#குன்றக்குடி (மயூரகிரி)
#ஷண்முகநாத_சுவாமி
திருக்கோயில்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்றக்குடி திருத்தலம்.குமரனின் அருள் பெற்ற இத்திருத்தலம், பிரார்த்தனை தலங்களில் முதன்மையானது. இக்கோவிலின் சிறப்பே இறைவன் சண்முகநாதர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இந்த மலையே,மயில் உருவம் போன்று காட்சியளிப்பது தான்.
சுவாமி : சண்முகநாதர்
அம்பாள் : வள்ளி, தெய்வானை
தீர்த்தம் : தேனாறு
தலவிருட்சம் : அரசமரம்
தல வரலாறு:
முருகப்பெருமானின் வாகனமான மயில்,அவரின் சாபத்தால் மலையாகிப்போனதாக சொல்கிறது ஒரு புராண செய்தி. ஒரு முறை அசுரர்கள், முருகப்பெருமானின் மயிலிடம், “நான்முகனின் வாகனமான அன்னமும், திருமாலின் வாகனமான கருடனும் நாங்கள்தான் மயிலை விட சக்தி படைத்தவர்கள்,மேலும் வேகமாக பறக்கக் கூடியவர்கள் என்று கூறுகின்றன” என்று பொய் கூறினர். இதைக் கேட்டு உண்மை என்று நம்பிய மயிலும், கண் மூடித்தனமாக கோபம் கொண்டு பிரம்மாண்ட உருவம் எடுத்து, கருடனையும், அன்னத்தையும் விழுங்கிவிட்டது.
பிரம்மனும், திருமாலும், முருகப்பெருமானிடம் இது குறித்து முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற முருகப்பெருமானும், மயிலிடம் இருந்து அன்னத்தையும், கருடனையும் மீட்டுக் கொடுத்தார். மேலும் மயிலின் கர்வத்தினை அடக்க மயிலை, மலையாக மாறிப்போகும்படி சாபமிட்டார்.
தன் தவறுக்கு வருந்திய மயிலும் குன்றக்குடி வந்து மலையாகிப்போனது. ஆறுமுகப் பெருமானைக் குறித்து மலையாக இருந்த படியே தவம் இருந்தது.மயிலின் தூய்மையான தவத்தில் மகிழ்ந்த முருகப்பெருமானும் , மயிலுக்கு சாபவிமோசனம் அளித்தார். மயில் உருவத்தில் இருந்த அந்த மலை மீதே எழுந்தருளி அருள்புரிந்தார் என்கிறது இத்திருக்கோயிலின் தல வரலாறு.
இந்த ஆலயத்தில் விசேஷமாக காவடி வழிபாட்டை சொல்லலாம். இது தவிர பால் குடம் எடுத்தல், அங்கபிரதட்சணம் செய்வது, அடிப் பிரதட்சணம் போன்றவை பக்தர்கள் தங்கள் எண்ணிய பிரார்த்தனை நிறைவேறியப் பின் செய்யும் நேர்த்திக்கடன்களாகும். இக்கோவில் வந்து வேண்டுதல் வைத்தால் தீராத தோல் வியாதிகள் கூட தீரும் என்பது நம்பிக்கை.வேண்டுதல் நிறைவேறியப் பின் உடல் உறுப்புகள் பொறிக்கப்பட்ட வெள்ளி தகட்டை உண்டியலில் சேர்ப்பிக்கின்றனர்.
மலையின் கீழ் பகுதியில் சுயம்புவாக தோன்றிய தேனாற்றுநாதர் கோவில் உள்ளது. இந்த சுயம்பு மூர்த்தியை அகத்திய முனிவர் வணங்கி வழிபாடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தல அம்பாள் அருட்சக்தி என்ற திரு நாமத்துடன் அழகே வடிவாக எழுந்தருளியிருக்கிறார்.
வரலாற்று செய்தி
சிவகங்கை மருதுபாண்டியருள் மூத்தவரான பெரிய மருதுவுக்கு ஒரு முறை முதுகில் ஏற்பட்டிருந்த ராஜ பிளவை என்னும் கட்டியை,குன்றக்குடி முருகப்பெருமானின் அருட்பிரசாதமான திருநீறு குணப்படுத்தியது என்கிற வரலாற்று செய்தி இந்த தலத்தில் உள்ள இறைவனின் பெருமையை நமக்கு பறைசாற்றும்.
ஒருமுறை பெரிய மருதபாண்டியருக்கு பிளவை என்னும் நோய் ஏற்பட்டு, எவ்வளவு ராஜ வைத்தியம் செய்தும் குணமாகவில்லை. வலி அதிகமாக இருந்ததால் துடித்துப் போனார்.
இந்த நிலையில் பெரிய மருதுவைப் பார்க்க வந்த ஒருவர், ‘ஒரு முருக பக்தர் வந்து, பிரார்த்தித்துக் கொண்டு திருநீறு பூசினால் குணமாகும்’ என்று தெரிவித்தார்.
