Wednesday, July 19, 2023

ஆடி மாத அம்மன் சிறப்புகள் !

ஆடி மாத சிறப்புகள் !
ஆடி மாதத்தில் இருந்து தட்சிணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி மாதம் வரை ஆறு மாதம் தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவு நேரமாகும்.

ஆடி மாதம்  ஜூலை 17-07-2022, சுபகிருது வருடம், ஆடி 01, ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. ஆடி முதல் நாள் தொடங்கி கடைசி நாள் வரையும் கொண்டாட்டங்க ளுக்குக் குறைவிருக்காது.

சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார்.

எனவேதான் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம். சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம்.

ஆடியில் நல்ல மழை வேண்டியும் உடல் நலம் பெறவும், நோய்கள் பரவாமல் இருக்கவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தினார்கள்.

ஆடி பிறப்பே இறை வழிபாட்டுக்கு உரிய நாள். ஆடி செவ்வாய் தேடிக்குளி என்பார்கள். ஆடியில், செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும்.

அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள்.

ஆடி வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்க வும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர். ஆடி ஞாயிறன்று அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வணங்குவார்கள். நோய்கள் நீங்கவும் ஆரோக்கியம் அதிகரிக் கவும் கூழ் வார்த்து வழிபடுகின்றனர்.

ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு திதி கொடுக்க சிறப்பான நாளாகும். ஆடி அமாவாசையை பித்ருக்கள் தினமாகக் கடைபிடித்துஅன்று இறைவனடி சேர்ந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் நிறைவேற்றி னால், ஆறு மாதம் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும்.

சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர் கள் அமாவாசை, தினங்களில் வழிபாடு செய்வது சிறப்பாகும். தட்சிணாயன காலத்தில் வரும் முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசை இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆடி மாதத்தில்தான் மழை அதிகரித்து ஆறுகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி வரும். அப்படி ஆடியில் காவிரி பெருக் கெடுத்து வருவதைத்தான் மக்கள் ஆடிப் பெருக்கு என்று கொண்டாடுகிறார்கள். காவிரி கரையோரங்களில் இந்த விழா களைகட்டும். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது வழக்கமாக உள்ளது.

கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது.
உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள். ஆடி மாதத்தில் இருந்து தொடங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாதக் கார்த்திகையில் விரதத்தை முடிக்கலாம்.

ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். பூமா தேவி யே ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள் என்கின்றன புராணங்கள்.
ஆடிப்பூரம் அம்பாளுக்குரிய விசேஷ தினமாகும். ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. உலக மக்களை காப்பதற்காக அம்பாள், சக்தியாக உருவெடுத்த தினம் ஆடிப்பூரம் என்று கூறப்படுகிறது. சைவ, வைணவ ஆலயங்களில் ஆடிப்பூரம் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஆடி மாத வளர்பிறை பஞ்சமி நாக பஞ்சமி யாகவும், கருட பஞ்சமியாகவும் அனுஷ்டிக் கப்படுகிறது. இந்த ஆண்டு நாக பஞ்சமி நாளில் நாக தோஷம் உள்ளவர்கள் ஆலயங்களில் நாக பிரதிஷ்டை செய்து புற்றுக்கு பால் ஊற்றி வழிபாடுவார்கள். மறுநாள் பட்சி ராஜன் கருடாழ்வார் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில் தான் ஸ்வர்ண கவுரி விரதமும் கடைபிடிக் கப்படுகிறது.

ஆடி அமாவாசை போல ஆடி பவுர்ணமியும் சிறப்பான நாளாகும். இந்த நாளில்தான் நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் ஆடித்தபசு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

ஆடி மாதத்தின் கடைசி நாளில் நம் முன்னோர்களுக்குப் பிடித்தமானவற்றை வைத்து வணங்கி, நம் கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். ஆடி மாதம் கடைசி நாளில் மாலை வேளையில் இந்த பூஜையை செய்ய வேண்டும். முன்னோர்கள் நம் படையலை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment

Followers

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உண்டான அதிதேவதைகள்.

நட்சத்திர தெய்வங்கள் பற்றி அறிவோம் நமது நட்சத்திரத்திற்கான அதிதேவதைகள் யாரென்று அறிந்து அவர்களை வழிபடுவதால் வாழ்க்கையில் இன்னல்க...