Sunday, November 26, 2023

அருள்மிகு முதுகுன்றீஸ்வரர் திருக்கோயில் முதனை ...



முதனைகிராமம் 
திரு அகிலம் காக்கும் அண்ணாமலை கார்த்திகை தீப விழா நடைபெற்ற போது ,தீபத்திற்காக முதன்முதலாக நெய் வழங்கியது இவ்வூர் இதன் காரணமாகவே இவ்வூரின் பெயர் முதல்நெய் எனப்பெற்றது,இது மறுவி முதநெய் என அழைக்கப்பெற்று ,தற்போது முதனை என அழைக்கப்படுகிறது. 

அருள்மிகு முதுகுன்றீஸ்வரர் திருக்கோயில் முதனை ...

மூலவர் : முதுகுன்றீஸ்வரர்
உற்சவர் : பழமலை நாதர், பெரிய நாயகி
அம்மன் : பெரியநாயகி
தல விருட்சம் : கொன்றை மரம்
தீர்த்தம் : நன்னீர் குளம்
ஆகமம்/பூஜை : காமிகம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : முதல்நெய்
ஊர் : முதனை ,விருத்தாசலம் வட்டம்.
மாவட்டம் : கடலூர். 

பொது தகவல்: 
     
  ஊரின் வடமேற்கு திசையில், ஏரியின் ஓரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலினுள் செல்ல பிரதான வாயில் ஒன்று மட்டுமே உள்ளது. சுற்றுச் சுவர் உள்ளது. நுழைவு வாயிலின் வலதுபுறம் மூஞ்சுறு வாகனத்துடன் விநாயகர், இடதுபுறம் வள்ளி, தெய்வாணை, முருகர் சிலைகள் மாட அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது. விநாயக பெருமானை வழிபட்டு உள்ளே சென்றால் உடன் காட்சி கொடுப்பது பலிபீடம். அதனையடுத்து, கொடிமரம் அதிகார நந்தி, முதுகுன்றீஸ்வரர் அர்த்த மண்டபம், மூலஸ்தானம். மூலஸ்தானத்தில் சதாசிவ வடிவில் முதுகுன்றீஸ்வரர் அருள்பாலிக்கிறார். பீடத்தின் மேலிருக்கும் ஆவுடையாருடன் சேர்ந்து மூலஸ்தான விக்ரகம் இரண்டரை அடி உயரமுள்ளது. அர்த்த மண்டபத்தின் வாயிலின் மேல் கெஜலட்சுமி சிலை, அர்த்த மண்டபம், கருவறை உள்ளது.
.

அம்பாள் சன்னதி: முதுகுன்றீஸ்வரரை வழிபடும் மகா மண்டபத்தின் மத்தியில் நின்று வடக்கு நோக்கினால் காண்பது பெரியநாயகி அம்மன் கோயிலாகும். அம்பாள் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தெற்கு ஓரத்தில் பலிபீடம், நந்தி உள்ளன. 

கருவறையின் வெளிச்சுவற்றின் தெற்கு கோட்டத்தில் தட்சணாமூர்த்தியாகிய தென்முகக் கடவுள் கல் ஆலின் கீழிருந்து நால்வருக்கு அறிவுரை வழங்குவது போன்றும் வலது காலின் கீழ் முயலகன் கிடக்கும்  கல்வடிவ சிலை உள்ளது.

சுவாமியையும் அம்பாளையும் வழிபட்டு திருச்சுற்று வரும்போது தென்மேற்கில் கன்னி மூல விநாயகர் வீற்றிருக்கிறார்.

முதுகுன்றீஸ்வரர் கருவறையில் வடக்குப் பக்கம் கோமுகத்தின் கீழ்ப்பக்கம் சண்டிகேஸ்வரர் தனி கோவிலில் ஒன்னரை அடி உயரத்தில் தெற்கு நோக்கி உள்ளார்.

 சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு வடக்குப் பக்கமுள்ள சன்னதியில் வலது கையில் வேல், அம்பு, வாள், கொடி தண்டுகத்தலும், இடது கையில் வில், வஜ்ரம், தாமரை, மலர்கேடயங்களுடன் முருகன் கிழக்கு நோக்கியுள்ளார். எதிரே தனி பீடத்தில் மயில் உள்ளது.

