தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான,
பஞ்சபூத தலங்களில் வாயு தலமான,
51 சக்தி பீடங்களில் ஞானசக்தி பீடமான,
63 நாயன்மார்களில் ஒருவரான
கண்ணப்ப நாயனார் தொண்டாற்றி பேறுபெற்ற தலமான, நவகிரகங்களில்
இராகு கேது பரிகார தலமான
#ஆந்திர_மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள
#திருக்காளத்தி என்ற
#ஶ்ரீகாளஹஸ்தி
#திருக்காளத்தியப்பர்
(காளஹஸ்தீஸ்வரர்)
#ஞானப்பூங்கோதை_அம்மன் (ஞானப்பிரசன்னாம்பிகை) திருக்கோயில் வரலாறு:
திருக்காளத்தி காளகத்தீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவில் கட்டிய இராசராச சோழன் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளகத்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது. பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
வடமொழிப் புராணங்கள் பலவும் இக் கோயிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன. அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக் கோயிலின் தல மரங்கள். இந்த ஊருக்கு அருகில் பொன்முகரி ஆறு ஓடுகிறது.
மூலவர்: காளத்தியப்பர் (காளஹஸ்தீஸ்வரர்)
அம்மன்: ஞானப்பூங்கோதை (ஞானப்பிரசன்னாம்பிகை)
தல விருட்சம்: மகிழ மரம்
தல தீர்த்தம்: பொன்முகரி ஆறு மற்றும் சுவர்ணமுகி ஆறு
புராண
பெயர்: சீகாளத்தி, திருக்காளத்தி
ஊர்:ஶ்ரீகாளஹஸ்தி
மாவட்டம்: சித்தூர்
மாநிலம்: ஆந்திரப் பிரதேசம்
நாடு: இந்தியா
#பாடியவர்கள்:
அப்பர் சுவாமிகள், சுந்தரர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர்
#திருக்காளத்தி_பதிகம்:
"செண்டு ஆடும் விடையாய்! சிவனே! என் செழுஞ்சுடரே!
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே!
கண்டார் காதலிக்கும் கணநாதன்! எம் காளத்தியாய்!
அண்டா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே.
_சுந்தர மூர்த்தி நாயனார்
#திருக்காளத்தி_திருப்புகழ்: (சிரத்தானத்தி)
சிரத்தா னத்திற் ...... பணியாதே
செகத்தோர் பற்றைக் ...... குறியாதே
வருத்தா மற்றொப் ...... பிலதான
மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய்
நிருத்தா கர்த்தத் ...... துவநேசா
நினைத்தார் சித்தத் ...... துறைவோனே
திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே
திருக்கா ளத்திப் ...... பெருமாளே.
__அருணகிரிநாதர்
#புராண_வரலாறு:
முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: “வாயுதேவனே, நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்”. போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.
வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.
மற்றொரு புராணமாக,
பல நூறு ஆண்டுகளுக்கு முன் வனமாக இருந்த இந்த இடத்தில் வாயு லிங்கமாக தோன்றிய சிவபெருமானை வழிபட சிலந்தி ஒன்று தினமும் வருமாம். மழையில் நனைந்த சிவபெருமானைக் கண்ட அந்த சிலந்தி தன்னுடைய உமிழ் நீரில் இருந்து உருவாகும் சிலந்தி வலையை பின்னி வைத்ததாம். பெரும் இடி ஒன்று இடித்ததில் அந்த வலை எரிந்து சாம்பலானது. சிலந்தியால் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் இறந்து போனதாம். இதனால் அந்த சிலந்தியின் பக்தியை மெச்சிய சிவபெருமான் அதற்கு முக்தி கொடுத்தாராம்.
