Sunday, November 26, 2023

திருக்கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சி தருவதாக அருள்பாலிக்கின்றார் சிவபெருமான்.

நினைத்தாலே 
முக்தி தரும் பஞ்சபூத
அக்னி தலமான, தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்றான,
பல யுகங்கள் கடந்து இன்றுவரை நிலைத்திருக்கும்
திருமாலும் பிரம்மனும்
அடிமுடி காண முடியா உலகப் புகழ்பெற்ற 
#திருவண்ணாமலை 
#அண்ணாமலையார் (#அருணாச்சலேஸ்வரர்) 
#உண்ணாமுலையம்மை திருக்கோயில்
#திருக்கார்த்திகை_மகாதீபம் வரலாறு:

கார்த்திகை தீபமானது கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கார்த்திகை திருநாளானது 26.11.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. திருக்கார்த்திகை அன்று வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளை அகல் விளக்குகளால் அலங்கரிப்பார்கள். கார்த்திகை திருநாளில் மாலை 6 மணி அளவில் அகல் விளக்கினால் வீடுகள் தோறும் ஜொலித்து காணப்படும். இந்த தீப திருநாளானது 3 நாட்கள் அனைவராலும் கொண்டாடப்படும். நாம் விளக்கு ஏற்றுவதற்காக ஊற்றப்படும் எண்ணெயும், அதில் இடப்படும் திரியும் தன்னைக் கரைத்துக் கொண்டு நமக்கு பிரகாசமான ஒளியை தருகிறது. இது போல மனிதர்களும் தன்னலம் பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த கார்த்திகை தீபம் உணர்த்துகிறது.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும், காத்தல் தொழிலைச் செய்யும் விட்டுணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. இருவரும் அடிமுடி தேடிக் காணமுடியாமல் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காட்டியருளினார். 

ஒருமுறை பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. இருவரும் தங்களுக்குள் ஒரு போட்டியை நடத்தினர். உலகாளும் ஈசனான சிவபெருமானின் முடியை பிரம்மா பார்த்து வருவது எனவும், அவரது பாதத்தை விஷ்ணு பார்த்து வருவது எனவும் முடிவு செய்தனர். அன்னப்பறவை உருவமெடுத்து சிவனின் முடியைக் காண உயரே பறந்தார் பிரம்மா. விஷ்ணுவோ, பன்றி உருவமெடுத்து, பூமியைத் தோண்டி சிவனின் பாதத்தை தேடி பாய்ந்தார். பிரம்மா உயரே பறக்க பறக்க சிவன் உயர்ந்து கொண்டே போனார். விஷ்ணு கீழே போசுப்போக சிவனின் கால்கள் நீண்டு கொண்டே போனது. இருவருமே தோல்வியடைந்து சிவபெருமானிடம் செய்வதறியாது நின்றனர். அப்போது சிவன் இருவரிடமும், இந்த உலகில் யாருமே பெரியவர் இல்லை, நமது மனதில் இருக்கும் அகங்காரமே இது போன்ற போட்டிகளுக்கு காரணமாகிறது என்றார். இதைக்கேட்ட பிரம்மா, விஷ்ணுவின் மனதில் ஒளி பிறந்தது. அப்போது சிவனும் ஜோதி வடிவமாய் காட்சி தந்தார். தங்களுக்கு கிடைத்த இந்த ஜோதி வடிவக்காட்சி அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென இருவரும் வேண்டினர். கார்த்திகை மாதம், திருக்கார்த்திகை தினத்தில் திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சி தருவதாக அருள்பாலிக்கின்றார் சிவபெருமான்.

கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாக தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. கார்த்திகை தீப விழாவினை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக பிரித்து கோவில் மற்றும் வீடுகளில் கொண்டாடுவர்.

#குமராலய தீபம்: 

கார்த்திகை மாதத்தில் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாள்.

#விஷ்ணுவாலய தீபம்: 

கார்த்திகை மாதத்தில் விஷ்ணு கோவில்களில் கொண்டாடப்படும் ரோகினி நட்சத்திரம் கூடிவரும் நாள்.

#சர்வாலய தீபம்: 

ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும். கார்த்திகை மாதத்து முழுமதி திதி.

#கார்த்திகை மாதம்:

தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம். தமிழர்கள் தம் இல்லங்களில் 27 தீபம் ஏற்றுவது தான் சிறப்பு: இவை 27 நட்சத்திரங்களைக் குறிக்கும்.

