Sunday, April 30, 2023

ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் பலம் பெறும் மாதம் என்பதால் சித்திரை மாத பௌர்ணமி *சித்ரா பௌர்ணமி* என புகழப்படுகிறது.

🌕 சித்ரா பௌர்ணமி...


🌺 சித்ரகுப்தன் !!

ஆயுள் விருத்தி தரும் சித்ரகுப்தனை மனதார வழிபடுங்கள்..!!

சூரியன் உச்சம் பெறும் மாதமாக சித்திரை மாதம் உள்ளது. அந்த மாதத்தில் வரும் பௌர்ணமியில் சந்திரன் முழு மதியாக பலம் பெறுகிறார். இப்படி ராஜ கிரகங்களான சூரியனும் சந்திரனும் பலம் பெறும் மாதம் என்பதால் சித்திரை மாத பௌர்ணமி *சித்ரா பௌர்ணமி* என புகழப்படுகிறது.

சித்ரகுப்தன் என்பவர் எமதர்மனின் கணக்குப் பிள்ளை ஆவார். சித்ரகுப்தர் என்பதற்கு மறைந்துள்ள படம் எனப் பொருள்படும். இவர் உலக உயிர்களின் பாவ, புண்ணியங்களை கணக்கிட்டு எமதர்மனிடம் தருவார். அதனைக் கொண்டே உயிர்களின் அடுத்த பிறவி, முக்தி ஆகியவற்றை எமதர்மன் தீர்மானம் செய்வார் என்பது மக்களின் நம்பிக்கை.

சித்ரகுப்தரின் பிறப்பு :

பார்வதி அம்பாள் சித்ரம் எழுதி உயிர் கொடுத்தார். சித்ரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்ரகுப்தா என பெயர் பெற்றார் என்று சிலர் கூறுகின்றனர்.

காமதேனுவின் வயிற்றில் உதித்தார் என்றும், அதனால் பசும்பால், பசும் தயிர் இவருக்கு அபிஷேகம், நைவேத்தியம் செய்யக்கூடாது. எருமைப்பால், எருமைத்தயிர்தான் அபிஷேகம், நைவேத்தியம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுவர்.

சித்ரகுப்தன் கதைச் சுருக்கம் :

தனியொரு நபராக கோடிக்கணக்கான மக்களின் பாவ, புண்ணியங்களை மேற்கொள்ளும் பணி கடினமாக இருப்பதாக ஈசனிடம் எமதர்மன் வேண்டிக்கொண்டார். அதன் பொருட்டு அருகில் நின்றிருந்த பிரம்மனிடம் எமதர்மனுக்கு ஒரு உதவியாளனைத் தரவேண்டியது உமது பொறுப்பு என்றார்.

இதனை எமனின் தந்தையான சூரியபகவானுக்கு தெரிவித்தார் பிரம்மதேவர். அதன்பொருட்டு சூரியன் வானில் சஞ்சரிக்கும்போது எதிரில் பட்ட வானவில்லை ஏழு வண்ணங்களை ஒருங்கிணைத்து ஒரு பெண்ணாக உருமாற்றி அப்பெண்ணை நீனாதேவி என்று பெயரிட்டு அவளுடன் வாழ்ந்து வந்தார். அதன் காரணமாக ஒரு சித்திரைத் திங்களில், பௌர்ணமி நாளில் பிறந்த புத்திரனுக்கு சித்ர புத்திரன் என்று பெயரிட்டனர். அக்குழந்தையின் இடக்கையில் ஏடும், வலக்கையில் எழுத்தாணியுமாக தோன்றினார்.

சித்ரகுப்தர் காஞ்சியில் சிவபெருமானை கடுமையாக பூஜை செய்தார். அதன் பயனாக அறிவாற்றலும், எல்லா சித்திகளும் கிடைத்தன. ஆகவே தனது சக்தியினை சோதிக்க விரும்பி படைப்புத் தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்தார். பிரம்மா உட்பட அனைவரும் அதிர்ந்தனர். இதனை சூரியனிடம் தெரிவித்தனர். உடனே சூரியன் மகனிடம் மக்களின் இரவு, பகல் என்று பொழுதினைக் கணக்கிட்டு, மக்களின் வாழ்க்கையை நடைமுறைப்படுத்துபவன் நான். அதே போல் நீயும் மக்களின் கணக்கினை அதிலும் பாவ, புண்ணியத்தை கணக்கெடுப்பாயாக. படைப்புத்தொழில் உனக்கன்று. அது பிரம்மனின் தொழில் என அறிவுறுத்தினார்.

தன் மனைவியருடன் எமபுரிக்கு புறப்பட்ட சித்ரகுப்தர் அங்கே அமர்ந்து மக்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எந்த தவறும் வராதபடி இப்பொழுதும் கணக்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

சித்ரகுப்தருக்கான கோயில்கள் :

தென்னிந்தியாவில் இவருக்காகப் பல கோயில்கள் உண்டு குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. சித்ரகுப்தர், எமன், பிரம்மா உடன் கடம்பூர் தல இறைவனை வணங்கும் காட்சி கடம்பூர் தலத்தில் இடம் பெற்றுள்ளது. தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் இவருக்கு சித்ர புத்திர நாயனார் என்ற பெயருடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கைகள் :

உலகில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்துக் கணக்குகளையும் எழுதிப் பராமரித்து வருபவர் சித்ர புத்திர நாயனார்தான் என்பது நம்பிக்கை. மேலும் ஒருவருடைய இறப்புக்குப் பின் இவருடைய கணக்கைப் பார்த்துத்தான் சொர்க்கம் அல்லது நரகம் போன்றவற்றில் இடமளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி அன்றும் நமது பாவ, புண்ணிய கணக்குகள் சித்ரகுப்தனால் எழுதப்படுகிறது. எனவே, சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

கதை சொல்வதன் முக்கிய நோக்கம் :

மக்கள் பாவச்செயல் செய்யும் எண்ணத்தை விட்டு, புண்ணியச்செயலில் ஈடுபட வேண்டும் என்ற நல்ல எண்ணம் மேலோங்கவே. எனவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து நற்பலன்களை பெறுவோமாக.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...