Wednesday, April 26, 2023

பெயரை கேட்டதும் நினைக்க செய்வது சிவபெருமான் இருக்கும் மலை என்று.

💢💢💢💢💢பதினெட்டாம்படி சடைச்சி:-
     சிவன்மலை சென்று வரும் நம்மில் எத்தனை பேரூக்கு இந்த சடைச்சியை தெரியும்??

    சிவபக்தியால் பேயாய் சிவபிரான் காலடியில் இருக்கும் வரம் பெற்ற காரைக்கால் அம்மையாரை போல முருக பக்தியால் சிவமலை ஆண்டவர் பாதத்தில் இருக்கும் வரம் பெற்ற சடைச்சியை யாருக்கு தெரியும்??
 
💢💢🙌சிவன்மலை:-

          பெயரை கேட்டதும் நினைக்க செய்வது சிவபெருமான் இருக்கும் மலை என்று. ஆனால் இருப்பதோ குமார கடவுள். சிவகிரி, சிவமலை , சக்தி சிவமலை, சிவாத்ரிநயினம், சிவசைலம், சேமலை என்று எத்தனை பெயர்கள் இம்மலைக்கு!!

    பதினான்கு பழமையான ஊர்களை கொண்ட காங்கேய நாட்டின் பொதுத்தலம் சிவமலை. இந்த பதினான்கு ஊர்காரர்களும் சிவமலை தேர் திருவிழாவை நடத்துவதும், அவர்கள் பரிவட்டம் கட்டி சிறப்பிக்க படுவதும் இன்றும் உண்டு.

  சிவமலையின் செல்வாக்கினை மடவளாகம் இலட்சுமணபாரதி இயற்றிய சிவமலை குறவஞ்சி இலக்கியம் புகழ்கிறது. அருணகிரிநாதர் சிவமலை ஆண்டவரை வணங்கி சந்தப்பாடல் பாடினார். சிவ வாக்கியர் என்னும் சித்தர் இங்கு வாழ்ந்தவர்.

   சிவமலை அதனை சுற்றி எட்டு திசையிலும் சக்தியை காவலாக கொண்டது ( மடவளாகம் அங்காள பரமேஸ்வரி அதில் ஒன்று). சிவமலை அடிவாரத்தில் முன்பு ஊர் கிடையாது. சிவமலைக்கு உரிய ஊர் பாட்டாலி. சிலமலை நாதனை பாட்டாலி பால் வெண்ணீசுவரர் பாலன் என்று இலக்கியங்களில் கூறுவதை காணலாம்.

   இத்தல முருகனுக்கு காரணாமூர்த்தி என்றும் பெயர். தன் பக்தர் கனவில் தோன்றி தனக்கு இன்ன பொருள் வேண்டும் என சொல்வது சிறப்பு. அப்படி உத்தரவு ஆகும் பொருள் கண்ணாடி கதவு கொண்ட ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கபடும். அப்பொருளால் உலகில் மாற்றம் வரும் என்பது நியதி.

💢💢💢சடைச்சி:-

      பாட்டாலி நகரிலே கொங்கு வெள்ளாளர் குடியில் கன்னந்தை கோத்திரத்தில் அரசப்ப கவுண்டர் என்பாருக்கு வள்ளி என்னும் பெண் குழந்தை பிறந்தது. வள்ளி என்னும் பெயருக்கேற்ப சிவமலை முருகன் மீது அதீத பக்தி. தினமும் சிவமலை நாதன் பாதத்தை தொழாமல் வேலைகள் செய்வதில்லை.

   திருமண வயது வந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இறை பக்தியால் சடை விழுந்தது. சடாமுடியோடு இருந்தவளை சடைச்சி என்று அழைத்தனர். தன் தோட்டத்து எருதுகள் மீது கோணிப்பைகளை இருபுறமும் கட்டி பக்கத்து ஊர்களுக்கு சென்று தானியங்கள் மக்களிடம் வாங்கி வந்து இறைவனுக்கு படைத்தாள்.

  மலைக்கு படிகளை அமைத்தாள். இளைப்பாற்று மண்டபம், தண்ணீர் பந்தல் என தொண்டுகள் ஏராளம். சடைச்சி மடமும், நந்தவனமும் அமைத்து தினமும் ஆண்டவனுக்கு பூமாலை அளிக்க செய்தாள்.

   சிவனும் பார்வதி தேவியும் இருக்கும் கையிலையை காண விரும்பினாள். அக்கணமே அசரீரியாக " அம்மா! சடைச்சி! சிவமலையிலேயே உமக்கு காட்சி தருகிறோம்" என சொல்லி, காட்சியும் தந்தார் சிவபிரான்.

  பின்னர் உலக வாழ்க்கையை வெறுத்து எந்நேரமும் சிவமலையாண்டவரை சேருகிறேன் என்று சொல்லிகொண்டே இருந்தாள். 

   ஒருநாள் முழுநீறு பூசிய மேனியாக, மஞ்சள் உடையாய் மாலையுடன் சிவன்மலை ஆண்டவன் சந்நிதி நுழைந்த சடைச்சி திரும்பவில்லை!! எங்கே போனாள் என்று தேடியவர்க்கு அசரீரியாய் " நான் இங்கேயே சிவமலையாண்டவன் பாதத்தில் சேர்ந்தேன்" என்று வாக்கு கிடைத்தது.

   மக்களின் மனதில் நீங்காத சடைச்சி, சிலையாய் சிவன்மலை நாதன் பாதத்தருகில் நீண்டகாலமாய் இருந்தாள்.

    "பக்தி பிடித்த சடைச்சியம்மாளை-தன் 
     பாதங்களில் வைத்திருக்கும் சிவமலையாண்டவர்"

       என்று சிவமலை குறவஞ்சி கூறுகிறது. இன்று சிவமலையில் சடைச்சி சிலை இல்லை. வெளியேறிவிட்டது. பின்னாளில் வந்தவர்களுக்கு சடைச்சியின் பக்தி புரியவில்லை. 

    மலைக்கோவில்களில் 18வது படி சிறப்புடையது. சிவமலையில் 18வது படியை புராண படி என்பர். அது சடைச்சி கட்டியது. அங்கே சடைச்சி இருப்பதாக நம்பிக்கை.

   " பத்தினி பெண் சடைச்சியம்மாள் பதினெட்டென்னும் புராணபடியில் குடியிருப்பாள்", சிவமலை குறவஞ்சியில்.

சக்தி சிவமலை நாதன் பாதமே துணை!!

பேரூர் பெரியநாயகி அம்மன் துணை!!.. நற்பவி 💕 நற்பவி 💕 நற்பவி 💕💕sv....

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...