Friday, September 1, 2023

ஐந்தெழுத்து என்றவுடன் நமக்கு நமசிவாய மந்திரம் நினைவிற்கு வரும்.



   ஐந்தெழுத்து என்றவுடன்  நமக்கு நமசிவாய மந்திரம் நினைவிற்கு வரும்.    1.நமசிவாய ,  2.சிவாயநம ,3.சிவய ,4.சிவ  இவை நான்குமே  முறையே  தூல ,சூக்கும,அதிசூக்கும, காரண  ஐந்தெழுத்து மந்திரம்  என ப்படும்.  
   ஆன்மாக்களின் பக்குவ நிலைகளுக்கு ஏற்ப உரிய குருவின் வழியே இம்மந்திரங்கள் சொல்ல அனுமதிக்கப்படும். 
   
"சி" என்பது கூட மந்திரம்தான். நாயோட்டு மந்திரம் அல்லது மகாகாரண  ஐய்ந்தெழுத்து மந்திரம் எனச் சொல்வர் .அதோடு சேர்த்து  மொத்தம் ஐந்து வகைப்படும்.

      வடமொழியில் ஆச்சார்ய பஞ்சாட்ச்சரம்   எனப்படுவதை  தமிழில் குருவைந்தெழுத்து என்பார்கள் .நம்து ஞான குரு அருளாளர்கள் சம்பந்தர் , நாவுக்கரசர்,  திருஆருரர் , மணிவாசகர் , தெய்வசேக்கிழார்...ஆவர்.

   இவர்கள் அனைவரின்  பெயர்களில்  உள்ள எழுத்துக்களின்  எண்ணிக்கை ஐந்துதான்.(மெய் எழுத்து கணக்கில் கொள்ளக்கூடாது என இலக்கண விதி )இவர்களது நாமம் குருவைந்தெழுத்து ஆகும்..இவர்கள் பெயர்களை ஜெபித்தால் கூட அதற்கு வலிமை உண்டு.
   
அப்பூதி அடிகள் நாவுக்கரசர் வணங்கியே முக்தி பெற்றார் என்பது நமக்குத் தெரியும்.

பெருமிழலை என்ற பெயரில் ஓர் ஊர். அவ்வூரில் ஒரு சிவனடியார் சிறப்பாக இருந்தார். குறும்பர் என்போர் இடையர் என்பர்.ஏனோ அவர் பெருமிழலைக் குறும்பர் என அழைக்கப்பட்டார்.

அவர் சிவன் அடியார் மீது எல்லையில்லா அன்பு கொண்டவர் .அவரது அன்பு அடியார்கள்பால்  எப்படிப்பட்டது  என சேக்கிழார் தமிழில் பார்ப்போம்.

தொண்டர் பலரும் வந்தீண்டி
   உண்ணத் தொலையா அமுதூட்டிக்
கொண்டு செல்ல இருநிதியம்
   முகந்து கொடுத்துக் குறைந்தடைவார்
வண்டு மருவுங் குழலுமையாள்
   கேள்வன் செய்ய தாளென்னும்
புண்ட ரீகம் அகமலரில்
   வைத்துப் போற்றும் பொற்பினார்.

    அடியவர் பலரும் வந்து கூடி உண்ண உண்ணக்   குறையாமல்  உணவு கொடுத்து  , அவர்கள்  கொண்டு செல்லுதற்கு வேண்டிய பெருஞ்செல்வங்களை  அவர்கள் கேட்காமலேயே  கொடுத்தும் மகிழ்வார். இத்தனை செய்தாலும் கூட தம்மைச்  சிறியவனாகவே வைத்து   அவர்களிடம் பணிவாக நடந்து கொள்ளுவார்
    
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாரூரில் திருத்தொண்டர் புராணம்  பாடி அருளியதும் , அடியார்களின் சிறப்புக்களை அவர் அப்பாடல்களில் சொல்லியதும் கேள்விப்பட்ட குறும்பர் அன்றில் இருந்து சுந்தரரை மட்டுமே மனதில் தொழத் தொடங்கினார்.

