:
திருவாரூா் அருள்மிகு தியாகராஜா் சுவாமி திருக்கோயில் சிறப்புகள்
1, திருமுறைப் பாடல் பெற்ற சிவத்தலங்களுள் சீர்காழிக்கு அடுத்து அதிகம் பாடல் பெற்ற ஸ்தலம் திருவாரூர்.
2, சோழ மன்னர்களின் தலைநகரங்கள் ஐந்தனுள் மிகவும் தொன்மையானது திருவாரூர் – சங்க காலச் சோழர்களின் தலைநகராகவும் பிற்கால சோழர்களின் தலைநகராகவும் பிற்கால சோழர்கள் முடிசூடிக் கொள்ளுமிடமாகவும் விளங்கிய நகர்.
3, பஞ்சபூதத் ஸ்தலங்களில் பிருதிவித் ஸ்தலம் திருவாரூர். தேவேந்திரன் அமைந்த அயிர் எனும் ஒருவகை நுண்மணலான புற்றில் தானே தோன்றியவர் மூலவர் வன்மீகநாதர். அயிர் எனும் நுண் மணலி உண்டு வாழும் மீன் அயிரை மீன் என்பர். “அயிராவணமே எம் அம்மானே” என்பது அப்பர் அருள் வாக்கு.
4, ஆறு ஆதாரத்தலங்களுள் திருவாரூர் மூலாதாரத் ஸ்தலமானதால் வன்மீகநாதர் இருக்கும் கறுவறை மூலட்டானம் என்றும் பூங்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. ஆகாசத்தலமான சிதம்பரமும் பிருதிவித் ஸ்தலமான திருவாரூருமே மூலட்டானம் எனப்படும்.
5, காலத்தால் மிகவும் பழைமையான திருக்கோயில் திருவாரூர் கோயில். “திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திருவாரூர்க் கோயிலாக் கொண்ட நாளே” என்பது அப்பரடிகள் அருள் வாக்கு.
6, பிறக்க முக்தி தரும் திருத்தலம் திருவாரூர். “திருவாரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்” என்பது சுந்தரர் திருவாக்கு. பிறக்க முக்தி தரும் சிவ கணங்களே இவ்வூர் மக்களாதலால் யமன் வேதனை செய்பவனாக இன்றி சண்டீஸ்வர்ராக அருள்பாலிக்கிறார். “உதித்தவர் உதித்திடா ஆரூர்”
7, நமி நந்தி அடிகள் எனும் சிவனடியார் கனவில் சிவபெருமான் தோன்றி திருவாரூரில் உள்ளவர்கள் எல்லாம் சிவ கணத்தவர்கள் எனக் காட்சி கொடுத்தார். “ஞான மறையோய்! ஆரூரில் பிறந்தாரெல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்” என்றருளிச் செய்தார் – பெரிய புராணம்.
8, திருவிடை மருதூர் மகாலிங்க ஸ்வாமிகள் பரிவாரத் ஸ்தலங்களுள் திருவாரூர் சோமாஸ்கந்தர் ஸ்தலமாகத் திகழ்கிறது.
9, பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் திருமலைச் சிறப்பாக கயிலை மலையையும் திருநாட்டுச் சிறப்பாக சோழ நாட்டையும் பாடியவர் திருநகரச் சிறப்பாக திருவாரூரையே பாடியருளியுள்ளார்.
10, ஒரு குலத்துக்கு ஒரு மகன் உள்ளான் என்பதையும் ஓராது ஒரு பசுவின் கன்றுக்காக தன் மகனது உயிரைப் போக்கிய மனு நீதிச் சோழன் ஆண்டது திருவாரூர்.
11, தியாகராஜர் எழுந்தருளி உள்ள ஏழுவிடங்கத் ஸ்தலங்களில் முதன்மையானதும் முக்கியமானதும் திருவாரூர்.
12, பாடல் பெற்ற திருவாரூர் பூங்கோயிலின் உள்ளே அறநெறி, வெளியே (கீழ வீதி) பரவை உண் மண்டளி எனும் இரண்டு பாடல் பெற்ற திருக்கோயில்கள் உள்ளன.
13, நமி நந்தி அடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயில் திருவாரூர் அறநெறி திருக்கோயிலாகும். இதற்கு அப்பரடிகள் அருளிய பதிகங்கள் இரண்டு.
14, பரவையுண் மண்டலி எனும் கோயில் சுந்தரர் அருளிய பதிகம் பெற்றது. பரவை நாச்சியார் மண்ணால் கோயில் கட்டி வழிபட்ட ஸ்தலம். ஒரு காலத்தில் வருணன் ஏவிய கடலை உண்டமை பற்றி இத்தலத்திற்கு பரவியுண் மண்டலி எனும் பெயர் பெற்றது.