அதே போல தினமும் நாகம் ஒன்று அந்த லிங்கத்தை ஆரத்தழுவி மாணிக்கங்களை கக்கி அர்ச்சனையாக செய்து வழிபடும். அதற்கு பின்னால் வரும் யானை ஒன்று தன் தும்பிக்கையால் நீரை வாரி இறைத்து அபிஷேகம் செய்யும். பின் மலர்களை பறித்து வந்து அர்ச்சனையும் செய்து வரும். இதனால் அந்த மாணிக்கங்கள் கீழே விழுந்து சிதறி விடுவது உண்டு. தொடர்ந்து இது போல் நடந்து கொண்டிருக்க அந்த நாதத்திற்கு சந்தேகம் வந்தது. யானை இது போல் செய்வதை அந்த நாகம் ஒரு நாள் பார்த்து விட்டது. உடனே கோபமுற்ற நாகம் யானையின் தும்பிக்கையினுள் சென்றுவிட்டு மூச்சடைக்க செய்தது.
சுவாசிக்க முடியாமல் அந்த யானை பாறையில் மோதி மோதி கடைசியில் இரண்டும் இறந்து போனது. இவைகளின் பக்தியை மெச்சிய சிவபெருமான் இவர்களுக்கும் முக்தியை கொடுத்தார் என்று ஸ்தலபுராணம் எடுத்துரைக்கிறது. இந்த தலத்தில் வீற்றிருக்கும் காளத்திநாதர் உருவத்தில் கீழே இரண்டு தந்தங்களும், இடையில் பாம்பும், பின்புறம் சிலந்தியும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
#கண்ணப்ப_நாயனார்:
திண்ணப்பன் முந்தைய ஜன்மத்தில் அர்ஜுனனாக பாசுபதாஸ்திரத்தைப் பெற தவமிருந்தபோது, சிவபெருமான் அஸ்திரத்தை வழங்கியதோடு, அவர் மீண்டும் கலியுகத்தில் அவதரிக்கும் வரத்தையும் அருளினார். அதன்படி அர்ஜுனன் கலியுகத்தில் திண்ணனாக அவதரித்தார்.காட்டிற்கு வேட்டையாடச் சென்ற திண்ணன் அங்கிருந்த சிவபெருமான் மீது பக்தி கொண்டு சொர்ணமுகி ஆற்றிலிருந்து வாயில் நீரெடுத்து வந்து அபிஷேகம் செய்து, தான் வேட்டையாடிய விலங்குகளின் மாமிசத்தை நிவேதனமாகப் படைத்து, காட்டில் உள்ள மலர்கள், இலைகளால் மாலை கட்டி, அதை சிவபெருமானுக்கு சமர்ப்பித்து வழிபட்டு வந்தார். அவரின் பக்தியை உலகிற்குப் பறைசாற்ற நினைத்த சிவபெருமான், ஒருநாள் திண்ணன் வழிபட வரும்போது கண்ணில் ரத்தப் பெருக்கை ஏற்படுத்தினார். சிவனின் கண்களுக்குப் பதிலாக தன் கண்ணைத் தோண்டி எடுத்து அர்ப்பணித்தவுடன் சிவபெருமான் நேரில் காட்சி அளித்து ஆட்கொண்டார். சிவனுக்குக் கண் கொடுத்ததால் அன்று முதல் கண்ணப்பன் என்ற பெயரால் அவர் அழைக்கப்பட்டார். நாயன்மார்களில் ஒருவராகவும் கண்ணப்பன் கருதப்படுகிறார்.
அந்தணர் ஒருவர் இந்த லிங்கத்தை பூஜித்து வந்ததாகவும், அதனை பார்த்துக் கொண்டிருந்த வேடன் ஒருவனுக்கு சிவனின் மேல் கொண்ட பக்தியால் பூஜை செய்ய அதிக ஆர்வம் ஏற்பட்டதாம். அந்தணர் வராத சமயத்தில் இந்த வேடன் தான் வேட்டையாடி வைத்திருந்த பன்றி இறைச்சியை சிவபெருமானுக்கு படைத்து வந்தானாம். ஒரு நாள் இதை அறிந்த அந்த அந்தணர் மிகப்பெரிய தவறு நடந்து விட்டதாக எண்ணி வருந்தினார். அன்று இரவு அந்தனர் கனவில் வந்த சிவபெருமான், ‘நாளை ஒளிந்து இருந்து இந்த இறைச்சியை வைப்பது யார் எனவும், அவருடைய பக்தியை பார்’ என்றும் கூறினாராம்.
அதன் படியே மறுநாள் ஒளிந்திருந்த அந்தணருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கம் போல் வேடன் வந்து இறைச்சியை படைத்து வழிபாடுகள் செய்தானாம். அப்போது சிவபெருமானின் ஒரு கண்ணிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஊற்றியது. இதைக் கண்டு பதறிப்போன வேடன் எவ்வளவோ முயற்சித்தும் ரத்தம் நிற்க காரணத்தினால் தன்னுடைய ஒரு கண்ணை எடுத்து லிங்கத்திற்கு வைத்து விட்டான், உடனே ரத்தம் நின்று விட்டது. அடுத்ததாக மறு கண்ணில் இருந்தும் ரத்தம் பெருக்கெடுத்தது. அந்த வேடன் தன்னுடைய கால் கட்டை விரலால் ரத்தம் வழிவதை தடுக்க லிங்கத்தின் கண்களில் வைத்து இரண்டாவது கண்ணை அம்புகளால் தோண்டி எடுக்க முற்பட்டதும் சிவபெருமான் காட்சி கொடுத்து, கண்ணப்ப நிற்க… கண்ணப்ப நிற்க… கண்ணப்ப நிற்க… என்று மும்முறை கூறினாராம். இதனை கண்டு நெகிழ்ந்து போனார் அந்தணர்.
பக்திக்கு மிஞ்சிய ஞானம் இல்லை என்பதை அவர் உணர்ந்தார். சைவ கடவுளான சிவபெருமான் இறைச்சியை வைத்து வழிபட்டாலும் தீவிர பக்தரான அந்த வேடனுடைய பக்தியை ஏற்ற காரணத்தினால் பிற்காலத்தில் அந்த வேடனுக்கும் இந்த தலத்தில் இடம் கிடைத்தது. திண்ணனார் என்கிற அந்த வேடனின் பெயர் கண்ணப்பர் என்று புகழப்பட்டது. இந்த கோவிலில் அவரையும் காண முடியும்.
துளி அளவிலும் காற்று புகாத கர்ப்பக்கிரகத்தில் வீற்றிருக்கும் இந்த லிங்கத்திற்கு ஏற்றப்படும் தீபம் ஆனது படிப்படியாக மேலெழும்பி அழகாக நிற்காமல் அசைந்து ஆடிக் கொண்டே இருக்கும். காற்றே இல்லாத இடத்தில் தீபம் மட்டும் அசைந்து ஆடுவது வியப்பிற்குரியது என்பது விஞ்ஞானிகள் கூற்று.
#ஸ்ரீ_காளஹஸ்தி என்ற பெயர் காரணம் :
ஸ்ரீ என்பது சிலந்தியையும், காளம் என்பது நாகத்தையும், அத்தி என்பது யானையையும் குறிப்பதால் இப்பெயர் பெற்று விளங்குகிறது.
#பாதாள_விநாயகர்:
அகத்தியர் இத்தலத்தில் வந்து சிவபெருமானை வழிபட்டு இங்கிருக்கும் விநாயகரை வணங்காமல் சென்றது விநாயகரை கோபம் மூட்டியது. இதனால் விநாயகர் அருகில் இருக்கின்ற பொன்முகலி ஆற்றை முழுவதுமாக வற்றி போகுமாறு செய்து விட்டார். இதனால் மனம் வருந்திய அகத்தியர் விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கியதாக தலபுராணம் கூறுகிறது. பிற்காலத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்த இடம் ஆழத்தில் சென்றதால் இந்த விநாயகர் பாதாள விநாயகர் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் இந்த விநாயகரைத் தரிசிக்க பக்தர்கள் 20 அடி ஆழத்திற்கு செல்ல வேண்டியதாக உள்ளது.
