Friday, April 28, 2023

திருபூவனூர் சதுரங்க வல்லபநாதர்

திருபூவனூர் சதுரங்க வல்லபநாதர் ...!
          சதுரங்க விளையாட்டு  தோன்றிய  நமது தமிழகத்திலேயே என்கிறது  புராணம்.   திருப்புவனூர் சதுரங்க வல்லபநாதர் ஆலய தலவரலாற்றை இங்கே காண்போம்.  

        தேவாரப் பாடல்பெற்ற காவிரி தென்கரையோரமாக அமைந்துள்ள 103 வது  திருத்தலமே  பூவனூர். இது திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  சைவ  திருத்தலமாகும்.

நறுமணம் வீசும் வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் வனமாக இந்த ஊர் முற்காலத்தில்  இருந்ததால் இதற்கு ‘புஷ்பவனம்’ என்ற பெயர் ஏற்பட்டது.   பிற்காலத்தில் அது பூவனூர் என்றானது.

    இத்தலத்து  சிவபெருமானுக்கு ஶ்ரீசதுரங்க வல்லபநாதர் என்பது பெயர். உற்சவர் புஷ்பவனேஸ்வரர்   இங்கு  சிவபெருமானுடன் கற்பகவல்லி,  இராஜராஜேஸ்வரி ஆகிய இரு அம்பிகையர்  உண்டு. 

இந்த ஆலயத்தில் அன்னை சாமுண்டீஸ்வரியும் கோயில் கொண்டுள்ளார்.
தலவிருட்சம் __ பலா
தீர்த்தம்__க்ஷீரபுஷ்கரிணி   

தலவரலாறு

இங்கு அருளும் ஈசனுக்கு 
சதுரங்கவல்லபர் என்று திருநாமம் ஏற்பட்ட தலவரலாறு__

      முற்காலத்தில்  தென்பாண்டி நாட்டை வசுசேனன் என்னும் மன்னர்  ஆண்டுவந்தார். அவருக்கு  நீண்ட காலமாக வாரிசு இல்லை.  மன்னரும் அவர் மனைவி காந்திமதியும் சிறந்த சிவபக்தர்கள். பரிபூரண ஆயுள் கொண்ட இருவருக்கும் இந்தப் பிறவியில் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை அறிந்த அன்னை  உமாதேவியார்,     அவர்களுக்கு அருளும்படி வேண்டினார்.

நம்மை  அனுதினமும்   பூஜிக்கும் பக்தர்களை இப்படி மனம் வாடவிடலாமா?  என பார்வதி தேவி, மகேஸ்வரனை வேண்ட,  அதற்குச் சிவபெருமானும்,   இநதப் பிறவியில் அவர்களுக்குக் குழந்தை இல்லை என்பது விதி. ஆனால், நீ பூலோகத்தில் பிறந்து, அவர்களுடைய குழந்தையாக வளர்ந்து வா. உரிய நேரத்தில்  நான்  வந்து உன்னை மணப்பேன்!  என்றார்.

      வசுசேனரும் காந்திமதியும்,  வாரிசு  வேண்டி ஒவ்வொரு சிவாலயங்களாக வழிபட்டு வந்தார்கள் .  ஒருநாள்  அவர்கள்  தாமிரபரணி ஆற்றில் நீராடும் போது, தாமரை மலரின் மீது  ஒரு அழகிய சங்கு  இருப்பதைக் கண்டு, அதையெடுக்க,   அது  ஓர் அழகிய பெண் குழந்தையாக மாறியது. 

இது  அந்தச் சிவனாரே  தங்களுக்கு அனுப்பிய குழந்தை; இது உமா தேவியின் அவதாரம்!  என எண்ணி அக் குழந்தைக்கு  இராஜராஜேஸ்வரி  என்று பெயரிட்டு பேரன்புடன் வளர்த்து வந்தனர்.

            .சக்தியே குழந்தை வடிவாக பூமியில் இருப்பதால், குழந்தையை கவனிப்பததற்கென சப்தமாதாக்களில் ஒருவரான சாமுண்டிதேவியையும் பூமிக்கு அனுப்பினார் சிவபெருமான்.  .

குழந்தையின் வளர்ப்புத்தாயாக உருவெடுத்து வந்த சாமுண்டீஸ்வரி, ஆய கலைகள் அனைத்தையும் குழந்தை இராஜராஜேஸ்வரிக்குக் கற்றுக்கொடுத்தாள்.

எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தள் இளவரசி   இராஜராஜேஸ்வரி   ஆனால் சநாதனதர்மம் ( =இந்து சமயம்) கூறும் 64 ஆயக்கலைகளில் சதுரங்க விளையாட்டில் தன்னிகரற்று விளங்கினாள்அம்பிகை
இராஜராஜேஸ்வரி.

       இளவரசி  திருமண வயதை எட்டியபோது, "என் மகளை சதுரங்க விளையாட்டில் யார் வெல்கிறார்களோ, அவர்களுக்கே அவளை மணம் முடித்துத் தருவேன்" என்று  முரசறைந்து தெரிவித்தார்    மன்னர் வசுசேனர்.

பல நாட்டு இளவரசர்களும் போட்டிக்கு  வந்தபோதிலும், யாராலும்  இராஜராஜேஸ்வரியை சதுரங்கத்தில் வெல்ல முடியவில்லை.  அனைவரும் தோற்றுப் போய்விட, வருந்திய மன்னர்,   தனது அறிவிப்பினாலேயே  தன் மகளுக்கு திருமணமாகாதோ ? என்று கவலையடைந்து சிவபெருமானே இதற்கு ஒரு வழியைக்  கூற வேண்டுமென வேண்டினாராம் .

          தன் குடும்பத்தோடு காவிரியின் தென்கரையிலுள்ள சிவாலயங்களையெல்லாம்   தரிசிக்க தல யாத்திரை கிளம்பினார் மன்னர். பல சிவாலயங்களைத் தரிசித்தப்  பின்னர் திருபூவனூர் வந்தனர். புஷ்பவன நாதரைத் தரிசித்து, தன் மனக்குறையை,  சிவபெருமானிடம் முறையிட்டு,  புலம்பி விட்டு அங்கேயே சிறிது காலம் குடும்பத்துடன் தங்கினார் மன்னர். 

        மறுநாள் காலையில், ஒரு  வயோதிகர்  மன்னரைச் சந்தித்து, ‘‘என்னுடன் உங்கள் மகளால் சதுரங்கம் ஆடமுடியுமா?’’ என்று கேட்டக. அரசனும்  சம்மதிக்க,  சதுரங்க ஆட்டம் இராஜராஜேஸ்வரி யுடன்  தொடங்கியது. அதுவரை சதுரங்கத்தில் தோல்வியே கண்டிராத  இளவரசி_
இராஜராஜேஸ்வரி, அந்த முதியவரிடம் சதுரங்கத்தில்  தோற்றுவிட்டாள்.

       இந்நிலையில் மன்னருக்கு தனது அறிவிப்பு நினைவுக்கு வந்தது.  என் மகளை சதுரங்க ஆட்டத்தில் வெல்பவர்களுக்கு அவளை மணம் புரிந்து தருவேன்!   என்று கூறினோமே ?  இப்பொழுது எப்படி இந்த வயதானவருக்கு  தன்னருமை மகளை  மணம் முடித்துக் கொடுப்பது?  என்று பெரும் கவலையுடன் சிவபெருமானை நோக்கி மன்றாடினார்  மன்னர்.

      மறுகணமே   அங்கே முதியவர் மறைந்து செம்மேனி முக்கண்ணனான சிவபெருமானாக  இளமையோடு காட்சியளித்தார்.  உடனே மன்னரும் அவர் மனைவி காந்திமதியும் மகிழ்ந்து சிவபெருமானை   வணங்கித்  தன் மகள் அம்பிகையின் அவதாரம்!  என்றுணர்ந்து அம்பிகையைச்  சிவபெருமானுக்கு மணமுடித்துக் கொடுத்தனர்.

           சதுரங்க ஆட்டத்தில் வென்று,  இராஜராஜேஸ்வரியை மணந்ததால், அவருக்குச் ‘சதுரங்க வல்லபநாதர்’ என்ற திருப்பெயர் இங்குள்ள இறைவனுக்கு அது முதல் ஏற்பட்டது

(சதுரங்க_வல்லீஸ்வரர் என்றும் கூறுவர்).   அன்னை  இராஜராஜேஸ்வரிக்கு  வளர்ப்புத் தாயாக வந்த சாமுண்டீஸ்வரிக்கும் தனியே  சந்நிதி உண்டு. இங்கே சாமுண்டீஸ்வரி தேவி மிகவும் சக்தி உடையவராக விளங்குகிறார் .  

