வருடத்தில்
மார்கழி மாதம் மட்டுமே காணக்கூடிய நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தேவாரம் மற்றும் திருப்புகழ் பாடல் பெற்ற கொங்குநாட்டு தலங்களில் ஒன்றான, அம்மையும் அப்பனும் ஒன்றாக காட்சி தரும் தலமான, உமையம்மை கேதார கெளரி விரதம் இருந்து சிவபெருமானின் இடப்பாகம் பெற்ற தலமான
#திருச்செங்கோடு என்ற #திருக்கொடிமாடச்செங்குன்றுர்
#அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில்
#மரகத_லிங்கம் பற்றிய வரலாறு:
மார்கழி மாதத்தில் மட்டுமே காண முடியுமாம் இந்த அதிசய லிங்கம்
தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ளது அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் அர்த்தநாரீஸ்வரரும், தாயார் பாகம்பிரியாளும் அருள்பாலித்து வருகிறார்கள்.
இந்தக் கோயிலில் என்ன அதிசயம் என்றால்....இங்கு மார்கழி மாதம் மட்டும் பிருங்கி முனிவர் வழிபட்ட மரகத லிங்கத்தை வைத்து வழிபடப்படுகிறதாம்.
மற்ற மாதங்களில் அதற்குப் பதிலாக வேறு ஒரு லிங்கம் வைத்து வழிபடுகிறார்கள். இதற்காக, குறைந்தது 5 மணிக்குள்ளாக கோவிலில் இருக்க வேண்டும்.
முன்பு ஒரு காலத்தில் ஆதிஷேசனும் வாயுதேவனும் தங்களில் யார் பலசாலி என அறிய இருவரும் போர் புரிந்தனர். அந்தப் போரினால் உலகில் அதிக பேரழிவுகள் ஏற்பட்டன.
இந்தத் துன்பங்களை கண்ட முனிவர்களும், தேவர்களும் அவர்களிடம் யார் பலசாலி என்பதை அறிய ஒரு வழி கூறி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே பலசாலி என்றனர்.
அதன்படி ஆதிஷேசன் தன்படங்களால் மேருமலை சிகரத்தின் முடியை அழுத்திக் கொள்ள வேண்டும். வாயுதேவன் தன் பலத்தால் பிடியைத் தளர்த்த வேண்டும் என்று கூறினார்கள்.
ஆனால் வாயுதேவனால் பிடியைத் தளர்த்த முடியவில்லை. இதனால் கோபம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியை அடக்கி கொண்டார். இதனால் உயிரினங்கள் அனைத்தும் வாயு பிரயோகமற்று மயங்கின. இந்தப் பேரழிவை கண்ட முனிவர்களும், தேவர்களும் ஆதிஷேசனிடம் பிடியைத் தளர்த்த வேண்டினார்கள்.
ஆதிஷேசன் தன் பிடியைக் கொஞ்சம் தளர்த்தினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் அப்பகுதியை வேகமாக மோதி அச்சிகரத்துடன் ஆதிஷேசனின் சிரத்தையும் சேர்த்து பூமியில் மூன்று செந்நிற பாகங்களாய் சிதறி விழுந்தது. அவற்றிலொன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், மற்றொன்று நாகமலையாகவும் (திருச்செங்கோடு) காட்சியளிக்கிறது. இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நாகமலையில் பல அற்புதங்கள் உள்ளன.
இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பார்ப்பதற்கே பிரம்மாண்டமான தோற்றத்தில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
நாகரின் முழு உடலிலும் பக்தர்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து பூசி உள்ளனர். இவ்வாறு மஞ்சள் குங்குமம் தடவி வழிபடும்போது நாக தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. படமெடுத்த நிலையில் அமைந்துள்ள ஆதிசேஷன் லிங்க வடிவைத் தாங்கி நிற்பது சிறப்பு.
மரகத லிங்கத்தின் வரலாறு :
பிருங்கி முனிவர், கயிலாயம் வரும் வேளைகளில் சிவபெருமானை மட்டும் வழிபட்டு விட்டு, அவரது அருகில் இருக்கும் உமாதேவியை வழிபடாமல் விட்டு விடுவார்.
இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும் நிலையில், சிவனை மட்டும் வணங்கும் வகையில், வண்டு வடிவம் எடுத்துச் சுற்றி வந்து வழிபடுவார். இதனால் கோபமடைந்த பார்வதி, முனிவரே! சக்தியாகிய என்னை அவமதித்ததால், நீர் சக்தி இழந்து போவீர், எனச் சாபமிட்டார்.
