Saturday, September 30, 2023

அம்பிகை, மங்களாம்பாள் என்ற பெயருடன் விளங்கும் சில திருத்தலங்களை இங்கு பார்க்கலாம்.



ஸ்ரீ மங்களாம்பாளின் ஆறு நாமங்களின் பொருளும் மகிமையும்
“எழுபத்திரண்டு மந்திரங்களால் செய்த யந்திரத்தில் அமர்ந்திருப்பதால் தேவர்கள் ஸ்ரீமங்களாம்பாளை ‘மந்திரபீடேஸ்வரி’ எனக் கூறுகின்றனர்.
சர்வ மங்களத்துடன் கூடிய அழகு வாய்ந்தவளாக இருப்பதாலும், பக்தர்களுக்கு சர்வ மங்களத்தையும் அளிப்பதாலும் தேஜஸ்களுக்கெல்லாம் தலைவியாக (ஈஸ்வரியாக) இருப்பதாலும், ஸ்ரீ மங்களாம்பாள் என்று கூறுகின்றனர்.
கிடைக்கக்கூடிய பொருள்களையெல்லாம் எந்த மங்களாம்பாளின் அருளால் மனிதர்கள் அடைகின்றனரோ, அதனால் அந்த தேவியை ‘துர்கடார்த்தப்ரதா’ என முனிவர்கள் கூறுகின்றனர்.
பூதகணங்களால் தோஷமேற்பட்டவர்கள் அங்கு வந்ததும் அவை பயந்து ஓடுவதால், ‘கணபேதிநீ’ என்றும் ஸ்ரீ அம்பாளுக்குப் பெயர்.

எந்த மங்களாம்பாளைத் தரிசித்த மாத்திரத்தில் சுவாச காசம் முதலிய நோய்கள் பயந்து ஓடுகின்றனவோ அதனால் ‘ரோகவிபேதிநீ’ என்றும் அழைக்கின்றனர்.

உலகில் எந்த அபீஷ்டங்களைக் கோரி பிரார்த்திக்கின்றனரோ அவ்வப் பொருளை அளிப்பதால் அம்பாளை ‘ஸர்வேப்ஸதப்ரதா’ என்றும் அழைக்கின்றனர்.

சிம்ம ராசியில் சூரியன் இருக்கும்போது ஆவணி மாதத்தில் வெள்ளிக்கிழமையன்று ஸ்ரீஅம்பாளுக்கு அர்ச்சனை செய்கிறவன் சர்வ மங்களங்களையும் அடைந்து விடுகிறான்.
கும்பகோணத்தை மகாக்ஷேத்திரம் என்று ஞானிகள் உணர்கின்றனர். சர்வ மங்களத்தையும் அளிக்கும் மந்த்ர பீடேஸ்வரீ என்னும் ஸ்ரீ மங்களாம்பாள் பூமியில் இருக்கையில், அவளைத் தரிசிக்காதவர்கள் தாம் பிறவிக் குருடர்கள். கண்பார்வையற்றவர்கள் குருடர்கள் அல்லர்.
கற்பக விருட்சத்திற்கு ஒப்பான ஸ்ரீ மங்களாம்பாள் பூமியில் இருக்கும்போது அவளைத் தரிசிக்காத மனிதர்கள்தாம் பயனற்றவர்கள்.
ஸ்ரீ மங்களாம்பாளுக்கு அஷ்டபந்தனம் செய்து யார் கும்பாபிஷேகம் செய்கிறார்களோ யார் உதவுகிறார்களோ அவர்கள் பெரும் பதவிகள் பெற்று சகல சௌக்கியங்களையும் அனுபவிப்பார்கள். இதில் சந்தேகமில்லை.”
*****
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க என்று பலரும் ஆசீர்வதிப்பார்கள். மங்களாம்பிகை என்ற பெயரில் அம்பாள் அருளும் சில தலங்களை நாம் தரிசித்தோம். மங்களாம்பிகை என்ற பெயரில் இன்னும் பல தலங்கள் இருக்கக்கூடும். காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, நீலாம்பாள், பாலாம்பாள் என்பது போல் காளிகாம்பாள் என்பவளும் அவளே. அவளை வணங்குவோம்.
வெள்ளிக்கிழமைகளில் நூற்று எட்டு செம்பருத்தி பூக்களைத் தொடுத்து மாலையாக ஸ்ரீமங்களாம்பாளுக்கு ஒரு முறையாவது அர்பணித்தால், அவன் குடும்பமும் சந்ததியும் வாழையடி வாழையாக விருத்தியாகும். இது நிச்சயம். செம்பருத்தி பூவால் கிரீடம் செய்து ஒரு வெள்ளிக்கிழமை ஸ்ரீ மங்களாம்பிகைக்குச் சூட்டினால் அவன் குபேரனுக்கு ஒப்பான ஐஸ்வர்யமுள்ளவனாக ஆகிறான். ஸ்ரீ பரமேச்வரமாகவும் ஆகிறான். கோரிய பொருள்களை அடைவதற்காக ஸ்ரீ அம்பாளுக்கு மஞ்சள் குங்குமத்தால் கால் நுனிகளில் அஷ்டோத்தரமோ சஹஸ்ரநாமமோ சொல்லி அர்ச்சித்தால் அவனுக்குக் கிடைத்தற்கரிய பொருள் கிட்டி விடும். இதில் சந்தேகம் வேண்டாம். வெள்ளிக்கிழமையன்று முடியாதவர்கள் இதர நாட்களிலும் செய்யலாம்.

