Sunday, November 26, 2023

பூமிநாத சுவாமி திருக்கோயில்,திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் அமைந்துள்ள அருள்மிகு அறம் வளர்த்த நாயகி (தர்மசம்வர்த்தினி) உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில், பூமி சம்பந்தமான அனைத்துவிதமான குறைபாடுகளிலிருந்தும் தோஷங்களிலிருந்தும் நிவர்த்தி செய்யும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து  சுமார் 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மண்ணச்சநல்லூர், அரிசி அரைவை ஆலைகளுக்குப் பிரசித்தி பெற்ற ஊர். கொள்ளிடம் ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்ட போது இப்பகுதியிலிருந்து மண்ணைக் கொண்டு சென்று, அணைப்பு  ஏற்படுத்தியதால் ஊரின் பெயர் மண் அணைத்தநல்லூர் என்றிருந்ததாகவும், காலப்போக்கில் அது மருவி மண்ணச்சநல்லூர் என்று ஆனதாகவும் கூறுவர்.

மண்ணச்சநல்லூர் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில் ராஜகோபுர நுழைவுவாயில்
வீடோ, மனையோ, நிலமோ பிரச்னை இல்லாமல் அமைய  வீடு கட்டும் யோகம், வீட்டு எண் யோகம், வீடு, மனை, நிலம் விற்கும் யோகம், பூமி தோஷம், பில்லி, சூனியம், ஏவல், எந்திரம், தந்திரம், மந்திரம், தோஷம், தென் மூலை உயரம், வடமூலை உயரம், சொத்து பாகப் பிரச்னை, ஜன்ம சாப - பாப தோஷம், வாஸ்து தோஷம், வீடு, மனை, நிலம் வாங்கும் யோகம், பழைய வீடு புதுப்பிக்கும் யோகம், வீடு கண் திருஷ்டி தோஷம் ஆகிய 16-ம் முக்கியம்.



இந்த 16 விதமான தோஷங்களையும் இத்திருக்கோயில் பூமிநாத சுவாமி  நீக்குவதாக மாமுனிவர் அகத்தியர் தனது  ஓலைச்சுவடியில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளன.

தோஷங்கள், பிரச்னைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நீக்கி, யோகமான வீடு, மனை, நிலம் அமைய, திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரிலுள்ள அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலில் மண் வழிபாட்டு முறை செய்து, சுவாமி மற்றும் அம்மனை வழிபட்டால் பலன்கள் அனைத்தையும் பெறலாம்.


கோயில் கொடிமரப் பகுதி
 

இறைவன் பூமிநாத சுவாமி 

கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலில் லிங்கத்  திருமேனியில் பூமிநாத சுவாமி கிழக்கு நோக்கி  எழுந்தருளியுள்ளார்.


மண்ணச்சநல்லூர் அருள்மிகு பூமிநாத சுவாமி
பூமி, வாஸ்து சம்பந்தமான 16 விதமான தோஷங்களையும் நிவர்த்தி செய்யக்கூடியவராக பூமிநாத சுவாமி திகழ்கிறார். இந்த தோஷங்கள் நீங்க சில வரைமுறைகள் இத்திருக்கோயிலில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

மண் வழிபாட்டு முறை

பத்திரதாரர்கள், ரத்த சம்பந்தம் உடையவர்கள் தாங்கள் வாங்க, விற்க  விரும்பும் வீடு, நிலம், மனை உள்ள இடத்திலிருந்து வடகிழக்கு ( ஈசானிய, ஜல, சனி) மூலையிலிருந்து மூன்று கைப்பிடி அளவு மண்ணைப் புது மஞ்சள் துணியில் முடிய வேண்டும்.

அந்த மண் முடிப்பை மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு எடுத்து வந்து, ஒரு தேங்காய், 2 வாழைப்பழங்கள்,  2 மாலைகள், வெற்றிலைப் பாக்கு தட்சிணையுடன் சுவாமிக்கு அர்ச்சனை செய்து, படைக்க வேண்டும்.  மண்ணையும் மனதையும் இறைவனிடம் ஒப்படைத்து, வேண்டுதல்   நிறைவேறிட பிரார்த்தனை செய்ய வேண்டும்.


அருள்மிகு காசி விசுவநாதர் - காசி விசாலாட்சி
திருக்கோயில் குருக்களால் அர்ச்சனை செய்யப்பட்ட பின்னர்,  பிரகாரத்தை வலம் வந்து கொடுக்கப்பட்ட மண்ணைத் தல விருட்சமான வில்வ மரத்தடியில் குலதெய்வத்தை மனதில் வேண்டிக் கொண்டு இட வேண்டும்.