இதையறிந்த சிவன், நானும் சக்தியும் ஒன்றுதான். சக்தியில்லையேல் சிவமில்லை எனக்கூறி உமையவளுக்கு தன் இடப்பாகத்தில் இடம் கொடுத்தார். பார்வதி தேவி இடப்பாகம் பெறுவதற்கு இந்த மலையில் தான் வந்து தவம் புரிந்து கேதார கௌரி விரதம் இருந்து இடப்பாகம் பெற்றார். (இக்கோயிலில் கேதார கௌரி விரதம், புரட்டாசி வளர்பிறை அஷ்டமி திதியில் ஆரம்பித்து 21 நாள் கடைப்பிடிக்கப்படுகிறது).
அப்படி சிவனை நினைத்து தவம் செய்யும் போது சிவபெருமான் லிங்க வடிவமாக வந்து காட்சி தந்து மறைந்தார் பின் அந்த லிங்கத்திலேயே பார்வதியும் கலந்தார். அர்த்தநாரீஸ்வர மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த லிங்கத்தின் அருமை அறிந்த பிருங்கி முனிவர் மலையில் தனது மூன்று காலால் நடந்தே வந்து லிங்கத்தை தரிசனம் செய்தார்.
தனது மூன்றாம் காலை துறந்து இழந்த சக்தியை பெற்றார். பின் அந்த லிங்கத்தை அங்கேயே நிறுவினார். பின் அந்த லிங்கத்தின் சக்தியை எடுத்துக் கூறி அதை மார்கழி மாதம் மட்டும் எடுத்து அபிஷேகம் செய்து பின் சூரியன் உதயமாவதற்குள் எடுத்து பேழையில் வைத்து விடவேண்டும் என்று தனது சீடர்களுக்கு கட்டளையிட்டார்.
மற்ற நேரத்தில் சாதாரணமான லிங்கத்தை வைத்து வழிபடுங்கள் என்று கட்டளையிட்டாராம்.
கோயில் வரலாறு:
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள். செங்கோட்டு வேலவர் என முருகனுக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இத்தலத்தின் தீர்த்தம்- தேவதீர்த்தம் தலமரமாக இலுப்பை மரம் உள்ளது.
#தல வரலாறு:
மலை சிவந்தநிறமாக இருப்பதால் செங்கோடு என்று பெயர் பெற்றது. தெய்வத்திருமலை, நாகமலை, உரசகிரி எனப் பல பெயர்களும் உள்ளது.
மலையேற உள்ள படிகளில் 60 ஆம் படி மிகச் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு நின்று சத்தியம் செய்தால் அது நீதி மன்றத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற நிலை இருந்ததாம்.
கேதாரகௌரி, மரகத லிங்கத்தைப் பூசித்து, இறைவனின் பாகத்தைப் பெற்றதாக வரலாறு சொல்லப்படுகிறது.
சம்பந்தர் கொங்கு நாட்டுத் தல யாத்திரையில் முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை 'நளிர்சுரம்' பற்றி வருத்த 'அவ்வினைக் கிவ்வினை' என்னும் பதிகம் பாடி, 'தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்' என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.
இத்தலத்துச் சொல்லப்படும் ஒரு செய்தி :- இங்கு வாழ்ந்த குணசீலர் என்ற புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டாராம். பாண்டிப்புலவரேறு என்பவர்; "சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே?!" - என்று வியந்து பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடினாராம்; அப்போது, சிறுவனாக வந்த வேலவன் "அஃது ஆய்ந்திலையோ நமரன் குறவள்ளி பங்கன் எழுகரை நாட்டு உயர்ந்த குமரன் திருமருகன் மயில் வாகனம் கொத்தும் என்றே" - எனப் பாட்டினை முடித்து அப்புலவரைத் திரும்பிப் போகும்படிச் செய்தார் என்ற செய்தி இம்மலையடிவாரத்தில் நிகழ்ந்ததாகுமென்று சொல்லப்படுகிறது.
சிவத்தலமாகயிருப்பினும் இது முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த தலம்.
இது அர்த்தநாரித் தலம்.
இத்தலம் மலைமீது உள்ளது.
மேலமாட வீதியிலிருந்து பார்த்தால் இம்மலை பார்ப்பதற்கு நாகம் போன்றிருப்பதால் நாகாசலம் நாககிரி என்றும் பெயர் உண்டு.
கோயிலுக்குச் செல்ல மலைமீது 1200 படிகள் ஏற வேண்டும். படிகட்டுக்களில் பாம்பு உருவங்கள் உள்ளன.
ஓரிடத்தில் நீளமான (20 அடி) பாம்பு வாடிவத்திலேயே ஏறும் வழி அமைந்துள்ளது.
இத்தலம் பற்றிய குறிப்புக்கள் சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம் முதலியவைகளில் உள்ளன.
செங்கோட்டு வேலவர் "அழகு மிளிரும்" நின்ற திருவுருவம்
இறைவன் வெள்ளை பாஷாணத்தால் ஆன சுயம்பு மூர்த்தி. உளி படாதது விடங்கம் - அடியில் சதுரபீடம்.
