Monday, January 30, 2023

வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன் கோவில் ...!

வேலை தலைகீழாக பிடித்து நிற்கும் முருகன் கோவில்  ...!
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், சங்கனாச்சேரி அருகே முருகப்பெருமான் வேலை தலைகீழாகப் பிடித்து நிற்கும் தோற்றத்தில் அருள்பாலிக்கும் ஆலயம் ஒன்று இருக்கிறது.

தல வரலாறு

உம்பிளி மற்றும் பெருநா எனும் இரு கிராமங்களில் அந்தணர்கள் வசித்து வந்தனர். இதில் பெருநா எனுமிடத்தில் வசித்த அந்தணர்கள் நற்செயல்கள் செய்யும் சாத்விக குணம் கொண்டவர்களாக இருந்தனர். 

உம்பிளியில் இருந்தவர்கள் மாய, தந்திர வேலைகளைச் செய்பவர்களாகவும், தீய எண்ணங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தனர்.

பெருநாவில் இருந்த அனைவரும் சிவ பக்தர்கள் என்பதால், அவர்கள் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள கீழக்குளக்கரை என்ற இடத்தில் இருந்த சிவாலயத்தில் வழிபாடு செய்தனர். 

பெருநா மக்களின் மீது பொறாமை கொண்டிருந்த உம்பிளி பகுதி மக்கள், சிவன் கோவிலை இடித்து சேதப்படுத்தினர். 

இதையறிந்த பெருநா ஊர் மக்கள், உடனடியாகச் சென்று சிவபெருமான் சிலையை மட்டும் பாதுகாப்பாக மீட்டனர். இந்நிலையில், இடமனா இல்ல நம்பூதிரி என்பவர் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, பழனி முருகன் கோவிலுக்குப் புனிதப்பயணம் சென்றார்.

அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகளைச் செய்து வழிபட்டு வந்தார். சில வாரங்களுக்குப் பின்பு, அவருக்குக் காட்சியளித்த பழனி முருகப்பெருமான், ‘பத்தினம்திட்டா மாவட்டத்தில் செல்லும் கொடுந்துறா ஆற்றில் கிடைக்கும் தனது சிலையை எடுத்து வழிபட்டு வந்தால், அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்’ என்றார்.

இடமனா நம்பூதிரி, முருகப்பெருமான் சொன்னபடியே கொடுந்துறா ஆற்றில் கிடைத்த சிலையை எடுத்துக் கொண்டு போய், பெருநா கிராமத்தில் நிறுவினார். 

இதனையறிந்த உம்பிளி கிராமத்தினர், சில ரகசியத் தந்திரச் சடங்குகளைச் செய்து, பெருநா முருகன் கோவிலை அழிக்க முயன்றனர். 

இதனைக் கேள்விப்பட்ட இடமனா நம்பூதிரி, அவரது நண்பரான காரணவர் என்பவரை அழைத்துக் கொண்டு உம்பிளியை நோக்கிச் சென்றார்.

வழியில், உம்பிளி கிராமத்தினர் செய்த மாய, தந்திரங்களால், நெருப்புப் பந்து ஒன்று உருவாகி அது கோவிலை அழிக்கும் வேகத்துடன் வந்து கொண்டிருந்தது.  

இடமனா நம்பூதிரி அதனைத் தடுக்க, முருகப்பெருமான் அருளுடன் சில சடங்குகளைச் செய்யத் தொடங்கினார்.  இந்த பூஜையில் காரணவர் பலியானார். நண்பன் இறந்தாலும், தன் பணியைத் தொடர்ந்த இடமனா நம்பூதிரி அந்தத் தீயசக்தியை முழுவதுமாகக் கட்டுப்படுத்தினார்.

பின்னர் உம்பிளியிலிருந்து எந்தத் தீயசக்திகளும், பெருநா கிராமத்திற்கு வந்துவிடாமல் இருக்க சில சிறப்புச் சடங்குகளைச் செய்து முடித்தார்.
அதன் பிறகு, உம்பிளி கிராமத்தினர் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. 

பிற்காலத்தில் உம்பிளி கிராமமே முற்றிலுமாக அழிந்து போனதுடன், அடர்ந்த காடாகவும் மாறிப் போய்விட்டதாக ஆலய வரலாறு சொல்கிறது.

பெருநா கிராமத்தில் முருகப்பெருமான் கோவில் அமைந்த தல வரலாறு இதுதான். 
இக்கோவிலில் நிறுவப்பட்டிருக்கும் முருகன் சிலை, முன்பொரு காலத்தில் முனிவர்கள் மற்றும் தேவர்களாலும் வணங்கப்பட்டு வந்தது என்று கூறப்படுகிறது. 

பிரம்மாவின் மகனான காசிப முனிவருக்கும், சுக்ரனின் மகளான மாயாவுக்கும் பிறந்தவர்கள் சூரபதுமன், சிங்கமுகன் மற்றும் தாரகாசுரன். 
இவர்கள் மூவரும் சிவபெருமானை வேண்டிக் கடுந்தவமியற்றினர்.

தங்களுக்கு எந்த வழியிலும் அழிவு வரக்கூடாது என்று நினைத்த அவர்கள், சிவபெருமானுக்குச் சமமானவராக இருக்கும் ஒருவரால் மட்டுமே தங்களுக்கு அழிவு வர வேண்டும் என்ற வரத்தை பெற்றனர்.

தாங்கள் பெற்ற வரங்களால் அகந்தை கொண்ட மூவரும், தேவர்களையும், உலக உயிர்களையும் துன்புறுத்தத் தொடங்கினார்கள். 

