Saturday, August 5, 2023

மீனாட்சி அன்னையின் பாதம் பணியுங்கள்!!வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுங்கள்!!!

மதுரை மீனாட்சி அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியம் பற்றி தெரியுமா?
பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருவார்.

சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி.. என மூன்று விதமாய் காட்சி தருவாள். 

அந்த வரிசையில், மதுரையில் மீனாட்சி அம்மன் மொத்தம் 8 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள்.

சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும். 

ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள்.

முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம்.

பக்தர்களும் அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்கி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல அதிசயங்கள் உள்ளது. 

மதுரையில் மீனாட்சி தினமும் 
8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள். 

இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு. 

அவை ..

திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி

ப்ராத சந்தியில் – பாலா
6 – 8 நாழிகை வரையில் – 

புவனேஸ்வரி
12 – 15 நாழிகை வரையில் – கெளரி

மத்யானத்தில் – சியாமளா

சாயரக்ஷையில் – மாதங்கி

அர்த்த ஜாமத்தில் – பஞ்சதசி

பள்ளியறைக்குப் போகையில் – ஷோடசி

அன்னைக்கு 5 கால பூஜைகள் நடக்கும்போது, மேலே சொன்ன ரூபங்களுக்கு ஏற்றவாறுதான் அலங்காரங்கள் செய்விக்கப்படும்.

காலையில் சின்னஞ்சிறு சிறுமி போன்றும், உச்சிக்காலத்தில் மடிசார் புடவை கட்டியும், மாலை நேரத்தில் வெள்ளிக் கவசமும், வெள்ளிக் கிரீடமும் அணிந்தும், இரவு அர்த்த ஜாமத்தில் வெண்பட்டு புடவை அணிந்தும் அன்னை காட்சி தருகிறாள். 

இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாகும். 

அன்னையின் இந்த ஒவ்வொரு அலங்கார காட்சியையும் காண கண்கோடி வேண்டும்.

*ஒரேநாளில் புவனேஷ்வரி,
கௌரி,சியாமளா,
மாதங்கி,பஞ்சதசி என அன்னையின் அத்தனை ரூபத்தினையும் தரிசிப்பவர்களும் மறுப்பிறப்பு கிடையாது என்பதே அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியமாகும்*

*வாழ்க்கையில் ஒரு முறையேனும் காணவேண்டிய அன்னை மீனாட்சியின் பள்ளியறை பூஜை*!

எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. 

இரவு அர்த்த ஜாமத்தில் 
மல்லிகை பூவால் கூடாரம் கண்டு, வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.

இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரது வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும்.

பாதுகைகள் வந்தபின் அன்னைக்கு விசேஷ ஹாரத்தி (மூக்குத்தி தீபாராதனை ) நடக்கிறது.

உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை.ஆகவே தான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க இயலும்.

அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்கு மிக அருகில் காட்டுவர்.

அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம். 

மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும்.

அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டுவிடுகிறது.

(மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும்)

இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார்.

அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த  பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டா காட்சியாகும் 

பள்ளியறை பூஜை சிவ – சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம். 

அதன் பின்னர் அம்பிகையின் சன்னதி மூடப்பட்டு பள்ளியறையில் பூஜை, பால், பழங்கள், பாடல்கள், வாத்ய இசை என்று சகல உபசாரங்களுடன் இரவு கோவில் நடை சார்த்தப்படுகிறது.

*மேலும் கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரித்தல் நல்ல பயனைக் கொடுக்கும் என்பதும் மீனாட்சி கோவிலில் மறைந்துள்ள பள்ளியறை பூஜை தரிசன ரகசியமாகும்*

குழந்தை பாக்கியம் இல்லாதோர்,
பிள்ளை வரம் வேண்டுவோர் கட்டாயம் காண வேண்டிய அன்னை மீனாட்சியின் தரிசனம்!

குழந்தை பாக்கியம் இல்லாதோர்,
பிள்ளை வரம் வேண்டுவோர் காலையில் மீனாட்சி அம்மனின் சின்னஞ்சிறு சிறுமி  அலங்காரத்துடன் நடக்கும் ஆராதனையை தரிசித்து மனமுருகி வேண்டினால் அன்னை சந்தான பாக்கிய பலனை கட்டாயம் தருவாள் .

வியாபாரத்தில் நஷ்டம் தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் காண வேண்டிய தரிசனம்.

வியாபார நஷ்டம்,தொழில் மற்றும் வேலையில் பிரச்சனை உள்ளவர்கள் அன்னையின் வைர கிரீட அலங்காரத்தினை கண்டு தரிசித்தால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் பெறலாம் 

வாழ்வில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய கோவில்களில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு முக்கிய இடமுண்டு…

இவையெல்லாவற்றையும்  
விட புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே அன்னை ஸ்ரீமீனாட்சியை *புவனேஷ்வரி*,
*கௌரி*,
*சியாமளா*,
*மாதங்கி*,
 *பஞ்சதசி* என எல்லா அலங்காரத்திலும்  தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அம்மனுக்கு தங்க கிரீடம், சுவாமிக்கு வைர பட்டை  பொங்கல், தமிழ் புத்தாண்டு, தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் மட்டும் அணிவிக்கப்படும். 

வழக்கமாக அம்மன் சன்னதியில் குங்குமம்தான் பக்தர்களுக்கு தருவார்கள்.  பள்ளியறை பூஜையின் போது, சுவாமி பாதம் அம்மன் சன்னதிக்கு வந்த பின், குங்குமத்திற்கு பதில் திருநீறு தருவர்.

மீனாட்சி அன்னையின் பாதம் பணியுங்கள்!!வாழ்வில் எல்லா வளங்களையும் பெறுங்கள்!!!

ஸ்ரீமீனாட்சி தாயே போற்றி!

🙏🙏🙏

No comments:

Post a Comment

Followers

மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..

_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறை...