அனைத்து தோஷங்களையும் நீக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு...
இரட்டை பிள்ளையாருக்கு தேய்பிறை சதுர்த்தியில் அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். .
ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதி தேவி தனியாகத் தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தார்.
இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் திருத்தலத்தில் சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். ‘ஆதி இரட்டை விநாயகர்’ என்று போற்றப்படுபவரும் இவரே.
அது போலவே திருச்சி பாலக்கரைப் பக்கத்திலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும், திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாகக் கருதப்படுகிறது.
தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அறுகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால் செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். மேலும் கார் அரிசியில் மோதகம் (கொழுக்கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.
திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும். விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
பொதுவாக, செவ்வாய்க் கிழமைகளில் வழிபட நாக தோஷம் விலகும், சனிக்கிழமைகளில் கனி வகைகளில் ஏதாவது ஒன்றைச் சம்ர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.
தஞ்சை, திருவையாறு, ஐயாறப்பன் கோவிலில் உள்ளார் இரட்டைப் பிள்ளையார். இவர் சந்நிதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருமணமாகாத பெண்கள் சந்தான அபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்குதடையின்றி நிறைவேறும்.
மேலும் ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள உத்தமர்கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல் அடுத்த ஆறகலூரில் இருக்கும் கோவில், ஊட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள விநாயகர் கோவில் திருவண்ணாமலை போன்ற இடங்களிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது.
இரட்டை விநாயகரை ஒரே சந்நிதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும்
No comments:
Post a Comment