Friday, January 5, 2024

அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில் மற்றும் "வர்த்தமானீச்சுரம்" திருப்புகலூர் 609704 நாகப்பட்டினம்.

அருள்மிகு 
கருந்தார்குழலி சமேத அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்  மற்றும் "வர்த்தமானீச்சுரம்" திருப்புகலூர் 609704 நாகப்பட்டின மாவட்டம்.        
*இறைவனின் திருப்பெயர் :
அக்னிபுரீஸ்வரர், சரண்யபுரீஸ்வரர்,   கோணபிரான்,

*இறைவியார் திருப்பெயர் : கருந்தார் குழலி, சூளிகாம்பாள்,

*தல மரம் : புன்னை மரம்,

*தீர்த்தம் : அக்னி தீர்த்தம், பாண தீர்த்தம்,

*தேவாரப் பாடல்கள் :திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்,சுந்தரர். 

*"இது ஓர் முக்தித்தலம்."

*திருநாவுக்கரசர் தமது 81 வது வயதில் இத்தலத்தில் உழவார பணி செய்தபோது, அவருக்கு இறைவன் சித்திரை சதய நட்சத்திர நாளில் முக்தி கொடுத்தார்.  அப்பருக்கு தனி சந்நிதி உள்ளது. சித்திரை சதயத்தை ஒட்டி 10 நாள் திருவிழா நடக்கிறது. அப்பர் சித்திரை சதயம் நான்காம் சாமத்தில் இறைவனிடம் ஜோதியாக இணையும் போது பக்தர்கள் கண்ணில் நீர் வழிய தரிசிப்பது சிறப்புமிக்க  காட்சி ஆகும். 
சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்  சனிக்கிழமைகளில் வரும் சதய நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபாடு செய்தால், ஆயுள்விருத்தி, நல்ல ஆரோக்கியம், நற்பண்புகள் வந்து சேரும்.  

*"இது ஓர் வாஸ்து தலம்."    

*அக்னி: ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். சிவபெருமானின் உத்தரவுபடி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். உருவமற்ற அக்னி பகவானுக்கு ஓர் உருவம் தந்து அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு “அக்னீஸ்வர சுவாமி’ என்ற பெயர் ஏற்பட்டது. 

*சுந்தரர், பரவையார் இருவராலும் 
திருவாரூரில், பங்குனி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடத்தப்படும். ஒரு சமயம் பங்குனி விழாவிற்காக தனது மனைவி பரவையார் செலவிற்குப் பொன் பெற விரும்பி சுந்தரர் திருப்புகலூர் வந்தார். திருப்புகலூரில் கோயில் கொண்டுள்ள இறைவனை வணங்கி தனது கருத்தைப் பதிகத்தில் வைத்துப் பாடினார். பிறகு மற்ற அடியார்களுடன் கோவிலில் சிறிது நேரம் இளைப்பாறினார். தூங்குவதற்காக அங்கிருக்கும் செங்கற்களை தலைக்கு உயரமாக வைத்துத் தம் மேலாடையாகிய வெண்பட்டை விரித்துப் படுத்தார். துயில் நீங்கி சுந்தரர் எழுந்தபோது தம் தலையணையாக வைத்திருந்த செங்கற்களெல்லாம் பொற்கட்டிகளாக மாறி இருக்கக் கண்டு வியப்படைந்தார். இறைவனை 'தம்மையே புகழ்ந்து' என்று தொடங்கும் திருப்பதிகம் பாடி வணங்கினார் 

*இத்தலத்தில் சுந்தரருக்கு செங்கற்களை பொன்கற்களாக மாற்றி கொடுத்து அருளியதாலும், அக்னி பகவான் பாபவிமோசனம் பெற்றதாலும் இத்தலம் "வாஸ்து தலமாக" விளங்குகிறது.                புதிதாக வீடு கட்டுபவர்கள் இத்தலத்திற்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் மூன்று செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறு பூஜை செய்த 3 செங்கற்களை வடகிழக்கு, தென்கிழக்கு பகுதிகளிலும், பூஜை அறையிலும் வைக்க வேண்டும். இந்த வாஸ்து பூஜை இத்தலத்தில் அனைத்து நாட்களிலும் செய்யப்படுகிறது.     

