கர்ம வினை தீர்க்கும் வைரவன் கோவில் - தஞ்சாவூர்...!
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ளது வைரவன் கோவில். இந்த கோவில் பைரவரின் வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தென் கயிலாயம் என்று அழைக்கப்படுவது திருவையாறு. இங்கிருந்து சுவாமி மலைக்கு சிவபெருமான் புறப்பட்டார்.
‘ஓம்’ என்னும் பிரணவத்தின் உட்கருத்தை உபதேசமாக பெறுவதற்காகத் தான், சிவபெருமான் இந்தப் பயணத்தை மேற்கொண்டார். அவரோடு மற்ற தெய்வங்களும் புறப்பட்டார்கள்.
வழியில் வைரவன் கோவில் என்னும் தலம் வந்த போது, பைரவரிடம் அங்கேயே தங்கியிருந்து அருள்புரியும் படி சிவபெருமான் கட்டளையிட்டார்.
அதன்படி பைரவர், வைரவன் கோவில் தலத்தில் காவிரி நதியின் வடகரையில் தெற்கு நோக்கி அமர்ந்தார்.
பழமையான இந்த ஆலயத்தின் வலதுபுறம் ஒரு வாய்க்கால் உத்திரவாகினியாக ஓடுகிறது.
பைரவர் நோக்கிய தெற்கு முகத்தில் மயானம் உள்ளது. இது காசிக்கு சமமான பெருமையைப் பெற்ற இடமாகும்.
முன் முகப்பைத் தாண்டியதும் விசாலமான மகா மண்டபம் உள்ளது. நடுவே நந்தியம்பெருமான் வீற்றிருக்கிறார்.
அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை அடுத்து கருவறை உள்ளது. காசியில் உள்ள கால பைரவரின் அத்தனை சக்திகளையும் உள்ளடக்கியவராக இங்குள்ள பைரவர் அருள்கிறார்.
சிவபெருமானால் ஸ்தாபிதம் செய்யப்பட்ட இத்தல கால பைரவருக்கு, ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமியிலும் அர்த்த ஜாமத்தில் உலக நலன் கருதி சுவர்ண ஆகர்ஷண பைரவ மூலமந்திரம் ஜபித்து சிறப்பு ஹோமம் நடைபெறுகிறது.
அத்துடன் அன்று 108 வலம்புரி சங்காபிஷேகமும் கலசாபிஷேகமும் நடக்கிறது. இந்த ஹோமத்தில் கலந்து கொண்டு அர்த்த ஜாமத்தில் காலபைரவரை வழிபட அஷ்டலட்சுமிகளின் ஆசியும், கால பைரவரின் வரங்களும் ஒருங்கே கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள்.
இந்த கால பைரவரை அஷ்டமி திதியிலும், திருவாதிரை நட்சத்திரத்திலும் ஞாயிறு மற்றும் வியாழக் கிழமை உச்சி காலத்திலும், ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களின் ராகு காலத்திலும் வணங்குவது நல்ல பலனைத் தரும்.
நவக்கிரகங்களை தன்னுடைய சரீரத்தின் சிரம் முதல் பாதம் வரை உள்ளடக்கியவர் கால பைரவர். எனவே இவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும் நவக்கிர கங்களின் தோஷங்களை நிவர்த்தியாக்கும் பூஜைக்கு நிகரானதாகும்.
ராகுகால நேரத்தில் பைரவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொண்டு, அவரை வணங்கினால் பல நன்மைகள் கிடைக்கும்.
வர வேண்டிய பணம் வந்து சேரும். தர வேண்டிய பணத்தை திருப்பித் தர வேண்டிய சூழ்நிலை உருவாகும். சனியின் தாக்கம் தீரும். கடுமையான கர்மவினைகள் தீர்ந்து விடும். திருமண தடைகள் விலகும். புத்திரபாக்கியம் கிட்டும்.
பைரவரை பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் தீரும்.
பஞ்சதீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், பசு- நெய் ஆகியவை ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும்.
அகல் விளக்கில் ஏற்றலாம். ஒன்றிலிருந்து ஒன்றை ஏற்றாமல் தனித்தனி தீபமாக ஏற்றி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் நிறைவேறும்.
மேலும் அஷ்டமி நாளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வங்களைப் பெறலாம்.
இந்த ஆலயம் காலை 11 மணி முதல் 12 மணி வரையிலும், ஞாயிறு மட்டும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு- கும்பகோணம் சாலையில் திருவையாறில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது வைரவன் கோவில். இந்த சிற்றூரில் சாலை ஓரத்திலேயே ஆலயம் இருக்கிறது. பஸ் வசதிகள் உள்ளன.
No comments:
Post a Comment