நம்பியாரூரரின் மலரனைய திருவடி களைக் கைகளால் தொழுதும், வாயினால் வாழ்த்தியும், மனத்தினால் நினைந்தும் வரும் நிலைப்பாட்டிற்கு வந்தார்.

நம்பியாரூரரின் திருப்பெயரைப் போற்றி வந்த நன்மையின் காரணமாக, தாம் எவற்றையும் ஏவல் கொள்ளும் தன்மையால், அணிமா முதலிய எண்வகைச் சித்திகளும் கைவரப் பெற்றவராய் ஆனார்.

  அவ்வாறு தினம் தினம் தொழுது வந்த பெருமான் சுந்தரர் இப்பூவுலகை விட்டு நீங்கப் போகிறார் என்பது அவர் மனதிற்குள் தெளிவாய்த் தெரிகிறது.
  
திருவஞ்சைக்களம் கோயிலில் சுந்தரர் முடிவு எடுத்ததும் குறும்பர் தாமும் அவர் இன்றி இப்பூவுலகில்  வாழ்வதில் பொருள் இல்லை என்று முடிவு செய்கிறார்.தம் யோக நிலையில் தாம் அவர் முன் இப்பூவுலகை  விலக சித்தம் கொண்டார்.  

குறும்பர் இப்பூவுலகில் இருந்து விடைபெறும் நிலையை , சேக்கிழார்சொல்லும் விதம் கவனியுங்கள்.

நாலு கரணங்களும் ஒன்றாய்
நல்ல அறிவு மேற்கொண்டு
காலும் பிரமநாடி வழிக்
கருத்துச் செலுத்தக் கபாலநடு
ஏலவே முன்பயின்ற நெறி
எடுத்த மறை மூலந் திறப்ப
மூல முதல்வர் திருப்பாதம்
அடைவார் கயிலை முன்னடைந்தார்.
 
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அகக் கருவிகள்  நான்கும் சிந்தையே ஆக,  தூய அறிவை மேற்கொண்டு, உணர்ச்சியானது சுழுமுனைவழியே உயிர்க் காற்றைச் செலுத்த, உச்சித் துளையின் வழி அக்காற்றுப் பொருந்துமாறு முன் பயின்ற நெறியினால் எடுத்த பிரணவ மந்திரமானது அவ்வாயிலைத் திறக்க, அவ்வழி மூலம் அடைவாராகி, நம்பியாரூரர் திருக்கயிலையை அடையும் முன்பே இவர் அடைந்தார்.

 காலும் : (மூச்சுக்)காற்று.  பிரம நாடி - சுழு முனை நாடி.    கபால நடு - உச்சித் தலையின் நடுவிருக்கும் அடைக்கப் பட்ட துளை. எடுத்த மறை- எடுத்துச் சொல்லப்படும் திருவைந்தெழுத்து.  

  எவர் ஒருவரும் வீடு  பேறும் , முக்தியும் சிவனடியார் அருளினாலே   பெற முடியும்  என்பதற்கு   சைவ சமயத்தில் பல நேர் வழிகள் சொல்லப்பட்டு இருக்கின்றது.
  
 அவற்றில் 63 வழிகளாக 63 நாயன்மார்களின் வழியே, சுந்தரரை அடிப்பற்றி, சேக்கிழார் பெரியபுராணம் அருளி இருக்கிறார்.

எனவே நாம் நம்மைத் தகுதிப் படுத்திக் கொண்டால் நமக்கும் சிவம்   அயிராவணம்  யானையை அனுப்பி வைக்கும்.

.

No comments:

Post a Comment

Followers

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் (பிரம்மபுரீஸ்வரர்) திருச்சி....

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு தலங்களில் ஒன்றான,  சுந்தரமூர்த்தி நாயனார்  பொன் பொர...