Saturday, November 25, 2023

இரண்டாம் இராஜராஜேச்சுரம் என்ற தாராசுரம் ஐராவதேஸ்வரர் திருக்கோயில் வரலாறு:

இந்திரனின் வாகனமான ஐராவதம் துர்வாச முனிவரிடம் பெற்ற சாபம் நீங்க 
சிவபெருமானை வணங்கி சாபவிமோசனம் பெற்ற தலமான,
தாரன் என்ற அசுரன் சிவபூஜை செய்ய தலமான,எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்ற தலமான, 
இரண்டாம் இராசராசனால் கட்டப்பட்ட சோழர் கால கட்டிடக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் உலகப் புகழ்பெற்ற கும்பகோணத்தில் உள்ள 
#இரண்டாம்இராஜராஜேச்சுரம் என்ற 
#தாராசுரம் 
#ஐராவதேஸ்வரர்
#தெய்வநாயகி (#வேதநாயகி) (#பெரியநாயகி) அம்மன் திருக்கோயில் வரலாறு:

'சிற்பிகளின் கனவு' என்று போற்றப்படும் ஒரே ஒரு கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் என்கிறது வரலாறு. ஆலயத்தின் முகப்பு தொடங்கி இண்டு இடுக்கெல்லாம் அழகிய சிற்பங்கள் மலிந்து கிடக்கும் உன்னதக் கோயில் இது. அதனால்தான் யுனெஸ்கோவால், உலக பாரம்பரியச் சின்னமாக இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிற்பங்களைக் கொண்ட அபூர்வ கோயில் இது.

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் உள்ள ஓர் இந்து சிவன் கோவில் தான் தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்) ஆகும். இந்த சிவன் கோவில் இரண்டாம் ராஜராஜனால் 12 நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து, அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.

சிற்பங்கள் நிறைந்த கோயில், அதாவது சோழர் மன்னர்களில் 2-ம் ராஜராஜனால் கட்டப்பட்ட மிகவும் அழகிய கலைக்கூடம் இக்கோயில். இந்த கோவிலை சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன.

தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும் நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களாகும்.

தேர் போன்று வடிவிலமைந்த மண்டபம் என பல சிற்ப கலைப் படைப்புகள் இக்கோயிலில் நிறைந்துள்ளது.

*மூலவர்: ஐராவதேஸ்வரர்
*அம்மன்: தெய்வ நாயகி, பெரியநாயகி 
*தல விருட்சம்: வில்வம்
*தீர்த்தம்: எம தீர்த்தம்
*புராண பெயர்: இரண்டாம் இராஜராஜேஸ்வரம்
*ஊர்: தாராசுரம், கும்பகோணம் 
*மாவட்டம்: தஞ்சாவூர் 
*மாநிலம்: தமிழ்நாடு 

#தல_வரலாறு:

இரண்டாம் இராஜராஜனின் காலத்தில் இராஜராஜேச்சுரம் என்று பெயரிடப்பட்டு. பின் தாராசுரம் என்று அழைக்கப்படுகிறது. ஐராவதேஸ்வரரின் துணைவி தெய்வநாயகி.

புராண ரீதியாக இந்திரனது பட்டத்து யானையாகிய ஐராவதம், தலைக்கனம் ஏறி துர்வாச முனிவரிடம் அலட்சியமாக நடந்து கொண்டது, துர்வாச முனிவரோ கோபத்துக்கும், சாபத்துக்கும் பெயர் பெற்றவர்; அவர் ஐராவதத்தின் அகங்காரத்தை அறிந்து, சாபம் கொடுத்து விட்டார். சாபம் பெற்ற ஐராவதம் தனது பெருமையை இழந்து, நிறம் இழந்து காட்டானையாக அலைய வேண்டி வந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் தாராசுரம் எம்பெருமானை அன்போடு வழிபட்டு இறைவன் அருளாலும், கருணையினாலும் பழைய உருவை எய்தி, தனது அகங்காரத்தை விட்டொழித்தது. இவ்வாறு ஐராவதம் பேறு பெறுவதற்கு உதவிய இறைவன், ஐராவதேஸ்வரர் என்றே போற்றப்படலானார் என்கிறது புராணம்.

இன்னொரு புராண வரலாறும் உண்டு. ஒரு சமயம் எமதர்மன், முனிவர்களின் கோபத்துக்கு ஆளாகி சாபத்தையும் ஏற்க வேண்டி வந்தது. அச்சாபம் அவனின் உடலைத் தகிக்க, அந்த வெப்பத்தைத் தாள மாட்டாதவனாய் எங்கெங்கெல்லாமோ அலைந்து சென்று பார்த்தும் பலனில்லாமல் போகவே, இறுதியாக தாராசுரம் வந்தான். ஐராவதேஸ்வரர் திரிசூலத்தால் உண்டாக்கியிருந்த தீர்த்தத்தின் சிறப்பை உணர்ந்தான். உடன் அதில் இறங்கி நீராடினான். வெப்பமாகிய வேதனையிலிருந்து மீண்டான் என்பதும் ஒரு புராண வரலாறு. எமதர்மன் சாபம் பெற்றதால் கொண்ட உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோசனம் பெற்றதால், அக்குளம் “எமதீர்த்தம்” என அழைக்கப்படுகிறது.