மங்களம் தரும் மங்களாம்பிகை

மங்களம் என்றால் நிறைவு, பூரணமானது என்று அர்த்தம். கச்சேரியில் இறுதியாக மங்களம் பாடி முடித்தல் மரபு. நாதஸ்வரத்துக்கு மங்கள வாத்தியம் என்றே பெயர். மணமக்களை வாழ்த்தி எடுக்கும் ஆரத்தி, இறைவனைப் போற்றி எடுக்கும் ஆரத்தி மங்கள ஆரத்தி என்று பெயர் பெறுகிறது. எதிலும் சுபத்தை, நன்றாக முடித்தலை, மங்கள முடிவினை, மகிழ்ச்சியான எண்ணங்களைத் தரவல்லது மங்களம் என்ற வார்த்தையாகும். இது நெடுங்காலமாக மக்கள் மனத்தில் ஊறிப்போய் உறுதியாகிவிட்ட சொல்.

இறையனுபவத்தைப் பெற விழைந்த அன்பர்கள், பக்தர்கள் ஆன்றோரும் சான்றோரும் இறைவனுக்கும், குறிப்பாக இறைவிக்கும் மங்களம் என்று பெயரிட்டு அழைத்திருக்கிறார்கள். அம்பாளின் நூறு நாமாக்களிலும் ஆயிரம் நாமாக்களிலும் மங்களம், மங்களாம்பிகை என்ற பெயர் உள்ளது. காளி உபாசனையிலும் கூட இந்த நாமா வருகிறது. அந்தக் குன்றாச் சிறப்புடைய அம்பிகை, மங்களாம்பாள் என்ற பெயருடன் விளங்கும் சில திருத்தலங்களை இங்கு பார்க்கலாம்.

1. திருமங்கலக்குடி என்ற தலம் திருவிடைமருதூர் அருகில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 38-ஆவது ஆகும். இத்தலத்திற்குப் பஞ்ச மங்கள க்ஷேத்ரம் என்று பெயர். மங்கள விமானம், மங்கள விநாயகர், மங்களாம்பிகை, மங்களதீர்த்தம், மங்கலக்குடி என்ற ஊர்ப்பெயர். இக்கோவிலை மன்னனுக்குத் தெரிவிக்காமல் கட்டிய மந்திரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மந்திரியின் மனைவி இத்தல இறைவனையும் அம்பாள் மங்களாம்பிகையையும் தொழுது நின்றாள். அப்போது, இறைவி, இறைவனிடம் நிலைமையை இறைவனுக்கு உணர்த்தி மந்திரியை உயிர்ப்பித்ததாகத் தல வரலாறு. அம்பாள் கருணைக் கடலாகவே காட்சியளிக்கிறாள். இறைவன் பிராணநாதேஸ்வரர். இங்கு வெள்ளெருக்கு இலையில் சூடான தயிர் சாதம் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. இது குஷ்டரோக நிவர்த்தித்தலம்.

2. திருக்குடந்தை என்ற கும்பகோணம் சைவ வைணவத் தலங்கள் பல நிறைந்த ஊர். சக்தி தலங்களின் தலையாய பீடம். இங்குள்ள கும்பேஸ்வரர் கோவிலில் அம்பாள் மங்களாம்பிகையாக அருளுகின்றாள். இவளைப் பார்த்த மாத்திரத்திலேயே நம் துயர் களையப்படும் அற்புத அழகுடன் இருக்கிறாள். தனிக்கோவிலாகக் கிழக்குப் பார்த்த சந்நிதி. உலகம் போற்றும் மகாமகம் நிகழும் ஊர். இந்த ஊரில் உள்ள கோவிந்த தீட்சிதர் ஏற்படுத்திய இராஜ வேத காவ்ய பாடசாலை 400 ஆண்டுகளுக்கும் முந்தையது. அவர் இத்தலத்திலும் அருகில் உள்ள பல ஊர்களிலும் பல திருத்தலங்களைக் கட்டியும் திருப்பணிகள் செய்தும் உள்ளார். இத்திருக்கோவிலில் உள்ளே நுழையும்போது திருஞானசம்பந்தரின் “திருஎழுகூற்றிருக்கை” என்ற பிரபந்தம் வண்ணச்சித்திரமாக எழுதப்பட்டுள்ளது. மகாமகத் தீர்த்தக் குளத்தில் பதினாறு கோவில்களையும் மண்டபங்களையும் கோவிந்த தீட்சிதர் கட்டியுள்ளார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் நவாவர்ணக் கீர்த்தனைகள் அம்பாள் பிராகாரத்தில் எழுதப்பட்டுள்ளன. தேவாரப் பாடல்கள் பெற்ற காவிரித் தென்கரைத்தலங்களில் இது 26-ஆவது ஆகும். முத்துசாமி தீட்சிதர் இங்குள்ள மங்களாம்பிகை மீதும் கும்பேஸ்வரர் மீதும் பல கீர்த்தனங்களை இயற்றியுள்ளார். சக்தி பீடத்தில் இத்தலமே முதலாவதாகக் கருதப்படுகிறது.

3. ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம், இறைவன் வாஞ்சிநாதருக்கும், இறைவி மங்களாம்பிகைக்கும் யமதர்மராஜ வாகனம் இங்கு பிரபலம். இது வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. அதேபோல் ஊரில் எந்த இடத்தில் இறப்பு நிகழ்ந்தாலும் மற்ற தலங்கள் போல் கோவில் மூடப்படுவதும் கிடையாது. தமிழ்நாட்டில் உள்ள க்ஷேத்திரங்களில் திருக்கடவூருக்கு அடுத்தப்படி நிகரற்றத்தலம் ஆகும். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் குடவாசல் மார்க்கத்தில் உள்ளது. காசிக்குச் சமமாகச் சொல்லப்படும் ஆறு தலங்களில் இதுவும் ஒன்று. மற்றவை - திருவையாறு, வேதாரண்யம், மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவெண்காடு. சிலர் திருச்சாய்க்கட்டையும் சொல்வார்கள். இத்தலத்தில் இறப்பவர்களுக்கு எம வேதனை கிடையாது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாட்டுத் தென்கரைத் தலங்களில் இது 70-ஆவது தலம் ஆகும். கார்த்திகை ஞாயிறு இந்தத் தீர்த்தமான குப்த கங்கையில் நீராடுவது திருநள்ளாறு நள தீர்த்தத்தைப் போல் மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. இதனை விளக்கும் தல புராணப்பாடல் வருமாறு:

“மெய்தரு கயநோய் குட்டம் விளைத்தமுற் கொடிய சாபம்
பெய்துறல் செய்யும் வன்கண் பிரமராக்கதம் வேதாளம்
எய்திடின் அன்ன தீர்த்தம் இழிந்ததில் படியத்தீரும்
செய்துரும்கடத்தின் ஏற்றுத் தெளிக்கினும் தீருமன்றே”

இக்கோவிலின் சண்டிகேஸ்வரர் யம சண்டிகேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்பாள் மங்களாம்பிகை அருள் தரக் காத்திருக்கிறாள். தற்போது பலர் புற்று நோயின் பாதிப்பால் அவஸ்தைப்படுகிறார்கள். புற்று நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் சிறந்த தலமாக விளங்குகிறது. இங்கு வந்து பிரார்த்தித்து குணமடைந்தவர்கள் பலர். ஆனால் இத்தலமோ அல்லது திருச்சிறுகுடியோ நாம் நினைத்த மாத்திரத்தில் போய்வர முடியாது. மங்களாம்பிகைதான் நம் வரவைத் தீர்மானிக்க முடியும். இஃது என் அனுபவ உண்மை. இத்தலத்து மங்களாம்பாளையும், வாஞ்சிநாதரையும் முத்துஸ்வாமி தீட்சிதர் பல கீர்த்தனங்களால் போற்றிப் பாடியுள்ளார்.

4. கோனேரிராஜபுரம், திருநல்லம் என்ற பெயருடன் விளங்கிடும் தலம். கும்பகோணம்-காரைக்கால் பேருந்துப் பாதையில் எஸ். புதூர் அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும். இங்குள்ள இறைவன் பெயர் உமாமகேஸ்வரர், பூமீஸ்வரர், வைத்தியநாதர். அம்பாள் அங்கவளநாயகி, மங்களாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். தலமரம் அரசு, தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். சம்பந்தர் அப்பர் பாடல் பெற்றது. தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது 34-ஆவது ஆகும். இங்குள்ள வைத்தியநாதர் சந்நிதி உலகப் புகழ் வாய்ந்தது. உமா மகேஸ்வரர் சிலையும் மிகப் பிரசித்தி பெற்றது. இத்தல நடராஜப் பெருமானும் பெரிய வடிவில் காட்சி அளிப்பவர். அற்புத அழகுடன் மிளிர்பவர். மேலும் நன்னிலம் அருகில் உள்ள அம்பர் மாகாளம் கோவில் பற்றிய சித்திரம் ஒன்று இக்கோவிலில் உள்ளது. இந்தச் சுவையான அனுபவங்களை நேரில் சென்று பார்த்தாலே புரியும். அம்பாள் மங்களநாயகி, கருணைக்கடலாக விளங்கி வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்து அருளுகிறாள்.

5. திருநெடுங்களம் என்ற திருத்தலம் திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியில் உள்ள பிரபலமான கோவில். இறைவன் நித்ய சுந்தரேஸ்வரர், திருநெடுங்களநாதர். அம்பாள் மங்களநாயகி, மங்களாம்பிகை என்ற ஒப்பிலாநாயகி. சம்பந்தர் பாடல் பெற்றது. சோழநாட்டுத் தேவாரத் தென்கரைத் தலங்களில் இஃது எட்டாவது. இங்குள்ள மகாமண்டபத்தில் பல்லவர் காலத்துக் கல் உரல் ஒன்று உள்ளது. அதில் மஞ்சள் இடித்து சப்த கன்னியரில் வாராகிக்கு அபிஷேகித்து அர்ச்சித்தால் எண்ணங்கள் நிறைவேறும் என நம்பப்படுகிறது. இங்குள்ள யோக தட்சிணாமூர்த்தி வெகு பிரபலம். இதேபோன்ற ஒரு சிற்பத்தைத் திரு உத்தரகோசமங்கை என்ற தலத்தில் காணலாம். இவர் பத்மாசனமாக ஒரு காலை இன்னொரு கால் மேல் இருத்திக் கொண்டு அமர்ந்துள்ள அழகை நேரில் பார்த்து அனுபவித்தால்தான் புரியும். இதே போல் தட்சிணாமூர்த்தியின் திருவுரு திருஉத்தரகோசமங்கை என்ற திருமறைத்தலத்திலும் உள்ளது. இங்குள்ள அம்பாள் அடியார்கள் இடர் தீர்ப்பதில் வல்லவர். அற்புதத் திருவுருவம். இங்கு சம்பந்தர் பாடிய பதிகம் இடர் களையும் திருப்பதிகமாய் அன்பர்களால் போற்றிப் பாடப்படுகிறது. ‘இடர்களையாய் திருநெடுங்கள மேயவனே’ என்ற மகுடத்துடன் விளங்குவது.