#தலபெருமை:
கண்ணப்பர் வாய்கலசமாக முகலிநீர் கொண்டுவந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு திருநீறு(விபூதி) வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். பக்தர்கள் கொண்டுவரும் திருநீறு பொட்டலத்தை இறைவன் திருவடியில் வைத்து தீபம் காட்டி எடுத்து தருகிறார்கள். மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது.
பிற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன.
இது ராகு, கேது தலம் என்பதால் கோவிலை வலம் வருவதும் எதிர்வலமாகவே – அப்பிரதட்சிணமாகவே சுற்றி வர வேண்டும். பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. விதிவிலக்காக சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள். அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது.
கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேசுவரருக்கு ஒரு கோவில் உள்ளது. அதையடுத்து மலையை வெட்டி செதுக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. அதற்கு மணி கர்ணிகா கட்டம் என்று பெயர். இங்குதான் காசியில் உள்ள மணிகர்ணிகா கட்டத்தில் விசுவநாதர் அருளியதுபோல, பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதி அருளினார் என்று ஒரு கதை வழங்கி வருகிறது.
அதனால் இன்றும் அந்திம திசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்திற்கு கொண்டுவந்து வலப்பக்கமாக ஒருக்களித்துச் சாய்த்துக் கிடத்தினால் சாகிறபொழுது உடல் திரும்பி வலக்காது வழியாகவே உயிர் பிரியும் என்று கூறுகிறார்கள்.
சுவாமி புறப்பாடு வடக்கு கோபுரவாயில் வழியாகவே நடைபெறும். முன்காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில் நீராடிவிட்டு கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார்.
#தல_சிறப்பு:
இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது வாயு(காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் – உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம்.
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்தலம் ஆகும்.
#கோவில்_அமைப்பு
கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன. கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. கோவிலின் நுழைவுவாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும், 60 அடி உயரமுடைய, ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதன் அருகே பலிபீடமும், நந்தியும் உள்ளன.
#வரலாறு:
இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளகத்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராசராச சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று. சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக் கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக்கோயிலில் உள்ளன. சோழர்களும், விசய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோயிலுக்கு அளித்துள்ளனர்.
பல்லவர் காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோயில்களை இங்கு எடுப்பித்துள்ளான். 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தார். கிபி 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விசயநகரப் பேரரசர் கிருட்டிணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவர் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.
இக்கோவிலின் மூலவர் ஞானபிரசுனாம்பிகை தாயார் செங்குந்த கைக்கோளர் மரபு வெள்ளாத்தூரார் கோத்திரத்தில் தோன்றியவர். இதனால் இங்கு நடைபெறும் சிவன் பார்வதி திருக்கல்யாணத்தில் இம்மரபினர் சார்பில், பெண் வீட்டு சீதனம் கொண்டுவந்து சமர்ப்பிப்பது வழக்கம்.
கல்வெட்டுக்கள்:
இவ்வூர்ப் பாடல்பெற்ற கோயிலில் சோழமன்னர்களில் முதலாம் இராஜராஜ சோழன், முதலாம் இராஜேந்திர சோழதேவன், முதலாம் இராஜாதிராஜ தேவன், இராசகேசரி வர்மனாகிய வீரராஜேந்திரன், முதற்குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன், திரிபுவனச் சக்கரவர்த்தி இராஜாதிராஜ தேவன், திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழ தேவன், இவர்கள் காலங்களிலும், விஜயநகர வேந்தர்களில், வீரப்பிரதாப ஹரிஹரராயர், வீரப்பிரதாப தேவராயர், வீரப்பிரதாப வீரகிருஷ்ணன் தேவராயர், வீரசதாசிவ மகாராயர் முதலானோர் காலங்களிலும், காகதீய வம்சத்துக் கணபதி காலங்களிலும், மற்றும், விஜயகண்ட கோபால தேவன், ஆளும் திருக்காளத்தித் தேவனாகிய கண்ட கோபாலன் இவர்கள் காலங்களிலும் பொறிக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் இருக்கின்றன.
இக்கோயில் கல்வெட்டுக்களில் இறைவர் திருக்காளத்தி உடைய நாயனார், திருக்காளத்திச்சிவனார், ஆளுடையார் தென்கயிலாயமுடையார் என்னும் பெயர்களாலும், விடங்கர் சோதிவிடங்கர் என்னும் பெயராலும் கூறப்பெற்றுள்ளனர். திருவிழா:
திருக்காளத்தி உடையார்க்கு வைகாசியில் திருவிழா நடைபெற்று வந்தது. அவ்விழா முட்டாமல் நடைபெறுவதற்கு நரசிங்க காளத்தி தேவனான யாதவராசன் சயங்கொண்ட சோழமண்டலத்துத் திருவேங்கடக் கோட்டத்து. கருப்பற்று நாட்டு வெண்ணெய் நல்லூரைத் தட்டார் பாட்டம், தறிஇறை, வெட்டி, முட்டையாள், பட்டிக்காசு காணிக்கை, கன்மிப்பேறு, மற்றும் எப்பேர்பட்ட வரிகளும் அகப்பட தேவதானமாக விட்டிருந்தான்.
இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் சோதிவிடங்கர், எட்டாந் திருநாளில் திருவீதிக்கு எழுந்தருளி, திருச்சாந்து கற்பூர வெள்ளைச் சாத்தித் திருவுலாப்புறம் செய்து, தோசை, திருக்கண்ணமுது இவைகளை அமுது செய்தருளுவது வழக்கம். அதன் பொருட்டுப் பொலியூட்டாக நூறு பணம் அளிக்கப்பெற்றிருந்தது. இக்கோயிலில் மாசித் திருவிழாவும் மிகச் சிறப்பாய் நடைபெற்று வந்தது. அவ்விழாவின் ஏழாம் நாளில் இமையோர்கள் நாயகர் திருவீதிக்கு எழுந்தருளி, திருக்கல்யாணம் பண்ணி, திருவூடல் தீர்த்து திருக்கோயில் வாசலில் பலிபீடத்தண்டையில், திருவாலத்தில் தட்டம் எடுத்த பிறகு அத்தேவர் தோசை அமுது செய்தருளுவது உண்டு. அதன் பொருட்டும் நிவந்தம் செய்யப்பெற்றிருந்தது.
#திருமடம்:
திருக்காளத்தி உடையார் கோயிலில் மலைமேல் ஒரு மடம் இருந்தது. அது சசிகுல சளுக்கி வீரநரசிங்க தேவன் திருக்காளத்தித் தேவனான யாதவராயனால் கட்டப்பெற்றது. அம்மடத்தில் மாகேஸ்வரருக்குச் சோறிட பெரும்பூண்டி நாட்டுப் பொன்னையன் பட்டு என்னும் ஊரின் நாற்பால் எல்லைக்கு உட்பட்ட நன்செய் புன்செய் நிலத்தை மேற்கூறப்பெற்ற வீரநரசிங்க தேவன் இராசராச தேவரின் 15ஆம் ஆண்டில் கொடுத்திருந்தான்.
இதுவன்றித் தியாகமேகன்மடம் ஒன்று இருந்தது. இதில் நாள் ஒன்றுக்கு முப்பது தேசாந்தரிகளுக்குச் சோறும், ஐந்து பிராமணர்களுக்கு அரிசியும் இடுவதற்கு உடலாக (மூலதனமாக) விசயகண்ட கோபால தேவரின் நான்காம் ஆண்டில் சயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர்க் கோட்டமான குலோத்துங்க சோழவளநாட்டுப் பேரூர் நாட்டு மதுரைவாய் திருநல்லுழான் திருநட்டப்பெருமாள் தியாகமேனன் நிவந்தம் அளித்திருந்தான்.
