Monday, April 3, 2023

தஞ்சை மாவட்டம், பூதலூர்வட்டம், நாகத்தி சிவன்கோயில்

தஞ்சை மாவட்டம், பூதலூர்வட்டம், நாகத்தி சிவன்கோயில்
Nagathi sivan temple 

தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள அம்மன்பேட்டை வெட்டாற்று பாலத்திலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் வெட்டாற்றின் வடகரையில் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பாலம் வழியே ஆற்றின் தென்கரையை அடைந்தால், ஆற்றிடைதீவாக உள்ள நாகத்தி என்னும் ஊரை அடையலாம்.

காவிரியின் கிளைநதியான வெட்டாறு இவ்வூருக்கு மேற்கில் இரண்டாகப் பிரிந்து மீண்டும் இவ்வூருக்குக் கிழக்கில் இணைந்து ஒரே பேராறாக பயணிப்பதால் இவ்வூர், திருவரங்கம், திருவானைக்கா போன்று ஆற்றிடை தீவாக விளங்குகின்றது.
வளைந்து நெளிந்து செல்லும் வெட்டாறு பாம்புடல் போன்றும், நாகத்தி என்னும் ஊர் பாம்பின் படமெடுத்த தலை போன்றும் விளங்குவதால் இவ்வூருக்கு நாகத் தீவு என்ற பெயர் ஏற்பட்டதாகவும், இது காலப்போக்கில் நாகத்தி என மருவிவிட்டதாகவும் கூறுவர்.

இவ்வூரில்வீடு கட்டுவதற்காக குழி தோண்டியபோது அவர்கள் அங்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சுடுமண் உறைகிணற்றையும், சிவப்பு மற்றும் கருப்பு மட்கலங்களின் உடைந்த பாகங்களையும் கண்டறிந்தனர் 

சோழ அரசன் சேந்தன், அவன் தந்தை அழிசி ஆகியோர் வாழ்ந்த மாளிகைகள் இருந்த முக்கிய நகர்ப்பகுதியாக விளங்கிய இடம் தற்போதைய நாகத்தியே ஆகும்.

இயற்கை எழில் சூழ்ந்த, வெட்டாற்று கரையிலிருந்த  மிகப்பழைய சிவாலயம் ஒன்று காலவெள்ளத்தில் சிதைந்து நாகத்தி ஐயனார் ஆலயத்தில் விநாயகர் முருகன் காலபைரவர்  சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.   இந்த ஐயனார் ஆலய கருவறை நிலைக்காலின் மேல் உத்திரப் பகுதியில் உள்ள கல்வெட்டுதஞ்சை நாயக்க அரசரான செவ்வப்ப நாயக்கரால் 1580ம் ஆண்டில்வெட்டப்பட்டது. விஜயநகரப் பேரரசர் ரங்கராயர் சதுர்த்த கோத்திரம் திம்மப்ப நாயக்கர் புத்திரன் சின்ன செவ்வப்ப நாயக்கர், தஞ்சாவூர்சீமை மேலஆர்க்காடு எனும் நாகத்தீகிராமத்தைதிருவேங்கட நாதய்யா என்பவருக்கு அளித்ததை இச்சாசனம் விவரிக்கின்றது. 

ஆனால் இன்று நாம் காணவிருக்கும் சிவாலயம் ஊரின் கிழக்கு கோடியில் பெரியதாக அமைந்துள்ளது. 
தேவர்கள்- அசுரர்கள்  பாற்கடலில் அமிர்தத்தைக் கடைந்த போது மட்டுமே பல திரவியங்கள் அதில் விளைந்தன இன்றும், பாற்கடல் எனப்படும் Milkyway-ல்  தெய்வீகத் திரவியங்கள், புதுப் புது நட்சத்திரங்களும் தினமும் இதில் உற்பத்தி ஆகிக்கொண்டு தான் உள்ளன. 
பாற்கடலில் எழுந்த ஒரு அரிய சந்தன விருட்சமானது பறந்து சென்று கொண்டே இருந்தது. கோடானு கோடி தேவர்களாலும் கூட அதன் விரைவைத் தொடர இயலவில்லை! வாயு பகவானும் இதனைக் கண்டு அதிசயித்தார். அந்த சந்தன விருட்சம் இறுதியில் பூலோகத்தில் ஓரிடத்தில் ஒரு தடாகத்தில் இறங்கியது. அந்த இடமே நாகத்தி. பாற்கடலின் உள்ளும் பல லோகங்களும் மண்டலங்களும் உண்டு. இவற்றில் இந்த சந்தன விருட்சம் தோன்றிய இடமே பாற்கடலின் வித்யா சந்தன மண்டலமாகும். வித்யா சந்தன மண்டலத்தில் தான்  ஸ்ரீவித்யா சரஸ்வதியும், ஸ்ரீவித்யா லக்ஷ்மியும் பெருமாளின் திருநாவிலிருந்து உதிக்கும் வேத வாக்யங்களைக் கற்கின்றனர்.
 