6. உத்தரகோசமங்கை, மாணிக்கவாசகரால் திருவாசகத்தில் 38 இடங்களில் புகழ்ந்து சொல்லப்பட்ட தலம். இராமநாதபுரத்தை அடைவதற்கு முன்பாக (பத்து கி.மீ. தூரம்) இத்தலம் செல்ல வழி அமைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானக் கோவில்களில் ஒன்று. சமீபத்தில் கும்பாபிஷேகம் கண்டது. இறைவன் மங்களநாதர், மங்களேஸ்வரர், அம்பாள் மங்களாம்பிகை, மங்களேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறாள். தல மரம் இலந்தை. தீர்த்தம் அக்னி தீர்த்தம். கோவிலுள் உள்ளது. இங்குள்ள மரகத நடராஜரை திருவாதிரை தின இரவில் மட்டும் நிர்மால்ய தரிசனமாகக் காணலாம். வருட முழுவதும் இவர் சந்தனக்காப்பில்தான் தரிசனம் தருகிறார். அதே போல் இங்குள்ள பஞ்சலோக நடராஜர் மிகச் சிறப்பு வாய்ந்தவர். இவர் வலப்புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும் இடப்புறம் பெண்டிர் ஆடும் லாஸ்யமும் ஆக ஒரு நயமான கலைப்படைப்பாகத் திகழ்கிறார். இவரைத் தக்க பந்தோபஸ்து செய்யப்பட வேண்டும் என்பதே பக்தர்கள் எதிர்பார்ப்பு. இதுபோல் ஆணும் பெண்ணும் கலந்த நடராஜர் படைப்பு வேறு கிடையாது. இறைவன் இத்தலத்தில் அம்பாளைத் திருமணம் செய்து கொண்டு அவளுக்கு வேதப் பொருளை உபதேசம் செய்ததாக ஒரு வரலாறு உண்டு. இது மதுரைப்புராணத்தில் காணப்படுகிறது. இத்தலப் பழைமை பற்றி “மண் முந்தையதோ, மங்கை முந்தையதோ” என்ற பழமொழி ஏற்பட்டது. (திருவாரூர் மண் தலம். உலகில் மிக முற்பட்ட தலம். மண் தோன்றிய போதே (உத்தரகோச மங்கை)யும் தோன்றியதோ என்று வியக்கிறார்களாம்! மாணிக்கவாசகர் இத்தலத்தைப் பற்றிக் கூறும்போது ‘உத்தரகோச மங்கைக்கு அரசே’ என்றே விளிக்கிறார். இத்தலத்து இறைவன் இராவணன் மனைவி மண்டோதரிக்குக் காட்சி கொடுத்துள்ளார். மங்களநாயகியின் கருணையை விளக்க வார்த்தைகள் போதா.

7. திருச்சிறுகுடி என்ற சிற்றூர் மயிலாடுதுறையை அடுத்துள்ள பேரளம் என்ற ஊரின் அருகில் உள்ளது. பெயருக்கு ஏற்றாற்போல் சிறுபிடி என்ற பெயர் மருவி சிறுகுடி என்றாகியுள்ளது. இங்குள்ள இறைவன் மங்களநாதர். இறைவி மங்களாம்பிகை. சூட்சுமபுரி என்பது இவ்வூரின் பெயராக விளங்கி இருக்கிறது. இங்கும் விநாயகர் பெயர் மங்கள விநாயகராகவும், தீர்த்தம் மங்கள தீர்த்தமாகவும் உள்ளது. சம்பந்தரின் தேவாரப் பாடல் பெற்ற இத்தலம் காவிரித் தென்கரைத் தலங்களில் 60-ஆவது தலம். பேரளத்தை அடுத்த பூந்தோட்டம் வந்தால் இத்தலத்தை அடையலாம். பேரளத்திலிருந்து ஆட்டோ, டாக்சிகள் கிடைக்கும். இத்தலத்தில் உள்ள சந்தோஷ ஆலிங்கனமூர்த்தி பிரசித்தம். அம்பிகையின் பூஜைக்கு மகிழ்ந்து அம்பாளை ஆலிங்கனம் செய்யும் அமைப்பில் அவள் தோள்மீது கைபோட்டுக் காட்சி தரும் அழகு, நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்று.