இக்கோயிலுக்கு வடக்குத் திருவீதியில் கூற்றுதைத்தான் சோமதேவர் மடம் என்று ஒன்று இருந்தது.
#திருநந்தவனம்:
திருக்காளத்தி உடைய நாயனாரின் திருமலை அடிவாரத்தில் வீரநரசிங்க தேவன் திருநந்தவனம் என்னும் பெயருள்ள நந்தவனம் இருந்தது. அது சசிகுலசளுக்கி வீரநரசிங்க தேவனான யாதவ ராயனால் ஏற்படுத்தப்பட்டது. அதன் பொருட்டு வீரநரசிங்க தேவன் ஆற்றூர் நாட்டுக்கோன்பாக்கத்திலும், திருக்காளத்திப் புத்தூரிலும் நெல்வாயிலிலும், தனக்குக் கிடைக்கும் நன்செய் நிலத்தில் பத்தில் ஒன்றாய் வந்த பாடிகாவல் கடமை, பொன் ஆயம், நெல்லாயம் இவைகளை உடலாக விட்டிருந்தான். ஆலால சுந்தர நந்தவனம் என்று ஒன்று இருந்ததை முதற்குலோத்துங்க சோழனின் 49-ஆம் ஆண்டுக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. ஒரு கமுகம் தோட்டத்திற்கு கண்ணப்ப தேவர் பெயர் வைக்கப்பெற்றிருந்தது.
#நூற்றுக்கால் மண்டபமும், பெரியகோபுரமும்:
இக்கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தையும், பெரிய கோபுரத்தையும் கட்டியவர் விஜயநகர வேந்தனாகிய வீரப்பிரதாப கிருஷ்ணதேவராயர் ஆவர். இதை இக்கோயிலில் சகம் 1438 - இல் செதுக்கப்பட்ட தெலுங்குக் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.
#கண்ணப்பர் கோயில்:
இக்கோயில் மண்டபமும் மண்டபத்தைச் சுற்றிய தாழ் வாரமும் ஆடவல்லான் கங்கை கொண்டானாகிய இருங்கோளன் தாயாராகிய புத்தங்கையாரால் கட்டப்பெற்றது.
#இவ்வூரிலுள்ள வேறு கோயில்:
இவ்வூரில் திருமணிக்கெங்கையுடைய வேறு கோயில் ஒன்று உண்டு. திரிபுவனச் சக்கரவர்த்தி வீரராஜேந்திர சோழதேவரின் பதினொன்றாம் ஆண்டில், சயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க் கோட்டத்து வல்லம் நாட்டுப் பெருந்தண்டலத்துக்கோறுழான அமுதாழ்வான் மங்கை நாயகன் மழவராயனால் அக்கற்றளியும், திருமண்டபமும், சோபானமும் கட்டப்பெற்றதாகும்.
இக்கோயிலில் தனி இடத்தில் சசிகுலசளுக்கி தனிநின்று வென்றானாகிய வீரநரசிம்ம தேவனாகியயாதவராசன் மல்லிகார்ச்சுனரை எழுந்தருளுவித்திருந்தான்.
#இவ்வூரைத் தன்னகத்துக்கொண்டுள்ள நாடு:
இவ்வூர் சயங்கொண்ட சோழமண்டலத்து, திருவேங்கடக் கோட்டத்து, ஆற்றூர் நாட்டுத் திருக்காளத்தி என இக்கோயில் கல்வெட்டுக்களில் குறிக்கப்பெற்றுள்ளது. திருக்காளத்தி முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் காளத்தியாகிய மும்முடிச் சோழபுரம் என்றும் வழங்கப்பெற்றிருந்தது.
