Thursday, June 29, 2023

தன் பக்தன் பாண்டிய மன்னன் கால் மாறி ஆடிய ஆருத்ர நாயகனின் மதுரை வெள்ளியம்பல தரிசனம்.

உலகிலேயே வலது பாதம் தூக்கி ஆடும் நடராஜர்
தன் பக்தன் பாண்டிய மன்னன்  கால் மாறி ஆடிய ஆருத்ர நாயகனின் மதுரை வெள்ளியம்பல தரிசனம்.

பக்தருக்காகப் பாதம் மாற்றி ஆடிய பரமனின் ஆனி அபிசேகம் .

தில்லை அம்பல நடராஜர்  இடதுகாலைத் தூக்கி ஆனந்த நடனமிடும் திருகாட்சியை சிதம்பரம் திருக்கோயிலில் கண்டு மெய்சிலிர்த்து மகிழ்ந்திருப்போம். பொதுவாகவே நடராஜர் எல்லாத் திருத் தலங்களிலும் இதேபோன்றுதான் காட்சியளிக்கிறார். இந்த நினைப்போடு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் செல்பவர்களை நடராஜர் சற்று வித்தியாசமாக வரவேற்கிறார். 

ஆமாம், இந்தத் தலத்தில் அவர் வலதுகாலைத் தூக்கி களிநடனம் புரிகிறார். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வெள்ளியம்பலத்தில் இவ்வாறு அவர் வித்தியாச கோலம் காட்டுவதன் அடிப்படை என்ன? நடராஜர் ஐந்து நடன சபைகளில் திருநடனம் புரிகிறார். சிதம்பரத்தில்  பொன்னம்பல சபையில் இவர் ஆனந்தத்தாண்டவம் ஆடி பக்தர்களை மகிழ்விக்கிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் இருப்பது வெள்ளியம்பலம். இங்கு அவர் ஆடுவது சந்தியா தாண்டவம். திருநெல்வேலியில் இருப்பது தாமிரசபை. 

இங்கு ஆடுவது முனி தாண்டவம். குற்றாலத்தில் இருப்பது சித்திரசபை. இங்கு அவர் ஆடுவது திரிபுரதாண்டவம். திருவாலங்காட்டில் இருப்பது ரத்தினசபை. இங்கு ஆடுவது காளிதாண்டவம். இந்த ஐந்து நடனசபைகளில் மதுரையில் மட்டும் நடராஜர் இடது கால் ஊன்றி வலது கால் தூக்கி சந்தியா தாண்டவம் ஆடுகிறார். இந்த நிகழ்ச்சியை பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற்புராணத்தில் 24வது படலமாக இடம் பெற்றிருக்கிறது.

இப்படி புராணத்திலேயே விவரிக்கப்படும் வகையில் நடராஜர் கால் மாறி ஆடியதன் காரணம்தான் என்ன? மதுரையில் மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த தெய்வீகத் திருவிழாவில் தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் பங்கேற்றனர். தெய்வீகத் தம்பதியின் அருள் வேண்டி காத்திருந்தனர். திருமண வைபவம் முடிந்து அனைவரையும் உணவருந்த வருமாறு சுந்தரேஸ்வரரும், அன்னை மீனாட்சியும் அனைவரையும் அழைத்தனர். 

அப்போது பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் ஈசனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தனர்: ‘ஐயனே, நாங்கள், தினமும் தங்களது பொன்னம்பல நடனத்தை தரிசித்த பிறகுதான் உணவு அருந்துவது வழக்கம்; அதனை இன்றும் கடைபிடிக்க விரும்புகிறோம், தாங்கள்தான் அருள்புரிய வேண்டும்’ இதை கேட்ட இறைவன், அவர்களின் நியமத்தைக் காக்க விரும்பினார். அதேசமயம் அவர்களை சிதம்பரத்திற்குச் சென்றுவரப் பணிக்கவும் அவர் விரும்பவில்லை. அவர்களிடமே சிதம்பரத்தை வரவழைக்க பெருங்கருணை கொண்டார். 

ஆமாம், மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலேயே தான் திருநடனம் புரிந்து அருள்பாலிக்க, இந்தத் தலத்திலேயே வெள்ளியம்பலத்தை ஏற்படுத்தினார்!  அந்த அம்பலத்தில் திருநடனமும் புரிந்தார். இறைவனின் திருநடனத்தை கண்ட பதஞ்சலியும் வியாக்ரபாதரும் பெருமகிழ்வடைந்து உணவு அருந்தினர். இந்த மதுரைப் பெருநகரை விக்ரம பாண்டியன் ஆட்சி புரிந்துவந்தான். அவனுடைய மகன் ராஜசேகர பாண்டியனுக்கு ஒரு குறை. 

ஆமாம், ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் 63 கலை களில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் மீதமுள்ள ஒரே கலையான நடனத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதிருந்தான். அதற்குக் காரணம், நடராஜப் பெருமான் ஆடும் கலையாயிற்றே அது. அதை எப்படி தான் கற்பது என்ற பக்தி மேலீடுதான். ஆனால், அவனுடைய சமகாலத்தவனான கரிகாற்சோழன், அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுத் தேர்ந்தவன் என்ற தகவல் ராஜசேகர பாண்டியனுக்குக் கிடைக்கிறது. 

