Tuesday, November 8, 2022

இத்தலம் "பிரம்மஹத்தி" தோஷ நிவாரண தலமாக விளங்குகிறது.

அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோயில்,   
திருவிடைமருதூர் -  612104. 
தஞ்சை மாவட்டம்.
*இறைவர் திருப்பெயர் : மகாலிங்கேஸ்வரர்
*இறைவியார் திருப்பெயர்: 
பிருஹத் சுந்தர குஜாம்பிகை, நன்முலைநாயகி
*தல மரம் : மருதமரம்
*தீர்த்தம் : காருண்யாமிர்தம், காவேரி
*வழிபட்டோர் : அகத்தியர், வரகுணபாண்டியன், பட்டினத்தார்,  பத்திரகிரியார், காசிப முனிவர்
*தேவாரப் பாடல்கள் : இது அப்பர், சுந்தரர்,ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்று நால்வராலும் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம்.
 
  *இக்கோயி்லின் பாவை விளக்கு மிக பழமையானது. ஒரு மன்னரின் மனைவியே தீபம் ஏந்திய பாவை விளக்காக இன்றும் நிற்பது வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்வாகும்.          

*இங்கு நவகிரகங்கள் வித்தியாசமான அமைப்புடன் இருப்பது  சிறப்பு.   

*வடக்கில் உள்ள பிரணவப் பிரகாரத்தில் நாயக்கர் கால கட்டிடக்கலையின் படி தேர் வடிவில் சன்னிதி அமைக்கப்பட்டு அதில் வேம்படி முருகன் ஆட்சி செய்கிறார்.  

*இங்கே சிங்கமுகத் தீர்த்தக் கிணறு ஒன்று இருக்கிறது.              

*பாவம் நீங்க வழிபாடு: வரகுணபாண்டிய மன்னன் அறியாமல் செய்த கொலைக்காக, பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டான். விமோசனத்திற்காக  திருவிடைமருதூர் வந்த அரசன் இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டியனைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்பற்றி கோவிலினுள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டியனை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள் புரிந்தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவனாக பண்டியநாடு திரும்பினான். 
*இதை நினைவுகூறும் வகையில் இன்றளவும் இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள் பிரதான கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று மேற்கிலுள்ள அம்மன் சந்நிதி கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.

*இத்தலம் "பிரம்மஹத்தி" தோஷ நிவாரண தலமாக விளங்குகிறது.  தோஷங்களைப் போக்க இவ்வாலயத்தில் தினமும் காலை சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது.  இக்கோயி்லில் வரகுணபாண்டியனின் சிலை அமைந்துள்ளது.     

*பஞ்சலிங்கத் தலம்: தேரோடும் நான்கு வீதிகளின் கோடிகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோருக்கு நான்கு சிவாலயங்களும் நடுவிலே மஹாலிங்கப் பெருமானும் அமர்ந்திருப்பதால் இத்தலம் பஞ்சலிங்கத் தலமென்றும் அழைக்கப்படுகிறது.       
  
*மழை பெய்யும் அதிசயம்:  மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்களில்    திருவிடைமருதூரில் மேற்கு திசையில் அமைந்துள்ள சொக்கநாதர் ஆலயத்தில் பெருமானுக்கு சிறப்பாகப் பூசை வழி பாடுகளைச் செய்து, மேகராகக் குறிஞ்சிப் பண்களில் அமைந்த தேவாரப் பதிகங்களைப் பாராயணஞ் செய்வதால் மழை பொழிகிறது.  

*மகாலிங்கேஸ்வரர் கோவில் மூன்று பிரகாரங்களைக் கொண்டதாகும். 1.அஸ்வமேதப் பிரகாரம்:  இது வெளிப் பிரகாரமாகும். இந்தப் பிரகாரத்தில் கோவிலை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும். 
2.கொடுமுடிப் பிரகாரம்: இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.  
3.பிரணவப் பிரகாரம்: இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரம். இப்பிரகாரத்தை வலம் வருதல் மோட்சத்தை அளிக்க வல்லது.  

*சப்தஸ்தானம்*
திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்களில் திருவிடைமருதூரும் அடங்கும்.  மற்றவை- திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம்,  மருத்துவக்குடி ஆகிய தலங்களாகும்.    

*காசிக்கு நிகரான ஆறு சிவத்தலங்களுள் திருவிடைமருதூரும் ஒன்றாகும். மற்றவை- திருவையாறு, திருச்சாயக்காடு, திருவெண்காடு, திருவாஞ்சியம், மற்றும் மயிலாடுதுறை.

*மருத மரத்தை தல மரமாகக் கொண்ட  சிவன் கோயில்கள் இந்தியாவில் மூன்று உள்ளன.  
1.ஆந்திர மாநிலம் கர்நூல் அருகே உள்ள மல்லிகார்ஜுனம் எனும் திருக்கோயில். 
2.மத்தியார்ஜுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர்.  
3.புடார்சுனம் எனப்படுகின்ற தமிழ்நாடு திருநெல்வேலிக்கு அருகே [அம்பாசமுத்திரம்] அருகில் உள்ள திருப்புடைமருதூர். இவை முறையே தலைமருது, இடைமருது, கடைமருது எனப் புகழப்பெறுகின்றன.

*இது பஞ்சகுரோசத் தலங்களுள்  ஒன்றாகும்.
திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன.   

*திருவிடைமருதூரில் சுயம்பு லிங்க மூர்த்தியாக அருள்புரியும் மகாலிங்கேஸ்வரர் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டு பூஜா விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக்கு போதித்து அருளினார். 

*மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.

*இத்தலத்தில்
மூகாம்பிகைக்கு  தனி சன்னதி
உள்ளது சிறப்பு. 
     
*இங்கு 27 நட்சத்திரங்களுக்கும் 27 இலிங்கங்கள் உள்ள நட்சத்திர இலிங்க சன்னதியும் உள்ளது. 

 *பட்டினத்தார் மற்றும் பத்திரகிரியார் இருவருக்கும் முறையே கிழக்கு மற்றும் மேற்கு கோபுர வாசல்களில் சன்னதி உள்ளது.

*திருவிடைமருதூர்  சிவாலயம்  நெடிதுயர்ந்த கோபுரங்களும் மூன்று நீண்ட பிரகாரங்களும் உடைய சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும்.

*இது திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான கோயிலாகும்.

*இத்தலம் மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில், கும்பகோணத்தில் இருந்து 9 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது.

🙏 சிவாயநம

No comments:

Post a Comment

Followers

புராதனவனேஸ்வரர் பட்டுக்கோட்டை தஞ்சாவூர்...

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில் பட்டுக்கோட்டை தஞ்சாவூர் மாவட்டம்.       இறைவன் :- புராதனவனேஸ்வரர் இறைவி :- பெரியநாயகி அம்...