15, திருவாரூர் திருத்தலத்தின் தேரும் திருவிழாவும் திருக்கோயிலும் திருக்குளமும் இவ்வூர்த் தேவாரங்களில் வைத்துப் பாடப் பெற்றுள்ளன.
16, திருவாரூர் திருவாதிரைத் திருவிழாவை அப்பரடிகள் கண்டு வணங்கி அதன் சிறப்பை முத்து விதானம் என்று தொடங்கும் ஒரு தனித் திருப்பதிகத்தினால் சம்பந்த பெருமானுக்குக் கூறியருளியிருக்கிறார்கள்.
17, திருவாரூர் பங்குனி உத்திர விழா நினைவிற்கு வரவே திருவொற்றியூரிலிருந்த சுந்தரமூர்த்தி நாயனார் சூளுறவையும் மறந்து திருவாரூர் புறப்பட்டார் என்று பெரியபுராணம் செப்புகின்றது.
18, திருவாரூர் பூங்கோயில் திருக்கோயிலும் கமலாலயம் திருக்குளமும் செங்கழுநீர் ஓடையும் தனித்தனி ஐந்து வேலிகள் பரப்புடையன.
19, திருவாரூரில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் தேவாசிரிய மண்டபம் எனப்படும். சிவனோடொக்கும் அடியார்கள் உறையும் இடம் தேவாசிரிய மண்டபம். பூங்கோயில் பெருமானும் தேவாசிரிய மண்டப அடியார்களும் ஒன்றே என்பதால் தேவர்களும் அடியார்களை வணங்கிச் செல்வதால் இது தேவாசிரிய மண்டபம் எனப்பட்டது.
20, தேவாசிரிய மண்டபம் சைவத்தைக் காத்த இடம். சுந்தரர் பெருமான் அவதார நோக்கம் நிறைவேறிய இடம். பெரிய புரணத்திற்கு வித்திட்ட இடம். ஆண்டவன் சிறப்பும் அடியார்கள் பெருமையும் விளங்கிய இடம். சிவபெருமான் “தில்லை வாழ் அந்தணர்” என அடியெடுத்துக் கொடுக்க சுந்தர மூர்த்தி ஸ்வமிகள் திருத்தொண்டத் தொகை பாடியருளிய இடம். தியாகராஜப் பெருமான் ஆழித்தேர் விழா முடித்து இங்கு எழுந்தருளி மகாபிஷேகம் கொண்டு செங்கோல் செலுத்துவதால் இது ராஜதானி மண்டபம் எனப்படும்.
21, சுந்தரமூர்த்தி நாயனார் விருத்தாசலத்தில் மணிமுத்தா நதியில் இட்ட பொன்னை மிகப் பெரிய கமலாலயம் எனும் திருக்குளத்தில் இருந்து எடுத்து பரவை நாச்சியார்க்குக் கொடுத்த திருத்தலம் திருவாரூர்.
22, திருவாரூர் திருவீதியில்தான் சுந்தரர் பொருட்டு சிவபெருமான் பரவை நாச்சியாரிடம் இருமுறை நள்ளிரவில் தூது நடந்தார். திருவடிப் போது நாறிய திருவீதி.
23, காஞ்சிபுரத்தில் ஒரு கண் பெற்ற சுந்தரர் மீளா அடிமை என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண் பார்வையும் பெற்றது திருவாரூரில்தான்.
24, நமி நந்தி அடிகள், செருத்துணை நாயனார், தண்டியடிகள் நாயனார், கழற்சிங்க நாயனார், விறன்மிண்ட நாயனார் போன்றோர் திருத்தொண்டு செய்து முத்தி பெற்றதும் திருவாரூரில்தான்.
25, திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் வழிபடப் பெற்று முசுகுந்த சக்ரவர்த்தியால் திருவாரூரில் பிரதிஷ்டை செய்யப் பெற்றவர். இங்கு தியாகராஜர் அஜபா நடன மூர்த்தியாக விளங்குகிறார்.
26, தியாகராஜ மூர்த்தம் சிவ வடிவங்கள் இருபத்தைந்து எனக் கூறும் ஆகமங்களுக்கு அப்பாற்பட்ட்து. “ஆரூரில் கண்ட்டியேன் அயர்ந்தவாறே”என்றும் “ஐயந்தின் அப்புறத்தான்” என்று அப்பரடிகளும் “இன்ன தன்மையன் என்ற்றிவொண்ணா எம்மான்” என்று சுந்தரரும் குறிப்பிடுகின்றனர்.
