Saturday, July 29, 2023

74 தேவார பாடல் பெற்ற சிவாலயங்கள்...**தொன்டை நாட்டு ஸ்தலம்...*

*274 தேவார பாடல் பெற்ற சிவாலயங்கள்...*
*தொன்டை நாட்டு ஸ்தலம்...*

*சென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் நகரில் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.*

*இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.*
*சென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் நகரில் ஆட்சீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.*

*கோவில் வரலாறு :*

*பிரம்மாவிடம் வரம் பெற்ற தாரகன், கமலாட்சன், வித்வன்மாலி ஆகிய திரிபுர (மூன்று) அசுரர்கள் சேர்ந்து கொண்டு தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அசுரர்களை எதிர்க்க முடியாத தேவர்கள், அவர்களை அழித்து தங்களை காக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினர்.*

*தேவர்களுக்கு மனம் இரங்கிய சிவன், வானுலகு மற்றும் பாதாள உலகை இணைத்துத் தேராக்கி, அதில் ஏறி அசுரர்களை அழிக்கச் சென்றார். எந்த ஒரு செயலை செய்யும் முன்பாக முழு முதற்கடவுளான விநாயகரை வணங்கிவிட்டு அல்லது மனதில் நினைத்துவிட்டோ தான் செய்ய வேண்டும் என்பது நியதி.*

*சிவனுக்கும் இந்த நியதி பொருந்தும். ஆனால் அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற வேகத்தில் விநாயகரை நினைக்காமல் சென்றார் சிவன். அவருடன் சென்ற தேவர்களும், ‘சிவனே நம்முடன் இருக்கும்போது, வேறென்ன துணை வேண்டும்’ என்ற எண்ணத்தில் அவரை வணங்காமல் சென்றனர்.*
*கோபம் கொண்ட விநாயகர், தேரின் அச்சை முறித்து, சிவனை செல்ல விடாமல் தடுத்து விட்டார். தேர் அங்கேயே நின்றது.*

*இது விநாயகரின் செயல்தான் என உணர்ந்த சிவன், அவரை மனதில் நினைத்து, செல்லும் செயல் சிறப்பாய் நடந்திடக் காவலனாய் இருக்கும்படி வேண்டினார். தந்தை சொல்கேட்ட விநாயகர், தேர் அச்சை சரியாக்கினார்.*

*பின் சிவன் திரிபுர அசுரர்களை அழித்தார். தேர் அச்சு இற்று(முறிந்து) நின்ற இடம் என்பதால் இத்தலம் ‘அச்சு இறு பாகம்’ என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் ‘அச்சிறுப்பாக்கம்’ என்றானது. சிவன் ‘அட்சீஸ்வரர்’ என்றும், ‘ஆட்சிபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். கண்ணுவ முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இங்கு வழிபட்டுள்ளனர்.*

*பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று கொண்டிருந்தபோது, இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது. பணியாளர்கள் சக்கரத்தை சரி செய்து கொண்டிருந்த போது, தங்க நிறமான உடும்பு ஒன்று சென்றதை மன்னன் கண்டான். தங்கத்தால் ஜொலித்த அந்த உடும்பைப் பிடிக்க மன்னன் சென்றான்.*

 *உடும்போ, ஒரு சரக்கொன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது. காவலர்கள் மரத்தை வெட்டியபோது, ரத்தம் வெளிப்பட்டது. உடும்பு வெட்டுப்பட்டதாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில் தோண்டிப் பார்த்தான். எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டும் அகப்படவில்லை.*

 *அன்றிரவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன், உடும்பு மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி, இவ்விடத்தில் சுயம்புவாக எழுந்தருளி இருப்பதை உணர்த்தினார்.*
*சிவபெருமானுக்கு அங்கேயே கோவில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன்.*

*அப்போது அங்கு ‘திரிநேத்ரதாரி’ எனும் மூன்று கண்களை உடைய முனிவர் ஒருவர் வந்தார். தீவிர சிவபக்தரான அவரைப் பற்றி அறிந்து கொண்ட மன்னன், இத்தலத்தில் சிவாலயம் கட்டித்தரும்படி கூறிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந்தான்.*

 நெடுநாட்கள் கழித்து மன்னன் திரும்பி வந்தபோது கோவில் மத்தியில் நந்தி, கொடி மரத்துடன் ஆட்சிபுரீஸ்வரருக்கு ஒரு கருவறையும், அவருக்கு வலது பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீஸ்வரருக்கு ஒரு மூலஸ்தானமும் கட்டி வைத்திருந்தார். (இக்கருவறையில் லிங்கத்திற்கு பின்புறம் பார்வதியுடன், சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்).
இதற்கு விளக்கம் புரியாத மன்னன் காரணம் கேட்டான். ‘உமை ஆட்சி செய்த ஈஸ்வரனே, உடும்பு வடிவாகி என்னையும் ஆட்சி செய்தார். 