இத்திருத்தலம் தொடர்பான மற்றொரு புராணமும் உள்ளது. மரணமற்ற பெருவாழ்வு வாழவும், தேவர்களை வெல்லவும் தாரன் என்ற அசுரன் இத்தலத்து இறைவனை பூசித்து, தவம் இருந்து தான் விரும்பிய அருளைப் பெற்றதால் இத்தலம் உள்ள இடம் தாராசுரம் என்றானது என்றும் கூறுகிறது.

#உலகப் பாரம்பரிய சின்னம்:

1987-ல், பெருவுடையார் கோயில், இயுனெசுகோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீசுவரர் கோயிலும் மற்றும் ஐராவதேசுவரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது.

#தாராசுரம் கோவில் அமைப்பு & சிறப்புகள்: 

சோழ மன்னர்களில் 2ம் இராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோவில். இக்கோவிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோவில் கொண்டுள்ளது.

வல்லுனர்களால், “சிற்பிகளின் கனவு” என்று கருதப்படும் இந்த தலம் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. வழக்கமான சைவத்தலங்களின் அமைப்பிலிருந்து சற்றே வேறுபட்டுள்ளது. இறைவிக்கென்று தனியே ஒரு கோவில் வலதுபுறம் அமைந்துள்ளது. இது வழக்கமான தலங்களைபோல முதலில் அமையப்பெற்று பின் கால மாற்றத்தில் சுற்றுச்சுவர் மறைந்து தனித்தனி சன்னதிகளாக அமையப்பெற்றிருக்கலாம் என்று ஒரு கூற்று இருந்தாலும், ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பெண் தெய்வத்துக்கும் சமமாய் ஒரு தனி கோவில் அமைத்திருப்பது இதன் சிறப்பாகும். இக்கோவில் கருவறை விமானம் ஐந்து நிலை மாடங்களுடன் 80 அடி உயரம் உள்ளது. 63 நாயன்மார்களின் சிற்பங்களும் இந்தக் கோவிலில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஐராவதேஸ்வரர் கோவிலின் வலப்புறத்தில் வெளியே தெய்வநாயகி அம்மனுக்குத் தனியாக கோவில் அமைந்துள்ளது.

கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் இராஜராஜன் அங்கிருந்து தனது தலைநகரைத் தாராசுரத்திற்கு மாற்றி, அங்கு கட்டிய கோவிலே ஐராவதேசுவரர் கோவிலாகும். முதலில் இக்கோவிலின் இறைவனுக்கு ராஜராஜேஸ்வரமுடையார் என்ற பெயர் வழங்கப்பட்டுப் பின்னர் ஐராவதேஸ்வரர் என பெயர் கொண்டது. தக்கயாகப்பரணி இந்தக் கோவிலின் மண்டபத்தில் தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்தக்
கோவிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் இராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி காணப்பட்டது.

#கட்டிடக்கலை: 

விரல் நுனி அளவில் தொடங்கி விரல், கை, முழம், முழங்கை பிறகு எட்டு வகையிலான எட்டு தாளம், நவ தாளம், தச தாளம் என எல்லாவகை அளவுகளிலும் சிற்பங்களைக் கொண்ட அதிசய கோயில் இது. சோழர்களின் போர் முறை, சிற்பம், ஆடல், கட்டுமானம், பக்தி, கட்டடம், வானவியல், ஐதீகம், புராணங்கள், சிவதத்துவம் என அனைத்தையும் சிற்பங்களாக தன்னுள் வைத்திருக்கும் பிரமாண்ட ஆலயம் இது. அடிக்கு 1000 சிற்பங்கள் என்ற புகழ் மொழியையும் கொண்ட கோயில் இது.

தேர் வடிவிலமைந்த இக்கோவில் கரக்கோவில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன. தஞ்சாவூர் பெரிய கோவில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோவில் இரண்டையும் விடச் சிறியதாக இருப்பினும் இக்கோவில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கோவிலின் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறத்தே அமைந்துள்ளது. கோவில் விமானம் 24 மீ (80 அடி) உயரங்கொண்டது.

இக்கோவிலின் கருவறையைச் சுற்றி உட்சுற்றுப்பாதையும் ஒருகோட்டச்சு மண்டபங்களும் அமைக்கப்படவில்லை. முன் மண்டபம் ராஜகம்பீரன் திருமண்டபம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது. முன் மண்டபத்தின் தென்பகுதி கல்லாலான சக்கரங்களுடன் குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும் தேர் வடிவிலுள்ளது. இம்மண்டபத்தின் தூண்கள் நுட்பமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் உள்ளன.

#இசைப் படிகள்: 

நுழைவாயிலில் நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள், தட்டும்போது சரிகமபதநீ என்ற சுரங்களைக் கொடுக்கின்றன.

#ராஜகம்பீரன் திருமண்டபம்:

ராஜகம்பீரன் திருமண்டபம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதில் உள்ள சக்கரம் உள்ளிட்ட பல சிற்பங்கள் அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.

குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் இம்மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.

#சிற்பங்கள்: 

கோவிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். கருவறையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோவில்களில் காணப்படாதது. சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது.

பிறகோவில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு. கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோவில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

கோவிலின் வெளிச் சுவர்களில் மூன்று முகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர் (சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும். கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார். 

மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் உள்ளன.

கவிச்சக்கரவர்தி ஒட்டக்கூத்தர், தன்னுடைய தக்கயாகப் பரணியில் பெரும் சினம் கொண்ட வீரபத்திரரால் தக்கன் யாகம் அழிந்து சகலரும் தண்டிக்கப்பட்டனர். அப்போது அங்கே ஈசனார் தோன்றி, அன்னை சக்திக்கு போர்க்களம் காட்டி, இறந்துபோன உயிர்கள் யாவருக்கும் அருள்புரிந்து ராசராசபுரி இத்தலத்தில் எழுந்தருளினார் என்று குறிப்பிடுகிறார். இரண்டாம் ராஜராஜன் காலத்தில் ராஜராஜேஸ்வரம் என்ற இந்த ஊர், பிறகு தெலுங்கு மன்னர்கள் காலத்தில் ராராசுரம் என்றாகி, அதுவே தாராசுரம் என்றானதாகவும் தகவல் உண்டு. தக்கயாகப் பரணி இங்குதான் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்றும் கூறுவார்.தக்கயாகப் பரணி இங்குதான் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்றும் கூறுவார்.
இங்கு 30 கல்வெட்டுகள் உள்ளன. கோயிலின் கிழக்கு பிராகாரச் சுவரில் உள்ள கல்வெட்டும், ராச கம்பீர மண்டபத்தில் உள்ள கல்வெட்டும் இந்த கோயிலைக் கட்டியவன் இரண்டாம் ராஜராஜனே என்று அறிவிக்கின்றன. இங்குள்ள துவாரபாலகர் சிலைகள் சாளுக்கிய நாட்டின் தலைநகரான கல்யாணியில் இருந்து கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுகிறது.

#சாளரங்கள்:

பிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்களாகும். இம்மண்டபங்களில் சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கிரானைட் சாளரங்கள் அமைந்துள்ளன.

#சோழர் காலத்தில் பெண்களின் நிலை:

சோழர்காலத்தில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்வது மிகவும் சுவராஸ்யமானது. பெண்கள் சமூகத்தில் நேரடியான பங்களிப்பை ஆற்றினர். சமூகத்தின் அடித்தட்டுப் பெண்கள் முதல் அரச பெண்கள் வரை சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் கலாச்சார பங்களிப்பை ஆற்றினர்.
ஐராவதீஸ்வரர் கோயிலில் பெண்களின் சமூகநிலையைக் காட்டும் தாய்மார்கள், மனைவியர், இசைக்கருவிகளை இசைக்கும் பெண்கள், நடன மாதர்கள், பெண்துறவியர், அரசகுலப் பெண்கள், போரிடும் வீரப்பெண்கள், குழந்தை பிறப்பு, சமையல் செய்தல் போன்ற பெண்களின் சிற்பங்கள் இராஜகம்பீர மண்டபத்தின் மேற்பகுதியில் உள்ளன.

நாட்டியத்தில் சிறந்த தேர்ச்சி பெற்ற ஆடல் மகளிர் நடனமுத்திரைகளுடன் நடனமாடும் சிற்பங்களும் காணப்படுகின்றன. மேலும் நுண்ணிய வேலைபாடுகள் அமைந்த அணிகலன்களையும் உயர்ந்த ஆடைகளையும் அணிந்த பெண்களின் சிற்பங்களும் உள்ளன.
இச்சிற்பங்களின் வழியாகச் சோழர்காலத்தில் பெண்கள் சமூகத்தின் முக்கிய பங்காகியதை அறியமுடிகிறது.

பிரார்த்தனை: 

சாபம் விமோசனம் கிடைத்து, சகல ஐஸ்வர்யங்களும் செழிக்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்: 

சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சார்த்தி, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

திறக்கும் நேரம்: 

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இத்திருக்கோயில் குறித்து "தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்)" என்ற நூலை முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ளார்.

சரித்திரத்தின் பிரமாண்ட பிரவாகத்தை தன்னுள் வைத்திருக்கும் தாராசுரம் கோயிலின் பெருமைகள் காணக் காண பிரமிப்பு அடையச் செய்பவை. இங்கு காணவும் கற்கவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. எனவே வாருங்கள் சோழர் உலாவுக்கு! சரித்திரமும் சமயமும் கலந்த யாத்திரை உங்களை அழைக்கிறது.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன் 
நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...