Sunday, December 3, 2023

கும்பகோணம் அடுத்த தாராசுரம் வீரபத்திரர் கோயில்






 விஜயாலயச் சோழன் தஞ்சையின் எட்டு மூலைகளிலும் எட்டு காளிக் கோவிலை அமைத்தான்.  கும்பகோணம் அடுத்த தாராசுரம் வீரபத்திரர் கோயில் அமைந்துள்ளது
தாராசுரம் வீரபத்திரர் ஆலயம்
உலகப் புகழ் கொண்ட தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலுக்கு முன்புறம் பிரமாண்டமாக அமைந்துள்ளது ஸ்ரீபத்ரகாளி உடனான ஸ்ரீவீரபத்திரர் ஆலயம். ஆணவத்தால் ஈசனை அவமதித்து மாபெரும் யாகம் செய்தான் தட்சன். கோபம் கொண்ட ஈசன், தன்னிலிருந்து வீரபத்திரரை உருவாக்கி, அவரோடு பத்ரகாளியையும் அனுப்பி தட்ச யாகத்தையும், அதில் கலந்து கொண்டோரையும் அழித்தார் என்கிறது புராணம். அவ்வாறு தண்டனை பெற்றோருக்கு அனுக்கிரகம் செய்யும்விதம், உமாதேவியோடு இங்கு எழுந்தருளினார் ஈசன் என்கிறது தக்கயாகப் பரணி. இதை இயற்றியவர் ஒட்டக்கூத்தர்.

தக்கயாக பரணியை ஐராவதேஸ்வரர் கோயிலில் அரங்கேற்றிய ஒட்டக்கூத்தருக்குச் சினம் தணிந்த சிரித்த கோலத்தில் வீரபத்திரரும் பத்ரகாளியும் இங்கு அருள் காட்சி கொடுத்தார்களாம். அதனாலேயே இங்கு தங்கி, வீரபத்திரருக்கு ஆலயம் எழுப்பி தன் இறுதி காலத்தை நிறைவு செய்தார் ஒட்டக்கூத்தப் பெருமான் என்கிறார்கள்.

ஒட்டக்கூத்தருக்கும் முன்பாக ரேணுகாச்சார்யர் எனும் ரவணச் சித்தர் இங்கு வந்து ஈசனை வழிபட்டு வாழ்ந்தார். அகத்தியரின் ஞானச் சீடரான இவரின் காலம் 9-ம் நூற்றாண்டு. இவரே பட்டீஸ்வரம் எனும் தேனுபுரீஸ்வரர் ஆலய தலவரலாற்றை எழுதியவர். இவரும் இங்கே ஜீவசமாதி அடைந்திருக்கிறார். சிவகவியான பக்தை அக்கமாதேவியாரும் இங்கே முக்தி வேண்டி சிலகாலம் தவம் இருந்தார் என்று கூறப்படுகிறது. சோழர்கள் காலத்திலிருந்தே இங்கு பத்ரகாளி வழிபாடும் நிகும்பலா வேள்வி ஆராதனையும் நடைபெற்று வந்துள்ளது.

வீரபத்திரர் - பத்திரகாளி
தஞ்சை மாவட்டத்தின் புகழ்பெற்ற ஆலயங்களுள் இந்த வீரபத்திரர் ஆலயமும் ஒன்று. ஆம், இந்த ஆலயம் பஞ்ச குரோசத் தலங்களில் ஒன்று என்பதும் சிறப்பு. திருவிடை மருதூர், திருநாகேஸ்வரம், தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் எனும் சுருப்பூர் ஆகியவை பித்ரு தோஷங்கள் நீக்கும் பஞ்சகுரோசத் தலங்கள். ஆக, இது காசிக்கு நிகரான தலமும்கூட. இங்கு வந்து வழிபட்டால் பித்ரு சாபங்களும் தோஷங்களும் நீங்கும் என்பதும் சிறப்பு.

ஓம் நமசிவாய

 படித்து பகிர்ந்தது இரா. இளங்கோவன் நெல்லிக்குப்பம்.

No comments:

Post a Comment

Followers

மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..

_மனக்குறைகளைத் தீர்க்கும் திருச்செந்தூர் சித்தர் ஜீவசமாதிகள்..._ திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அழகிய முறை...