Tuesday, December 13, 2022

நன்னிலத்தில் இருந்து நாகூர் செல்லும் வழியிலே திருப்புகலூர் என்ற திருத்தலம்.

திருச்செங்காட்டங்குடி
உத்திராபதீசுவரர்
திருகுகுழல் உமைநங்கை

நன்னிலத்தில் இருந்து நாகூர் செல்லும் வழியிலே திருப்புகலூர் என்ற திருத்தலம். இத்திருத்தலத்தில் இருந்து திருக்கண்ணபுரத்திற்கு ஒரு பாதை செல்கிறது. இவ்வழியாகச் சென்றால் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தை அடையலாம் அல்லது நாகூரில் இருந்து நன்னிலம் வரும் வழியிலே திருமருகல் என்ற திருத்தலம், இத்திருத்தலத்தின் வழியாகவும் திருச்செங்காட்டங்குடியினை அடையலாம். அருகருகே அமைந்த நிறைய கோவில்கள் இருக்கக்கூடிய பகுதி.

ஆம் ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதரையும் தரிசிக்கலாம். திருப்புகலூர் திருத்தலம். திருக்கண்ணபுரம் திருத்தலம். திருக்கண்ணபுரத்தில் திவ்ய தேசம் இருக்கிறது, தேவாரத் திருத்தலமாகிய இராமநதீச்சுவரர் தலமும் இருக்கிறது. திருமருகல் திருத்தலம் உள்ளது. இந்த திருத்தலங்கள் எல்லாம் ஒரே நாளிலே தரிசிக்கக் கூடிய வகையில் அருகருகே இருக்கக்கூடிய திருத்தங்கள். பார்த்துவிட்டு வர பேருந்து வசதிகளுக்கும் குறைவில்லை.  

திருஞானசம்பந்தப் பெருமான் இத்திருத்தலத்தை கணபதீச்சரம் என்று அழைக்கின்றார். கணபதியானவர் கசமுகாசுரனை வதம் செய்த  பாவம் நீங்க இவ்விடத்திலே இறைவனை வேண்டி வழிபட்டு அருள் பெற்றதாக ஐதீகம். ஆகவே இத்திருத்தலம் கணபதீச்சரம் என்று அழைக்கப் பெறுகிறது. 

இத்திருத்தலம் வரலாற்று ரீதியாகவும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை தன்னகத்தே அடக்கி இருக்கிறது. தமிழகத்திலே சிறிய ஒரு கிராமம். இத்திருத்தலத்தில் அவதரித்தவர் தான் சிறுத்தொண்டர் என்னும் நாயனார். இவர்தான் பல்லவ மன்னனின் படைத் தளபதிகளில் முக்கியமான ஒருவராகத் தலைமை ஏற்று, வாதாபி சென்று போர்க்களத்திலே தமிழர்களின் வீரத்தை பறைசாற்றி விட்டு, வாதாபி நகரை அழித்துவிட்டுத் திரும்பி வந்தபோது அங்கிருந்த கணபதி மேல் சிறுத்தொண்டருக்கு ஒரு ஈர்ப்பு. அப்பொழுது அவர் பரஞ்சோதி ஆக தானே இருந்தார். அந்த பரஞ்சோதியார் இருந்த ஊர் ஏற்கனவே கணபதீச்சரம் தானே. அவருக்கு உண்மையிலேயே வாதாபி கணபதி மீது வந்த காதலுக்கு வியப்பேதுமில்லை. கணபதீச்சரத்திலே அப்பேற்ப்பட்ட ஒரு கணபதியை நிறுவ வேண்டும் என்று எண்ணி வாதாபியிலிருந்து அந்த கணபதியை தன்னுடைய ஊருக்கு கொண்டு வந்தார். ஆனால் தற்போது அந்த வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட கணபதியானவர் திருவாரூர் திருத்தலத்தில் இருப்பதாக குடவாயில் பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் ஒரு யூடியூப் காணொளியில் கூறியிருக்கிறார்கள். எது எப்படியோ வாதாபியிலிருந்து கணபதீச்சுரத்தைச் சேர்ந்த ஒருவர் நமது ஊருக்கு அங்கிருந்து ஒரு கணபதியை கொண்டு வந்திருக்கின்றார். அப்பேர்ப்பட்ட ஒரு பெருமை வாய்ந்த  கிராமம் இந்த திருச்செங்காட்டங்குடி. 

