உட்கார்ந்த நிலையில் ராமச்சந்திர
பெருமாள்.. சுவடிகளுடன் அனுமன்..!!
அருள்மிகு ராமச்சந்திர பெருமாள்
திருக்கோயில்...!!
🍀 *இந்த கோயில் எங்கு உள்ளது?* 🍀
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெடுங்குன்றம் என்னும் ஊரில் அருள்மிகு ராமச்சந்திர பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
*இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?*
திருவண்ணாமலையில் இருந்து 52 கி.மீ தொலைவில் நெடுங்குன்றம் என்னும் ஊர் உள்ளது. நெடுங்குன்றத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
*இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?*
கருவறையில் ராமச்சந்திர பெருமாள் சின் முத்திரையோடு வலது கையை மார்பின் மீது வைத்து, இடது கையை உட்கார்ந்த நிலையில் முட்டியின் மீது வைத்து அமர்ந்த திருக்கோலத்தில், அர்த்தம் சொல்வது போல் காட்சியளிக்கிறார்.
சீதாபிராட்டி வலது கையில் தாமரை மலரையும், இடது கையில் திருவடிச் சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமாக வைத்து அண்ணலின் இடது புறம் அமர்ந்திருக்க, தம்பி லட்சுமணன் வலது புறத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
ராமர் இத்தலத்தில் மட்டுமே அமர்ந்த நிலையில் உள்ளார் என்பது விசேஷம் ஆகும். முக்கிய அம்சமாக இத்தலத்தில் இருக்கும் ராமர் கோதண்டம், வில் அம்பு இன்றி காட்சியளிக்கிறார். அதற்கு பதில் வில் அம்போடு லட்சுமணன் அருகில் அருள்பாலிக்கிறார்.
இங்கு ராமர் சாந்த ராமராக காட்சியளிக்கிறார். இவரை வணங்கினால் மன அமைதி, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம்.
*வேறென்ன சிறப்பு?*
எங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாக அனுமன், ராமபிரான் எதிரில் சுவடிகளைக் கையில் கொண்டு, தரையில் அமர்ந்து கர்ப்பகிரகத்துக்குள்ளேயே காட்சி தருகிறார்.
8 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த கோயில், தமிழகத்திலேயே மிகப்பெரிய ராமர் கோயில் ஆகும். இத்தல கர்ப்பகிரகம் குகை போன்று அமைந்திருப்பது மிகவும் சிறப்பானதாகும்.
இத்தலத்தில் உள்ள சுதர்சன ஆழ்வாரை வணங்கினால் கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியன கைகூடும் என்பது நம்பிக்கை.
*என்னென்ன திருவிழாக்கள்
கொண்டாடப்படுகிறது?*
பங்குனி பிரம்மோற்சவம், ராமநவமி, வைகாசி விசாகம், கருட சேவை, கிருஷ்ண ஜெயந்தி, உரியடி உற்சவம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
மேலும், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
*எதற்கெல்லாம் பிரார்த்தனைகள்
செய்யப்படுகிறது?*
வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு மற்றும் குடும்பத்தில் ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர்.
*இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?*
இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் மூலவருக்கு பால், தயிர், மஞ்சள், கதம்ப பொடி, தேன் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
மேலும், நெய்தீபம் ஏற்றுதல், துளசி மாலை சாற்றுதல், வஸ்திரம் சாற்றுதல், புடவை சாற்றுதல், பொருட்கள் மற்றும் நகைகள் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திகடன்களாக செலுத்துகின்றனர்
🍀 * ஸ்ரீ ராம ஜெய ராம ஜெயம் * 🍀
No comments:
Post a Comment