#பிறசெய்திகள்:
முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் இக்கோயிலில் கிருத்திகைத்தீப விழாவைப்பற்றிக் கூறப்பெற்றுள்ளது. அதற்குக் கங்கைக்கொண்ட சோழமிலாடுடையான் நிவந்தம் அளித்திருந்தான். கண்ணப்பர் பிறந்த நாடு பொத்தப்பிநாடு என்று சேக்கிழார் கூறியுள்ளார். அப்பொத்தப்பி நாடு இவ்வூர்க் கல்வெட்டிலும் குறிக்கப்பெற்றுள்ளது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் நாட்டுத் தொகையில் புரிசை நாட்டுப்புரிசை எனக் குறிப்பிட்டுள்ளார். அப்புரிசை நாடு மணவில் கோட்டத்தில் உள்ளது என்பதையும் இக்கோயில் கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.
அளவு கருவிக்குக் காளத்தியுடையான் மரக்கால் என்றும், ஒரு தலைவனுக்குத் திருக்காளத்தி தேவன் என்றும், திருவிளக்குக் குடிகளில் ஒருவனுக்கு மன்றாடி காரிசாத்தன் திருக்காளத்திகோன் என்றும் பெயர்கள் வைக்கப்பெற்றிருந்தன. மூன்றாம் பிராகாரத்தில் உள்ள மண்டபம் சின்னையா மண்டபம் எனப் பெயர் பெற்றுள்ளது.
திருநுந்தாவிளக்குகளுக்கும், திருமந்திர போனக புறத்திற்கும் நிபந்தங்கள் மிகுதியாக அளிக்கப்பெற்றுள்ளன. ஒரு நுந்தா விளக்கினுக்கு விடப்பெறும் சாவா மூவாப்பசு 32-ஆகும். ஆடு ஆயின் 96 ஆகும். 96-ஆடுவிடுபவர் பொலிகிடா இரண்டும், பொலி மொத்தை இரண்டும் விடுவது வழக்கம்.
நுந்தா விளக்கேயன்றி சந்தி விளக்கும் வைப்பதுண்டு. ஒரு சந்தி விளக்குக்கு ஐந்து நற்பழங்காசு அளிப்பதுண்டு. 32 - பசுமாடு விடுபவர் ரிஷபம் ஒன்றையும் விடுவர்( See the Annual Reports on South Indian Epigraply for the year 1892 195 - 202, year 1892 72 - 76. 166 - 203, year 1904 276 - 303, year 1922 82 - 184, year 1924 150 - 180.
See also the South Indian Inscriptions, Volumes IV 643 - 650. Volumes VIII 377 -381. Volumes VIII 463 -502.)
பிரார்த்தனை:
ராகு, கேது சர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள், இத்தலத்திற்கு வந்து ராகு தோஷம் நீங்கவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரளமாக வராத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
திருவிழா:
மாசித்திருநாள், திருக்கார்த்திகை, வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் விழா, பொங்கல், மகா சிவராத்திரி 10-நாட்கள் உற்சவம். திருத்தேர் பவனி. சிவராத்திரி இரவு நந்திசேவை தரிசிக்க சிறப்பு, சிவராத்திரியில் மலை வலம் வரும் விழா.
காளஹஸ்தி கோவில் திறக்கும் நேரம்:
காலை 05:00 முதல் 12:00 மணி, மாலை 05:00 முதல் 09:00 வரை, செவ்வாய், புதன் மற்றும் வியாழன் நாட்களில் காலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.
கோவிலைப்பற்றி பல குறிப்புகள் தேவாரப் பாடல்களும், புராணங்களும் தெளிவாக கூறுகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு எத்தனை குறைகள் இருந்தாலும் உடனே நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. திருப்பதி செல்பவர்கள் பெரும்பாலும் காளத்தி நாதரை வழிபடாமல் வீடு திரும்புவதில்லை. அனைவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் திருக்காளஹஸ்தி ஒன்று என்பதைக் கூறி இப்பதிவை நிறைவு செய்வோம்.
திருச்சிற்றம்பலம் 🙏
சிவாய நம 🙏🙇🥺
No comments:
Post a Comment