Thursday, December 29, 2022

சைவ சமயம் பெண்டிரும் ஆணுக்குச் சமமாய் இறை வழிபாடு மற்றும் பூசைகள் செய்யலாம் என அனுமதிக்கின்றது.

பெண்ணில் நல்லாள் .
சைவ சமயம் பெண்டிரும் ஆணுக்குச் சமமாய் இறை வழிபாடு மற்றும் பூசைகள் செய்யலாம் என அனுமதிக்கின்றது.பிறிதொரு எந்த சமயத்திலும் இத் தெளிவு இல்லை என்பதே உண்மை.

இதற்கு முன் உதாரணமாக உமைத்தாயரர் அவர்களை எடுத்துக் கொள்ளலாம்.

கயிலையில் தாயார் சிவத்தின் கண் ஆகமப் பாடங்கள் கேட்க சிவமும் 28 ஆகமங்களும் அன்புடன் உரைத்து முடித்தார். "நான் என்ன உங்களைப் போல ஞானம் பெருகியவளா என்ன...?சிறிது எளிமையாக எனக்குச் சொல்லக் கூடாதா.."எனத் தாய் கேட்கிறார்.

சிவம் சிரித்துக் கொண்டே சொல்கிறார்..."ஏன் உனக்கு அத்தனை சிரமம் பூசை செய்தால் எதுவும் விளங்கும் "எனச் சொல்ல பார்வதி உடன் தாம் பூசை செய்ய வேண்டும் என சிவத்தி டம் சொல்லி , அவரின் வழிகாட்டுதலின  படி பூலோகம் வந்து ஒரு  மாமரத்தின் கீழ் பூசை செய்த இடம் காஞ்சீபுரம.சிவம் அம்பிகையின் பூசைக்கு இரங்கி வந்து காஞ்சியில் தரிசனம் கொடுத்தது.

பெரியபுராணத்தில சேக்கிழார் சுவாமிகள் மேற்படி நிகழ்வுகளை தேன் தமிழில் விவரிக்கிறார்.

 வெள்ளி மால்வரைக் கயிலையில் வீற்றிருந் தருளித்
துள்ளு வார்புனல் வேணியார் அருள்செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத் திறனெலாம் தெளிய
உள்ள வாறுகேட் டருளினாள் உலகையா ளுடையாள். (12:19:50)

எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவர்தாம் விரும்பும்
உண்மை யாவது பூசனை எனவுரைத் தருள
அண்ண லார்தமை அர்ச்சனை புரியஆ தரித்தாள்
பெண்ணில் நல்லவ ளாயின பெருந்தவக் கொழுந்து.(12:19:51)

சேக்கிழார் சுவாமிகள் உமைத்தாயாரை பெண்ணில் நல்லாள் என்றும் பெருந்தவக் கொழுந்து என்றும் பாராட்டிப் பாடுகிறார்.

பெண்ணில் நல்லாள் என்னும் பதத்தை சேக்கிழார் சுவாமிகள் எங்கிருந்து எடுத்தார் எனப் பார்ப்போம்.
 
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.(3 :24 : 1)

சைவம் இல்லறத்தை ப்போற்றும்.இப்பூவுலகில் இல்லறத்தில் உரிய அறங்களை இல்லக் கிழத்தியுடன் நிறைவேற்றியும் கூட வீடு பேறு அடைய முடியும்.கணவன் மனைவி இருவரும் இணைந்து சிவநெறி கடைப்பிடிக்க வீடு பேறு அடையலாம்.எப்படி என்றால் பெண்ணில் நல்லாளோடு பெருந்தகை சிவம் இருந்தது போல என்கிறார்.

திருமூலர் திருமந்திரம் நான்காம் தந்திரம் , ' ஆதார ஆதேயம் ' தலைப்பில் இரண்டாம் பாடலாக,

தரித்திருந் தாள்அவள் தன்னொளி நோக்கி
விரித்திருந் தாள்அவள் வேதப் பொருளை
குறித்திருந் தாள்அவள் கூறிய ஐந்தும்
மறித்திருந் தாள்அவள் மாதுநல் லாளே . ' 

எனப்பாடி அருளி இருக்கிறார். சத்தியை ' மாது நல்லாள்'  எனச சொல்கிறார்.

சேக்கிழார் பெரியபுராணம் பாடுங்கால் திருமுறைகள் அனைத்தும் உள்வாங்கி அதன் செறிவுகளை நயத்துடன் வெளிப்படுத்துவது சிறப்பாம்.

நம் சைவ சமயம் இல்லறத்தை அனுமதிக்கிறது. மகளிர் விபூதி பூசலாம் , பூசை செய்யலாம் , தீக்கை பெறலாம்..தம் வாழ்க்கைத் துணை நலத்துடன் சிவத் தொண்டுகள் அனைத்தும் நிறைவேற்றலாம்  என வழிகாட்டுகிறது.

பெரியபுராணத்தில ,அமர்நீதி நாயனார் , சிறுத்தொண்டர் நாயனார் , இளையான்குடி மாற நாயனார் , திருநீலகண்டர் முதலிய அடியார் பெருமக்கள் தாங்கள் இல்லத் துணைவி யுடன்தான் வீடு பேறு அடைந்தார்கள் எனச் சொல்லப்பட்டு இருக்கிறது என்பதும் நாம் கவனிக்க வேண்டும்.

நம் வீட்டு மகளிர் அனைவரும  பெண்ணில் நல்லாள் மற்றும்  பெருந்தவக் கொழுந்துகள் என்பதையும் நாம் கருத்தில்  கொள்ளல் வேண்டும்.


No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...