Thursday, August 17, 2023

தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத #திருவெண்காடு #அகோரமூர்த்தி#அகோரசிவன் வரலாறு:

அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் பரம்பொருள் ஈசனின் 
(சிவபெருமானின்)
64 சிவ வடிவங்களில் ஒன்றான 
தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத #திருவெண்காடு #அகோரமூர்த்தி
#அகோரசிவன் வரலாறு:
தமிழகக் கோவில் மரபுகளில் இசைக்குத் தனி இடம் உண்டு. ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனி இசை மரபு உள்ளது. உதாரணமாக #திருவெண்காடு கோவிலில் சுவாமி புறப்பாட்டின் போது முதலில் மோகனம் வாசிக்கப்பட்டு அதன்பிறகே #மல்லாரி வாசிக்கப்படும். அந்தக் கோவிலில் உள்ள அகோரமூர்த்திக்கு #மோகனம் உகந்த ராகம்.

ஆகவே இப்படி ஒரு மரபு அங்கே பின்பற்றப்படுகிறது. அதே காரணத்தால் அந்த ஊரில் வேறு எந்த இடத்திலும் மோகன ராகம் பாடப்படுவதுமில்லை வாசிக்கப்படுவதும் இல்லை.

ஹர ஹர...திருவெண்காட்டுக்கோவிலில் ஸ்ரீ அகோரமூர்த்தி புறப்படும் போது மல்லாரியில் தேர் மல்லாரி  வாசிக்கப்பெறுகின்றது. திருச்செங்காட்டாங்குடித் திருவிழாவில் சுவாமி பிக்ஷாடனராக எழுந்தருளும் போது இரண்டே அடிகளைக் கொண்ட மல்லாரி ஒன்று, கண்டகதியில் இசைக்கப்பெறும்

திருவெண்காடு தலத்தின் தனிச்சிறப்பு அகோரசிவன் மூர்த்தியாவர். இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது.

சிவபெருமானின் பஞ்சப்பிரம மூர்த்தங்களுள் தென்முகமாக இருப்பது அகோரமூர்த்தியாவர். சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களுள் அகோர மூர்த்தி 43-வது மூர்த்தியாவார். இத்திருவுருவம் இத்தலத்தில் மட்டுமே உள்ளது. இந்தியாவில் வேறு எந்த சிவாலயத்திலும் இத்தகைய அகோர மூர்த்தியை காண இயலாது. 

இப்பெரிய கோயிலின் மேலை பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சன்னதியாக தன் அருள் மாட்சியைத் துலங்க வைத்துக் கொண்டிருக்கிறார் அகோர சிவம். இவரை அடுத்துள்ள சன்னதியில் இப்பெருமானது உற்சவ படிமத்தைக் காணலாம். பக்தர்களைக் காக்க இதோ புறப்பட்டு விட்டேன்! என்று கூறுவார் போன்றும் - அருள் சிறக்க ஓடி வருவார் போன்றும் அமைந்துள்ளது. பெருமானின் முன்காலும், இடது காலும், உருவத்தில் கொஞ்சம் கடுமை காட்டுகிறார் தான் என்றாலும், அருட்கண்ணோட்டத்தில் இவரே சிறந்த வரப்பிரசாதி.

அகோர மூர்த்தியின் திருவுருவைக் காணக்கண்கோடி வேண்டும். இவர் கரிய திருமேனி உடையவர். இவர் இடது காலை முன்வைத்து வலது கால் காட்டை விரலையும் அடுத்த விரலையும் ஊன்றி நடக்கிற கோலத்தில் உள்ளார். எட்டுக்கரங்களும் ஏழு ஆயுதங்களும் உடைய வீரக்கோலம் பூண்டுள்ளார். கைகளில் வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், கேடயம், மணி, திரிசூலம் ஆகிய ஆயுதங்களை தாங்கியுள்ளார். 

சிவந்த ஆடைகளை அணிந்தும், தீப்பிழம்பு போன்ற எரிசிகைகளுடன் நெற்றிக்கண் நெருப்பைக்கக்க கோரைப்பற்களுடன், பதினான்கு நாகங்கள் திருமேனியில் பூண்டு மணிமாலை அணி செய்யக் கம்பீரமாகக் காட்சி தருகிறார். #அப்பர் சுவாமிகள் இத்தலத்தைப் பற்றிப் பாடிய “#தூண்டு_சுடர்_மேனி” எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தில் சொல்லப்பட்டவை அனைத்தும் அகோரமூர்த்தியின் திருவுருவத்தில் காணலாம்.