இருதயகமல கோலம்
கலியுகத்தில் பூலோகத்தில் வேத சக்திகள் மங்கும் என்பதால் கலியுகத்தில் வேத சக்திகளை நிரப்பும் பொருட்டு ஈஸ்வரன் பல லீலைகளைப் புனைந்தார்.
வேதம் மங்கிய லோகங்களில் வேத சக்திகளை நிரவும் பொருட்டு, என்றும் சிரஞ்சீவித்வம் கொண்ட ஸ்படிக வேத மாமலையினை இருதய கமலத்தில் இருத்தி ஆதிசிவன் தவம் பூண்டார். அப்போது அவர் தம் திருமார்பில் உறையும் ஈஸ்வரியிடம் இருந்து இரண்டு வேதத் தாமரைப் புஷ்பங்கள் தோன்றின,  அப்புஷ்பங்களால் அம்பிகை பூஜித்த சிவலிங்கமே ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் ஆனார்.  அக்னியாக வந்திறங்கிய சந்தன விருட்சத்தை சந்தன குழம்பாக இறைவன் காலடியில் ஏற்றார். 
இதனால் வேத ஞானம் பெற்று, கைகளில் தாமரைகளைத் தாங்கிய ஸ்ரீசௌந்தர நாயகியாக, நாகத்தியில் அவதாரம்  கொண்டார்.
ஈஸ்வரனின் திருநாவில் உதித்த வேதாக்னி சுயம்பு மூர்த்தியாக உதித்திட, இதுவே நாகத்தி சிவலிங்கம் ஆயிற்று!  "நாஅகம்தீ" என்பதே நாகத்தி என்பது புராண வரலாறு. இப்படி இறைவன் சுயம்புவாக தோன்றியது சித்திரை சதயம். 
எனவே ஸ்ரீபக்தவத்சலேஸ்வரர் தோன்றிய சித்திரைச் சதய நாளில் இங்கு சந்தனக் காப்பிட்டு வழிபடுவது பெரும் பேறுகளைத் தருவதாகும். 

இறைவனின் எதிரில்  இருதய கமல கோலத்தை இத்திருக்கோயிலில் அரிசி மாவால் வரைந்து அதில் 16 தாமரை மலர்களை வைத்து பூசித்தால்  எத்தகைய இருதய சம்பந்தமான நோய்களுக்கும் இரத்தம் சம்பந்தமான நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும். இருதயகமல கோலத்தை எங்கும் பிரிவு ஏற்படாமல் ஒரே கோடாக, இணைந்த சக்தியுடன் அமைப்பதே சிறப்பாகும். 

இறைவன் – பக்தவத்சலேஸ்வரர் இறைவி – சௌந்தரநாயகி

 பல சிறப்புக்கள் உடைய இக்கோயில் இறைவன் மேற்கு நோக்கியவர் என்பது சிறப்பாகும். அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். இறைவன் பல யுகங்கள் பழமையானவர், இக்கோயில் பிற்கால சோழர்களின் காலத்தில் கட்டப்பட்டு நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டு உள்ளது. கருவறை விமானம் உயர்ந்து நிற்கிறது. கோஷ்டங்களில் தெய்வங்கள் இல்லை. முகப்பில் உயர்ந்த கூம்புவடிவ மண்டபம் உள்ளது. புராண வரலாற்றை நினைவூட்டும் வண்ணம் இந்த மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி பெருமாளும் அருகில் ஒரு அம்பிகை இரு கரங்களில் தாமரை கொண்டவளாக காட்சியளிக்கிறார். சண்டேசர் தக்ஷணமூர்த்தி அனைவருமே பாதுகாப்பு காரணங்களுக்குகாக உள் மண்டபத்திலேயே உள்ளனர். இரிவனின் நேர் எதிரில் முகப்பு மண்டபம் தாண்டி வெளியில் ஒரு தகர கொட்டகையின் கீழ் அதிகார நந்தி உள்ளார். அதுப்போல் அம்பிகை எதிரில் உள்ள நந்தியும் மண்டபத்தின் வெளியில் தான் உள்ளது. சந்தன விருட்சம் இறங்கிய தீர்த்த குளம் இக்கோயிலின் தென்கிழக்கு மூலையில் உள்ளது. 

இதயநோய் பரவலாக உள்ள இக்காலத்தில் இந்த அம்பிகை நமக்கு கிடைத்திருப்பதும் அதனை முகநூல் வழி உங்கள் பார்வைக்கு கிடைப்பதும்  வரப்பரசாதம். நம்பிக்கையுடன் ஒரு கோலம் போட்டு வழிபடுவது சிரமமா என்ன?? 

சித்திரைச் சதய நட்சத்திரத்தில்  சந்தனக் காப்பிட்டால்  அரிய வரங்கள் தரும் சுயம்பு லிங்க மூர்த்தியை வரும் சித்திரை சதயம் 16.4.2023 அன்று வழிபட மறவாதீர்.   

#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்.

No comments:

Post a Comment

Followers

சென்னையின் நவக்கிரகத் ஒன்பது தலங்கள்:

 சென்னையின் நவக்கிரகத் தலங்கள்:  சென்னையைச் சுற்றியுள்ள இந்தப் புனிதமான ஒன்பது ஆலயங்கள் ஒரே நாளில் நவக்கிரகங்களின் அருளைப் பெற ...