 திருச்செங்காட்டங்குடி ஊர்ப்பெயரும் புராண தோடு தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது. கஜமுகாசுரன் என்னும் அசுரனை கணபதி அழித்ததால் பெருகிய குருதியினால் இந்த ஊர் செந்நிறமாக மாறியதாகவும், அதனால் இந்த திருத்தலத்திற்கு திருச்செங்காட்டங்குடி என்று பெயர் வந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

 பரஞ்சோதியார் ஆக இருந்து பின்னால் சிறுதொண்டர் ஆக மாறிய அந்த சிவனடியாரால் திருச்செங்காட்டங்குடி திருத்தலம் பல்வேறு பெருமைகளைப் பெற்றது. சிறுதொண்ட நாயனார் சிவனடியார்களுக்கு தினந்தோறும் அமுது படைத்து பணியாற்றியவர். அவர் அப்படி சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி கொண்டிருக்கக்கூடிய ஒரு நாளிலே பைரவ வேடம் பூண்டு அவரை சோதிப்பதற்காகவே இறைவன் வருகிறார். தாம் வடபுலத்தில் இருந்து வருவதாகவும், தாம் பிள்ளைக்கறி மட்டுமே ஆறு மாதத்திற்கு ஒருமுறை சாப்பிடுவதாகவும், அதற்காக தக்க ஏற்பாடு செய்யுமாறும் சிறுதொண்டரிடம் கூறவே, சிறு தொண்டரும் தன்னுடைய ஐந்து வயது மகன் சீராளனையே கறி சமைக்கிறார். அதற்கு அவருடைய மனைவி திருவெண்காட்டு நங்கையும், அவர்கள் இல்லத்தில் வேலை பார்க்கக் கூடிய பெண்மணியும் இன்முகத்துடன் இறைவனுக்கு அமுது படைக்கிறார்கள். இறைவனின் திருவருளால் சிறுதொண்டரின் மகனான சீராளரும் உயிர்பெற்று வரவே, பைரவராக வந்து தங்களை சோதித்தது சிவபெருமானே என்று எண்ணி சிறுதொண்டர் கண்ணீர் மல்க இறைவனை வணங்குகிறார். அந்த நிகழ்வினை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் இவ்விழாவானது கொண்டாடப்படுகிறது. இதற்காக சோழ மன்னர், சித்திரை மாத பரணி நட்சத்திரம் மட்டுமன்றி ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய பரணி நட்சத்திரத்தில் உத்திரபதீசுவரருக்கு சிறப்பு வழிபாடு செய்யவே, பல்வேறு நிவந்தங்களை வழங்கியிருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக நாம் அறிகின்றோம். 

சிவபெருமான் அன்று பைரவர் கோலத்திலே வந்ததை, ஐயடிகள் காடவர்கோன் காலத்திலே, இறைவனே வந்து தமக்கான சிலையை நிறுவியதாக ஐதீகம். அந்த உத்தராபதீஸ்வரர் எதிரே சிவபெருமான் அமர்ந்திருந்த கல்லத்திமரமும், அதற்கு முன்னதாக சிறுதொண்டர், அவர்தம் மனைவி திருவெண்காட்டு நங்கை, அவர் தம் மகன் சீராளன், அவர்கள் இல்லத்தில் பணி செய்த சந்தன நங்கை ஆகியோருடைய புடைப்புச் சிற்பமும் காணப்படுகிறது.

 இத்திருத்தலம் ஆனது பல்வேறு பெருமைகளை பெற்றது. கணபதி வழிபட்டு இவ்விடத்திலே இறைவனை ஸ்தாபிக்க, பின்னால் வந்த சிறுத்தொண்டராலும் இத்திருத்தலம் பல்வேறு பெருமைகளை பெற்று இன்றும் நம்மிடையே உள்ளது.

 இத்திருக்கோவில் வேளாக்குறிச்சி ஆதீனம்  நிர்வாகத்தில் உள்ளது.
 சிவபெருமானின் மைந்தனான கணபதி மட்டுமின்றி சிவ தொண்டர் ஆகிய சிறுதொண்டராலும் பெருமை பெற்று, நாயன்மார்கள் ஆகிய அப்பர் பெருமான், சுந்தரர் பெருமான், ஞானசம்பந்தப் பெருமான் ஆகியோராலும் பாடல் பெற்ற பெருமைக்குரியது இந்த திருச்செங்காட்டங்குடி திருத்தலம். ஆம் சம்பந்தர்,அப்பர், சுந்தரர், சேக்கிழார் ஆகியோரால் இந்த திருத்தலம் பாடப்பெற்றுள்ளது. பன்னிரு திருமுறையில் இந்த திருப்பதிகங்கள் இடம்பெற்றுள்ளன.
 நாயன்மார்களால் குறிப்பாக அப்பர்,சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலங்கள் தேவாரத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவ்வகையிலே இந்த தரணியிலே இருக்கக்கூடிய தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்களில் இத்திருத்தலம் காவிரி தென்கரைத் திருத்தலத்தில் வருகிறது. சோழநாட்டில் அமைந்துள்ள மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு திருத்தலம் இந்த திருச்செங்காட்டங்குடி திருத்தலம். 