இருபத்தெட்டு ஆகமங்களில் உத்தர காரண ஆகமத்தில் இவரை அகோராஸ்திர மூர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. தட்ச யாகத்தை அழிக்க சிவபெருமானால் நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட அகோர வீரபத்திரர் வேறு. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அகோரமூர்த்தி வேறு ஆவார். இரு அம்சத்துக்கும் உள்ள வித்தியாசத்தை  தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

அகோரமூர்த்தி எப்படி உருவானார் என்ற வரலாறு வருமாறு:- 

#மருத்துவாசுரன் என்னும் அசுரன் பிரம்ம தேவரிடம் பெற்ற வரத்தால் தேவர்களுக்கு பல துன்பம் விளைத்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் திருவெண்காட்டில் வேற்றுருவில் வாழ்ந்து வந்தனர். அசுரன் வெண்காட்டிற்கும் வந்து போர் செய்ய, வெண்காட்டீசர் முதலில் நந்தியை ஏவினார். அசுரன் நந்தியிடம் தோற்றுப்பின் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து, சூலாயுதத்தை வேண்டிப் பெற்று மீண்டும் போருக்கு வந்து நந்தியை சூலத்தால் தாக்கி காயங்களை ஏற்படுத்தினார்.

இதுபற்றி நந்தி, திருவெண்காடரிடம் முறையிட, அவர் கோபம் கொண்டார். அப்போது அவருடைய ஐந்து முகங் களில் ஒன்றாகிய அகோர முகத்தினின்று அகோரமூர்த்தி தோன்றினார். அகோர உருவைக் கண்டமாத்திரத்திலேயே மருத்துவாசுரன் சரணாகதி அடைந்து தோத்திரம் செய்தான். சரணடைந்த மருத்துவாசுரனை அகோரமூர்த்தியின் காலடியில் காணலாம். காயம் பட்ட இடபதேவரை சுவேதாரண்யேசுவரர் ஆட்கொண்டார். இன்றும் இக்கோவிலின் நிருத்த மண்டபத்தில் சிலை வடிவில் இதை காணலாம். 

மாசி மாதம் கிருஷ்ணபட்சம் பிரதமை திதி, பூர நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 12.00 மணிக்கு அகோரமூர்த்தி தோன்றினார். இதே காலத்தில் ஆண்டுதோறும் அகோரமூர்த்தி மருத்துவாசுரனை அடக்கும் ஐந்தாம் திருவிழாவாக நடைபெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை இரவிலும் அகோரபூஜை நடைபெற்று வருகின்றது. கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமைகளில் மிக விசேஷமாக பூஜை நடைபெறுகின்றது. 

அகோர சிவமாம் அண்ணலின் சன்னதிக்கு எதிரே அமைந்த சன்னதி ஒன்றில் சுவேதமகாகாளி அழகெல்லாம் திரண்டு வீரக்கோலத்தில் அருட்பொலிவோடு ஐயனுக்கு ஏற்ற அம்மையாக வீற்றிருப்பதையும் காணலாம்.

திருவெண்காடு இத்தலத்துக்குரிய சிறப்பு மூர்த்தியாகிய அகோரமூர்த்தி நின்ற மேனியராய், சூலத்தை இருகைகளிலும் சாய்த்துப்பிடித்து, எண்கரங்களுடையவராய்ச் சற்றுத் தலைசாய்த்து, முன்பின்னாகத் திருவடிகளை வைத்து மிக்க அழகாக - உண்மையிலேயே அகோரராக - அற்புதமூர்த்தியாகக் காட்சி தருகின்றார். கண்களுக்குப் பெருவிருந்தாகக் காட்சிதரும் அகோரமூர்த்தியை விட்டுப் பிரிந்து வரவே மனமில்லை. சலந்தரன்மகன் மருத்துவன். இவன் இறைவனை நோக்கித்தவம் செய்தான். இறைவன் காட்சிதந்து சூலத்தைத்தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தி அருள் செய்தார். ஆனால் மருத்துவனோ அதைத் தேவர்களைத் தவம் செய்யவொட்டாதவாறு துன்புறுத்தப் பயன்படுத்தினான். இதை அறிந்த இறைவன் சினந்து நந்தியை அனுப்பினார். போர் தொடுக்கையில் மருத்துவன் மாயச் சூலத்தை அவர்மீது ஏவ, அச்சூலம் நந்தியின் உடலை ஒன்பது இடங்களில் துளைத்துவிட்டுப்போயிற்று. இஃதையறிந்து இறைவன் தாமே அகோரமூர்த்தியாக வடிவு கொண்டு வந்து அவனை அழித்தார் என்பது வரலாறு. அவ்வாறு அழித்தநாள் ஞாயிற்றக்கிழமை பூரநட்சத்திரம். (மாசி மகத்து மறுநாள்) இதனால் இன்றும் இத்திருக்கோயிலில் ஞாயிற்றக்கிழமைகளில் இரவு 10 மணிக்குமேல் (இரண்டாங்கால முடிவில்) அகோரமீர்த்திக்குச் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருவெண்காடு வருவோர், ஞாயிறு நாளாக அமைந்தால் அன்றிரவு தங்கி, ஆலயத்தில் இவ்வழிபாடு நடைபெறும் சரியான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொண்டு கட்டாயம் இவ்வழிப்பாட்டைத் தரிசிக்கவேண்டும். இவ்வரலாற்றையட்டிச் சுவாமி சந்நிதிக்கு எதிரில் வெளியே உள்ள நந்தியின் உடம்பில் ஒன்பது துவாரங்கள் இருப்பதை இன்றும் காணலாம்.