உடனே இறைவனுக்கு உரியதான நாட்டியக் கலை, அவனது பக்தர்களும் கற்று மேன்மையுற வேண்டிய ஒன்றுதான் என்பதை உணர்ந்துகொண்டு, தானும் நடனம் கற்று அதில் முழுமையாக தேர்ச்சியும் பெற்றான். அப்படி தேர்ச்சி பெற்ற அவன், அந்தக் கலை எத்தகைய உடல் நலிவை, சோர்வைத் தருகிறது என்பதையும் அனுபவபூர்வமாக உணர்ந்தான். நிறைவாக, தான் கற்ற இந்த நாட்டியக் கலைக்கு இறைவனுடைய அருள் வேண்டும் என்பதால் மதுரை வெள்ளியம்பல நடராஜரிடம் ஆசீர்வாதம் பெற வந்தான். 

நடராஜரைப் பார்த்த அவன் அப்படியே திகைத்து நின்றான். நடனத்தை உடல் சோர்வளிக்கும் கலையாகத் தன் அனுபவத்தில் அறிந்திருந்த அவன், காலம் காலமாக வலக்காலை ஊன்றி இடக்காலைத் தூக்கி நடனமாடி கொண்டிருக்கும் நடராஜருக்கு எவ்வளவு துன்பமாக  இருக்கும் என நினைத்து மிகவும் வேதனையடைந்தான். ‘அடடா, அவரது வலதுகால்தான் எவ்வளவு வலிக்கும்’ என்று வருந்திய அவன், இதை யாரிடம் எப்படி கேட்பது என்று யோசித்தான்: ‘ஈசனிடமே நேரடியாக முறையிட்டுவிடலாமா?  

ஆனால் தேவர்கள், முனிவர்கள் என்று மேன்மக்கள் பலரும் இதைப் பற்றி சிந்திக்காதபோது நாம் சிவனிடம் கேட்பது அதிகப்பிரசங்கித்தனமாகாதா?’ இந்த சூழலில் சிவராத்திரி திருவிழா வந்தது. மன்னன் நான்கு கால பூஜை முடித்து விட்டு நடராஜரின் எதிரில் நின்றான்  ராஜசேகர பாண்டியன். இடது பாதம் தூக்கி வலது பாதத்தில் நின்றுகொண்டிருந்த ஈசனைப் பார்த்து கண்களில் நீர் பெருக்கினான். ‘இறைவா, உனக்குக் கால் வலிக்கிறதோ இல்லையோ, எனக்குப் பெரிதும் வலிக்கிறது. எனக்காக கால் மாறி ஆடக்கூடாதா?’ என்று மனம் உருக வேண்டினான். 

இறைவன், மன்னனை மேலும் சோதிக்கும் விதமாக சலனமின்றி நின்றிருந்தான். ‘அப்படி நீ கால் மாறி ஆடாவிட்டால், என் முன்னால் ஒரு கத்தியை நட்டுவைத்து அதன்மீது விழுந்து உயிர் துறப்பேன்,’ என்று மிரட்டலாய் மன்றாடினான் மன்னன். சற்றே கண்மூடி மீண்டும் திறந்தபோது அப்படியே மெய்சிலிர்த்துப் போனான். ஆமாம், பக்தனுக்காக இடது காலை ஊன்றி, வலது காலைத் தூக்கி ஆடிக்கொண்டிருந்தார் நடராஜப்பெருமான்! ‘எனக்காகக் கால் மாறி ஆடிய பெருமானே, இதே திருக்கோலத்தில் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் தந்தருள வேண்டும்,’  என்று நெகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டான் மன்னன். 

அன்றிலிருந்துதான் மதுரை வெள்ளியம்பல நடராஜர் கால் மாறி ஆடியபடி திவ்ய தரிசனம் அருள்கிறார். நடராஜரின் கால் மாறி ஆடிய இந்த சந்தியா தாண்டவம் பற்றி பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த வல்லாளசேன மன்னரின் ‘நைக்தி செப்பு பட்டய’த்தில் குறிப்பு காணப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த ஸ்ரீசைலம் கோயிலில், ஆனந்த தாண்டவத்தை போன்ற சந்தியாதாண்டவ சிற்பம் உள்ளது என்றும் தகவல்
உள்ளது. 

நடராஜப் பெருமான் இவ்வாறு ஆடிக்கொண்டே இருப்பதால் தான் உலகத்தின் இயக்கம் இயற்கையை ஒட்டி இயல்பாக இருக்கிறது. இந்த நடராஜருக்கு  நிகழ்த்தப்படும் ஆனி மாத திருமஞ்சனம் மிகச் சிறப்பான ஒன்று. தேவர்களின் பகல்பொழுதாகக் கருதப்படும் காலகட்டத்தில் கடைசி பகுதிதான் ஆனி மாதம். இந்த மாத உத்திர நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு மாலை நேர பூஜை செய்வதாக ஐதீகம். அப்போது சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 
 வெம்மை மிகுந்த சுடலையின் சூடான சாம்பலை திருமேனியில் தரித்து, எப்போதும் திருக்கரத்தில் அக்னியையும் ஏந்தியிருப்பதால் நடராஜர்  கடுமையான வெப்பத்தால் சூழப்பட்டிருக்கிறார். இந்த வெப்பத்தை தணிக்க வருடத்திற்கு ஆறுமுறை அவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஆனி திருமஞ்சனம் தனிச் சிறப்புடையது.

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...