🙏**சிவமே தவம்
தவமே சிவம்**🙏
நடராஜரின் நடனத் தோற்றங்கள் நான்குவித ஆன்மாக்களுக்காக நடாத்தப்படும் நடனத் தோற்றங்களைக் குறிக்கின்றன.
1. ஊனநடனம் (மோக காமிகளுக்காக நிகழ்த்தப் பெறுவது) இதில் படைத்தல் உடுக்கை ஏந்திய திருக்கரம், காத்தல் அமைந்த திருக்கரம், அழித்தல் அக்கினி ஏந்திய திருக்கரம், மறைத்தல் அழுத்தமாக ஊன்றிய திருவடி, அருளல் தூக்கிய திருவடி ஆகியவற்றால் குறிக்கப்படுகின்றன.
2.ஞானநடனம் (முத்தி காமிகளுக்காக நிகழ்த்தப் பெறுவது) இதில் உடுக்கை ஏந்திய திருக்கரம் மாயாமலத்தை நீக்குவதற்கும், அக்கினி ஏந்திய திருக்கரம் கன்ம மலத்தைச் சுடுவதற்கும், ஊன்றிய திருவடி ஆணவமலத்தை அடக்குவதற்கும், தூக்கிய திருவடி பேரின்பம் அருளுவதற்கும், அமைந்த திருக்கரம் பேரின்பத்தில் ஆன்மாவை அழுத்தம் செய்வதற்கும் பயன்படுகின்றன,
3.ஆனந்தநடனம் (மும்மலம் நீக்கி வீடு பேறு அளிக்கும்) இதில் டமருகம் ஏந்திய திருக்கரம் துடியை அசைத்தல் பக்குவம் எய்திய ஆன்மாவின் உணர்விலிருந்து மாயையை உதறி விலக்குவதையும், ஓம அங்கி எனப்படும் அக்கினியை ஏந்திய திருக்கரம் ஆன்மாவின் தொல் வினைகளாகிய கன்மவினைகள் முளையாதவாறு சுடுவதையும், ஊன்றிய திருவடி ஆணவம் மேலிடாமல் அதன் இரு ஆற்றல்களான ஆவாரக சக்தியையும் (ஆணவம் ஆன்மாவை மறைக்கும் செயலையும்) அதோநியாமிகா சக்தியையும் (கீழ் வீழ்த்தும் செயலையும்) கெடுத்து ஆணவ ஒடுக்கம் ஏற்படச் செய்வதையும், தூக்கிய திருவடி சகல, கேவல நிலைகளில் சுழன்று வந்த உயிரை அதிலிருந்து விடுவித்து அதில் மீளாதபடி துரிய அருள் நிலைக்கண் தூக்கி நிறுத்தி உய்விப்பதையும், அவ்வெடுத்த திருவடியின் குஞ்சித (வளைந்த) நிலையும் அதற்கொப்ப அப்பாதத்தைக் காட்டும் திருக்கையும், நில் என்னும் பாணியிலும் உடனாக அருகிருக்கிறேன் என்ற பாணியிலும் அமைந்த அபய கரமும், துரியாதீதம் என்னும் ஆனந்த நிலையில் ஆன்மாவை அழுத்தும் குறிப்பாக அமைந்து பெருங்கருணைப் பெருக்கால் அபயகரத்தால் பேரானந்தக் கடலில் ஆன்மா மூழ்கடிக்கப்படுவதையும் பாவனை செய்கிறது.
4.பெருநடனம் (சீவன் முத்தருக்காக நிகழ்த்தப் பெறுவது) பிறப்பறுப்பதற்காக நிகழ்த்தப்பெறுவது.
திருநடனக் காட்சி பற்றிய சில அருளாளர்களின் கூற்றைப் பார்ப்போமானால்
#சேக்கிழார் பெருமான்
“கற்பனை கடந்த சோதி கருணையே உருவமாகி
அற்புதக் கோலம் நீடி அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியேயாமம் ஆகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம்செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.”
#அப்பர்_பெருமான்
“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்தசடையும் பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப்பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.”
#மாணிக்கவாசகப்_பெருமான்
திருவாசகத்தில் இடையில்
.நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே ...
#திருமூலர்_பெருமான் திருமந்திரம் பாடல் எண் 77 இல்
“மாலாங்கனே இங்கு யான் வந்த காரணம்
நீலாங்க மேனியன் நேரிழையாள் ஒடு
மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின்
சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே.”
மேலும் சடாமுடி ஞானத்தின்
அடையாளமாகவும், பிறை பேரறிவையும், கங்கை அளவில்லாத ஆற்றலையும், ஊமத்த மலர் விருப்பு வெறுப்பற்ற தன்மையையும், திருநீலகண்டம் அருளாற்றலையும், முக்கண் சூரியன், சந்திரன், தீயையும், பூநூல் காயத்திரியையும், திருநீறு பராசக்தியையும் குறிக்கும் இத்தத்துவங்களை அறிந்து நாம் இறைவனை வழிபடவேண்டும்.
சிவ சிவ
திருச்சிற்றம்பலம்
சொக்கநாதா
சொக்கநாதா
No comments:
Post a Comment