முருகன் சன்னதிக்கு வடக்குப் பக்கமாக பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது. எதிரில், ஒன்றரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். 

பெருமாள் கோவிலையடுத்து, காசிலிங்கநாத கோவில் உள்ளது. இந்த மண்டபத்தில் தென் பகுதியில் கிழக்கு நோக்கி விநாயகரும், வடக்கு பகுதியில் தெற்கு நோக்கி விசாலாட்சி அம்பாளும் உள்ளனர்.

பெரியநாயகி அம்மன் சன்னதியில் கிழக்குப் பக்கம் துர்க்கை அம்மன் நின்ற கோலத்தில் நான்கு கைகளில், மேல் இரண்டு கைகளில் சங்கு, சக்கரமும், கீழ் வலது கை அபய அமைப்பிலும், இடது கை இடுப்பில் வைத்திருப்பது போன்றும் தனி சன்னதியில் உள்ளார்.

துர்க்கை அம்மன் கோவிலுக்கு கிழக்கே, கோவிலின் நுழைவாயிலில் வடக்குப் பக்கம் தனி கட்டட அமைப்பில் நவக்கிரக சன்னதி உள்ளது.  

இராஜகோபுர உள்மண்டபத்தில் மேற்கு முகம் நோக்கி காலபைரவர்,சூரிய,சந்திரனும் காட்சி தருகின்றனர்.
     
கேட்டவர்களுக்கு கேட்டவரம் தரும் வள்ளலாக முதுகுன்றீஸ்வரரும், பெரியநாயகியும்,தனி சன்னதியில் துர்கையம்மனும்  அருள்பாலிக்கின்றனர்.  

ஸ்தல வரலாறு: 
     
  கி.பி., 12ம் நூற்றாண்டின் இறுதியில் நடு நாட்டினை ஆட்சிபுரிந்த காடவர் தலைவர்களான கச்சிராயர்களில் ஒருவர் முதுநெய் கிராமத்தில் வாழ்ந்தார். இவர், தினமும் திருமுதுகுன்றம் எனும் விருத்தாசலத்திற்கு நேரில் சென்று பழமலைநாதர் எனும் விருத்தகிரீஸ்வரரை வணங்கி வந்தார். முதுமை காரணமாக அவரால் விருத்தாசலம் செல்ல முடியாத நிலையை எண்ணி வருந்தியபோது, பழமலை நாதர் (விருத்தகிரீஸ்வரர்) பெரியநாயகியுடன் இவ்விடத்தில் காட்சியளித்ததாகவும், காட்சி கொடுத்த இடத்திலேயே இத்திருக்கோவிலைக் கட்டி வழிபாட்டு வந்த அவர், செலவுக்கு மானியமாக நிலம் கொடுத்ததாக ஐதீகம்.  
     
சிறப்பம்சம்: 
     
  அதிசயத்தின் அடிப்படையில்: மகா மண்டபத்தின் மத்தியில் நின்று வெவ்வேறு இடங்களிலுள்ள பழமலை நாதர், பெரியநாயகியை ஒரே நேரத்தில் தரிசிக்கலாம். 

துர்கைக்கு தனிசன்னதி இங்கே மட்டுமே உள்ளது .அதன் மேல் கோபுர விமாணம் மகாமேரு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஸ்தல விருச்சம் கொன்றைமறம் சுமார் 5 தலைமுறைக்கு மேலாக ஒரே அளவில் உள்ளது.

விருத்தாசலத்திற்கு கிழக்கே 20 கி.மீ., தூரத்திலும், நெய்வேலிக்கு மேற்கே 8 கி.மீ., தூரத்திலும் உள்ள முதனை ஏரியின் வடக்குப் பக்கத்தில் கோவில் உள்ளது.

கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள் ... இறையருள் தீப ஒளித்திருநாளில் அனைவருக்கும் பரிபூரணமாக உரித்தாகட்டும் ...

🙏**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் சிவனே சரணாகதி*

*அப்பனே அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி*

ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது 
இரா .இளங்கோவன்
 நெல்லிக்குப்பம். 

No comments:

Post a Comment

Followers

நாக சாதுக்கள் யார்? நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்?

நாக சாதுக்கள் எங்கிருந்து வருகிறார்கள்? கும்பமேளாவுக்குப் பிறகு எங்கு செல்கிறார்கள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பம...