Friday, June 2, 2023

•கந்தப் பெருமானின் அறுபடைவீடுகள் வரிசையில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் 4-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது.

#அறிந்த_கோவில்கள்_அறியாத_ரகசியங்கள் சுவாமிமலை
126.#அருள்மிகு_சுவாமிநாத_சுவாமி_திருக்கோயில்_வரலாறு

மூலவர் : சுவாமிநாதர், சுப்பையா

அம்மன் : வள்ளி, தெய்வானை

தல விருட்சம் : நெல்லிமரம்

புராண பெயர் : திருவேரகம்

ஊர் : சுவாமிமலை

மாவட்டம் : தஞ்சாவூர்

ஸ்தல வரலாறு :

மும்மூர்த்திகளில் ஒருவரான படைப்புக் கடவுள் பிரம்மாவிற்கு ஒரு சமயம், தான் என்ற கர்வம் தலைக்கேறியது. அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே முதல்வன் என எண்ணிக்கொண்டார். அதனால் கர்வம் தலைக்கேற ஆணவம் கொண்டார். அதனை அடக்க மனம் கொண்டார் முருகப்பெருமான். கைலாயத்தில் சிவனை தரிசிக்க பிரம்மன் வர நேர்ந்தது. அப்போது ஆணவம் தலைக்கேறிய பிரம்மன் முருகனை பாலன்தானே என அலட்சியமாக நினைத்தார். முருகன் பிரம்மனை அழைத்து பிரணவத்தின் பொருளையும், அதன் தத்துவத்தையும் கூறுமாறு கேட்டார். பிரம்மனால் பதிலளிக்க முடியவில்லை. அதனால் வெகுண்ட முருகன், பிரம்மன் தலையில் குட்டி சிறையில் அடைத்தார். இதனால் படைப்பு தொழில் பாதிப்படைந்தது. 

சிவபெருமான் பிரணவத்தின் பொருள் அறிந்தவரே, அறியாதவர் அல்ல. பிருகு முனிவர் ஈசனை வேண்டி தான் ஜீவன் முக்தனாக வேண்டிய கடுந்தவம் புரிந்து வந்தார். தனது தவத்திற்கு இடையூறு ஏற்படாது இருக்க தன் தவத்தை தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்க கடவது என சாபமிட்டு தவம் செய்யலானார். அவருடைய தவாக்னி தேவர்களை பீடிக்க அவர்கள் மகாவிஷ்ணுவுடன் பரமேஸ்வரனை அணுகி பிரார்த்திக்க சிவபெருமான் தன் திருக்கரத்தை முனிவரின் சிரசில் வைத்து அவருடைய தவாக்னியை அடக்குகிறார். பிருகு முனிவர் பிரக்ஞை அடைந்து கண்விழிக்கிறார். சிவபெருமானைக் கண்டு வணங்கி மகிழ்கிறார். சிவனும் உன் தவத்தை மெச்சி உன் விருப்பத்தை அருள்கிறேன் என ஆசீர்வதித்தார். பிருகு முனிவர் சிவன் தன் தவத்தை கலைத்ததால் தன்னுடைய சாபம் சிவனை பாதிக்குமே என வருந்தி சிவனிடம் மன்னித்தருளும்படி கேட்கிறார். சிவனும் உன் வாக்கிற்கு பழுது வராது. நான் உன் சாபத்தை மகிழ்வுடன் ஏற்கிறேன் என்று கூறுகிறார். ஆத்மாவை புத்திர நாமஸி என்கிறது வேதவாக்கு. அதன்படி தன் பிள்ளையான சுவாமிநாதனிடம் ரிஷியின் வாக்கை உண்மையாக்க சிவன் பிரம்மோபதேசம் செய்து கொள்கிறார். இதுவே சிவனுக்கு பிரணவப் பொருள் மறக்க காரணமாகும்.

தேவர்கள் அனைவரும் சென்று நடந்ததையும் நடக்க தேவைப்படுவதையும் சிவனிடம் எடுத்துக் கூறினார். எத்தனையோ திருவிளையாடல்களை நடத்திய எனக்கு இது முருகப்பெருமான் மூலம் வரும் புதிய திருவிளையாடல் என்பதை உணர்ந்தார். முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும் படிக்கூறினார். “பிரணவத்தின் பொருள் கூடத்தெரியாத பிரம்மனுக்கு படைப்பு தொழில் எதற்கு?” என எதிர் கேள்வி கேட்டார் முருகப்பெருமான்.

