Thursday, November 2, 2023

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பற்றிய பதிவுகள்

*ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் பற்றிய பதிவுகள் :*
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மதுரையில் இருந்து 74 கிலோமீட்டர் தொலைவில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ளது. இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானதும், ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலமாகும். இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும். பழம்பெரும் கோவிலான இதன் கோபுரமே தமிழக அரசின் சின்னமாக விளங்குகிறது.

*தல வரலாறு :*

ஆண்டாள் நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாக கட்டி முதலில் அதை தன் கூந்தலில் சூடி இறைவனுக்கு, தாம் பொருத்தம் உடையவளா என்பதை கண்ணாடியிலே கண்டு களிப்பாள். மீண்டும் பூக்களை களைந்து பூஜைக்கு கொடுத்து விடுவாள். பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு சாத்துவார்.

ஒரு நாள் பூமாலையில் தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி, பெரியாழ்வார் அதை தவிர்த்து விட்டு வேறு மலர்களை சூட்டினார். உடனே இறைவன், ஆழ்வார்! ஆண்டாளின் கூந்தலில் சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு என்றார். பெரியாழ்வாரும் ஆண்டாளை மானுடர் யாருக்கும் மணமுடிக்க சம்மதிக்காமல் இறைவனுக்காக காத்திருந்தார்.

ஆண்டாளும் இறைவனையே நினைத்து ஏங்கி தொழுதபடியே இருந்தாள். இறைவனும் தாம் ஆண்டாளை நேசிப்பதாகவும், தன்னை திருவரங்கத்திற்கு வந்து சந்திக்க சொல்ல, ஆண்டாளும் பூப்பல்லக்கில் அங்கு சென்று இறைவனோடு ஐக்கியமானாள். 

ஸ்ரீவில்லிபுத்தூரிலும் ஆண்டாளோடு சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பெரியாழ்வார் பிரார்த்திக்க, இறைவனும் ஏற்று இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார்.

*தல பெருமை :*

இத்தலத்தில் மூலவர் வடபத்ரசாயி (ரங்கமன்னார்) சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார் மூவரும் ஒரே ஸ்தானத்தில் காட்சியளிப்பது இத்தலத்தில் மட்டுமே.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரங்கமன்னார் சுவாமி, வலது கையில் பெந்துகோல் (தற்காப்பு கோல்), இடக்கையில் செங்கோல், இடுப்பில் உடைவாளும் வைத்து ராஜகோலத்தில் இருக்கிறார். இவர் காலில் செருப்பு அணிந்திருப்பது விசேஷமாகும்.

மதுரைப் பாண்டிய மன்னர்களின் திருப்பணிகளையும், திருமலை மன்னர் முதலிய மதுரை நாயக்க மன்னர் திருப்பணிகளையும் இக்கோவில் கொண்டுள்ளது.

*தல சிறப்பு :*

இக்கோவிலின் கருவறை முற்றிலும் கல்லினாலானதாகும். கருவறை மேலுள்ள விமானத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்களின் கருத்துக்களை விளக்கும் சிற்பங்கள் உள்ளன.

கருவறை முன்னுள்ள மண்டபத்தில் திருமலை மன்னர், அவரது குடும்பத்தினரின் சிலைகள் உள்ளன. தங்கமுலாம் பூசப்பட்ட தாமிர தகடுகள் இச்சிலைகள் மீது உள்ளன.

இக்கோவிலின் கல்யாண மண்டபம், மண்டபம் ஏகாதசி மண்டபம் ஆகியவை சிற்ப கட்டட கலக்கி சிறப்புமிக்கவை.

இதுபோன்ற பல பயனுள்ள ஆன்மீக தகவல்களுடன் நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி.

 ஓம் நமசிவாய 

படித்து பகிர்ந்தது 
இரா. இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம்...

96 வகையான ஷண்ணவதி ஹோமங்களின் ரகசியம் (1)சமித்துவகைகள் _13  (2)ஹோமதிரவியம் _45 (3) ரஸவர்க்கம்.           _8 (4) பழவர்க்கம்.      ...