சனி பிரதோஷம்
பிரதோஷம் என்றதும் நம் நினைவுக்கு வருவது பிரதோஷ வேளையில் சிவாலயத்தில் நந்திக்கும் சிவபெருமானுக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள்தான். பிரதோஷ காலத்தில் நடைபெறும் இந்த வழிபாடுகளைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் ஆலயங்களில் குவிவார்கள். அதிலும் மகாபிரதோஷம் என்றால் அதன் மகிமைகள் சொல்லிலடங்காதவை. மகாபிரதோஷ வழிபாடு நம் துன்பங்கள் அனைத்தையும் நீக்கும் என்பது நம்பிக்கை. குறிப்பாக, சனி தோஷத்தினால் ஏற்படும் துன்பங்களுக்கு மகாபிரதோஷம் மாமருந்தாகும் என்பதால் அந்த நாளில் வழிபாடு செய்வதன் முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
பிரதோஷம்
மகாபிரதோஷ மகிமைகள்
சனிக்கிழமையுடன் திரயோதசி திதி இணைந்து வரும் நாளையே சனி மகா பிரதோஷம் என்கிறோம். தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளியான ஆலகால விஷத்தை அருந்திய இறைவன், அந்த விஷத்தின் நச்சுத் தன்மை தீர்ந்ததும் ஆனந்தத் தாண்டவம் ஆடி தேவர்களுக்கு அருள்புரிந்த வேளை ஒரு சனிக்கிழமை திரயோதசி திதி என்பதால் சனிக்கிழமை அன்று வரும் மகாபிரதோஷம் சிறப்புடையது.
சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6 வரையுள்ள காலம் சூரியன் மற்றும் சுக்கிர ஓரையில் அமையும். இந்த நேரம் வெற்றி தரும் முகூர்த்தத்தைக் குறிக்கின்ற ஒரு நேரமாக உள்ளது. சிவபெருமானைக் குறிப்பிடுகின்ற சூரிய ஓரையில் தொடங்கி, அம்பாளைக் குறிக்கின்ற சுக்கிரவேளையில் நிறைவுபெறும் பிரதோஷ பூஜையில் மகாலட்சுமியின் ஆசிகள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதால், சனி மகா பிரதோஷம் மிகவும் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.
ஒரு சில ஜாதகங்கள் சூரியன் மற்றும் சுக்கிரனின் பலன்களைப் பரிபூரணமாகப் பெறமுடியாதபடி கிரக அமைப்புகளைக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஜாதகக் காரர்கள் தவறாமல் வழிபட வேண்டிய பிரதோஷம் சனி மகாபிரதோஷம்.
ஆலய தரிசனம் மிகவும் விசேஷமானது. ஆலயத்தில் அமையும் பாசிட்டிவ் அதிர்வுகள் உடலுக்கும் உள்ளத்துக்கும் வலிமை சேர்ப்பவை. இறைவனை வழிபட அந்தச் சூழ்நிலை மிகவும் உகந்ததாக அமையும். பிரதோஷ வேளையில் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சந்நிதியில் தேவர்கள் அனைவரும் எழுந்தருளி வழிபடுவர் என்பது ஐதிகம். எனவே, அந்த நேரத்தில் நாமும் வழிபாடுகள் செய்தால் வேண்டும் வரம் கிடைக்கும் என்று நம்புகிறோம். ஆனால், தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையால் ஆலயம் சென்று தொழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப் பட்ட தருணங்களில் மகாபிரதோஷம் போன்ற மகிமை நிறைந்த நாள்களில் வீட்டிலிருந்தே சிவபெருமானை வழிபட்டு வேண்டும் வரம் பெற முடியும்.
சிவபுராண மகிமைகள்
பிரதோஷ விரதம்
பிரதோஷ தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடி சிவனை நினைத்துத் திருநீறணிந்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும். அதன் பின் சிவபெருமானைத் துதிக்க முன்னோர்கள் அருளிச்செய்திருக்கும் ஸ்தோத்திர மாலைகளைப் படிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மாணிக்க வாசகர் அருளியிருக்கும் சிவபுராணம் மிகவும் முக்கியமானது.
சிவபுராணம் வேதத்தின் சாரம். வேதத்தின் பாகமான ஶ்ரீருத்ரம் சொல்லும் அரும்பெரும் தத்துவங்களைத் தொகுத்து எளிய தமிழில் நமக்கு மாணிக்க வாசகர் அருளிய பதிகம். மாணிக்க வாசகர் குதிரை வாங்குவதற்காகப் பெரும்பொருளோடு செல்லும் வழியில் அவரை ஆட்கொள்ள இறைவன் திருவுளம் கொண்டார். திருப்பெருந்துறை யில் ஒரு துறவியின் தோற்றத்தில் இறைவன் அமர்ந்திருக்கிறார். அவரைக் கண்டதும் மனம் அவர்பால் ஈர்க்கப்படுவதைக் கண்ட வாதவூரார் அவர் திருவடிகளைச் சரணடைந்தார்.
திருவடிகளைப் பற்றிய கணத்தில் ஞானத்தின் உச்சத்தை அடைந்தார் மாணிக்கவாசகர்.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
என்று பாடுகிறார்.
பிரதோஷம்!
தன் முற்பிறவியின் தன்மைகளை அறிந்தும் அவற்றிலிருந்து தப்புவிக்கும் உபாயமாகக் குருவின் திருவடிகளைக் குறிப்பிட்டு சிவபெருமானைப் போற்றுகிறார்.
சிவபுராணத்தை தினமுமே பாராயணம் செய்ய வேண்டும். சிவபுராணம் பாராயணம் செய்தால் நான்கு வேதங்களையும் பாராயணம் செய்த பலன் கிடைக்கும். நித்திய பாராயணம் செய்ய வேண்டிய சிவபுராணத்தை குறைந்தபட்சம் பிரதோஷ நாள்களிலாவது செய்ய வேண்டும். 'சிவபுராணத்தைப் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து' என்கிறார் திருவாதவூரார்.
இத்தகைய சிறப்புகளை உடைய சிவபுராணத்தை மகாபிரதோஷ தினத்தில் மகா பிரதோஷ வேளையில் பாராயணம் செய்ய மனக்குறைகள் நீங்கி நல்லருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பிரதோஷம்
பிரதோஷ பூஜை
மகாபிரதோஷ தினத்தன்று நாள் முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் சிவபூஜை செய்ய வேண்டும். பிரதோஷ வேளையில் சிவபூஜை செய்வதற்கு முன்பாக நீராடி பூஜையைத் தொடங்க வேண்டும்.
சிவபெருமானின் திருவுருவப் படம் அல்லது லிங்கத்துக்கு போற்றித் திருத்தாண்டகம் வாசித்து அர்ச்சனை செய்யலாம். மேலும் லிங்காஷ்டகம், கோளறு பதிகங்கள் பாடி சிவனைத் துதிக்க வேண்டும். சுவாமிக்கு வீட்டிலேயே செய்த ஏதேனும் ஒரு பிரசாதத்தை நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு எளிமையாக சிவபூஜை செய்து பிரதோஷ விரதத்தைப் பூர்த்தி செய்யலாம்.
நன்றி
இனியகாலைவணக்கம் வாழ்கவளமுடன்
No comments:
Post a Comment