இரண்டாவது முறையாக பிரகாரத்தை வலம் வந்து, தல விருட்சமான வன்னி மரத்தடியில் குலதெய்வத்தை வணங்கி, தங்கள் வேண்டுதலை மனதுக்குள் கூறி வன்னி மரத்தடியிலுள்ள மண்ணில் ஒரு கைப்பிடியை எடுத்து புது மஞ்சள்  துணியில் முடித்துக் கொள்ள வேண்டும். பின்னர்  மூன்றாவது முறையாக பிரகாரம் வலம் வர வேண்டும

முதல் முறை கோயில் பிரகாரத்தை வலம் வரும் போது பிரம்மா, இரண்டாவது முறை வலம் வரும் போது விஷ்ணு, மூன்றாவது முறை வலம் வரும்போது சிவனின் ஆசீர்வாதம் கிடைப்பதாக ஐதீகம்.


அருள்மிகு காலபைரவருடன் சந்திரன்
நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து, கம்பத்தடியில் வணங்கி வன்னி  மரத்தடியிலிருந்து  எடுத்த மண் முடிப்புடன்  வீட்டுக்குச் சென்று பூஜை  அறையில் வைக்க வேண்டும்.  இந்த மண் முடிப்பைப் புதன் அல்லது குரு ஓரையில் வீட்டின், மனையின்,  நிலத்தின் வடகிழக்கு மூலையில் பூமியில் போட்டு, சூடமேற்றி வழிபட வேண்டும்.  அந்த புது மஞ்சள் துணியில் ரூ. 5 நாணயத்தை வைத்து முடி போட்டு பூஜையறையில் வைக்க வேண்டும்.


மண்ணச்சநல்லூர் அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோயில் ராஜகோபுரம்
தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறியதும், ரூ.5 நாணயம் உள்ள மஞ்சள் துணி முடிப்புடன் அருள்மிகு அறம்வளர்த்த நாயகி உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு வந்து, முடிப் பையைக் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். குறைந்தது 3 மாதங்கள் முதல் 5 மாதங்களுக்குள் பூமி சம்பந்தமான தோஷங்கள் நீங்கி, தாங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது இத்திருக்கோயில் மண் வழிபாட்டு முறை செய்து பலன்  பெற்றவர்களின் கூற்றாகவுள்ளது.

கண்நோய் இருப்போர் தரிசிக்க.. கண்நோய்களைத் தீர்க்கும் திருக்காரவாசல் கண்ணாயிர நாதர் கோயில்

மண், மனை, வீடு இல்லாதவர்களுக்கு

மண், மனை, வீடு இல்லாதவர்கள், தங்கள் பிரார்த்தனை நிறைவேற "பூமிக்கே நாதனாக விளங்குபவனே, என்னுடைய பிரார்த்தனையை மனதில் உள்ளதை மாலையாக சாத்திவிட்டேன்''  என்று கூறி,  மூன்று அமாவாசை  தினங்களிலோ, பிறந்த 3 கிழமைகளிலோ,  மூன்று பௌர்ணமிகளிலோ,   பிறந்த 3  தேதிகளிலோ  வந்து வழிபட வேண்டும்.  


லிங்கோத்பவர்
2 தேங்காய்,  வாழைப்பழங்கள், 2 மாலைகள், வெற்றிலைப் பாக்குடன் மனதிலுள்ள ஆசையை மாலையாகத் தொடுத்து சுவாமிக்கு அர்ச்சனை செய்து, கோயில் பிரகாரத்தை 16 முறை வலம் வர வேண்டும்.  தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமி, அம்மனுக்கு 8 விதமான அபிஷேகங்களை செய்து, வழிபட வேண்டும். மேலும 10 பேருக்கு அன்னதானமும் செய்ய வேண்டும்.

இறைவி அறம் வளர்த்த நாயகி

கோயிலின் மகா மண்டப நுழைவுவாயிலின் வலதுபுறத்தில் தனி சன்னதியில் அறம் வளர்த்த நாயகி என்றழைக்கப்படும் தர்மசம்வர்த்தினி தென்திசை நோக்கி  எழுந்தருளியுள்ளார்.  இந்த அன்னையின் முன்பு மகாமேரு  பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.  


அறம்வளர்த்த நாயகி
வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த சன்னதி முன்பு 8 குத்துவிளக்குகளுடன் நடைபெறும்  லலிதா சகஸ்ரநாமத்தில் பங்கேற்கும் பெண்கள், 1008 முறை அதை உச்சரித்து குங்குமார்ச்சனை செய்தால் அதற்குரிய பலன்களைப் பெறுவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாகவுள்ளது. திருமணப் பாக்கியம், குழந்தைப் பேறு  உண்டாகுதல் போன்ற பலன்களையும்  பக்தர்கள் பெறுவர்.