        சதுரங்க விளையாட்டில் நல்ல தேர்ச்சியடைய  விரும்புவோர்  திருபூவனூர்  வந்து சதுரங்க வல்லப நாதரை வேண்டி வணங்கினால்   சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்கலாம் என்பது  ஐதீகம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானது  திருபூவனூர் ஆலயம். 

         ஆஸ்துமா தொந்தரவு,  பூச்சிக்கடி, விஷக்கடி,பிற  விலங்குகள் கடித்த விஷம்   போன்ற பிரச்னைகளையும் தீர்க்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது. 

கோயிலின் அகன்ற திறந்தவெளிப் பிராகாரத்தில், அருள்மிகு கற்பகவல்லி அம்பாளும் அருள்மிகு இராஜராஜேஸ்வரி அம்பாளும் தெற்கு நோக்கி அருள்கிறார்கள். 

அதே பிராகாரத்தில், தெற்குப் பகுதியில் சாமுண்டீஸ்வரி சந்நிதி வடக்கு நோக்கி அமைந்துள்ளது.  இங்கு கோயில் கொண்டிருக்கும் சாமுண்டீஸ்வரி, மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லாக் கோயில்களிலும் சப்தமாதாக்களுள் ஒருவராக இருக்கும் சாமுண்டி, இங்கே தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறாள்.

          மைசூருக்கு அடுத்தபடியாக, சாமுண்டீஸ்வரிக்கென தனிச் சந்நிதி அமைந்திருப்பது பூவனூரில் மட்டும்தான். விஷ ஜந்துக்களின் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து பலனடைகின்றனர். 

ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை, சாமுண்டீஸ்வரி சந்நிதியில் இருக்கும் ஒரு வைத்தியர், எலிக்கடி மற்றும் விஷக்கடியால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு, மந்திரிக்கப்பட்ட ஒரு மூலிகை வேரைக் கையில் கட்டிவிடுகிறார். 

               அதற்கு முன்பாக பக்தர்கள் க்ஷீரபுஷ்கரணியில் நீராடி,  சாமுண்டீஸ்வரி சந்நிதிக்கு வந்து, வைத்தியர் கொடுக்கும் மூலிகை வேரைக் கையில் கட்டிக்கொண்டு, சாமுண்டிக்கு அர்ச்சனை செய்யகிறார்கள். அதன் பிறகு வைத்தியர் கொடுக்கும் மந்திரித்த மிளகை வாங்கி  உண்கிறார்கள். 

அதன் மூலம் அவர்களுடைய உடலில் இருக்கும் விஷம் முழுவதுமாக குணமாகிவிடுகிறது  என்பதற்கு இங்கு கூடும் பக்தர்களே சாட்சி 

            பிரபஞ்சத்திற்கே நாயகியான அம்பிகைக்கு வளர்ப்புத் தாயாக விளங்கியவள் அல்லவா இந்தச்  சாமுண்டீஸ்வரி.   எனவே அவரை வணங்கி மந்திரித்த மூலிகைவேரைக் கையில் கட்டிக்கொண்டு மந்திரித்த மிளகை உண்டு பக்தியோடு சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கிவர, அனைத்து விஷகடிகளும் முறிந்து, அனைத்து   நோய்கள் விலகி பக்தரகள் நலமோடு திரும்பிச்
செல்கின்றனர். 

         முதன்முதலில்  இவ்வுலகிற்கே சதுரங்க_ஆட்டம் என்றொரு  விளையாட்டுக் கலையை தோற்றுவித்தவர்  நம்  தென்னாடுடைய
சிவபெருமானே. அதை அம்பிகையோடு அவர் விளையாடி சதுரங்கவல்லபநாதர்    என்ற திருநாமத்தையும் பெற்று,  இங்கே விளங்குகிறார் ஈஸ்வரனார். எனவே அனைத்து கலைகளிலும் வெற்றி அடைய இச் சிவனாரை வேண்டி வழிபடுவது அவசியம்.

ஓம் நமசிவாய 🙏

No comments:

Post a Comment

Followers

சங்கடஹர சதுர்த்தியில் விரதம் விநாயகர் வழிபாடு.

இன்று சங்கடஹர சதுர்த்தி வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை வழிபடுவதற்கு மிக முக்கியமான விரதங்களில் ஒன்று சங்கடஹர சதுர்த்தி விரதம்...