தஞ்சை மாவட்டம், பூதலூர் வட்டம், செம்பியன்கிளரி சிவன்கோயில்
Sembiyankilari sivan temple
திருக்காட்டுப்பள்ளி – பூதலூர் சாலையில் 5 கிமி தூரத்தில் உள்ள விண்ணமங்கலம் வந்து வலதுபுறம் திரும்பி ஓரத்தூர் வழியாக 7 கிமி தூரம் சென்றால் செம்பியன்கிளரி அடையலாம்.
பழமையான போர் பயிற்சி முறையே ‘களரி’. களரி என்றால் போர் பயிற்சி செய்யும் களம் எனவும் கூறலாம். செம்பியன் இன கள்ளர்கள் வாழ்கின்ற பகுதி செம்பியன் களரி, தற்போது செம்பியன் கிளரி ஆனது.
நேத்ரபதீஸ்வரர் கோவிலில் கள்ளர்களுக்கு இணையாக சைவ பிள்ளைமார்களுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. செம்பியன் களரியில் உள்ள நேத்ரபதீஸ்வரர் ஆலயம், அங்குள்ள வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டது. வெள்ளாளர் 10 தலைக்கட்டுக்கும் மேல் உள்ளனர். இங்குள்ள வெள்ளாளர்கள் கோவில் மரியாதைக்காக சொரக்குடிப்பட்டியில் உள்ள கள்ளர்களின் செம்பியமுத்தரசு பட்டம் உடையவர்களை அழைத்துவருகின்றனர்.
கல்லணையில் இருந்து பிரியும் வெண்ணாற்றின் கரையில் இருந்து உள்ளடங்கிய கிராமம் செம்பியன்களரி. ஒரு காலத்தில் இந்த ஊரிலிருந்துதான் சோழ அரசின் சில நிர்வாக மாளிகையும் இங்கு இருந்துள்ளன. செம்பியன் மாதேவி கட்டியது, இந்த நேத்ரபதீஸ்வரர் திருக்கோயில் எனப்படுகிறது.
கோயிலின் எதிர்ப்புறம் வீடுகள் அமைந்திருக்க, மூன்று புறங்களிலும் பசுமை போர்த்திய வயல்கள் கண்களுக்குக் குளிர்ச்சியாகக் காட்சியளிக்கின்றன. வெண்ணாற்றின் ஈரக்காற்று கோயிலின் தெருவில் புகுந்து புறப்படுகிறது.
கிழக்கு நோக்கிய திருக்கோயில், சுற்றிலும் நந்தவனம் நுழைவாயிலை ஒட்டியவாறு நந்தி இறைவனை நோக்கியவாறு உள்ளார்.
இறைவன் நேத்ரபதீஸ்வரர் இறைவி காமாட்சியம்மன்
நேத்ராபதி என்றால் தன் பக்தர்களை கண் மணிபோல் வைத்துக் காப்பாற்றும் இமை போன்ற இறைவனை குறிக்கும்.
இறைவன் கிழக்கும் இறைவி தெற்கும் நோக்கிய கருவறை கொண்டுள்ளனர். இறைவன் முகப்பில் நீண்ட மண்டபம் உள்ளது. கருவறையின் ஒருபுற மாடத்தில் விநாயகரும் மறுபுறத்தில் சுப்ரமணியரும் உள்ளனர்.
கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தக்ஷணமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்கை ஆகியோர் உள்ளனர். தனி சிற்றாலயத்தில் சண்டிகேஸ்வரர் வீற்றிருக்கிறார். தல விருட்சம் வில்வம் செழித்து நிற்கிறது, மரத்தடியில் ஒரு நாகர் சிலை உள்ளது.
சரி இந்த கோயிலில் என்ன சிறப்பு??
கண் பார்வை, கண் நோய்கள் தொடர்பான பிரச்சனைகளை வரும் பக்தர்களின் குறைபாட்டினை தீர்த்து அருள்புரிகிறார் இறைவன் நேத்ரபுரீஸ்வரர்.