கோயில் அமைப்பு

கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ள இத்திருக்கோயிலில் ராஜகோபுரத்தைக்  கடந்தால் கொடிமர விநாயகரும், நந்தியெம்பெருமானும்  காட்சியளிக்கின்றனர். தொடர்ந்து கொடிமர பலிபீடம் உள்ளது.


மண்ணச்சநல்லூர் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில் ராஜகோபுரம்
கொடிமரத்தின் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்கள் உள்ளன. இங்கு சூரியன் நடுநாயகமாக இருக்க, மற்ற கிரகங்கள் சூரியனைப் பார்த்த நிலையில் உள்ளன.  மகாமண்டப  நுழைவுவாயிலில் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறத்தில் முருகனும் காட்சியளிக்கின்றனர். இதைத் தாண்டி உள்ளே சென்றால் வலதுபுறத்தில் அறம் வளர்த்த நாயகியும் மகா மண்டபத்தின் கிழக்குத் திசையில் காலபைரவரும் சந்திரனும் நுழைவுவாயில் பகுதியில் துவாரபாலகர்களும் எழுந்தருளியுள்ளனர். அர்த்த மண்டபத்தைத் தொடர்ந்துள்ள கருவறையில் சுவாமி பூமிநாத சுவாமி காட்சியளிக்கிறார்.

இறைவனின் தேவகோட்டத்தின் தென்புறத்தில் நல்வழி காட்டிய நால்வர் சன்னதியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. மேலும் அவர்களுக்குரிய குருபூஜை நட்சத்திரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த பிரகாரத்திலேயே  அருள்மிகு தட்சிணாமூர்த்தியும் எழுந்தருளியுள்ளார்.


நல்வழிக் காட்டிய நால்வர் சன்னதி
இதைத் தொடர்ந்து திருக்கோயில் விநாயகர்,  அருள்மிகு காசி விசுவநாதர், காசி விசாலாட்சி,  வள்ளி, தெய்வசேனா சுப்ரமணியசுவாமி, கஜலட்சுமி சன்னதிகளும் அமைந்துள்ளன. கருவறை சன்னதியின்  பின்பகுதியில் லிங்கோத்பவரும்,  வடக்கு பிரகாரப் பகுதியில் பிரம்மா, துர்க்கை, சண்டிகேசுவரர் திருமேனிகளும் அமைந்துள்ளன.

இந்தக் கோயிலைப் பற்றி அறிய.. நட்சத்திர, கிரக தோஷங்கள் நீக்கும் நகர் அப்ரதீசுவரர் திருக்கோயில்

தல விருட்சங்கள் இரண்டு

மற்ற திருக்கோயில்களைக் காட்டிலும் இத்திருக்கோயில் மாறுபட்டிருப்பது தல விருட்சத்தில்தான்.  இக்கோயிலில்  வில்வ, வன்னி மரங்கள் தல விருட்சங்களாக உள்ளன.


கோயில் தல விருட்சங்களான வில்வ, வன்னி மரங்கள்
 பூமி சம்பந்தமான தோஷங்களை நீக்குவதற்காக நடைபெறும் மண் வழிபாட்டு முறையில் தல விருட்சம் முக்கியத்துவத்தை  பெறுகிறது. மேலும் கோயிலில்  மார்கழி மாதத்தில் நடைபெறும் மகா ருத்ரயாகத்தின்போது பயன்படுத்தப்படும் மூலிகைகள், தானியங்களின் சாம்பல் இங்குதான் கொட்டப்படுகின்றன.

நவக்கிரகங்களின் சிறப்பு

இத்திருக்கோயிலில் அமைந்துள்ள நவக்கிரகங்கள் மிகவும் சிறப்புக்குரியவை. அனைத்து கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறு அமைந்துள்ளன. சூரிய பகவான் சனியைப் பார்த்தவாறு உள்ளார். ராகு, கேது கிரகங்கள் முழு உருவ அமைப்புடன் எழுந்தருளியிருப்பதும் விசேஷமானது.


கோயிலின் நவக்கிரகங்கள்
மற்ற கிரகங்களைக் காட்டிலும் சனி பகவான் சற்று உயரத்துடன்  எழுந்தருளி, பொங்கு  சனீசுவரராகக் காட்சியளிக்கிறார். செவ்வாய் பகவான் கையில் கதாயுதத்துடன் எழுந்தருளி அனைத்து சத்ருக்கள், மண் சம்பந்தப்பட்ட பயங்களை நீக்குபவராகவும், குரு பகவான் ஞான முத்திரையுடனும் காட்சியளிக்கின்றனர்.