எனவே, உங்களுக்கு காட்சி தந்த ‘உமை ஆட்சீஸ்வரருக்கு’ பிரதான வாசல் கொண்டு ஒரு கருவறையும், ‘எமை ஆட்சி செய்த ஈஸ்வரருக்கு’ பிரதான கருவறையுமாக வைத்து கோவில் கட்டினேன்’ என்றார் திரிநேத்ரதாரி. அதனை மன்னனும் ஏற்றுக்கொண்டான். சுயம்பு லிங்கமாக இருக்கும் எமையாட்சீஸ்வரரே இங்கு பிரதானம்.

 திருவிழாக்களும் இவருக்கே நடக்கிறது. ராஜகோபுரத்தில் இருந்து கொடிமரமும், நந்தியும் விலகியே இருக்கிறது. பிரகாரத்தில் உள்ள சரக்கொன்றை மரத்தின் அடியில் “கொன்றையடியீஸ்வரர்” சன்னிதியில், சிவனை வணங்கிய கோலத்தில் திரிநேத்ரதாரி இருக்கிறார். 

இம்மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது மட்டும் பூக்கள் மலர்வது சிறப்பு.
சிவனின் தேர் அச்சை முறித்த விநாயகர் “அச்சுமுறி விநாயகராக” கோவிலுக்கு வெளியே தனிச் சன்னிதியில் மேற்கு திசை பார்த்து அமர்ந்திருக்கிறார்.

 அருணகிரிநாதர், இவ்விநாயகரை தரிசித்து விட்டு, ‘அச்சிறு பொடி செய்த’ என்று இவரது சிறப்புக்களை பாடித்தான் திருப்புகழை தொடங்கியுள்ளார்.

புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொண்டால் அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை. சிவனின் பிற பெயர்கள் அச்சேஸ்வரர், அச்சுகொண்டருளிய தேவர் என்பதாகும். ஐந்து நிலை பிரகாரத்தில் சீனிவாசர், அலமேலு மங்கைத்தாயார் தனிச்சன்னிதியில் இருக்கின்றனர்.

 ஆட்சிபுரீஸ்வரர், உமை ஆட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். இளங்கிளி அம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள்.

இத்தல சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தை திருநாவுக்கரசர் தனது சேத்திரக் கோவையில் குறிப்பிட்டிருக்கிறார்.

 அகத்தியருக்கு இத்தலத்திலும் சிவன் தனது கயிலாய திருமணக் காட்சியை காட்டியருளியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் அவருக்கு துவாரபாலகர்களாக இருக்கின்றனர்.

 உமையாட்சீஸ்வரருக்கு முன்னே தியான நந்தி இருக்கிறது. தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 29-வது தலம். சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், பவுர்ணமியில் விசேஷ பூஜைகள் நடக்கிறது.

 ஆட்சிபுரீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டால் ஆட்சி செய்யும் வாய்ப்பு, ஆளுமைத் திறன், பதவி உயர்வு கிடைக்கும் என்பதும், சுவாமி அட்சரம் எனும் எழுத்தின் வடிவமாக இருப்பதால் கல்வி, வேள்விகளில் சிறக்கலாம் என்பதும் நம்பிக்கை. இங்கு அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. 

இதில் கலந்துகொண்டால் தோஷங்கள், ஜென்ம வினைகள், தொழில் தடைகள், மனக் குழப்பங்கள் நீங்கும் என நம்புகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூைஜகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம் : 

சென்னை - திருச்சி சாலையில் மேல்மருவத்தூருக்கு அருகே அச்சிறுப்பாக்கம் உள்ளது. செங்கல்பட்டில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

 சென்னையில் இருந்து 100 கி.மீ., காஞ்சீபுரத்தில் இருந்து 70 கி.மீ., செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது. மேல்மருவத் தூரில் இருந்து ஆட்டோவில் செல்லலாம்.
 
*தொடரும்*

*🌷வாழ்க வளமுடன்🌷* 

*🙏ஓம் நமசிவாய🙏*

No comments:

Post a Comment

Followers

மாங்கல்ய தோஷம் களத்திரதோஷம் போக்கும் சோம வார விரதம்..

சோம வார விரதம் பற்றிய பதிவுகள் : சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பி...