Friday, March 17, 2023

ஜலநாதேஸ்வரர் திருக்கோயில், தக்கோலம், ராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு.தக்கோலம் என்ற #திருவூறல்#உத்கடி_ஆசனத்தில்#தட்சிணாமூர்த்தியின் திருக்கோலம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற தலமான, தட்சிணாமூர்த்தி அபூர்வமான கோலத்தில் அமர்ந்துள்ள 
#தக்கோலம் என்ற #திருவூறல்
#உத்கடி_ஆசனத்தில்
#தட்சிணாமூர்த்தியின் திருக்கோலம் :

திருவூறல் - தக்கோலம், ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது திருத்தலம்.

காலம்: 
பல்லவ மன்னன் அபராஜிதவர்மனின் (பொ.யு.882-901) கல்வெட்டு உள்ளது. பின்னர் பல்வேறு சோழ மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். இராஜேந்திர சோழன் (பொ.யு. 1012-1044), தனது மெய்க்கீர்த்தியில் இவ்வூரை, ‘கலைத்தக்கோர் புகழ் தலைத் தக்கோலம்’ என்று கூறியுள்ளார். விஜயநகர மன்னர் வீரப்பிரதாப சதாசிவராயரால் 1543 ஆம் ஆண்டு ராஜகோபுரம் அமைக்கப்பட்டது.

ஆலயம்: 

ஜலநாதேஸ்வரர் திருக்கோயில், தக்கோலம், ராணிப்பேட்டை மாவட்டம், தமிழ்நாடு.
(அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில்)
இறைவர் திருப்பெயர்: ஜலநாதேஸ்வரர் (உமாபதீஸ்வரர்)
இறைவியார் திருப்பெயர்: கிரிராஜ கன்னிகாம்பாள் (மோகனவல்லியம்மை)

தல வரலாறு: 

இறைவனை அழைக்காமல் அசுரன்  தக்கன்  நடத்திய யாகத்திற்கு, அவனது மகள் தாட்சாயணி (பார்வதி) சென்ற போது, பார்வதியை தக்கன் அவமானப்படுத்தினான்.  வீரபத்திரர், தக்கனின் யாகத்தை அழித்து அவன் தலையைக் கொய்த தலம் எனவும், முறையற்ற யாகம் செய்ததற்காக அழிவு வரும் நிலையைக் கண்டு தக்கன், “ஓ” என்று ஓலமிட்டதால் `தக்கோலம்’ என்று பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 245 வது திருத்தலம். இத்திருத்தலத்தை `திருவூறல்’ என்று தேவாரப் பதிகத்தில் திருஞானசம்பந்தர்
பாடியுள்ளார்.
“ஏன மருப்பினொடும் எழிலாமையும் பூண்டு
அழகார் நன்றும்
கானமர் மான்மறிக்கைக் கடவுள் கருதும் இடம்
வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்து
அழகார் நம்மை
ஊனம் அறுத்தபிரான் திருவூறலை உள்குதுமே.”
- திருஞானசம்பந்தர்
சுயம்பு லிங்கம்: இங்கு சிவபெருமான் லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். தெற்கு வெளிப்பிராகாரத்தில் வடக்கு நோக்கி அம்பாள் நின்ற திருக்கோலத்தில், அபய வரதத்துடன் காட்சி தருகின்றார்.
பூத பிரநாளம்: சிவன் சந்நதியிலிருந்து திருமஞ்சன நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட கோமுகி, பூதகணத்தின் முக வடிவில் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது என்பது சிறப்பு.
கோஷ்ட தெய்வங்கள்: உட்பிரகார கோஷ்டங்களில் தட்சிணாமூர்த்தி தவிர விநாயகர், திருமால், பிரம்மன், துர்க்கை ஆகியோர் வீற்றிருக்கின்றனர். சாந்த வடிவமான துர்க்கை, நீங்கலாக உள்ளமற்ற தெய்வங்கள் அனைவரும் அமர்ந்த நிலையில் உள்ளது மற்றொரு சிறப்பு. திருமால் வலக்காலை மடித்த நிலையில், இடக்காலைத் தொங்கவிட்டு, வலக்கையில் அபய முத்திரை காட்டி, இடக்கையைத் தொடைமீது வைத்து பேரழகுடன் விளங்குகிறார்.

உத்கடி ஆசன தட்சிணாமூர்த்தி: 

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குருத்தலங்களுள் ஒன்றான இவ்வாலயத்தின் உட்பிரகார கோஷ்டத்தில், வேறு எங்கும் காண முடியாத உத்கடி ஆசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். கல்லால மரத்தின் கீழ் வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். மனதைக் கட்டுப்படுத்தும் இந்த ஆசனம், மனம் அலைபாயும் மாணவர்களுக்கு கல்வி மேன்மை தரும். தலையை இடதுபுறம் சாய்த்த வண்ணம் ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும்கொண்டும், காலடியில் முயலகன் இல்லாமலும் அருள்பாலிக்கிறார்.

திருச்சிற்றம்பலம் 🙏

No comments:

Post a Comment

Followers

சிவ தலங்களில் நந்தியம் சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள்.

 சண்டிகேஸ்வரர் வழிபாடு பற்றிய பதிவுகள்  சிவ தலங்களில் நந்தியம் பெருமானும், சண்டிகேஸ்வரரும் கட்டாயம் இடம்பெறுவார்கள். நந்தியின் க...