8. சோழநாட்டுத் தென்கரைத்தலங்களில் ஒன்று தென்குடித் திட்டை. கும்பகோணம்-திருக்கருகாவூர் பாதையில் உள்ளது. தஞ்சாவூர் மயிலாடுதுறை வழியே செல்லும் ரயில்கள் இவ்வூர் வழியே செல்கின்றன. காவிரியின் கிளை நதிகளான வெண்ணாறு-வெட்டாறு ஆகியவற்றின் இடையில் திட்டில் அமைந்த தலம். உலகப் பிரளய காலத்தில் இப்பகுதி திட்டாகத் தோன்றியதாகவும், இறைவன் இங்கு சுயம்புவாக வெளிப்பட்டு அருளினான் என்றும் வரலாறு. விமானங்கள் அனைத்தும் கருங்கற்களால் ஆன அற்புதக் கலையம்சம் மிக்க கோவில். இறைவன் வசிஷ்டேஸ்வரர், அம்பாள் மங்களாம்பிகை. உலகநாயகி, சுகந்தகுந்தளாம்பிகை என்ற பெயர்களும் வழக்கில் உள்ளன. சம்பந்தர் பாடல் பெற்ற தலம். கிழக்கு நோக்கிய சந்நிதி. சதுர ஆவுடையார். மூலவர் நான்கு பட்டைகளாகக் காணப்படுகிறார். அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. கொடிமரம் கல்லால் ஆனது. அம்பாள் சந்நிதிக்கு வெளியே எதிரில் மண்டபத்தில் மேற்புறத்தில் பன்னிரண்டு இராசிகளுக்குரிய உருவங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மூலவர் விமானத்தின் மீது சந்திரகாந்தக்கல் பதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் கோடை நாள்களிலும் சந்நிதி சற்று குளுமையுடன் காணப்படும். 24 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு சொட்டு நீர் இறைவன் மீது விழுந்து அபிஷேகம் ஆகிறது. இந்த விசேஷம் வேறு எங்கும் இல்லை. சந்திரனின் ஒளியை உள்வாங்கி இந்த அதிசயம் நடப்பதாகக் கூறப்படுகிறது. சிறப்பு வாய்ந்த சிறுவாச்சூர் காளிதேவியின் மகாமேருவும் சிவலிங்கமும் மரப்பீடத்தில் வைக்கப்பட்டுள்ளன. மங்களாம்பாளின் அழகும், வனப்பும், கருணையும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டன. தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது 15-ஆவது ஆகும்.

9. திருவெண்ணெய்நல்லூர் நடுநாட்டில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற தலம். இறைவன் சுந்தரரை அவருடைய திருமண விழாவின்போது தடுத்தாட்கொண்ட செயல் இத்தலத்தில்தான் நிறைவு பெற்றது. கிழக்குப் பார்த்த கோவில். அம்பாள் தனிக்கோவிலாகப் பிரகாரத்தில் உள்ளார். இப்பொழுது பிரதோஷ விழாவிற்கு ஆயிரக்கணக்கில் பக்தர்களைத் தன்பால் ஈர்த்துள்ளார். திருக்கோவிலூரிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உண்டு. அம்பாள் மங்களாம்பிகை. பெயருக்கேற்றாற்போல் அழகும் கருணையும் ஒன்றாக இணைந்த திருவுருவம். அலங்காரம் செய்து பார்த்தாலே நம் துன்பங்கள் பறந்தோடும் என்ற மன நிறைவு. இறைவன் தடுத்தாட்கொண்ட ஈஸ்வரர், வேணுபுரீஸ்வரர், கிருபாபுரீஸ்வரர் என்றும் பெயர்கள் உண்டு. சைவசித்தாந்த நூலான சிவஞானபோதம் நூலை அருளிச் செய்த மெய்கண்டார் வாழ்ந்து உபதேசம் பெற்ற சிறப்புத் தலமும் இதுவே. சுந்தரமூர்த்தி நாயனாரின் “பித்தா பிறைசூடிப் பெருமாளே அருளாளா” என்ற பிரபல தேவாரப்பாடல் எழுந்தது இத்தலத்தில்தான்.

10. திருக்கண்டியூர் திருவையாறுக்கு அருகில் உள்ள தலம். அட்ட வீரட்டானத் தலங்களில் முதலாவதாய்க் கொண்டாடப்படுகிறது. தஞ்சாவூரிலிருந்து ஒன்பது கி.மீ. தொலைவு. இறைவன் பிரம்மசிரக்கண்டீசர் என்ற பெயருடன் விளங்குகிறார். பிறப்புத் தொழிலைச் செய்யும் பிரம்மன் தலையைக் கொய்த இடமாகக் கருதப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தோஷம் விலக இறைவன் காசியில் அன்னபூரணியிடம் பிட்சை எடுத்து விமோசனம் பெற்றதாக ஒரு வரலாறு உண்டு. சதாதப முனிவருக்கு காளத்தி தரிசனத்தைக் காட்டிய தலம். இங்கு பிரம்மன் சரஸ்வதி இருவரும் ஒன்றாக உள்ள ஒரு கருவறை உள்ளது. மாசி மாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5.45 மணி முதல் 6.10 வரை சூரிய ஒளி இறைவன் மீது படுகிறது. அருணகிரியாரின் பாடல் பெற்றது. இத்தலம் சப்த ஸ்தானத் தலங்களில் ஐந்தாவது தலம். அம்பாள் மங்களாம்பிகை. மங்களநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். தெற்கு நோக்கிய சந்நிதி. நின்ற கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். தீர்த்தம் கபால, தக்ஷ, பிரம்ம, பாதாளகங்கைத் தீர்த்தங்கள். அர்த்த மண்டபத்தில் சப்தஸ்தான லிங்கங்களும், பஞ்சபூத லிங்கங்களும் உள்ளன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் தேவாரம் பெற்ற காவிரி தென்கரையில் இது 12-ஆவது தலம்.

11. திருப்பரிதிநியமம் என்ற ஊர், தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை சாலையில் உள்ளது. இங்குள்ள சிவன் கோவில் பருத்தியப்பர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் பாஸ்கரேஸ்வரர், அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம்-சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என்று இரு தீர்த்தங்கள் உள்ளன. சூரியன் இறைவனை வணங்கிய நிலையில் உள்ள சிற்பமும் பலிபீடத்தை அடுத்து உள்ளது. வருடந்தோறும் பங்குனி மாதம் 17, 18, 19 தேதிகளில் சூரியக்கதிர்கள் ஸ்வாமி மீது படுகின்றன. சூரியன் வழிபட்ட பல தலங்களில் இஃது ஒன்று. இதைப்பற்றிய பழம் பாடல் ஒன்று வருமாறு:
“கண்டியூர் வேதிகுடி கற்குடந்தைக் கீழ்க்கோட்டம்
பண்பரிதி நன்நியமம் பாங்கார் தெளிச்சேரி
பொற்புறவார் பனங்காட்டூர் நெல்லிக்கா ஏழும்
பொற்பரிதி பூசனை ஊர்.”
பரிதிநியமம், திருக்கண்டியூர், குடந்தைக் கீழ்க்கோட்டம், திருவேதிகுடி, தெளிச்சேரி, புறவார்பனங்காட்டூர், திருநெல்லிக்கா என்பவை அந்தத் தலங்கள். சம்பந்தர் பாடல் பெற்றது. தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது 101-ஆவது தலம். இக்கோவில் கீழ்வேங்கை நாட்டாருக்கும் சொந்தமானது. மங்களாம்பிகை தெற்குப் பார்த்து நின்ற கோலத்தில் உள்ளாள். தம்மிடம் வந்து வேண்டுவோர்க்கு வேண்டுவன அளித்துக் காக்கும் அநாதரட்சகி.

12. இடும்பவனம், முத்துப்பேட்டை-வேதாரண்யம் பேருந்துச் சாலையில் உள்ள தலம். தேவாரப்பாடல் பெற்ற காவிரித் தென்கரைத் தலங்களில் இது 108-ஆவது ஆகும். சம்பந்தர் இத்தலத்தைப் பாடியுள்ளார். இடும்பன் என்ற அசுரன் வழிபட்ட தலம். அகத்தியருக்குத் திருமணக் கோலம் காட்டியருளிய தலம். கருவறையில் இறைவனுக்குப் பின்புறம் இந்த மணவாளக்கோலம் உள்ளது. இறைவனுக்குப் பல பெயர்கள். சற்குணேஸ்வரர் இடும்பவனேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இறைவி மங்களாம்பிகை, மங்களநாயகி என்ற பெயருடன் விளங்குகிறாள். இத்தலம் பிதுர்க்கர்மாக்களைச் செய்ய விசேஷமானதாகக் கருதப்படுகிறது. மராட்டிய மன்னர்கள் இத்தலத்துக்கு அளவற்ற மான்யங்களை அளித்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கான கல்வெட்டுகள் கோவிலில் உள்ளன.

13. திருநாட்டியாத்தான்குடி என்ற தலம் தேவாரத் தென்கரைத்தலங்களில் 118-ஆவது தலம். சுந்தரர் பாடியது. திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் மாவூர் கூட்டு ரோடு வந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் பயணம் செய்ய வேண்டும். இங்கு வருவதற்குத் திருத்துறைப்பூண்டி அல்லது திருவாரூரிலிருந்து டாக்சி எடுத்து வருவது சிறந்தது. கோட்புலி நாயனாரின் அவதாரத்தலம். அவருடைய பெண்களைச் சுந்தரர் தன் மகள்களாக ஏற்ற தலம். இறைவன் மாணிக்கவண்ணர், நாட்டியாத்தான் குடிநம்பி. அம்பாள் மங்களாம்பிகை. சுந்தரர் இத்தலத்துக்கு வந்தபோது இறைவனையும் இறைவியையும் கோவிலில் காணாது திகைத்தார். விநாயகரைக் கேட்க அவர் வயலில் நாற்று நட்டுக் கொண்டிருந்த உழவன் உழத்தியைக் கை காட்டினார். அவர்கள் இறைவனும் அம்பாளும் என்று உணர்ந்த சுந்தரர்,
“நட்ட நடாக்குறை நாளைநடலாம்
நாளை நடாக்குறை சேறு தங்கிடவே
நட்டதுபோதும் கரையேறி வாரும்
நாட்டியாத்தான்குடி நம்பி”
என்று பாடினார். உடனே அவர்கள் கோவிலுக்கு வந்து காட்சி தந்தார்கள். இக்கோவில் இறைவர் பிணக்குகளைத் தீர்த்துவைப்பதில் வல்லவர். அண்ணன் தம்பி இருவருக்குமிடையில் இரத்தினக் கற்களைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட பிரச்னையை இறைவனே ரத்தின வியாபாரியாக வந்து தீர்த்து வைத்தார்.