இதனால் வருத்தமடைந்த தேவர்கள் அனைவரும் அசுரர்களின் தொல்லைகளில் இருந்து விடுபட என்ன வழி என்பது குறித்து ஆலோசித்தனர்.
பின்னர் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். 

அவர்களின் துன்பங்களைத் தீர்க்க விரும்பிய சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியேற்றினார். அவை ஆறையும் ஒன்றாக்கியதில் முருகப்பெருமான் தோன்றினார்.

தேவர்களின் அரசனான தேவேந்திரன், தேவர்களுடன் சென்று முருகப்பெருமானைச் சந்தித்து, அவரது பிறப்பிற்கான காரணம் குறித்து தெரிவித்து, அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பாற்றும்படி வேண்டினான். முருகப்பெருமானும் அதற்குச் சம்மதித்துத் தேவர்களின் படைத்தலைவனாக (தேவசேனாதிபதி), மூன்று அசுரர்களையும் அழிக்கப் புறப்பட்டார். 

போருக்குச் செல்லும் முருகப்பெருமானை வாழ்த்திய தந்தை சிவபெருமான் அவருக்குப் பதினொரு ஆயுதங்களைக் கொடுத்தார். தாய் பார்வதிதேவி தன்னுடைய சக்தி அனைத்தையும் சேர்த்து வேல் ஒன்றை உருவாக்கிக் கொடுத்தார்

முருகப்பெருமான் முதலில் தாரகாசுரனை அழிக்கும் நோக்குடன் அவன் இருக்கும் இடத்திற்குச் சென்றார். முருகப்பெருமான் படையுடன் தன்னை அழிக்க வந்திருப்பதை அறிந்த தாரகாசுரன், தனது படையுடன் அங்கு வந்தான். 

இரு படையினருக்கும் இடையில் கடுமையான போர் நடந்தது. முருகப்பெருமானின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத தாரகாசுரன் பின் வாங்கினான்.

அப்போது அகத்திய முனிவரின் சாபத்தால், பறவையாக இருந்து மலையாக மாறிய கிரவுஞ்சன், முருகனின் படைகளை வழிமறித்துப் பெரிய மலையாக வளர ஆரம்பித்தான். 

அதனால், முருகப்பெருமானின் படைகள் முன்னேறிச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தாரகாசுரனும் எலியாக மாறி, கிரவுஞ்ச மலைக்குள் சென்று பல மாய வித்தைகளைக் காட்டத் தொடங்கினான்.

அதனைக் கண்டு கோபமடைந்த முருகப்பெருமான், தாய் தந்த வேலாயுதத்தைக் கையில் எடுத்து அந்த மலையை நோக்கி வீசியெறிந்தார். அந்த வேல் கிரவுந்த மலையைப் பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனையும் அழித்துத் திரும்பியது.

தாரகாசுரனை அழித்த ரத்தம் படிந்த வேலை கையில் பிடித்த முருகப்பெருமான், வேலில் படிந்திருந்த ரத்தம் மண்ணில் இறங்கும்படியாக வேலை, தலைகீழாகத் திருப்பி தரையில் ஊன்றி நின்றார். முனிவர்களும், தேவர்களும் மூன்று அசுரர்களில் ஒருவன் அழிந்ததை எண்ணி மகிழ்ந்து, முருகப்பெருமானை வாழ்த்தினர். சில முனிவர்கள் முருகப்பெருமானைத் தாங்கள் கண்ட அதே தோற்றத்தில் சிலையமைத்து வழிபட்டு வந்தனர். அந்தச் சிலையே பிற்காலத்தில் இடமனா நம்பூதிரிக்குக் கிடைத்தது என்று சொல்லப்படுகிறது.

கோவில் அமைப்பு

கேரளக் கட்டுமானப்பணிகளுடன் அமைந்திருக்கும் இக்கோவிலின் கருவறையில், ஆறடி உயரத்திலான முருகப்பெருமான் கிழக்கு திசை நோக்கி வீற்றிருக்கிறார். 

அவரது கையில் இருக்கும் வேல், தலைகீழாக இருக்கிறது. கோவில் வளாகத்தில் மகாகணபதி, சிவபெருமான், மகாவிஷ்ணு, நாகர்கள் உள்ளிட்ட பல துணைத் தெய்வங்கள் இடம் பெற்றிருக்கின்றன. 

இந்த ஆலயத்தில் மலையாள நாட்காட்டியின்படி, தனு (மார்கழி) மாதம் பத்து நாட்கள் நடைபெறும் ‘பள்ளிவேட்டை விழா’ சிறப்பானதாகும். இவ்விழா நாட்களில் சாக்கியார் கூத்து உள்ளிட்ட கேரள மரபு வழி கலைநிகழ்ச்சிகள் பல நடத்தப்படுகின்றன. 

மகரம் (தை) மாதம் வரும் தைப்பூசத் திருவிழா விமரிசையாக நடக்கிறது. பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 

இக்கோவிலுக்கு வந்து வழிபடுபவர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கும். வளமான வாழ்வு கிடைக்கும். தீராத நோயால் அவதிப்படுபவர்கள், காவடி எடுத்து வந்து வழிபடுவதாக வேண்டிக் கொண்டால், அவர்களின் நோய் நீங்கி நலம் பெறுகிறார்கள்.

ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்:–
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சங்கனாச்சேரி. 

இங்குள்ள நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில்  பெருநா திருத்தலம்  அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...