Tuesday, November 1, 2022

ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள்93 வருட உலக அனுபவம்.. 73 வருட துறவறம்: 48 வருட காலம் நமக்கெல்லாம் குருவாக விளங்கி நல்வழிகாட்டியவர்

⛩️⛩️⛩️மகான்கள்...
 
🔥சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமி. (2)

🙏🏼ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள்

93 வருட உலக அனுபவம்.. 73 வருட துறவறம்: 48 வருட காலம் நமக்கெல்லாம் குருவாக விளங்கி நல்வழிகாட்டியவர் திருக்கயிலாய பரம்பரையில் 450 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி குரு முதல்வர் குருஞான சம்பந்தரால் தோன்றி அருளிய குருபீடமே தருமை ஆதீனம். இந்த ஆதீனத்தின் 26வது குருமகா சந்நிதானம் அவர்கள் காட்டுமன்னார்குடி வட்டம், சிறுகாட்டூர் என்னும் திருத்தலத்திலே கார்காத்தார் குலம் - முனையதரையன் கோத்திரம் கந்தசாமி பிள்ளை அவர்களுக்கு ஐந்தாவது மகனாக 21.4.1926ம் ஆண்டு அவதரித்தார்.

🔥🙏🏼திருஞானசம்பந்தன் என்ற திருநாமத்தோடு, இவர் உள்ளூர் திண்ணைப்பள்ளியிலும், 5ம் வகுப்பு வரை ஆரம்ப கல்வியும் பயின்றார். 1936ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மாசி மகோற்சவத்தில் 6ம் திருநாளன்று தந்தையருடன் விருத்தாசலம் சென்று சபாபதி செட்டியார் தேவாரப்பாடசாலையில் சேர்ந்து திருமுறை பயிற்சி பெற்றார்.

பின்னர் திருப்பனந்தாள் காசித்திருமடத்து 20 ஆவது அதிபர் ஸ்ரீலஸ்ரீ அருணந்தித் தம்பிரான் சுவாமிகளால் ஆதரிக்கப்பெற்று திருமுறைகள் பாடியும், தருமையாதீனம் 25 ஆவது குருமகா சந்நிதானம் கயிலை குருமணிகளால் ஆற்றுப்படுத்த பெற்றும், பின்னர் தருமையாதீனத்தில் 1945 ஆம் ஆண்டு ஆனி மாதம் 31 ல் துறவு ஏற்றார்கள். முன்பு செய்த தவத்தின் பயனால் 25வது குருமகா சன்னிதானத்தை தரிசித்து விண்ணப் பம் செய்தார். அடுத்த நாள் குருவாரம் வடக்கு குருமூர்த்தம் சச்சிதானந்த விநாயகர் கோயிலில் காஷாயம் வழங்கச் செய்தருளினார்கள். அது முதல் ஸ்ரீமத் சோமசுந்தரத் தம்பிரான் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். திருப்பனந்தாளில் ஓதுவார் பணியில் இருந்தபோதே காசிமடத்தின் சார்பில் தொடங்கிய காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் வித்துவான் புகுமுக வகுப்பிலும் சேர்ந்து பயின்றார். தருமபுரம் வந்தவுடன் தருமை குருமணியின் அருளால் தொடங்கப்பெற்ற புகுமுக வகுப்பில் சேர்ந்து 1946ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றார். 1945ம் ஆண்டு ஆவணி மாதத்தில் கயிலை குருமணிகளிடம் சமய தீட்சை பெற்றார். தீட்சா நாமம் சோமசுந்தரம் என்பது அதே ஆண்டில் ஐப்பசி கந்த சஷ்டியன்று விசேட தீட்சை பெற்று சிவபூசை எழுந்தருள பெற்றார்.

1950ம் ஆண்டு பிப்ரவரியில் சிவராத்திரியன்று உடையவர் பூசை எழுந்தருளப் பெற்றார். 1951ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி நிர்வாண தீட்சை பெற்று 23.9.1951ல் சொக்கநாதர் பூசை செய்யும் பேறு பெற்றார். 1953 மார்ச் மாதம் திருச்சி மலைக்கோட்டை மவுன மடம் கட்டளை விசாரணை பணியில் அமர்ந்தார். பின்னர் சென்னை தியாகராய நகரில் சைவமும் தமிழும் தழைத்து இனி ஒங்கவும் திருமுறைப் பாடல்கள் திக்கெல்லாம் முழங்கவும்” கயிலை குரு மணியவர்கள் ஆதீனத் திருமடம், ஆதீன தேவஸ் தானங்களின் சார்பில் சமயப் பிரசார நிலையம் தொட ங்கினார். அதில் பிராசார நிலைய விசாரணையாக பணியாற்றி வந்தார்.

11.11.1971 ம் ஆண்டு காசிவாசி அருணந்தி தம்பிரான் சுவாமிகள் தலைமையில் காசி மடம் இளவரசு காசிவாசி முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் குன்றக்குடி அடிகளார் மற்றும் திருக்கூட்டத்து தம்பிரான் சுவாமிகள் அனைவரும் சொக்கநாதர் திருமுன்னிலையில் கூடி ஒருமனதாக மவுனமடம் கட்டளை விசாரணையும் சென்னை சமயப்பிரசார நிலைய விசாரணையுமாக இருந்த சோமசுந்தர தம்பிரான் சுவாமிகளை தருமையாதீனம் குருமகா சன்னிதானமாக அறிவித்தனர். அவருக்கு சண்முகதேசிக ஞான சம்பந்த பரமாச்சாரியார் என்று நாமதீட்சை (பெயர்) சூட்டப்பட்டது. கயிலை குருமணிக்கு செய்ய வேண்டிய குருமூர்த்த அமைப்பு கிரியைகளையெல்லாம் சிவாகம முறைப்படி 10 நாட்கள் செய்து குருபூஜையும் சிறப்பாக செய்தார். 19.11.1971 முதல் குருஞான சம்பந்தர் அமைத்தருளிய ஞான பீடத்தில் எழுந்தருளினார். அது முதல் சைவ சமயப் பரிபாலனம் செய்து வந்தார். இவருக்கு கடந்த 5.5.2006ல் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சதாபிஷேக விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சைவமும் தமிழும் தழைத்து இனி ஓங்குக என்பது தருமை ஆதீனத்தின் குறிக்கோள் உரை. அதை நடைமுறைப்படுத்தி வாழ்ந்து வந்தார்.

🔥திருக்கோயில் குடமுழுக்கு, பன்னிருத்திருமுறை வெளியீடு, கல்வி நிறுவனங்கள் தொடங்கல் என பல்வேறு சிறப்புகளுடன் தமது ஆட்சி காலத்தை பொற்காலமாக நிகழ்த்தினார். இவரது வயது மூப்பின் காரணமாக, உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தஞ்சை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 2019 டிசம்பர் 4ம் தேதி முக்தியடைந்தார். 

தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமாக, திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட புகழ்பெற்ற 27 ஆலயங்கள் தமிழகம் மட்டுமின்றி, காசி உள்ளிட்ட இடங்களிலும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை திக்கு நோக்கி மனம் மொழி மெய்களால் வணங்கி மகிழ்வோம்.

திருச்சிற்றம்பலம்..🙏🏼 நற்பவி 🙏🏾 நற்பவி

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...