இறைவன் பூமியிலே வந்து அடியார்களுக்கு அருள் செய்வதற்காக பல்வேறு திருத்தலங்களில் தம்முடைய திருப்பாதங்களைப் பதித்துள்ளார். இந்தத் திருத்தலமும் இறைவனின் திருப்பாதம் பட்ட ஊராகும். ஆம் பரஞ்சோதியார் என்று சொல்லப்படக்கூடிய சிறுதொண்ட நாயனாரின் வீட்டிலிருந்து கணபதீச்சரம் திருக்கோவில் கல்லத்திமரம் வரை இறைவனே நடந்து சென்று, மீண்டும் அந்த  மரத்தின் நிழல் அடியிலிருந்து நாயனாரின் வீட்டிற்கும் வந்து இருக்கிறார். இறைவன் பாதம் பட்ட பல்வேறு திருத்தலங்களில் இத்திருத்தலம் ஒரு முக்கியமான திருத்தலமாகும்.

பதிகங்கள்:
அங்கமும் வேதமும் -1 -06 திருஞானசம்பந்தர்

நறைகொண்ட -1 -61 திருஞானசம்பந்தர்

பைங்கோட்டு -3 -63 திருஞானசம்பந்தர்

பெருந்தகை -6 -84 திருநாவுக்கரசர்

 ஞானசம்பந்தப் பெருமானின் அங்கமும் வேதமும் என்ற திருப்பதிகம் மிக அருமையான திருப்பதிகம். திருமருகல் திருத்தலத்தில் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தினை நினைத்துப் பாடி இருக்கக்கூடிய இப்பதிகம் பெருமைவாய்ந்த பதிகம். திருமருகலில் இருக்கக்கூடிய ஞானசம்பந்தப் பெருமானை மீண்டும் கணபதீச்சுரம் வந்து வழிபடுமாறு சிறுதொண்டர் அழைக்கவே, திருமருகல் திருத்தலத்தில் இறைவனை நோக்கி, திருமருகல் திருத்தலத்தில் இறைவனிடமே யாம் செங்காட்டங்குடி திருத்தலத்தை கணபதிச்சுவரரை கண்டோம் என்று ஒரு பதிகத்தை பாடுகிறார். திருமருகல் பெருமானே தாங்கள் கணபதீச்சுரம் சென்று அமர்ந்த காரணம் என்ன? கணபதீச்சுரம் காமுற காரணம் என்ன? என்று அருமையான ஒரு பதிகத்தில் பாடியிருக்கிறார்.

"நெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூன்மறை யாளரேத்த
மைதவழ் மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செய்தவ நான்மறை யோர்களேத்துஞ் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கைதவழ் கூரெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே"

நாகை, கீழ்வேளூர் ஆகிய திருத்தலங்களில் எல்லாம் தரிசித்து வந்த ஞானசம்பந்தப் பெருமானை சிறுதொண்ட நாயனார் திருச்செங்காட்டங்குடி அழைத்து வந்து கணபதீச்சரம் ம இறைவனை பாடுமாறு வேண்ட ஞானசம்பந்தப் பெருமானும் நிறை கொண்ட என்ற பதிகத்தை பாடுகிறார்.

"தோடுடையான் குழையுடையா னரக்கன்றன் றோளடர்த்த
பீடுடையான் போர்விடையான் பெண்பாக மிகப்பெரியான்
சேடுடையான் செங்காட்டங் குடியுடையான் சேர்ந்தாடும்
காடுடையா னாடுடையான் கணபதீச் சரத்தானே." 

மேலும் சிறுதொண்டர் பணிபுரிய செங்காட்டங் குடிமேய பெருமானே என்று ஒரு பதிகமும் பாடி அருளுகிறார்.

"பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய்  தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன்  பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே"

 திருநாவுக்கரசு சுவாமிகள் திருப்புகலூரிலே எழுந்தருளி இருக்கின்ற பொழுது இத்திருத்தலத்திற்கு வந்து திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தில் இறைவன் புகழை ஒரு பதிகத்தில் பாடியிருக்கிறார்.

"பெருந்தகையைப் பெறற்கரிய மாணிக் கத்தைப்
    பேணிநினைந் தெழுவார்தம் மனத்தே மன்னி
இருந்தமணி விளக்கதனை நின்ற பூமேல்
    எழுந்தருளி யிருந்தானை எண்டோள் வீசி
அருந்திறல்மா நடமாடும் அம்மான் தன்னை
    அங்கனகச் சுடர்க்குன்றை அன்றா லின்கீழ்த்
திருந்துமறைப் பொருள்நால்வர்க் கருள்செய் தானைச்
    செங்காட்டங் குடியதனிற் கண்டேன் நானே"

 "செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க்கு அடியேன்" என்று திருச்செங்காட்டங்குடியை  சுந்தரர் திருத்தொண்டர் தொகையில் பதிவுசெய்கிறார்.

இதுகாறும் இலக்கியங்கள் பகர்ந்ததையும், புராணங்களையும் கண்டோம்.அடுத்து வரும் பதிவில் கல்வெட்டுக்கள் கூறுவதை காண்போம்

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...