மகிமை மிக்க மகா சிவராத்திரி:
சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம். பக்தர்கள் இரவு முழுவதும் விழித்திருந்து சிவனை வழிபடுவதே இந்த நாளின் விஷேசம் ஆகும். மகா சிவராத்திரியன்று முறைப்படி விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் விலகும். காசியில் வீடு பேரடைந்த பலன் கிடைக்கும்.
மகா சிவராத்திரி பூஜை காலங்கள்
முதல் கால பூஜை - இரவு, 6:30- 9:30pm;
இரண்டாம் கால பூஜை இரவு 9:30-12:30pm;
மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 12:30- 3:30am,
நான்காம் கால பூஜை அதிகாலை, 3:30-6:00 am..
மகா சிவராத்திரி: மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
சிவராத்திரியின் போது இரவு நான்கு சாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.
முதல் சாமம்: இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாம் சாமம்: இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.
மூன்றாம் சாமம்: இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்
நான்காம் சாமம்: இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக.
No comments:
Post a Comment