஞான சம்பந்தருக்கு, அவரது 16-வது வயதில் திருமணம் செய்து வைக்க பெற்றோரால் முடிவு செய்யப்பட்டது. முதலில் மறுத்த சம்பந்தர், பின் ‘ஈசனின் விளையாட்டு தான் இது’ என்று கருதி சம்மதித்தார். நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாளை நிச்சயித்தார் சம்பந்தரின் தந்தை சிவபாத இருதயர். ஞானசம்பந்தரும் மணக்கோலம் பூண்டார். 
ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலநக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார்.       

*ஆச்சாளே நேரில் வந்து ஞானசம்பந்தரின் திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கு திருநீறு அளித்ததால் அம்மனுக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற திருநாமமும், இத்தலத்திற்கு ஆச்சாள்புரம் என்ற பெயரும் ஏற்பட்டது.   

*சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது "இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்'' என்று கூறி, "கல்லூர்ப் பெருமணம்' என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார்.

*அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி, "நீயும் உனது மனைவியும் "திருமணம் காண வந்தோர் அனைவரும்"  இந்த ஜோதியில் கலந்து விடுக'' என்று அருள்புரிந்தார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமசிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி, நமசிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுள் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார்.  

"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே''
எனத் தொடங்கும் நமசிவாய திருப்பதிகம்  தான் சம்பந்தர் பாடிய கடைசிப்பதிகமாகும்.   

*சம்பந்தருக்கும், அவருடன் வந்த  அனைவருக்கும் சிவஜோதியில் கலக்கும் பேற்றை அளித்த  இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.       

*திருநீறு பிரசாதம்: திருநீற்று அம்மனின் சன்னதியில் திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசினால் நோய் விலகும், முன்ஜென்ம பாவம் விலகும், என்பது ஐதீகம்.      

*பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். 
*விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார்.   
*இந்திரன் போகம் பெற்றான். 
*சந்திரன் அபயம் பெற்றான். 
*கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள்.               

*இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். *சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.
*காக முனிவர் இத்தலத்தை காலால் மிதிப்பதற்கு பயந்து தலையால் நடந்து வந்து நிருதி திசையில் அமர்ந்து தவமிருந்தார்.  

*கோவில் அமைப்பு:
சிவலோக தியாகேசர் ஆலயம் கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் 11 தீர்த்தங்களில் ஒன்றான பஞ்சாட்சர தீர்த்தம் கோவிலுக்கு எதிரில் உள்ளது. இராஜ கோபுரத்தின் வாயிலாக உள்ளே நுழைந்தவுடன் கவசமிட்ட கொடி மரம் மற்றும் நந்தி மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூராணாம்பிகையுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார்.  
*அதை அடுத்து கிழக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதி உள்ளது. சம்பந்தர், அவரது மனைவி மற்றும் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும்  முக்தி தந்தருளியதால் இத்தல ஈசனுக்கு சிவலோக தியாகேசர் என்னும் திருநாமம் வந்தது.  சம்பந்தர், அவரது மனைவி, திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் மற்றும் பல அடியவர்களையும் உள்வாங்கிய லிங்கம், இன்றும் நமக்கு சிவலோக பதவி வழங்க காத்திருக்கிறது. 

*சுவாமி கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், வேலைப்பாடமைந்த தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர்.  ஸ்ரீரிணவிமோசனர் சந்நிதியும், அதையடுத்து ஸ்ரீமகாலட்சுமி சந்நிதியும் கருவறை மேற்கு சுற்றுப் பிரகாரத்தில் உள்ளன. 

*இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதி தனிக்கோவிலாக மேற்கு வெளிப் பிரகாரத்தில் மதில் சூழ்ந்த தனி வாயிலுடன் ஒரு சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது.           

*தல சிறப்புக்கள் : திருஞானசம்பந்தர் திருமணம் நடைபெற்ற இத்தலம், ஒரு சிறப்புபெற்ற "திருமணத் தடை நீக்கும் தலமாக இருக்கிறது". 
*இத்தல இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீங்கும். 
*இங்குள்ள ருணலிங்கேஸ்வரை 
11 திங்கட்கிழமை வழிபட்டு அபிஷேக ஆராதனை செய்தால், நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி அருள் பெறலாம். நமது வாழ்க்கையில் படுகின்ற கடன்கள், நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களில் இருந்தும் விடுதலை பெறலாம். 
*இங்க வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும்.         

*இது தருமையாதீன நிர்வாகத்திலுள்ள திருக்கோயில். 

*திருவிழா: வைகாசி மூல நட்சத்திர நாளில் சம்பந்தரின் திருமண வைபவத்தில், காலை 7 மணி முதல் 8.45 மணி வரை திருஞான சம்பந்தர் உபநயனமும்; மாலை 5 மணிக்கு திருமுறைகள் வீதிவலமும்; 6.30 மணிக்கு மாலை மாற்றும் வைபவமும்; இரவு 9 மணி முதல் 10.30 மணிக்குள் திருமணமும் நடைபெறும். பின்பு அதிகாலை 2 மணிக்கு தேவார திருமுறை சம்பந்தர் உடன் ஆலய வீதி உலா நடைபெறும். அதிகாலை 4.45 மணிக்கு சம்பந்தரின் உற்சவ மூர்த்தியை கருவறைக்குள் கொண்டு சென்று மூலவர் காலடியில் வைப்பர். பின் மிகப்பெரிய கற்பூரக் கட்டிகளை ஏற்றி தீபாராதனை செய்வார்கள். அப்போது சம்பந்தர் ஜோதியில் கலப்பதாக ஐதீகம்.  

*அமைவிடம்: சீர்காழியில் இருந்து வடகிழக்கில் 13 கி.மீ. தூரத்திலும், சிதம்பரத்தில் இருந்து தென்கிழக்கில் 13 கி.மீ தூரத்திலும் ஆச்சாள்புரம் அமைந்துள்ளது.
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 5 கி. மி. சென்று இந்த சிவஸ்தலம் அடையலாம். சிதம்பரம், சீர்காழியில் இருந்து மயேந்திரப்பள்ளி செல்லும் நகரப் பேருந்துகள் ஆச்சாள்புரம் வழியாகச் செல்கின்றன.

🙏 சிவாயநம

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...