மூல அகோர மூர்த்தியின் பக்கத்தில் உற்சவ அகோர மூர்த்தி காட்சி தருகின்றார். அற்புதமான வேலைப்பாடு. காணக்காணத் தெவிடடவில்லை. திருவடியில் ஒருபுறம் மருத்துவன் இழிந்து தலைசாய்த்து விழும் அமைப்பும் மறுபுறம் நந்தியும் உள்ளது. காணத்தக்கது.

இவ்அகோர மூர்த்திக்கு இக்கோயிற் பெரவிழாவில் ஐந்தாம் நாள் அன்று சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு வீதிஉலா நிகழ்கிறது. இப்புறப்பாட்டின் போது (மாசிப்பூர அபிஷேகத்தின் போது) இம் மூர்த்திக்கு செய்யப்படும் சிறப்புக்கள் பலப்பல. ஆயிரம் புட்டிகள் பன்னீர் அபிஷேகம், எண்ணற்ற ரோஜா மாலைகள், புறப்பாட்டின் போது அடிக்கொரு பட்டு சார்த்தும் சிறப்பு முதலியனவாக எண்ணற்ற சிறப்புக்கள்.

நாடொறும் ஆறுகால வழிபாடுகள் சுவேதாரண்யேசுவரருக்கு காமிகாமத்தின்படியும் அகோர மூர்த்திக்கு காரணாகமத்தின் படியும் இங்குள்ள நடராசப் பெருமானுக்கு மகுடாகமத்தின்படியும் பூசைகள் நடைபெறுகின்றன.

அகோரமூர்த்தியின் சந்நிதியில் உங்கள் குறைகளை அவரிடம் சொல்லி மனதார வழிபட்டால், பித்ருக்கள் முதலான தோஷங்கள் விலகும். முன்னோர்களின் ஆசீர்வாதம் பரிபூரணமாகக் கிடைக்கப் பெறலாம். எதிரிகள் பலமிழப்பார்கள். எதிர்ப்புகள் அனைத்தும் விலகும். மனக்கசப்புகளும் மனக்கிலேசமும் நீங்கும்.

திருவெண்காடு திருத்தலத்தின் அகோர மூர்த்தி ரொம்பவே விசேஷமான மூர்த்தம். இவரை ஆத்மார்த்தமாக வணங்கி வழிபட்டு வந்தால், துஷ்ட குணங்களும் எண்ணங்களும் ஏற்படாது. நல்ல தர்ம சிந்தனைகள் பெருகும். முன் ஜென்ம வினைகள் அனைத்தும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

கண் திருஷ்டி, பிறரால் ஏவப்பட்ட இன்னல்கள், காரியத் தடைகள் போன்றவை விலக இவரை வழிபடுவது சிறப்பானது. அகோரமூர்த்தி வடிவில் உள்ள சிவனை வழிபடுவோருக்கு எப்போதும் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அவர் பொழியும் அருள் மழைக்கு எல்லையே இல்லை எனலாம்.

திருச்சிற்றம்பலம் 🙏🙇

No comments:

Post a Comment

Followers

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..

இந்தியாவில் அமைந்துள்ள புகழ்பெற்ற 51 மகாசக்தி பீடங்கள்..._ இந்த சக்தி பீடங்கள் இந்தியாவில் எங்கெங்கு அமைந்துள்ளன என்று பார்க்கலா...