பிரம்மனுக்கும் தெரியாத பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என முருகனிடம் கேட்க, எனக்குத் தெரியும் என்றார் முருகப்பெருமான். அப்படியானால் சொல்! சிவன் கேட்க, தாம் குருவாகவும், தாங்கள் சிஷ்யனாகவும் இருந்து உபதேசம் பெற வேண்டும் (தத்துவ உபதேசம்) என கூறினார். 
முருகப்பெருமானின் திருவிளையாடலின் உச்ச கட்டம் நெருங்கிவிட்டதை உணர்ந்தார் சிவபெருமான்.

தென்கையிலாயம் என அழைக்கப்படும் திருவையாற்றில் இருந்துதான் சிவனின் உபதேசம் பயணம் தொடங்கியது. ஆவணி மாதம், அஸ்த நட்சத்திரம் கூடிய அற்புதமான நன்னாளில் சக்தி, கணபதி உட்பட தன் படைபரிவாரங்களுடன் புறப்பட்டு நந்தியெம்பெருமானை விட்ட இடம் நந்தி மதகு என்றும், கணபதியை அமர வைத்த இடம் கணபதி அக்கிரஹாரம் என்றும், சக்தியை அமரவைத்தது உமையாள்புரம் என்றும், சிவபெருமானின் தலையில் உள்ள கங்கையினை அமர வைத்த இடம் கங்காதரபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. அதன்பின்னர் சிவபெருமானும் முருகனும் தனியாக அருகில் உள்ள மண்குன்று (மலை) பகுதியில் ஓம் எனும் பிரணவ பொருள் உபதேசம் நிகழ்த்திய தலமானதால் சுவாமிக்கே நாதனாக இருந்தமையால் இப்பகுதி சுவாமிமலை என அழைக்கப்பெறுகிறது. பிற்காலத்தில் இம்மண்குன்றினை கட்டுமலையாக அமையப்பெற்றது. இத்தலத்தில் முருகப்பெருமானை தேவர்கள் புடைசூழ வழிபட்ட தேவேந்திரன் தனது நினைவாக ஐராவதுத்தினை (வெள்ளை யனை) முருகப்பெருமானுக்கு வழங்கியதால் மூலவருக்கு முன், இன்றும் ஐராவதம் உள்ளது. (முருகன் திருக்கோவில்களில் சன்னதி முன் மயில் காணப்படும்). தன்னுடன் வரப்பெற்ற தேவர்களில் தமிழ் வருட பெயர் கொண்ட தேவதைகள் அறுபது பேரை இத்தலத்தில் முருகப்பெருமானுக்கு சேவை செய்ய விட்டு சென்றார்.

கோயில் சிறப்புகள் :

•கந்தப் பெருமானின் அறுபடைவீடுகள் வரிசையில் சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் 4-ம் படைவீடாகப் போற்றப்படுகிறது.

•இக்கோயிலில் மீனாட்சி அம்பாளுடன் சுந்தரேஸ்வரரும் எழுந்தருளியுள்ளதால், மீனாட்சி சுந்தரேஸ்வர சுவாமி கோயில் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

•தகப்பன் சுவாமி’ என்று அழைக்கப்படும் முருகப் பெருமான், இக்கோயிலில் பிரம்மதேவர், பூமாதேவி, இந்திரன் ஆகியோருக்கு குருவாக இருந்து அருளியதால், இத்தலம், குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், சுவாமிநாதனாக அருள்பாலிப்பதால், சுவாமிமலை என்ற பெயர் நிலைத்துவிட்டது.

•மூலவர் 6 அடி உயரத்துடன், தலையில் உச்சிக் குடுமி, மார்பில் பூணூல் ஆகிவற்றைக் கொண்டு அருள்பாலிக்கிறார். வலக்கரத்தில் தண்டாயுதத்துடனும், இடதுகையை தொடையில் வைத்தபடியும் யோக நிலையில் உள்ள குருநாதராக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் கந்தப் பெருமான்.

•கருவறையில் மூலவர் நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. இதன் மூலம் சிவபெருமானும் முருகப் பெருமானும் வேறு வேறு அல்லர் என்பது புலனாகிறது.

•பீடம் சிவபீடமாகக் கருதப்படுகிறது. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளை ஒருங்கே கொண்ட வஜ்ர வேலுடன் சுவாமிநாதன் காணப்படுகிறார். இந்த வேல்தான் கோயிலின் கீழ் வீதியில் உள்ள நேத்ர தீர்த்தத்தை உண்டாக்கியதாக கூறப்படுகிறது.

•கட்டுமலையாக அமைந்துள்ள குன்றின் மீது இக்கோயில் 5 நிலை ராஜகோபுரத்துடன் தெற்கு நோக்கி உள்ளது. 

•முருகப் பெருமான் சந்நிதிக்குச் செல்ல 60 தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும் 60 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். 

•மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில், குன்றின் மீது அமைந்துள்ள கோயிலாக சுமாமி மலை கோயில் உள்ளது. 60 படிகள் ஏறி இத்தலத்துக்குச் செல்ல வேண்டும். ஒவ்வொரு படியும் ஒவ்வொரு தமிழ் வருடத்தைக் குறிக்கிறது. தமிழ் வருடங்களின் தேவதைகள் கந்தப் பெருமானை பிரார்த்தனை செய்து படிகளாக உள்ளதாக ஐதீகம்.

•இத்தலத்தில் சுப்பிரமணியர் சந்நிதிக்கு எதிராக, மயிலுக்கு பதில் யானை வாகனம் உள்ளது. சுவாமிநாத பெருமானை வேண்டி, ஹரிகேசன் என்ற அரக்கனை வென்றதால், இந்திரன் தன் காணிக்கையாக ஐராவத யானையை முருகப் பெருமானுக்குத் தந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

•பார்வதி தேவியின் சாபத்துக்கு ஆளான பூமாதேவி, இத்தலத்துக்கு வந்து சுவாமிநாதப் பெருமானை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றார். அதன்பின்னும் இத்தலத்தை விட்டுச் செல்ல விருப்பம் இல்லாததால், இங்கேயே தலவிருட்சமாக (நெல்லி மரம்) பூமாதேவி உள்ளார்.

•இந்த முருகப்பெருமான் அலங்காரச் சிறப்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.விபூதி அபிசேகம் செய்யும் போது அருள் பழுத்த ஞானியாக காட்சி தருவார்.சந்தன அபிசேகம் செய்யப்பட்ட நிலையில் பாலசுப்ரமணியனாக கம்பீரமாக காட்சி தருவார்.

•காவிரி சுவாமிநாதனை வழிப்பட்டு இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் தீர்த்தத்தில் நீராடி தரிசிக்க வேண்டும் என பிரார்த்தித்து குமார தாரை என்கிற பெயரில் இவ்வூரில் தொடர்ந்து இருக்க அருள் பெற்றுள்ளார்.

•கங்காதேவி முருகனை தரிசித்து தனது பாபவிமோசனம் பெற்றதால் தானும் காவிரியுடன் இணைந்து இத்தலத்தில் இருக்க அருள் வேண்டினார். முருகப்பெருமானும் தனது தலத்தில் விருட்சமாக இருக்க அருள்பாலித்தார். கங்காதேவி இத்தலத்தில் தாத்தாத்ரி (நெல்லி மரம்) தலவிருட்சமாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

•சுவாமிமலையின் பெருமைகள் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழிலும், நக்கீரர் திருமுருகாற்றுப்படையிலும் பாடியுள்ளனர்.

திருவிழா:

திருக்கார்த்திகை திருவிழா – 10 நாட்கள் – 

சித்திரை – பிரம்மோற்சவம் – 10 நாட்கள்

வைகாசி – வைகாசி விசாகப்பெருவிழா

ஆவணி – பவித்ரோற்சவம் – 10 நாட்கள்

புரட்டாசி – நவராத்திரிபெருவிழா – 10 நாட்கள்

ஐப்பசி – கந்தசஷ்டிபெருவிழா – 10 நாட்கள்

மார்கழி – திருவாதிரைத் திருநாள் – 10 நாட்கள்

தை – பூசப்பெருவிழா

பங்குனி – வள்ளி திருக்கல்யாண விழா
இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை மாதங்களில் நடைபெறும் விழாக்கள் கொடிஏற்றத்துடன் நடைபெறும் பெருவிழாக்கள் ஆகும். ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில வருடப்பிறப்பு நாளில் திருப்படிதிருவிழா சிறப்பாக நடைபெறுகிறது

திறக்கும் நேரம்:
காலை 5 மணி முதல்11 மணி வரை, 
மாலை 4 மணி 8 முதல் இரவு மணி வரை திறந்திருக்கும்.

முகவரி: 
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் 
சுவாமிமலை - 612302 
தஞ்சாவூர் மாவட்டம்.

போன்: 
+91- 435- 245 4421

அமைவிடம் :
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 6 கிமீ தொலைவில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இக்கோயில், கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்கு அடிக்கடி பேருந்து போக்குவரத்து வசதி உள்ளதால் கோயிலுக்கு பக்தர்கள் 

No comments:

Post a Comment

Followers

சிவனின் ஈசான்ய முகத்திலிருந்து தோன்றியவர் அகோர மூர்த்தி திருவெண்காடு..

அகோர மூர்த்தி : திருவெண்காடு தலத்தை தவிர்த்து வேறு எங்கும் கண்டு விட முடியாது. ஆலயத்தின் தனிச்சிறப்புக்கு உரியவர் அகோர மூர்த்தி....