 தட்சிணாமூர்த்தி சன்னதி
திருவிழாக்கள்

வைகாசி விசாகத் திருவிழா 10 நாள்கள் மிகுந்த சிறப்புடன் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி, அம்மன் வாகனங்களில் எழுந்தருளி காட்சியளிப்பர். இதில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு விசேஷமானது.


அருள்மிகு பிரம்மா - கோயில் வளாகத்திலுள்ள விநாயகர் சன்னதி
மார்கழி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையன்று மகா ருத்ரயாகம் நடைபெறும். உலக நன்மைக்காகவும், அனைத்து சௌந்தர்யங்களும் கிடைக்க வேண்டியும், இயற்கை செழிக்கவும், அனைத்து ஜீவராசிகளும் பசி, பட்டினியின்றி வாழவும், எல்லா நன்மைகள் பெறவும் இந்த யாகம் நடத்தப்படுகிறது. 1008 மூலிகைகள், தானியங்களைக் கொண்டு மிகப்பெரிய அளவில் நடைபெறும் மகா ருத்ரயாகத்தில்  ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர்.


மண்ணச்சநல்லூர் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை பூமிநாத சுவாமி திருக்கோயில் ராஜகோபுரப் பகுதி
இதைத் தவிர ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். நடராஜர் புறப்பாடும் நடத்தப்பட்டு வருகிறது.  மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு, சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கும், சஷ்டி, கிருத்திகையன்று சுப்ரமணிய சுவாமிக்கும் அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன.



கோயிலின் மகா மண்டப நுழைவுவாயில் பகுதியில் எழுந்தருளியுள்ள துவார பாலகர்கள்
கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயிலில் நடை திறந்திருக்கும். நான்குகால பூஜைகள் நடைபெறுகின்றன.  இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜை விசேஷமானது.

எப்படி செல்வது?

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூர் அமைந்துள்ளது.  மதுரை போன்ற தென் மாவட்டங்களிலிருந்தும், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலிருந்தும் வருபவர்கள் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், நெ.1 டோல்கேட், நொச்சியம் வழியாகத் திருக்கோயிலை வந்தடையலாம்.


கோவிலிலுள்ள அருள்மிகு வள்ளி, தெய்வசேனா சமேத சுப்ரமணிய சுவாமி
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற மேற்கு மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் முசிறி, சிறுகாம்பூர் வழியாக நொச்சியம் வந்து, அங்கிருந்து மண்ணச்சநல்லூர் செல்லலாம்.

கரூர், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களிலிருந்து  வருபவர்கள் சத்திரம் பேருந்து நிலையம், நெ.1டோல்கேட், நொச்சியம் வழியாகச் செல்லலாம்.

சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர் போன்ற வட மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் சமயபுரத்தில் இறங்கி அங்கிருந்து சிற்றுந்து மூலமாக வரலாம். அல்லது நெ.1.டோல்கேட் வந்து நொச்சியம் வழியாகவும் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி திருக்கோயிலை வந்தடையலாம்.


அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்மன் சன்னதி விமானம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர், ஆத்தூர், உப்பிலியபுரம், தம்மம்பட்டி போன்ற ஊர்களுக்குச் செல்லும் புறநகர்ப் பேருந்துகளிலும், மண்ணச்சநல்லூர் வழியாகச் செல்லும் நகரப் பேருந்துகளிலும் கோயிலுக்கு வரலாம். கார், வேன் மூலமாக வருபவர்கள் இதே வழியில் வரலாம். ரயில், விமானம் மூலம் வருபவர்களுக்கு ரயில் மற்றும் விமான நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வருவதற்கு உரிய வசதிகள் உள்ளன.



மண்ணச்சநல்லூர் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை பூமிநாத சுவாமி
தொடர்புக்கு

மண்ணச்சநல்லூர் அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோயிலுக்கு வருபவர்கள்  கோயில் குருக்கள் சிவத்தொண்டரை 96293 06922,  கிரிதரனை 93447 69294 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா.இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

ஐயப்பனுக்கு திருமணம் நடைபெறும் ஒரே கோவில் இது தான்.

கடவுளின் தேசமான இயற்கை எழில் கொஞ்சும்  கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயப்பனின் அறுபடை வீடுகளில் ஒன்றான , ஐயப்பன் திருமண...