27, சிவபெருமான் உலகை காத்து உய்விப்பதற்காக ராஜ ராஜேஸ்வர உருவில் ரத்ன சிம்மாசனத்தில் இருபுறமும் வீரவாளுடன் கொழு வீற்றிருக்கும் நிலையே தியாகராஜ திருமேனி அமைப்பு. தியாகராஜர் திருமேனியோடு கொண்டி என்ற பிரிவற்ற சக்தி உள்ளது. இவரும் கொண்டியும் முகம் தவிர முழுத்திருமேனி தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளனர்.
இவர் மூலாதாரத்திற்கு மேல் உள்ள சுவாதிஷ்டான நிலையை விளங்குபவர். இவருடைய பூஜை முறைகள் சிருங்காரமாக போக மூர்த்தி தொடர்பு கொண்டதாக இருக்கும்.
28, தியாகராஜர் எழுந்தருளி இருக்கும் இடம் தேவ சபை என்றும் இவருக்குத் தென்றல் காற்று வரும் கல் சன்னல் திருச்சாலகம் என்றும் இவர் கொடி தியாகக் கொடி என்றும் இவருடைய தேருக்கு ஆழித்தேர் என்றும் இவரை எழுந்தருளப்பண்ணும் திருவாடு தண்டு மாணிக்கத் தண்டு என்றும் பெயர் பெற்றுள்ளன.
29, திருவாரூர் தியாகராஜர் சந்நிதியில் திரு நந்தித் தேவர் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவருடைய வழிபாட்டுக் காலங்களில் திரு வந்திக்காப்பு மிக்க விஷேடமானது.
30, தியாகராஜர் முழுதும் மறைக்கப்பட்ட ரகசியத் திருமேனியில் வலது பாத தரிசனம் மார்கழி திருவாதிரையின்று இட்து பாத தரிசனம் பங்குனி உத்திரத்தன்று மட்டுமே கண்டு மகிழலாம்.
31, தியாகராஜர் சந்நிதியில் வலப்பால் ஒரு பீடத்தில் பெட்டகத்தில் வீதி விடங்கராகிய மரகத சிவலிங்கம் உள்ளது. இவருக்குத் தான் நாள்தோறும் காலை மாலை அபிஷேகம் நடைபெரும்.
32, எல்லா சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரட்க்ஷை எனப்படும் திருவந்திக் காப்பு நேரத்தில் திருவாரூரில் விளங்குவதாக ஐதீகம் சாயரக்ஷை பூஜையின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூஜிப்பதாக ஐதீகமாதலால் அர்ச்சகர் நீண்ட அங்கி, தலைப்பாகை அணிந்துதான் எதிரில் நின்று பூஜை செய்கிறார்.
33, மற்ற திருக்கோயில்களில் பிரதோஷ காலம் மாலை 4.30 முதல் 6.30. வரை ஆகும். ஆனால் திருவாரூரில் 6.30க்கு சாயரக்ஷை முடிந்த பின்னர்தான் பிரதோஷ பூஜை நடைபெறும். ஆகவே நித்ய சாயரக்ஷை பூஜையே நித்ய பிரதோஷ பூஜையாகும்.
34, ஸ்ரீ தியாகராஜர் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் விருப்பப்படி வைகாசி ஆயில்யம் நண்பகல் திரு அம்பர் மாகாளத்தில் சோமாசி மாறநாயனார் சோமாசி யாகத்திற்கு எழுந்தருளுகிறார். எனவே வைகாசி ஆயில்யம் நாளன்று உச்சிகால பூசை திருவாரூரில் இல்லை.
35, திருவாரூரில் உள்ள தேர் தமிழ்நாட்டில் பெரிய தேர். ஆழித்தேர் என்றே அழைப்பர். “ஆழித்தேர் வித்தகன்” என்றே திருமுறை பேசும். மாசி மாத அஸ்த நாளில் கொடியேற்றி பங்குனி மாத ஆயில்யத்தில் தேரோட்டம் நடைபெறும்.
36, திருவாரூரில் உள்ள பஞ்சமுக வாத்யமும் வாசிக்கப்படும் பாரி நாயனமும் கண்டு மகிழ வேண்டியவர்கள்.
37, வன்மீக நாதரின் சந்நிதியில் நந்தியின் மேற்பரப்பில் உள்ள கல்லில் 27 நட்சத்திரங்களும் இராசிச் சக்கரமும் அமைந்து உள்ளன.
38, அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷர பீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தொரு எழுத்துக்கள் எழுதப் பெற்ற திருவாசியுமே உள்ளன. தியானித்து மகிழ வேண்டியது.
39, திருவாரூரில் உள்ள அம்பாள் கமலாம்பாள். பராசக்தி பீடங்களுள் ஒன்று. நான்கு கரங்களுடன் தாமரை பாசம், அக்கமாலை ஏந்தி இட்து கரத்தைத் தொடை மீது ஊறு ஹஸ்தமாக வைத்துள்ளாள். வாசலில் உச்சிஷ்ட கணபதி உள்ளார். கமலாம்பிகையுடன் உற்சவ மூர்த்தி மனோன்மனி. கமலாம்பாள் ஆடிப்பூர விழா நாயகி. ஆடிப்பூர நாளில் தீர்த்தம் வழங்குவாள். அன்றிரவு அம்பாளுக்கு வெள்ளை சாத்தி மகிழ்வார்கள்.
40, மற்றொரு அம்பாள் கோயில் அல்லியங்கோதை எனப்படும். நீலோத்பலாம்பாள் சந்நிதியாகும். வலக்கரத்தில் நீலோத்பல மலர் ஏந்தி இட்து கரத்தால் தோழி இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் முருகனின் தலையை தொட்டுக்கொண்டிருக்கும் கோலத்தில் நான்கு கரங்கள். இந்த மாதிரி அமைப்பு வேறெங்கும் காணக் கிடையாது.
41, திருவாரூர் திருக்கோயிலில்தான் தருமபுர ஆதீன குரு முதல்வர் ஸ்ரீ ஞான சம்பந்த ஸ்வாமிகள் கமலை ஞானப் பிரகாசரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டு உபதேசம் பெற்று சொக்கலிங்க மூர்த்தி பூஜையினை ஏற்றுக் கொண்டார்கள்.
42, இக்கோயிலில் கமலை ஞானப் பிரகாசருக்குத் தஞ்சை மன்னனும் கிருஷ்ண தேவராயனும் வீதி விடங்கப் பெருமானுக்கும் வன்மீக நாதப் பெருமானுக்கும் ஆராதனைக்காக அளித்த தேவ தானங்கள் இராஜாங்கக் கட்டளை என்ற பெயரோடு விளங்கி வருகின்றன. இது இப்பொழுதும் தருமை ஆதீன நிர்வாகத்திலேயே நடைபெற்று வருகிறது.
43, திருவாரூரில் பூங்கோயில் அமைந்துள்ள முதல் சுற்றில் மூலாதார கணபதி வேறு எங்கும் இல்லாத விதத்தில் காட்சி தருகிறார். ஐந்து தலை பாம்பு சுருண்டு படுத்துக் கிடக்க அதன் நடுவில் தாமரையின் மேல் பாசம் அங்குசம் மோதகம் தந்தத்துடன் நர்த்தன கணபதி காட்சி தருகிறார்.
44, திருவாரூர் திருக்கோயிலில் வீதி விடங்க விநாயகர், ஐங்கலக்காசு விநாயகர், வாதாபி கணபதி, கமலாலயக் குளக்கரையில் மாற்றுரைத்த பிள்ளையார், ஆசை விநாயகர், உச்சிஷ்ட விநாயகர், பொற்கம்ப விநாயகர் முதலியன சிற்பச் சிறப்பாலும் தெய்வீக பக்திச் சிறப்பாலும் சிறப்புற்றவைகள்.
45, திருவாரூர் பூங்கோயிலின் உள்ளே பல்வேறு சிறப்பு சந்நிதிகள் உள்ளன. ஓட்டு தியாகர் கோயிலில்தான், சுந்தர மூர்த்திகளைக் கோயிலுள் போகாதவாறு விறண்மிண்டர் தடுக்க இறைவன் இங்கு வந்து ஆட்கொண்டான்.
46, ஆருர் அறநெறி தனிக்கோயில் அப்பரடிகள் பாடல் பெற்றது. நமி நந்தி அடிகள் வழிபட்டது. கண்டராதித்த சோழ தேவரது மனைவியாகிய செம்பியன் மாதேவி திருப்பணி செய்தது. இக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மேற்கு முகமாக உள்ளது.
·
பரவையுண்மண்டளி – இது தெற்கு கோபுரத்திற்கு அருகில் உள்ளது. பரவை நாச்சியார் வழிபட்டது. சுந்தரர் பாடப் பெற்றது. கிழக்குப் பார்த்த தனிக்கோயில்.
திருவாரூர் கோயிலில் இரண்டு சண்டேசர் சந்நிதிகள் உள்ளன. எம சண்டர், எமனே சண்டீசராக அமர்ந்துள்ளார்,
ஆதி சண்டேஸ்வரர்.
ஏராளமான சந்நிதிகள் உள்ளதால் குவித்த கரம் விரிப்பதற்கு வழியே இல்லை என்பதனை மகா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை “குவித்தகரம் விரித்தல் செலாக் கோயில்களும் பல உளவால்” என்று புகழ்கிறார்.
ஓம் நமசிவாய
இறை பணியில்
படித்ததை பகிர்ந்தது
இரா. இளங்கோவன்.
No comments:
Post a Comment