14. ஆவூர்ப்பசுபதீஸ்வரம் அம்பாள் பசுவாக இறைவனைப் பூஜித்த பல தலங்களில் ஒன்று. சோழநாட்டுத் தேவாரத் தென்கரைத் தலங்களில் இது 21-ஆவது ஆகும். காமதேனு என்ற தெய்விகப் பசு உலகிற்கு வந்த கோவிந்தகுடி (கோ வந்த குடி) என்ற சிற்றூருக்கு அருகில் உள்ளது. குடந்தையிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ளன. இது கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோவில்களில் ஒன்று. ஊரின் பெயர் ஆவூர். கோவில் பசுபதீச்சுரம். அம்பாள் மங்களாம்பிகை. இக்கோவிலில் உள்ள காமதேனு தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்டுப் பிரதிஷ்டையாகி உள்ளது. சங்கப்புலவர்கள் ஆவூர்க்கிழார், ஆவூர் மூலங்கிழார் போன்ற சான்றோர்களைத் தந்த ஊர். சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கிய இடம். சம்பந்தர் பாடல் பெற்றது. அம்பாள் பக்தர்களின் குறைகளைத் தீர்ப்பதில் வல்லவர்.

15. திருப்பேணும்பெருந்துறை என்ற தலம் சிறு கிராமம். திருப்பந்துறை என்றும் அழைக்கப்படுகிறது. ஸ்வாமி பிரணவேஸ்வரர், சிவானந்தேஸ்வரர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம்: மங்கள தீர்த்தம். தலமரம் வன்னி. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சம்பந்தர் தேவாரப்பாடல் பெற்றது. பாடல் பெற்ற காவிரித் தென்கரைத்தலங்களில் இது 64-ஆவது. மூர்த்தியும் சின்முத்திரை காட்டி தியானநிலையில் இருக்கும் தண்டபாணித் தெய்வமும் கண்டு மகிழ வேண்டிய திருவுருவங்கள். இங்குள்ள முருகன் தலையில் குடுமியுடன் சிவபிரானை வணங்கிய நிலையில் காணப்படுகிறார். கல்வெட்டுகள் ஐந்து உள்ளன. இறைவன் பெயர் பேணுபெருந்துறை மகாதேவர் என்றும் அம்பாள் பெயர் மலையரசியம்மை எனவும் குறிப்பிட்டிருக்கிறது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்றது. திருச்செங்காட்டங்குடி போல் சித்திரைப் பரணியில் அமுது படையல் விழா நடக்கிறது. அற்புத அழகுடன் திகழும் மங்களாம்பிகை பக்தர்கள் வரவை எதிர்நோக்குகிறாள்.

16. திருவிஜயமங்கை சோழநாட்டு வடகரைத்தலங்களில் 47-ஆவது ஆகும். சிவராத்திரித் தலமாகப் புகழ்பெற்ற திருவைகாவூரின் அருகில் இருக்கிறது. இறைவன் விஜயநாதர். அம்பாள் மங்களாம்பிகை. இது பாண்டவர் காலத்துக் கோவில். அர்ச்சுனன் என்ற விஜயன் வழிபட்டதால் விஜயமங்கை என்று பெயர். இதனை அப்பர் தம் தேவாரத்தில்
“பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டுதல் வரங்கொள் விசய மங்கை”
என்று பாடுகிறார். இங்குள்ள சப்த(ஏழு)மங்கைத் தலங்களில் இஃதும் ஒன்று. இங்கு சதுர ஆவுடையார் மேல் இறைவன் எழுந்தருளியுள்ளார். கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தி அருள்கிறார். மங்களாம்பிகை தெற்கு நோக்கிக் காட்சி.

17. மூவலூர் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் உள்ள ஊர். பெரிய கோவில். இறைவன் மார்க்கசகாயேஸ்வரர். அம்பாள் மங்களாம்பிகை. அப்பர் பாடலில் இத்தலம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு ஒரு சிற்பக்கலைப் பெட்டகமே உள்ளது. பரமேஸ்வரன், திருமால், பிரம்மன் மூவரும் இத்தலத்தில் காட்சி அளித்ததால் மூவலூர் என்று பெயர். திருவாவடுதுறை ஆதீன முதற்குரவர் ஸ்ரீநமசிவாய மூர்த்திகளின் அவதாரத்தலம். பைரவரும் சூரியனும் சனிபகவானும் காட்சி தருகின்றனர். தட்சிணாமூர்த்தியின் திருவடிக்கீழ் யானை முகம், மான், சிம்மம், ரிஷபம் முதலியனவும் முயலகன் சனகாதி முனிவர் நால்வருடன் சேர்ந்திருப்பது புதுமையாக உள்ளது. ரதசப்தமியன்று சப்தமாதர் வழித்துணையப்பரை வழிபட்டுப் பேறடைந்தனர்.

18. துடையூர் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலம். திருச்சி-முசிறி-நாமக்கல் பாதையில் பத்தாவது கி.மீ.தொலைவில் துடையூர் உள்ளது. அப்பர் தேவாரத்தில் குறிப்பிடப்படுகிறது. ஸ்வாமி விஷமங்களேஸ்வரர். அம்பாள் மங்களநாயகி என்ற மங்களாம்பிகை. பாற்கடலில் ஆலகால விஷம் தோன்றிய காலத்தில் சிவபிரான் அதை அருந்தி மக்களைக் காத்த தலம். சமீபத்தில் இக்கோவிலுக்குக் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இங்குள்ள பிட்சாடனர் மற்றும் அம்பாளின் தோள் மீது ஸ்வாமி கையை வைத்துச் சார்ந்திருக்கும் அற்புதத் திருவுருவங்கள் கண்டு ரசிக்கத்தக்கவை.