வேளாளக்கவுண்டர் மண்டபத்தூண் ஒன்றில் வீரபத்திரர் உருவமும், மற்றொன்றில் அர்ச்சுனன் தவக்கோலம், வேடன், குருவிக்காரியின் உருவமும் சிற்பக்கலையழகு நிறைந்தவை.
அர்த்தநாரீஸ்வரர் மூலவர் - நின்ற திருமேனி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை - பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி தருகிறார். முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
திருவடியில் கீழ் குளிர்ந்த நீர் சுரக்கின்றது. இது தேவ தீர்த்தம் எனப்படுகின்றது. இத்தீர்த்தம் நாடொறும் வரும் அன்பர்கட்கு வழங்கப்படுவதைப்போல, அமாவாசை நாள்களில் 3, 4 அண்டாக்களில் சேகரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.
மூலவர் முன்னால் மரகத லிங்கமும், பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது.
இங்குள்ள ஆதிகேசவ பெருமாள் சந்நிதி, நம்மாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்டதாகும்.
வீரகவிராஜபண்டிதரால் பாடப்பட்ட தலபுராணம் உள்ளது.
இத்தலத்தில் முதலாம் இராசராசன், சுந்தரபாண்டியத் தேவர், மைசூர்கிருஷ்ணராஜ உடையார் காலத்திய கல்வெட்டுக்கள் உள்ளன.
அடிவாரத்திலிருந்து சுமார் 650 அடி உயரத்திலுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்லும் பாதை 1200 படிகளைக் கொண்டுள்ளது. கிழ-மேற்கில் 262 அடி நீளமும் தென்-வடலாக 201 அடி நீளமுடையது இக்கோயில். இதன் வடக்கு வாசல் இராஜகோபுரம் கிட்டத்தட்ட 84.5 அடி உயரத்துடன் ஐந்து நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு, தென்திசைகளிலும் இக்கோயிலுக்கு வாயில்களுண்டு. அவற்றுள் தென் திசை வாயிலுக்கு மட்டும் சிறுகோபுரம் உள்ளது.
செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீசுவரர், ஆதிகேசவப் பெருமாள் என மூன்று தெய்வங்களின் சன்னிதிகள் கொண்டது இக்கோயில். மூலவர் அர்த்தநாரீசுவரர் சன்னிதி மேற்கு நோக்கியுள்ளது. ஆனால் சன்னிதிக்கு முன் வாயில் இல்லை. மாறாக ஒன்பது துவாரங்கள் கொண்ட கல்லாலான பலகணியுள்ளது.
அர்த்தநாரீசுவரர் சன்னிதியின் முன்மண்டத்தில் ஆமை மண்டபம் ஒன்று உள்ளது. இக்கோயிலின் தூண்கள், மண்டபச் சுவர்களென அனைத்துப் பகுதிகளும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இக்கோயிலில் செங்கோட்டு வேலவர் சன்னிதியும், அர்த்தநாரீசுவரர் சன்னிதிக்குத் தென்புறம் கிழக்கு நோக்கிய நாரிகணபதி சன்னிதியும், தென்மேற்குப் பகுதியில் வெண்ணிற இலிங்கத்துடன் நாகேசுவரர் சன்னிதியும், தென்புறத்தில் திருமகள், நிலமகள் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் (நின்ற கோலம்) சன்னிதியும் உள்ளன.
#மேற்கு இராஜகோபுரம்:
கோவை மாவட்டம் காடாம்பாடி எனும் ஊரில் ஐநூற்றுச் செட்டியார் எனும் இனத்தில் பிறந்த பக்தர் பாததூளி- சுந்தரியம்மாள் தம்பதியினருக்கு மகப்பேறு வாயக்காமல் போக, அவர்கள் திருச்செங்கோடு உமையொருபாகனை வழிபட்டு உமைபாகன் எனும் மகனைப் பெற்றனர். உமைபாகனுக்கு 5 வயது ஆகியும் பேசாமல் ஊமையாக இருந்தமையால், தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்க்காலில் மகனை உருட்டிவிட்டனர். உமைபாகன் மீது தேர் எறிச் சென்றப் பின்பு அவன் பேசத்தொடங்கினான். இந்த அதிசயத்தின் சாட்சியாக அவ்விடத்தில் மடம் நிறுவி தானதருமம் செய்து வந்துள்ளனர். அவர்களது மரபில் பிறந்தவர்கள் ஒன்றினைந்து திருச்செங்கோடு மலைமீது இராஜகோபுரம் அமைத்து தந்துள்ளனர்.
ஓம் நமச்சிவாய
படித்து பகிர்ந்தது
இரா .இளங்கோவன்
நெல்லிக்குப்பம்.
No comments:
Post a Comment