*பாணாசுரன் இங்கிருந்து லிங்கத்தை எடுத்து சென்று தனது தாயாரிடம் ஒப்படைக்க நினைத்து, கோயிலை சுற்றிலும் அகழி தோண்டி லிங்கத்தை எடுக்க முயன்றான். அகழி முழுவதும் தண்ணீர் நிரம்பியதே தவிர, லிங்கம் பெயரவில்லை. என்ன செய்வது என தெரியாமல் தன் உயிரைவிட  நினைத்தான். அப்போது விண்ணில் அசரீரி தோன்றி, பாணாசுரனே! உனது தாயாரின் பூஜைக்கு நாம் எழுந்தருள்வோம் என கூறி மறைந்தது. தலையில் புன்னை மலருடன் அவனது தாயார் பூஜித்த இடத்துக்கு சென்றது லிங்கம். பூஜை முடிந்ததும் திருப்புகலூருக்கே லிங்கம் திரும்பி விட்டது.     

*சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப்பட்டதால் இத்தல இறைவனுக்கு சரண்யபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.         

*இத்தலத்தில் நிகழ்கால நாதர் என்னும் வர்த்தமானீஸ்வர், கடந்தகால நாதர் பூதேஸ்வரர், 
எதிர்கால நாதர் பவிட்ச்சேயேஸ்வர் ஆகிய மூவரும் வீற்றிருக்கின்றனர். இவர்களை வழிபட்டால் முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள், தோஷங்கள் நீங்கி, நிகழ்காலத்தில் கிடைக்க வேண்டிய நன்மைகள், வருங்காலத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழலாம் என்கிறார்கள்.    

*இத்தலத்து அம்பாளுக்கு கருந்தார்குழலி என்றும், சூலிகாம்பாள் என்றும் பெயர்.   சாயரட்சை காலத்தில் ராஜராஜேஸ்வரி கோலத்தில் அம்பாள் வெள்ளைப்புடவை அணிவது வழக்கம். திருமணம் ஆகாத பெண்கள் வேண்டுதல் செய்து சாயரட்சை காலத்தில் அம்பாளுக்கு வெள்ளை வஸ்திரம் சாற்றினால்  திருமணத்தடை நீங்கி எளிதில் திருமண பாக்கியம் கிட்டும். இவள் தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்ததாக வரலாறு உள்ளது. கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட, அம்பாளை வழிபட்டு பலனடையலாம்.  திருமண வரம் வேண்டுவோர் சுவாமி அம்பாளுக்கு கல்யாண மாலை சாத்தி அர்ச்சனை செய்கிறார்கள்.  

*இத்தலத்தில் ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற சன்னிதிகள் உள்ளன.     
ஒரு சன்னிதியில் இறைவன் அக்னீஸ்வரர், இறைவி கருந்தார் குழலி மற்றொரு சன்னதியில் இறைவன் வர்த்மானேஸ்வரர் இறைவி மனோன்மணி அம்மை அருள்புரிகின்றனர்.       

*வர்த்தமானீசுவரரை துதித்து சம்பந்தர் தனியாக ஒரு பதிகம் பாடி இருக்கிறார்.  

*இந்த இரு சன்னிதிகளும் ஒரே வாயிலுடன் அருகருகே அமைந்துள்ளன.   

*63 நாயன்மார்களில் ஒருவரான முருக நாயனார் இத்தலத்தில் அவதரித்து வர்த்தமானருக்கு தொண்டு புரிந்துள்ளார். அவரது சிலை வர்த்தமானர் சன்னிதிக்கு எதிரே உள்ளது. 

*இக்கோயிலில்  ஒரே சன்னிதியில் நளச் சக்கரவர்த்தியும், சனீஸ்சுவர பகவானும் உள்ளனர். 
*நள சக்கரவர்த்திக்கு சனி தோஷம் ஏற்பட, அதிலிருந்து விடுபட திருநள்ளாறு செல்வதற்கு முன்பாக இத்தலத்தில் உள்ள சனீஸ்வரனை வழிபட்டார். அப்போது இறைவன் “திருநள்ளாற்றில் உன்னைப் பிடித்த சனியை விலக்கிக் கொள்கிறேன்” என அசரீரி வாக்காக கூறினார். அதனால் இங்குள்ள சனீஸ்வரனை ‘அனுக்கிரக சனி’ என்று அழைக்கிறார்கள்.     

ஓம் நமசிவாய
 படித்து பகிர்ந்தது 
இரா இளங்கோவன்
 நெல்லிக்குப்பம்


No comments:

Post a Comment

Followers

மருதமலை முருகன் கோயில் கோவை...

*மருதமலை* *முருகன் கோயில்...*  கோயமுத்தூர் நகரில், மேற்குத் தொடர்ச்சி மலையின் சரிவில் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக...