Saturday, May 27, 2023

நவகைலாய திருக்கோயில்கள்

நவகைலாய திருக்கோயில்கள்
ஸ்ரீ அகத்திய பெருமானின் முதல் சீடரான உரோமச முனிவர்.. சிவமுக்தி நிலையை அடைய வேண்டி சிவபெருமானை வணங்கினார். 

சிவபெருமான், மாமுனிவர் அகத்தியர் வழியே அவரது சீடருக்கு வழியைக் கூற விரும்பினார்..!!

தனது சீடரிடம் அகத்தியர் கூறுகையில், தாமிரபரணியில் 9 மலர்களை அனுப்புகிறேன். இந்த மலர் ஒவ்வொன்றும் எங்கு நிற்கிறதோ அந்த இடத்தில் சிவலிங்கத்தை வைத்து வழிபடு. நீ வணங்கும் சிவலிங்கம் ஸ்ரீகைலாசநாதர் என்றும், உமையாள் ஸ்ரீ சிவகாமி அம்மை என்றும் விளங்கும். 

அதன்பின்பு தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடினால் சிவமுக்தி பேறு அடையலாம் என்றார். 

அகத்தியரின் கூற்றுப்படியே அருள்தரும் நவகயிலாய கோயில்கள் தாமிரபரணி நதிக்கரையில் திருநெல்வேலி- தூத்துக்குடி மாவட்டப் பகுதிகளில் சிவபெருமானின் பேரருளால் உருப் பெற்றுள்ளன..!!

பாபநாசம்

முதல் கோயில் பாபநாசமாகும். இங்கு ஸ்ரீபாபநாச நாதர் என்ற ஸ்ரீகைலாசநாதர் - உலகம்மை கோயில் உள்ளது. சூரியபகவான் அம்சம் கொண்டது. திருநெல்வேலியில் இருந்து 45 கி.மீ. தொலைவில் பொதிகை மலையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. தாமிரபரணியின் முதல் தடுப்பணை அமைந்துள்ளதால் ஆண்டு முழுவதும் பக்தர்கள் நீராட வசதி பெற்ற திருத்தலம். 

சேரன்மகாதேவி

இரண்டாவதாக சேரன்மகாதேவியில் உள்ள ஸ்ரீஅம்மைநாதர் என்ற கைலாசநாதர் - ஆவுடைநாயகி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. சந்திரபகவான் அம்சம் கொண்ட தலம். 

கோடகநல்லூர்

மூன்றாவதாக கோடகநல்லூரில் உள்ள கைலாசநாதர்- சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் நடுக்கல்லூரியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. செவ்வாய் பகவான் அம்சம் கொண்ட தலம். 

குன்னத்தூர்

நான்காவதாக குன்னத்தூரில் உள்ள அருள்மிகு கோதை பரமேஸ்வரன் என்ற கைலாச நாதர்- சிவகாமசுந்தரி திருக்கோயில். திருநெல்வேலியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் மேலத்திருவேங்கடநாதபுரம் அருகே உள்ளது. இராகுபகவான் அம்சம் கொண்ட தலம். 

முறப்பநாடு

ஐந்தாவதாக தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாட்டில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் -சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி- தூத்துக்குடி சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது. குருபகவான் அம்சம் கொண்ட தலம். 

ஸ்ரீவைகுண்டம்

ஆறாவதாக ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்- சிவகாமி அம்மை திருக்கோயில். திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சனிபகவான் அம்சம் கொண்ட தலம். 

தென்திருப்பேரை

ஏழாவதாக தென்திருப்பேரையில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மை திருக்கோயில்.
திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் சுமார் 38 கி.மீ. தொலைவில் ஆழ்வார்திருநகரி அருகே அமைந்துள்ளது. புதன்பகவான் அம்சம் கொண்ட தலம். 

ராஜபதி

எட்டாவதாக ராஜபதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்- பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தென்திருப்பேரையில் இருந்து சுமார் அரை கி.மீ. தொலைவில் உள்ளது. கேது பகவான் அம்சம் கொண்ட தலம். 

சேர்ந்தபூமங்கலம்

ஒன்பதாவதாக சேர்ந்தபூமங்கலத்தில் உள்ள அருள்மிகு கைலாசநாதர்-அழகிய பொன்னம்மாள் என்ற சிவகாமி அம்மை திருக்கோயில். தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஆத்தூரில் இருந்து புன்னக்காயல் செல்லும் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சுக்கிரன் பகவான் அம்சம் கொண்ட தலம். 

நவகைலாய கோயில்களில் பக்தர்கள் மிகவும் எளிமையாக வழிபட உதவும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி கோட்டம் சார்பில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்புப் பேருந்துகள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. 

காலையில் புறப்படும் பயணிகள் அனைத்து ஆலயங்களிலும் தரிசனம் செய்துவிட்டு இரவில் திருநெல்வேலியை அடையலாம்...!!

No comments:

Post a Comment

Followers

108 திருப்பதிகளில் வைணவத் திவ்ய தேசங்கள்...

12 ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட #திருமாலின்  108 திருப்பதிகளில் (வைணவத் திவ்ய தேசங்களில் ) நம் #தமிழகத்தில்_உள்ள #முக்க...