19. கோவிந்தபுத்தூர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலம். கோகறந்தபுத்தூர், கோவிந்தபுதூர் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. ஜயங்கொண்டத்தில் இருந்து ஸ்ரீபுரந்தன் என்ற ஊர் வழியாக கோவிந்தபுத்தூர் செல்லமுடியும். சிறிய கிராமம். இடிந்து உருக்குலைந்த இச்சிவாலயம் சமீபத்தில் திருப்பணிகள் முடிந்து கோவில் கும்பாபிஷேகம் முடிந்துள்ளது. ஸ்வாமி கங்காஜடேஸ்வரர். அம்பாள் மங்களநாயகி, மங்களாம்பிகை. கோவில் விமானம் உத்தமசோழப் பல்லவன் காலத்திய வேலைப்பாடமைந்தது. தேவாரப்பாடல் பெற்ற விஜயமங்கை என்ற தலம் இதுதான் என்ற கருத்தும் உள்ளது.

20. மேல்சேவூர் என்ற கிராமம் திண்டிவனம்-செஞ்சி சாலையில் வல்லம் என்ற ஊரிலிருந்து சுமார் ஆறு கி.மீ. தூரத்தில் உள்ளது. செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து மணிக்கொருமுறை பேருந்து வசதி உண்டு. சிவபிரானின் வாகனமான ரிஷபம் இத்தலத்தில் சிவனை வழிபட்டதால் இறைவனுக்கு ரிஷபேஸ்வரர் என்று பெயர். 
21. இடையாற்றுமங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது மங்களாம்பிகை சமேத மங்களீஸ்வரர் ஆலயம். திருச்சி அன்பில் சாலையில் லால்குடி பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தூரம் உள்ளது. தரிசன நேரம் காலை 6 மணி முதல் 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.  அம்பாள் மங்களாம்பிகையின் சந்நிதி. மேலிரு கரங்களில் தாமரையும் கீழ் இரு கரங்கள் அபயவரத ஹஸ்த முத்திரையுடனும் காணப்படுகிறாள். அம்பாள் தெற்கு நோக்கிக் காட்சி. அருகில் கிழக்கு முகமாய் இறைவன் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். நவகிரகங்களுக்குத் தனிச்சந்நிதி. இங்குள்ள மாங்கல்ய மகரிஷி அவ்வூரில் அவதரித்து இங்கேயே சித்தியானவர். இவர் கன்னிப் பெண்களுக்குக் கண் கண்ட தெய்வமாய் விளங்குகிறார். உத்திர நட்சத்திரத்தில் இவருக்கும் இறைவன் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து சீப்பு, கண்ணாடி, குங்குமம், மஞ்சள், சட்டைத்துணி, பழம், பூ போன்ற மங்கலப் பொருள்களைப் பெண்களுக்குத் தானம் செய்கிறார்கள். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் கணவருடன் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். முதல் பத்திரிகையை மாங்கல்ய முனிவரின் பாதத்தில் வைத்து வழிபடுகிறார்கள். மங்களாம்பிகை இங்கு பெரும் போற்றுதலுக்கு உரிய தெய்வமாய்த் தொழப்படுகிறாள்.

22. திருத்துறைப்பூண்டி அம்பாள் பெரியநாயகி, உற்சவர் மங்களநாயகி. மங்களாம்பாள் கோவிலுக்குரிய சொத்துகள் இந்த மங்களாம்பிகையின் பெயரில் தாம் உள்ளன. இந்த ஊரில் உள்ள சொத்துகள் யாவுமே மங்களாம்பாளுக்குச் சொந்தம் என்கிறார்கள். என்றாலும் கோயில் சொத்துக்களின் இன்றைய நிலை மிகவும் பெருமைப்படும்படி இல்லை. மங்களாம்பாள் தன் அருளாட்சியை இங்கே நடத்துவதால் கோவில் பூஜைகள் நடந்து வருகின்றன.

23. ஆலம்பூண்டி என்ற சிற்றூர் செஞ்சியிலிருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூரில் உள்ள சிவன் கோவிலில் அம்பாள் மங்களாம்பிகை என்ற பெயருடன் அருள்கிறாள். இத்திருத்தலம் சுமார் 800 ஆண்டுகள் பழைமையானது. 

24. பேரணம்பாக்கம் என்ற சிற்றூர், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் உள்ளது. தேவிகாபுரம் என்ற ஊர் வழியே செல்ல வேண்டும். இங்குள்ள சிவபிரான் ருணஹரேஸ்வரர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். அம்பாள் மங்களாம்பிகை. 

25. திருவையைச்சேரி என்ற கிராமம் திருவாரூருக்கு அருகில் உள்ளது. இங்குள்ள மங்களாம்பிகை வெகு விசேஷம். இவளைப் பற்றி பிரபல பாடலாசிரியர் பாபநாசம் சிவன் ‘
ஓம் நமசிவாய

இறை பணியில்
இரா. இளங்கோவன்
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...