Tuesday, June 13, 2023

சிவபெருமானின் 64 வடிவங்களுள் சரபேசுவர் வடிவமும் ஒன்று.

" ஒரு புராணமும்
  ஒரு போர்க்களமும் "
சிவபெருமானின் 
64 வடிவங்களுள் சரபேசுவர் வடிவமும் ஒன்று.

சிங்கம் போன்ற முகத்துடன் அமைந்த ஒரு பறவையின் வடிவம். சிம்மத்தையே வீழ்த்தும் திறன் கொண்ட பறவை.

சரபேசுவரர் தோன்றிய வரலாறு.

வழக்கமான அசுரன்  இரணியன்.
பிரம்மனை நினைத்து கடும் தவம் புரிந்து அரிய வரம் ஒன்றை பெற்றான்.

தனது இறப்பு மானிடர்களாலோ அல்லது மிருகத்தாலோ ஏற்படக்கூடாது. பகலிலலோ அல்லது இரவிலோ தனக்கு
மரணம் நேரக்கூடாது. ஆயுத பிரயோகம் கொண்டு தான் இறக்க கூடாது. நிலத்திலோ நீரிலோ  ஆகாயத்திலோ 
தனக்கு மரணம் சம்பவிக்க கூடாது.

இதுதான் இரணியன் பெற்ற வரம். வரம் பெற்ற அவனும் தேவர்களைத் தாக்கத் தொடங்கினான். இரணியனின் மகன்
பிரகலாதன் சிறந்த பெருமாள் பக்தனாய் இருந்தும் தன் தந்தையை அவனால் மாற்ற முடியவில்லை.

நாளுக்கு நாள் இரணியனின் அட்டகாசம் தொடர்ந்தது. தன்னைத்தான் கடவுளாக வழிபடவேண்டும் என
மக்களையும்  இம்சித்தான்..

தேவர்களும் ஒன்று கூடி ஒரு தீர்மானம் ஒன்றை எடுத்தார்கள். இரணியனை அழிக்க சாட்சாத் பெருமாளே அவதாரம் எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது..

அசுரபலம் கொண்ட அரக்கனை அழிக்க
அசுர சக்தியுடன் பெருமாள் அவதாரம் எடுக்க வேண்டியது
அவசியமானது. மனிதனும் மிருகமும் கலந்த ஒரு அவதாரம் எடுக்க வேண்டும்.  அதாவது நரசிம்ம அவதாரம்.

இங்குதான் ஒரு பிரச்சனை ஆரம்பம் ஆனது. சிங்க முகமும் மனித உடலும் கொண்ட நரசிம்ம அவதாரத்தை பெருமாள் எடுத்தால் அதிபயங்கர அசுர சக்தியை பெறுவார். அந்த சக்தியின் மூலம் இரணியனை வதம் செய்வார்.

ஆனால்....

இரணியனை வதம் செய்த பிறகு பெருமாளிடம் குடி கொண்ட அந்த அசுர சக்தியை எங்கனம்  வெளியேற்றுவது. விஷ்ணுவை எவ்வாறு சாந்தப்படுத்துவது. நரசிம்மரை மீண்டும் ஆற்றுப்படுத்தி
பெருமாளாக எவ்வாறு மாற்றுவது.? இவ்வாறு செய்யாவிடில் நரசிம்மரிடம் நிலை கொண்ட அந்த 
அசுரசக்தியால் இந்த உலகம் பல இன்னல்களை சந்திக்குமே...? 

நரசிம்மரை ஆற்றுப்படுத்துவது யார்.? எவ்வாறு.? அது அவ்வளவு இலகுவான விடயம் இல்லையே ?
என்ன செய்வது..?

பிரச்சனை சிவனிடம் சென்றது. பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்யட்டும். நரசிம்மரை சாந்தப்படுத்தும் பணியை நான் செய்கிறேன் என்றார் சிவன்.

பிறகென்ன..
மாகவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தார்.
அண்ட சராசரம் நடுங்க  சிங்க முகமும் மனித உடலுமாய் அசுர சக்தியுடன் அவதாரம் எடுத்தார்.

