Saturday, January 28, 2023

சிதம்பரத்தை பற்றி சில விவரங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும்.

பூலோக கைலாசம் - தில்லை அம்பலம்
பூலோக கைலாசம் - தில்லை அம்பலம்:
சிதம்பரத்தை பற்றி சில விவரங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கக் கூடும். பூலோக கைலாசம் என்று அழைக்கப்படும் தலம் இது. (அரங்கன் பள்ளி கொண்ட ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்னுமாப்போல் சிதம்பரத்தை பற்றி எழுத வேண்டும் என்றாலே உடலில் ஒருவித பரவசம்  ஏற்படுகிறது.
சிதம்பரத்தை பற்றிய கடல் போல விரிவான,பரந்த  செய்திகளில் எதை சொல்வது, எதை விடுவது என்ற பெருங்கவலை ஏற்படுகிறது.)
நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து அடிப்படையான பஞ்ச பூதங்களுக்காக  தனித்தன்மையான கோவில்கள் தென்னிந்தியாவில் ஐந்து இடங்களில் கட்டப்பட்டிருக்கின்றன. பஞ்சபூத ஸ்தலங்கள் என்று இவைகளுக்கு பெயர். இவைகளில் தற்போதைய *தமிழகத்தில்* (நன்றாக கவனிக்கவும். தமிழகத்தில்) நான்கும், ஆந்திரப் பிரதேசத்தில் ஒன்றுமாக அமைந்துள்ளன.
*நீர் - திருவானைக்காவல்,*
*நெருப்பு - திருவண்ணாமலை,*
*காற்று - காளஹஸ்தி*,
*பூமி - காஞ்சிபுரம்*
மற்றும்
*ஆகாயம் -- சிதம்பரம்* ஆகிய இடங்களில் இந்த கோவில்கள் உள்ளன.
(சிதம்பரம் கோவிலை பதஞ்சலி முனிவர் உருவாக்கும்போது எந்த ஆடம்பர நோக்கத்துடனும் செய்யவில்லை. ஒரு மகத்தான சக்தியூட்டப்பட்ட புனித ஸ்தலத்தை உருவாக்க என்ன தேவையோ அதை மட்டுமே செய்தார்)
இதில், சிதம்பரம் கோவில் நம்பவே முடியாத அளவுக்கு ஆச்சரியங்களை உள்ளடக்கிய ஒன்று. கோவிலில் கொஞ்சம் புதிதாக தெரியும் பகுதியானது சுமார் 1000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டதாம். ஆனால் கோவிலின் புராதன உட்புறம் எப்போது கட்டப்பட்டது என்பது பற்றி யாருக்குமே தெரியவில்லை. 3500 ஆண்டுகள் அல்லது அதற்கும் முற்பட்டதாக இருக்கலாம் என்று  கருதப்படுகிறது.
சிதம்பரம் கோவிலில், நடனக்கலையின் அரசனாக 'நடராஜன்' எனும் வடிவில் சிவன் இருக்கிறான். 'நடேசன்' அல்லது 'நடராஜன்' சிவன் எடுத்துள்ள குறிப்பிடத்தக்க வடிவங்களில் ஒன்று. நடராஜனின் மற்ற பெயர்களை கேட்கும்போது மலைப்பேற்படுகிறது. மற்ற பெயர்கள்
திருமூலநாதர் (மூலட்டானேஸ்வரா்),
சபாநாயகா்,
கூத்தப்பெருமாள்,
கூத்தபிரான்,
விடங்கா்,
மேருவிடங்கா்,
தட்சிணமேருவிடங்கா்,பொன்னம்பலம்,
பொன்னம்பலகூத்தா்,
தில்லைவனநாதா்,
தில்லைநாயகா்,
தில்லைவாசா்,
கனகசபை,
கனகசபாபதி,
கனகரத்னம்,
சபாரத்னம்,
சபேசர்,
சித்சபேசர்,
சபாபதி,
ஸ்ரீசபா,
திருச்சபைநாதர்,
திருச்சிற்றம்பலநாதர்,
சிற்றம்பலம்,
அம்பலநாதா்,
அம்பலவாணா்,
அம்பலத்தரசா்,
ஆடலரசா்,
ஆடியபாதம்,
குஞ்சிதபாதம்,
நடனசிவம்,
நடனசபாபதி,
நடேசமூா்த்தி,
நடேஸ்வரா்,
தாண்டவமூா்த்தி,
தாண்டவராயா்,
ஆனந்ததாண்டவா்,
சிதம்பரநாதா்,
சிதம்பரேஸ்வரா்.
சிதம்பரம் கோவிலின் கட்டிட பகுதிகள் மட்டுமே  35 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. முற்றிலும் கற்களை கொண்டு அற்புதமாக கோவில் உருவாக்கப் பட்டிருக்கிறது. இது தவிர, நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்கள் நிவந்தங்களாக ( அரசனுக்கு வரிசெலுத்த வேண்டா இடங்கள்)  கோவிலை பராமரிப்பதற்காகவே விடப்பட்டது. ஏராளமான ஆபரணங்களும், நவரத்தின மணிகளும் கோவிலின் சொத்தாக இருந்தன.
"உள்ளம் பெருங்கோயில்,
ஊன் உடம்பு ஆலயம்,
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்,
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு"
என்றார் திருமூலர்.
மனிதரின் உடம்பும் கோயில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் (கோசங்கள் என்னும் Layers) கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐந்து  பிரகாரங்கள் உள்ளன. மனிதருக்கு இதயம் இடப்புறம் அமைந்திருக்கிறது. அதேபோல அக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை கோயிலின் நடுப்புள்ளியில் இல்லை. இடதுபுறமாகச் சற்று நகர்ந்து இருக்கிறது. ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 21,600 முறை நுரையிரல் உதவியால் மூச்சுவிடுகிறார். கோயிலின் இதயம்போல அமைந்திருக்கும் கருவறையின் மீதுள்ள கூரை 21600 ஓடுகளால் வேயப்பட்டு இருக்கிறது. மனிதருக்குள் 72000 நாடிகள் ஓடுகின்றன. அதேபோல அக்கூரையில் 72000 ஆணிகள் அறையப்பட்டு உள்ளன. இதயத்தின் துடிப்பே நடராஜரின் நடனமாக உருவகிக்கப்பட்டு இருக்கிறது.
இச்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறிய வாயில், அங்குள்ள திரை அகற்றபட்டு தீபாராதனை காட்டபடும். அங்கு திருவுருவம் இருக்காது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்க விடபட்டிருக்கும். இதன் ரகசியம் இங்கு இறைவன் ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும், முடிவும் கிடையாது. ,அதை உணரத்தான் முடியும் என்பதை உணர்த்துவதேயாகும்.
பராந்தக சோழன் கூரைக்கு பொன் வேய்ந்தான் என அறிகிறோம்.
இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணையை சிரமேற்று, 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை கூறுகின்ற விதமாக சேக்கிழார் தில்லை நடராஜர் கோயிலில் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்துதான் "பெரிய புராணத்தை" இயற்றியிருக்கிறார்.
"உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்"
எனத் தொடங்கும் முதல் பாடலுக்கு
"உலகெலாம் உணர்ந்து" என்று ஈசனே அடி எடுத்து கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
சுந்தரர் திரு தொண்டர் தொகையை இங்குதான் எழுதியுள்ளார். அதில் அவர் "தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்கிறார்.
மாணிக்க வாசகர் முக்தி அடைந்த தலம் இதுவே.
தில்லை மூவாயிரம் என அழைக்கப்படும் மூவாயிரம் தீக்ஷதர் குடும்பங்களில் இப்போது சுமார் 360 குடும்பங்களே உள்ளன. இந்து விரோத கட்சிகளாலும், அரசாலும் இவர்கள் படும் துயர் கணக்கிலடங்காது.
சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள  CERN என்ற பௌதீக ஆராய்ச்சிக் கூடத்தில் அணுக்களை ஒன்றோடு ஒன்று மோதச்செய்வது, பிளப்பது என அணுவை பற்றிய எல்லாவிதமான ஆராய்ச்சிகளும் நடைபெறுகின்றது. அந்த பரிசோதனைச் சாலையின் வாயிலில் நடராஜரின் சிலைவடிவம் வைக்கப் பட்டிருக்கிறது. ஏனெனில் இப்போது அவர்கள் செய்து வரும் பரிசோதனைகளுக்கு மனிதர்களால் உருவாக்கப்பட்ட கலாச்சாரத்தில் உள்ள வேறு எதுவும் அருகில்கூட வரவில்லை என்பதை அவர்கள் கண்டுள்ளனர்.
பொதுவாக நமக்கெல்லாம் சிதம்பரம் என்று அறியப்பட்ட தில்லை, ஸ்ரீவைணைவர்களுக்கு  திருச்சித்ரகூடம் ஆகும்.
*அத்வைதம்* என்ற வார்த்தையில் *த்வைதம்* இருப்பதற்கு எடுத்துக் காட்டாக இங்கு நடராஜர் கோவில் உள்ளே கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. இது108 வைணவத் திவ்ய தேசங்களில் ஒன்றாகும். 108 வைணவ திவ்ய தேசங்களில் 41-வது திவ்ய தேசம் திருச்சித்திரக்கூடம்.
(சில தரவுகளில் இந்த திவ்ய தேசத்தை வேறு நெம்பராக குறிப்பிடுகிறார்கள்.
விவரம் அறிந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் என்னை திருத்தவும்)
அசுரகுலத்தைச் சேர்ந்த தில்லி என்பவள் பெருமாளிடம், “தான் மரங்கள் நிறைந்த வனமாக இருக்க விரும்புவதாகவும், அவ்விடத்தில் சுவாமி எழுந்தருள வேண்டும்” என்றும் வேண்டினாள். விஷ்ணுவும் அருள்புரிய அவளே சிதம்பரத்தில் தில்லை மரங்களாக வளர்ந்து நிற்க விஷ்ணு இத்தலத்தில் பள்ளி கொண்டார். இத்தலமும் “தில்லை நகர்” எனப்பட்டது. தாயார் புண்டரீகவல்லி தனிச்சன்னதியில் இருக்கிறாள். பிரகாரத்தில் சுவாமியின் பாதத்திற்கு நேரே அவரது திருவடிகள் இருக்கிறது. இதனை வணங்குபவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆனால் இந்த இடத்தில் சிவன் மற்றும் விஷ்ணு மற்றும் காளி தேவியை இணைக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை உள்ளது. ஒருமுறை, சிவனுக்கும் அவரது துணைவி பார்வதிக்கும் இடையில் யார் நடனத்தில் சிறந்தவர் என்று வாக்குவாதம் ஏற்பட்டது. விஷ்ணு நடுவராக தில்லை வனத்தில் போட்டி நடந்தது. சிவன்  ஊர்த்வ தாண்டவத்தைத் தேர்ந்தெடுத்த போது, ​​தனது காதணியை தனது காலால் எடுத்து, காதில் அணிந்துகொள்ள, அந்த அளவிற்கு தனது காலை உயர்த்தினார். ஆனால் பெண் என்பதால் பார்வதியால் இந்த சாதனையை செய்ய முடியவில்லை. இதனால், நீதிபதி விஷ்ணு, சிவனை வெற்றியாளராக அறிவித்தார், அதே நேரத்தில் பார்வதி கோபத்தில், காளியாக, ஊரின் வேறு பகுதிக்கு சென்றாள். அவள் தில்லை காளி என்று வணங்கப்படுகிறாள்.
தில்லை நடராஜனை தரிசிப்பவர்கள் தில்லைக்காளியை வழிபட்டே போகவேண்டும் என்ற நியதி உள்ளது.
*(எழுதியவர் மாயவலை வீசிய திரு கிருஷ்ணமூர்த்தி)*

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...