#கார்த்திகை நாள்:

பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள்மீன் பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள்மீன்களில் ஒரு நாள்மீன் கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்ற கார்த்திகை-நாள் முக்கியமான நாளாகத் தமிழர்களால் வழிபடப்பட்டு வருகின்றது.

#திருவண்ணாமலை கார்த்திகை தீபம்:

திருவண்ணாமலையில் காலையில் பரணி தீபம் ஏற்றிய பிறகு, மாலையில் மலையில் இத்தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதிகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் திருவண்ணாமலை மலையானது 2668 அடி உயரத்தை கொண்டுள்ளது.

இந்த மலை மீது தீபம் ஏற்ற செம்பு, இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபம் ஏற்ற சுமார் 3000 கிலோ மேற்பட்ட நெய்யும், 10O0 மீட்டர் காட துணியும் கொண்டு ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலையில் தான் சக்தியும், சிவனும் அர்த்தநாரிஸ்வர கோலத்தில் கலந்தனர். கார்த்திகை தீபமன்று நாம் வீட்டில் ஏற்றும் தீப விளக்கானது தீப ஒளியானது யார் மீது படுகிறதோ அவர்களுக்கு மறுபிறவியில் எந்த ஒரு துன்பமும் நடக்காது. இறைவன் மகாபலிக்கு முக்தி அளித்தபோது ‘கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்ற மகாபலியின் விருப்பத்தினை, நிறைவேற்றி இறைவன், மகாபலியை தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார். இப்படியாக மகாபலியின் வாழ்க்கையானது இறைவனின் திருவருளை சென்றடைந்தது.

#பரணி தீபம்:

காலை 5 மணியளவில் 5 மடக்குகளில் (அகல்) தீபம் ஏற்றி வைப்பார்கள். இதுவே பரணி தீபம் ஆகும். கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் இத்தீபம் ஏற்றுவதால் "பரணி தீபம்"எனப்படுகிறது. 5 மடக்குகளும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும்.

தீபத் திருநாளன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் ஏற்றப்படுவதைப் பரணி தீபம் என்றும் மாலையில் மலையுச்சியில் ஏற்றப்படுவதை மகாதீபம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாகநின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றும் மலையானது 2668 அடி உயரம் கொண்டது. இம்மலை மீது தீபம் ஏற்ற செம்பு ,இரும்பு கொப்பரை கொண்டு தயாரிக்கப்பட்ட கொப்பரையில் தீபம் ஏற்றுவர்.

இக்கொப்பரையை 1668-இல் பிரதானிவேங்கடபதி ஐயர் என்பவர் வெண்கல கொப்பரையாகச் செய்து கொடுத்தார். பின்பு 1991-இல் இரும்பினால் உருவாக்கப்பட்ட கொப்பரை தற்போது உள்ளது. இது பக்தர்களின் உபயம் ஆகும். இக்கொப்பரையை மலை மீது வைக்கும் உரிமை பெற்றவர் பர்வத ராஜகுலத்தினர் (மீனவர்) ஆவர். இத்தீபம் ஏற்ற சுமார் 3௦௦௦ கிலோவுக்கும் மேற்பட்ட நெய்யும், 10O0 மீட்டர் காடா துணியும் பயன்படுத்தி ஏற்றப்படுகிறது.

இம்மகாதீபம் ஏற்றுகின்ற உரிமை பர்வத ராஜகுலத்தினர் பெற்றுள்ளனர். இவர்கள் "செம்படவர்கள்" எனப்படுவர். சிவன் படையினர் செம்படவர்கள். இதன் நினைவாக இவர்களுக்கு இவ்வுரிமை வழங்கபடுகிறது. இவர்கள் தங்களுக்குள் முறை போட்டுகொண்டு ஆண்டுதோறும் மலைமீது தீபம் ஏற்றுகின்றனர்.

கார்த்திகை தீபம் ஏற்றும் முறை:

கார்த்திகை தீப திருநாள் அன்று வீட்டில் கிழக்கு நோக்கி விளக்கு ஏற்றினால் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். மேற்குத் திசை நோக்கி விளக்கு ஏற்றினால் கடன் தொல்லை முற்றிலும் நீங்கும். வடக்குத் திசை நோக்கி ஏற்றினால் திருமணத் தடை நீங்கும். தெற்குத் திசை நோக்கி எப்போதும் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது.

தீபமன்று வீட்டில் 27 விளக்குகள் ஏற்றி வைத்தால் நல்லது. சிலர் தங்களுடைய வீட்டில் கார்த்திகை அன்று குத்து விளக்குகளில் விளக்கு ஏற்றுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த நாளில் நைவேத்தியமாக இறைவனுக்கு அவல், கடலை நெல்பொரி, அப்பம் போன்ற உணவுகளை படைத்தது மகிழ்வார்கள்.

விளக்கில் ஒரு முகம் ஏற்றினால் நீங்கள் மனதில் நினைத்த செயல்கள் அனைத்தும் நடக்கும்.
விளக்கில் இரண்டு முகம் வைத்து ஏற்றினால் வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் சந்தோசம் நிலைக்கும்.
மூன்று முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
நான்கு முகம் கொண்ட விளக்கை ஏற்றினால் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
ஐந்து முகம் கொண்ட விளக்கை ஏற்றி வர அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.

கார்த்திகை அன்று வீடு அலங்காரம்:

பௌர்ணமி நிலவு கிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக் குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும் வீட்டின் உள் புறம் மற்றும் வெளியிலும் சிறிய விளக்குகளில் தீபமேற்றி அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்தி வழிபடுவர்.

விரதம் இருக்கும் முறை:

கார்த்திகை விளக்கீடு: கார்த்திகையின் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவ சமயிகள் பகல் நேரத்தில் மட்டும் ஒரு வேலை உணவு சாப்பிட்டு கார்த்திகையன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர்.

மறுநாள் காலையில் நீராடி பாரணை அருந்தி விரதத்தை நிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள் வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாத சிறப்பு:

தமிழ்நாட்டில் கார்மேகம் எனும் சோணைமழை பொழியும் மாதத்தை தான் கார்த்திகை மாதம் என்று சொல்கிறோம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலை நேரத்தில் தோன்றக்கூடியதை கார்த்திகை மாதம் என்று சொல்லப்படுகிறது.

கார்த்திகை மாத பண்டிகைகளில் முக்கியமானதாக விளங்குவது கார்த்திகை தீபம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். கார்த்திகை தீபத்தைப் பற்றி பல்வேறு விதமானச் செய்திகளைக் நம்மால் காணமுடியும். அதில் இட்டுக் கட்டுக் கதைகளுக்குப் பின்னால் இருக்கும் புராணக் கதைகளையும் உண்டு.

#முதல் கதை: 

கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்த புராணத்தில் உள்ள சான்றினைத்தான் முக்கியச் சான்றாக இந்த புராண கர்த்தாக்கள் காட்டுகிறார்கள். அதன்படி, தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்த போட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்து நின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும், அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களை பெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது பயணத்தை தொடங்கினர். அன்னப்பறவையாக உருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார், பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார்.

இருவரும் பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப் பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார், அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகை தீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமான திருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள் என்பது கதை.

#இரண்டாம் கதை: 

சூரனை கொல்ல வேண்டும் என்ற தேவர்கள் சிவனிடம் கோரிக்கை வைக்கிறார்கள். அதை ஏற்ற அவர் அதற்கான காலம் விரைவில் வரும், சூரனை அழிக்க தமது படைப்பில் ஒருவன் வருவான் என வாக்குறுதி அளிக்கிறார். அதன்படி தமது படைப்பை உருவாக்க தமது மனைவி சக்தியுடன் புணரத் தொடங்குகிறார். புணர்ச்சி நிற்கவில்லை. யுகம் யுகமாகத் தொடர்கிறது. அப்படி தொடரும் போது மானாகவு, யானையாகவும் இன்னும் பல மிருகங்களாவும் உருவெடுத்து புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர் சக்தியும் சிவனும். இவர்களின் செய்கையினால் தேவலோகம் தடுமாறுகிறது. இவர்களின் புணர்ச்சியை எப்படி நிறுத்துவது என்றுத் தெரியாமல் தேவர்கள் கவலைப்படுகிறார்கள்.

இருவரின் புணர்ச்சியினால் உருவான வியர்வை துளிகள் லட்சக்கணக்கில் பெருகி வழிகின்றன, அதிலிருந்து தேவ கணங்கள் உருவாகின்றன, முன்னணி படையணிகள் தோன்றுகின்றன, இறுதியில் சிவன் தனது சுக்கிலத்தை தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் தெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன. அங்கே சக்தியானவள் தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொரு சுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்த குழந்தைகள் கார்த்திகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும் சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள்.

அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது. சிவன் கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக மாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த கார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவது கார்த்திகேயன் பிறந்தநாள்.

