அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில், கும்பகோணம்.
நந்தி தேவரிடம் பெற்ற சாபம் நீங்க, மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி இத்தலத்தில் தங்கி சிவனை வழிபட்டு தனது சாபத்தை தீர்த்துக்கொண்டார் வியாச பகவான்.
அவர் இங்கு ஸ்தாபித்த லிங்கம் வியாச லிங்கம் என அழைக்கப்படுகிறது. வங்காள நாட்டு மன்னன் சூரியசேனன் தனது மனைவி காந்திமதியின் நோய் தீர இத்தலத்தில் தங்கி, இக்கோவிலுக்கு திருப்பணி செய்து மனைவியின் நோய் நீங்கியதோடு, சிறந்த புத்திர பாக்கியத்தையும் பெற்றான்.
உலகமே நீரில் மூழ்கிய ஊழிக்காலங்கள் பல முறை ஏற்பட்டதாகவும், அப்போதெல்லாம் சிவபெருமான் மீண்டும் உலகில் உயிர்களை தோன்ற செய்ததாகவும் பழங்கால தமிழ் ஆன்மீக இலக்கியங்கள் கூறுகின்றது.
அப்படியான ஒரு ஊழிக்காலத்தில் சிவபெருமானின் மகிமையால் உருவான ஒரு கோவில் தான் “கும்பகோணம் அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில்”. இக்கோவிலின் விஷேஷ அம்சம் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.
மிகவும் புராதனமான கோவிலாக பாணபுரீஸ்வரர் கோவில் இருக்கிறது. இந்த கோவிலின் இறைவனான சிவபெருமான் பாணபுரீஸ்வரர் எனவும், அம்பாள் சோமகலாம்பாள் எனவும் அழைக்கப்படுகிறார்கள். சோழ மன்னர்கள் காலத்தில் இக்கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்ததாக வரலாறு கூறுகிறது.
இத்தல புராணத்தின் படி உலகமே நீரில் மூழ்கிய ஊழிக்காலத்தில் பிரம்மன் மிதக்கவிட்ட கும்பம் இப்பகுதிக்கு மிதந்து வந்த போது, கயிலையிலிருந்து வேடன் வடிவில் வந்த சிவபெருமான், தனது வில்லிலிருந்து ஒரு பாணத்தை செலுத்தி அந்த கும்பத்தை உடைத்தார்.
அக்கும்பத்தில் இருந்த அமிர்தம் வழிந்தோடி மகாமக குளமாக உருவானது. இத்தலத்தில் பாணத்தை கொண்டு கும்பத்தை உடைந்ததால் இங்கு கோவில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு பாணபுரீஸ்வரர் என்கிற பெயர் உண்டாயிற்று.
இந்த தலத்தில் சிவபெருமான் அமிர்த கலசத்தை உடைத்ததால் இங்கு வந்து பாணபுரீஸ்வரரை வழிபடுபவர்களுக்கு நீண்ட ஆயுளும், பொருள் அபிவிருத்தியும், மங்காத புகழும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் இந்த ஆலயத்தின் இறைவியான சோமகாலம்பாளை வழிபடுபவர்களுக்கு உடல் மற்றும் மனதில் இருக்கும் சோம்பல்தனம் நீங்கி மிகுந்த சுறுசுறுப்பு ஏற்படும் என்றும், சிறந்த முகபொலிவும் உண்டாகும் என்பது அனுபவம் பெற்ற பக்தர்களின் வாக்காகும்.
அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் கும்பகோணம் நகரில் பாணத்துறை என்கிற பகுதியில் அமைந்திருக்கிறது. பாணத்துறை செல்ல பேருந்து, வாடகை வண்டி வசதிகள் இருக்கின்றன.
அருள்மிகு பாணபுரீஸ்வரர் திருக்கோவில், பாணத்துறை
கும்பகோணம்
தஞ்சாவூர் மாவட்டம் – 612 001
No comments:
Post a Comment