எப்படி?
ஒவ்வொரு மாதமும் அமாவாசை அடுத்து வருகின்ற மூன்றாம் பிறை அன்று மாலை நேரத்தில் மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு தசாவனி தைலம்’ காப்பிடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப் படுகின்றன.
தசாவனி தைலம் என்றால் என்ன?
நீலி பிருங்காதி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, மருதாணி, செம்பருத்தி, தேங்காய்எண்ணை, நல்லெண்ணை, இலுப்பை எண்ணை, விளக்கெண்ணை, வேப்பெண்ணை ஆகிய பத்து வித பொருட்களை சரிவிகிதத்தில் கலந்து உருவாக்குவதே, ‘தசா-வனி தைலம்.
மூன்றாம் பிறை நிலவு தெரிய ஆரம்பித்ததும், நேத்ரபதீஸ்வரருக்கு தீபாராதனைகள் தொடங்குகின்றன.
மூன்றாம் பிறை வழிபாட்டு பூஜையின்போது, மூலவர் நேத்ரபதீஸ்வரருக்கு அத்திப்பழ நைவேத்யம் சமர்ப்பிக்கப்படுகிறது. பூஜையின் பிறகு மூலவரின் மீது சாத்தப்படும் தசாவனி தைலக்காப்பு பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது கண் பார்வைக் குறைபாடுகளைப் போக்குகிறது. பக்தர்கள் இதனை உச்சந்தலையிலும் இமைகள் மீதும் பூசிக் கொள்கின்றனர். இது, கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்து, பார்வைத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. கண் நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் தொடர்ந்து மூன்றாம் பிறை வழிபாட்டினில் பங்கேற்று, தசாவனி தைலக் காப்பை உபயோகப்படுத்தி, கண் தொடர்பான பிரச்னைகளிலிருந்து விடுபடுகின்றனர்" என்கின்றனர் பக்தர்கள். அதிசயம் தானே!!
இது மட்டுமல்ல...
அஷ்டாட்சரத் தலங்கள் என அறியப்படும் தலங்களில் ஒன்று இந்த செம்பியன் கிளரி
அம்பிகை இருகரங்களிலும் இரு தாமரை மலர்களை ஏந்திய வண்ணம் காட்சி அளிக்கிறாள். இது கணவனும் மனைவியும் இரு கண்களாய் இணைந்து மலர வேண்டியவர்களே என்ற உட்பொருளை கொண்டதால் இங்கு வந்து வைக்கப்படும் பக்தர்களின் எத்தகைய பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுபவள் இந்த அம்பிகை
தேவவிரதம் எனும் பிரம்மச்சரிய விரதத்தின் பலன்களை மக்கள் அனைவரும் பெற வழிவகுப்பது செம்பியன்களரி சிவாலயமாகும்.
இந்திரன் தன் உடல் முழுவதும் யோனிக் கண்களை பெற்ற வரலாறு நீங்கள் அறிந்ததே. அவ்வாறு யோனிக் கண்களைப் பெற்ற இந்திரன் பல இடங்களில் மறைந்து தவமியற்றி, தன்னுடைய தவறுக்குப் பிராயச்சித்தம் தேடினான். அத்தகைய திருத்தலங்களுள் ஒன்றே செம்பியன்களரி திருத்தலமாகும்.
இத்தலத்தில் உள்ள தல விருட்சத்தின் மேல் அமைந்துள்ள தேன் கூடு ஆயிரமாயிரம் தேனீக்களுடன் திகழ்வது போல் தோன்றும். இம்மரத்தை செவ்வாய்க் கிழமைகளில் வலம் வந்து வணங்குவதால் சிறப்பான பலங்கள் கிடைக்கும்.
செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் இத்தலத்தில் ஒன்பது முறைக்குக் குறையாமல் இந்த கோயில் பிரகாரத்தையோ அல்லது இந்த தலவிருட்சத்தையோ வலம் வந்து வணங்குதல் சிறப்பாகும்.
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்
No comments:
Post a Comment