உப்பு வாணிகம் செய்து கொண்டிருந்த காடன் செட்டியார் என்பவரை அழைத்து வந்தார்கள். அவர் தனது குலதெய்வமான முருகனை வேண்டிக் கொண்டு விபூதி பூசிவிட்டு கூட இருந்து உதவினார். ஓரிரு தினங்களில் பிளவைக் கட்டி உடைந்து வலி நீங்கியது.
இது புராணக் கதையல்ல.. வரலாற்று நிகழ்வு. ‘வீரமருது பிளவை நோய் தீர்த்த விரல் மருந்தே! ஆறுமுக அப்பா குன்றக்குடி யோங்கும் அற்புதமே’ என்ற குன்றக்குடி பாமாலையில் வரும் வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.
நோய் குணமான நெகிழ்ச்சியில் இருந்த பெரிய மருது, காடன் செட்டியாரின் குலதெய்வமான குன்றக்குடி ஆறுமுகனைப் பார்க்க விரும்பினார். சுற்றிலும் புதர் மண்டி, கவனிப்பின்றி இருந்த குன்றக்குடி மலைக் கோவிலைப் பார்வையிட்டு, திருப்பணிகளை செய்யத் தொடங்கினார். தாம் வந்து தங்கி பணிகளைப் பார்வையிட வசதியாக குன்றக்குடியில் ஒரு சிறிய அரண்மனையையும் நிறுவினார்.
திருப்பணிகள் செய்த மருதுசகோதரர் :
திரு வீதிக்குத் தென்திசையில் உள்ள தீர்த்தக் குளத்தை செப்பனிட்டு, படித்துறைகள் கட்டி, சுற்றிலும் தென்னை மரங்களை நட்டு வைத்தார். அதற்கு ‘மருதாவூரணி’ என்று பெயர் சூட்டப்பட்டது.
மூலவரின் பீடத்தின் கீழ் மாறியிருந்த எந்திரத் தகட்டை செப்பனிட்டு சாத்தினார். மூலவர் சன்னிதியில் மயில் மண்டபம், உற்சவர் சன்னிதியில் அலங்கார மண்டபம் மற்றும் சுற்றுச் சுவர்களை கட்டினார். அங்குள்ள ராஜ கோபுரமும் பெரிய மருதுவால் கட்டப்பட்டதே ஆகும். அடிப்பகுதியில் மருது பாண்டியன் உபயம் என்று பொறித்து, ஒரு தங்க கவசம் செய்து உற்சவ மூர்த்திக்கு சாத்தினார். தேர் செய்து, தைபூச விழாவினைப் பெரிய அளவில் நடத்தினார். காடன் செட்டியார் பெயரில் மண்டகப்படி ஏற்படுத்தி, அன்னதானச் சத்திரமும் கட்டினார் என்று தல வரலாறு கூறுகிறது.
ஆலய அமைப்பு :
இன்று குன்றக்குடி என்றும், மக்களால் குன்னக்குடி எனவும் வழங்கப் பெறும் இத்திருத்தலம் புராணங்களில் மயூரகிரி, சிகண்டி மலை என்று போற்றப்படுகிறது. இதற்குக் காரணம், தொலைவில் நின்று பார்க்கும் போது, குன்றானது நிமிர்ந்து நிற்கும் மயில் போலத் தோற்றமளிப்பதே ஆகும்.
முருகப்பெருமானின் வாகனமாகிய மயில், தனது ஆணவத்தால் சாபம் பெற்றிருந்தது. சூரசம்ஹாரம் முடிந்ததும் வேலவன் இவ்வூருக்கு வந்து மயிலுக்கு சாப விமோசனம் கொடுத்து மலைமேல் குடி கொண்டதாகப் புராணக்கதை சொல்கிறது.
குன்றக்குடியில், மலைக் கோவில், கீழ் கோவில் என்றும் இருபகுதிகள் உள்ளன. கீழே குடைவரைக் கோவிலில் தேனாற்று நாதரும், அழகம்மையும் கிழக்கு நோக்கி காட்சித்தருகிறார்கள். அவர்களுக்கு அருகில் சுந்தரேஸ்வரர், அண்ணாமலையார், மலைக் கொழுந்தீசர், சண்டேசர் சிலை வடிவங்கள் உள்ளன.
மலையின் நுழைவு வாசல், மயிலின் தோகை போல் தோன்றுவதால், அங்கே உள்ள பிள்ளையார் ‘தோகையடி விநாயகர்’ என்று போற்றப்படுகிறார். அவரை வழிபட்டுவிட்டு மலை ஏறத் தொடங்கினால், மேலே முருகனுக்கு காவடி எடுத்த இடும்பன் சன்னிதி உள்ளது. சற்று தள்ளி இடப்புறம் தேவியோடு தோன்றும் வல்லப கணபதி காட்சித்தருகிறார். மலைக் கோவில் வாசலில் முருகனின் படைத்தளபதி வீரபாகு நம்மை வரவேற்கிறார்.
தலைவாசலில் தெற்குநோக்கிய ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. மலை மீது கோவிலில் ஒளி பிரகாரம்தான் உள்ளது. அதில் நால்வர், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், சொர்ணகணபதி, பைரவர், நடராஜர் ஆகியோர் சன்னிதிகளும், சோமாஸ்கந்தர், விசாலாட்சி சன்னிதிகளும் வடகிழக்கில் நவக்கிரக சன்னிதியும் விளங்குகிறது.
கருவறையில் கிழக்கு நோக்கியபடி மூலவர் ‘சண்முகநாதர்’ என்ற பெயர் பெற்று, ஆறு முகங்களும், பன்னிரு கரங்களுமாக, சுகாசன நிலையில், வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்கவிட்டும், நிற்கும் மயில் மீது வீற்றிருப்பது போல் இருக்கும் காட்சி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
பொதுவாக முருகப்பெருமான் ஆலயங்களில் முருகனுக்கு இருபுறமும் தேவியர் இருவரும் நின்று கொண்டிருப்பார்கள். ஆனால் இங்கே வலதுபுறம் வள்ளியும், இடதுபுறம் தெய்வானையும் தனித்தனியாக மயில்களின் மீது இருப்பது வேறெங்கும் காணமுடியாத தோற்றமாகும்.
குன்றவர் குடைவரைக் கோயில்:
கிபி 7 ஆம் நூற்றாண்டில் தொடக்ககாலப் பாண்டியர்களால் அமைக்கப்பட்டது. இதில் பாறையில் வெட்டப்பட்ட மூன்று குகைகள் காணப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமான இக்கோயில் தற்போது இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இம்மூன்று குடைவரைகளும் இவை குடையப்பட்டுள்ள குன்றின் தெற்குப் பகுதிச் சரிவில் உள்ளன. இவை ஒன்றுக்குப் பக்கத்தில் மற்றதாக அடுத்தடுத்து வரிசையாகக் குடையப்பட்டுள்ளன. அடுத்தடுத்த குடைவரைகளுக்கு இடையில் உள்ள பகுதியில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கோட்டத்தில் சிவலிங்கமும், மற்றதில் வலம்புரி விநாயகர் சிற்பமும் உள்ளன. இம்மூன்று குடைவரைகளுக்கும் முன்னால், அவற்றை முழுவதுமாக மறைக்கக்கூடிய வகையில் மண்டபம் ஒன்று உள்ளது. இது பிற்காலத்தைச் சேர்ந்தது.
இக்குடைவரை கோயிலில் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் உள்ளன. இவை அக்காலத்துச் சிற்ப மரபையொட்டிய புடைப்புச் சிற்பங்களாகும். ஒரு முறை, சிவனைத் திருமால் ஆயிரத்து எட்டுத் தாமரை மலர்களால் அர்ச்சிக்கும் போது திருமாலைச் சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒருமலரை எடுத்து ஒளித்து வைத்தாராம். அப்போது திருமால் காணாமற் போன ஒரு தாமரை மலருக்கு ஈடாகத் தனது கண்களுள் ஒன்றைப் பிடுங்கி மலராக அர்ச்சித்தாராம். இச்செயலால் மகிழ்ந்த சிவபெருமான் திருமாலுக்குச் சக்கர ஆயுதத்தை அளித்ததாகக் கூறப்படும் புராணக்கதை இக்கோயிலில் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தில், சிவபெருமான் நடனமாடுவதைத் திருமால் கருடன்மீது சாய்ந்தபடி பார்ப்பதையும், பிடுங்கி எடுத்த ஒரு கண் திருமாலின் கையில் இருப்பதையும் காண முடிகிறது.
இங்குள்ள குடைவரைகளின் சுவர்களிலும், தூண்களிலும், முன் மண்டபத்திலுமாக மொத்தம் 45 கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. இவற்றுட் பெரும்பாலானவை பாண்டிய மன்னர் காலத்தவை. இவற்றுள் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் கல்வெட்டுக்கள் மட்டும் 12 உள்ளன. இவற்றுடன், சடையவர்மன் சிறீவல்லபதேவன், விக்கிரம பாண்டியன், மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆகிய பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுக்களும் இங்கு உள்ளன. சோழ மன்னர்களில் முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் ஆகியோர் காலக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. சில கல்வெட்டுக்களில் மன்னர் பெயர்கள் காணப்படவில்லை.
வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை
படித்து பகிர்ந்தது
இரா .இளங்கோவன்
நெல்லிக்குப்பம்
No comments:
Post a Comment