#மூன்றாவது கதை: 

சப்த ரிஷிகளின் மனைவிகளின் அழகில் மயங்கிய அக்னிபகவானுக்கு அந்த பெண்கள் மீது அடக்க முடியாத மோகம் உண்டானது. அதைப் பற்றி தெரிந்துக் கொண்ட அவனது மனைவி சுவாகாதேவி தனது கணவன் முறைத் தவறி நடந்துக் கொண்டால் சப்த ரிஷிகள் சபித்துவிடுவார்கள் என்று எண்ணிப் பயந்து போனாள். அதனால் தானே ஆறு ரிஷிகளின் மனைவிமார்களைப் போல் உருவத்தை மாற்றிக் கொண்டு, தன் கணவன் ஆசையை நிறைவேற்றிளாள். ஆனால் வசிட்டரின் மனைவி அருந்ததியைப் போல அவளால் உருமாற முடியவில்லை. எனினும் சுவாகாதேவி கொண்ட ஆறு உருவத்திற்கும் கார்த்திகை பெண்கள் என்று பெயர். இப்பெண்கள்தான் கார்த்திகேயனை வளர்த்தார்கள் என்பது ஒரு கதை.

கார்த்திகை விழா:

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள் ஏனைய கார்த்திகை நாட்களினை விடவும் விமர்சையாகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகின்ற ஒரு விழா. மாலை வேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும், வீட்டு முற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள். திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத் திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தே வாழை மரம் நட்டு பனையோலைகளால் அதனைச் சுற்றி அடைத்து "சொக்கப்பனை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப் பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால் அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்கவைத்து வழிபடுவர்.

கோவிலில் தீபம் ஏற்றுதல்:

மலையில் தீபம் ஏற்றுவதற்கு முன்பு கோயிலில் பஞ்சமூர்த்திகளுக்குத் தீபதரிசனம் காண்பிக்கப்படும். இந்நேரத்தில் பக்தர்கள் கூட்டம் கோவிலில் இத்தீபத்தைக் காண அலைமோதும். தீபம் ஏற்றும் நேரம் நெருங்கியவுடன் அர்த்தநாரீஸ்வரர் தோன்றுவார். இறைவன் தேவிக்கு தன்னுடைய இடப்பக்கம் அளித்து இன்று காட்சி அளித்தார். அதன் நினைவாக 3 நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வந்து தரிசனம் தருவார். பின்பு உடனே மலையில் 6 மணிக்குத் தீபம் ஏற்றுவர். அப்பொழுது "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்று முழக்கம் இடுவர்.

கார்த்திகை தீபத்தன்று மலைவலம் வருதல் மிகவும் சிறப்பானது. அந்நாளில் வலம் வருதல் அவர்களுக்குப் பாவவிமோசனம் நிச்சயம் கிடைக்கும். கர்ம வினைகளைப் போக்கும். என்பது அந்நகர மக்களின் நம்பிக்கை.

#கார்த்திகை தீப சொக்கபனை:

அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பூஜை தடைபெற்று, சொக்கபனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். சுட்டகப்பனை எனும் சொல்லே சொக்கபனையாக மருவியுள்ளது. சுட்டகம் என்பது வறட்சி, உலர்ந்த தென்னை பனை, கமுகு, வாழை இவற்றின் தண்டினை தீபதண்டமாக ஆலயங்களில் பனை மற்றும் தென்னை ஓலைகளால் சுட்டகப்பனை எனும் சொக்கப்பனையில் அக்னி மூட்டி, எரியும் ஜுவாலையில் ஜோதி சொரூபமாக இறைவனை வழிபடுவதாக வரலாறு இருந்து வருகிறது.

திருக்கார்த்திகை திருவிழா கொண்டாடப் படுவதின் நோக்கம் “நான்” அகந்தையுடன்தான் மனிதர்கள் வாழ்கின்றனர். நமக்கும் மேலாக ஒருவன் இருக்கிறான். ஆணவத்துடன் இருந்தால், நமக்கு அவன் புத்தி புகட்டுவான் என்ற அரிய தத்துவத்தை விளக்க இந்த விழா எடுக்கப்படுகிறது.

இப்படியாக நாம் கார்த்திகை தீப விழாவன்று விளக்கேற்றி நாம் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்ளாமல், இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் எந்த கஷ்டமும் இன்றி வாழ இறைவனை வேண்டி இந்த கார்த்திகை தீபத்தை சந்தோஷமாக கொண்டாடி மகிழ்வோம்.

திருச்சிற்றம்பலம் 🙏

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...