 இரணிய வதம் தொடங்கியது.
பகலும் இல்லாத  இரவும் இல்லாதா ஒரு பொழுது சாயும் நேரம். மனிதனும்  இல்லாத மிருகமும் இல்லாத இரண்டும் கலந்த உருவமாய் ஒரு தூணை பிளந்தவாறு
நரசிம்மர் வெளிப்பட்டார். நிலத்திலோ, நீரிலோ, ஆகாயத்திலோ இல்லாமல் இரணியனை தன் மடிமேல்
இருத்தி எந்த ஆயுத பிரயோகமும் செய்யாமல்  தன் கை நகங்களை கொண்டு இரணியனின் மார்பைக் கிழித்து அவனை வதம் செய்தார்.

இரணிய வதம் முடிந்தது. 
இப்போது நரசிம்மரை சாந்தப்படுத்த வேண்டும். அவரிடம் உள்ள அசுரசக்தியை போக்கி.. மகா விஷ்ணுவை
மீட்கவேண்டும்..

நரசிம்மரை விடுவிக்க சிவன் எடுத்த ரூபமே 
சரபேசுவரர் ரூபம்..

 சிம்ம முகம்.  எட்டுக்கால்கள்  
நான்கு கைகள்,  
கூரிய நகங்கள்,  
இரு இறக்கைகள், 
சிங்க வால், கருட மூக்கு, யானைக்கண்கள், கோரப்பற்கள், ஒரு பறவை போன்ற அமைப்பு..

இதுதான் சரபேசுவரர் மூர்த்தி..

அப்படியே தன் கால் கூரிய நகங்களால் நரசிம்மரை பற்றி மேலே தூக்கிச் சென்று ..  நரசிம்மரை சாந்தப்படுத்திய வடிவமே
சரபேசுவரர் வடிவம்..

அதாவது ஒரு சிங்கத்தையே அலாக்காக தூக்கும் பலம் கொண்ட சிம்மத்தையே வெல்லும் திறன் கொண்ட அசுர பலம் வாய்ந்த ஒரு பறவைதான் சரபம்.

இந்த சரபேசுவரர் சிற்பம் ஒன்று தாராசுரத்தில் அதி அற்புதமாய் செதுக்கப்பட்டுள்ளது..

தாராசுரத்தில் 
ஒற்றைக்கல்லில் கோஷ்ட சிற்பமாய் வடித்துள்ளனர்..

சரபத்தின் கால் நகங்கள் நரசிம்மரின் உடலில் பதிந்து இருக்கின்றன. சரபம் நரசிம்மரை மேலே வான் வெளியில்
தூக்கிச் செல்கிறது.. நரசிம்மரின் சங்குச்சக்கரம் நழுவி கீழே விழுகிறது. நரசிம்மரின் உக்ரம் குறைந்து சிவனை 
கைகூப்பி வணங்குகிறார்.  இந்த பரவச காட்சியை கண்ட தேவர்களும் மேக கூட்டங்களில் இருந்தவாறு வணங்குகின்றனர். கீழே பிரகாலதனும் கைகூப்பி  வணங்குகிறார்...

ஆக...
சிம்மம் ஒன்றை வீழ்த்தும் திறனுடைய ஒரு பறவைதான் சரபம்...

புராணத்தை நிறைவு செய்து  ஒரு போர்க்களத்திற்கு வருகிறோம்..

சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையேயான கடும் போர்க்களம்..

சோழர்படைத்
தலைவனாக இராஜேந்திரன்..

சாளுக்கியப்படைத் தலைவனாக ஜெயசிம்மன்..

என் பெயரே ஜெயசிம்மன். சிம்மத்தை வெல்லும் திறன் யாருக்கும் உண்டோ...? என்று களம் கண்டார்.

போரின் முடிவு என்னவாக இருந்தது..?

ஒரே வரியில் கரந்தைச் செப்பேடு கூறிவிடுகிறது..

" சிம்மம் போன்ற ஜெயசிம்மனுக்கு
 சரபமாக இராஜேந்திரன் இருந்தான்."

அவ்வளவுதான்...
போரின் முடிவு என்னவாக இருந்தது என்று நமக்கும் தெரிந்துவிட்டது..

அன்புடன் ..
மா.மாரிராஜன்..

(புகைப்படம் - 
Dr.பொன்னம்பலம் சிதம்பரம்.)

No comments:

Post a Comment

Followers

பதவி உயர்வு தரும் பதஞ்சலி நாதேஷ்வரர் கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர்..

*#பதவி #உயர்வு #தரும் #பதஞ்சலி #நாதேஷ்வரர்* கடலூர் மாவட்டம் கானாட்டாம்புலியூர் என்ற இடத்தில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோ...