Monday, January 29, 2024

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலின் வெளிப்புற பிரகாரத்தில் பூம்பாவையின் சந்நிதி



பாம்பு கடித்து மரணமடைந்த பூம்பாவையை எரித்து அதன் சாம்பலையும், எலும்பையும் பாதுகாத்து வைத்திருந்தார் சிவநேசர். கபாலீஸ்வரரை நினைத்து பதிகம் பாடி பூம்பாவையை உயிர்தெழ வைத்தார் திருஞான சம்பந்தர். இந்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது.
ஆளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் அவரை சிவநேசர் அழைத்துவருகிறாராம். பாதையெல்லாம் பூக்கள். எப்போதும் ஓயாத அலைகளால் நனைந்திருக்கும் அந்த நெய்தல் நிலம் அன்று அந்த சாலையில் தூவியிருந்த மலர்களில் இருந்து சிந்திய தேன் துளிகளால் நனைந்திருந்தது. மெத்தை விரித்ததுபோல் அவ்வளவு பூக்கள்.

அதோ வந்துவிட்டது ஆளுடையபிள்ளையின் சிவிகை. பூக்களில் மிதந்த படகு போல் வந்து இறங்கியது பல்லாக்கு. அந்தச் சிவிகையிலிருந்து சிவத்தொண்டாலும் செந்தமிழ்த் தொண்டாலும் கனிந்திருந்த திருஞானசம்பந்தப் பெருமான் இறங்குகிறார். உடலிலும் நெற்றியிலும் சிவச்சின்னங்கள் தரித்து வணக்கத்துக்குரிய சிவனடியாராக சிவநேசரின் வேண்டுகோளை நிறைவேற்ற அங்கே எழுந்தருளியே விட்டார்.

சீர்காழிச் செம்மல் எதற்காக வந்திருக்கிறார் ? அவரை ஏன் சிவநேசச் செல்வர்  அழைத்து வருகிறார் என்றெல்லாம் மக்கள் கேள்வி கேட்டுக் கொண்டார்கள். ஒரு சாரார் சொன்னார்கள்,. எல்லாம் சிவநேசரின் மகள் அங்கம் பூம்பாவையை மணந்துகொள்ளத்தான். ஆனால் ஐயகோ அவள்தான் இப்போது சாம்பலாகிவிட்டாளே. ஒரு குடத்தில் பிடி சாம்பலும் எலும்புமாக மிஞ்சி இருப்பவளைக் காட்டவா அழைத்துவந்தார் என்றார்கள் சிலர்.  

சிவன் மேல் பற்று இருக்கலாம். ஆனால் பித்து அல்லவா இருந்தது அவருக்கு. அதனால் அல்லவா ஏழே வயதான தன் மகள் பூம்பாவையை சிவநெறிச் செல்வரான திருஞானசம்பந்தருக்கு மணமுடித்துத் தர விரும்பினார். அஸ்தியை வைத்து இப்போது என்ன செய்வாராம் என பேசிக்கொண்டிருந்தது மயிலை ஜனம்.

புன்னைமரங்கள் அடர்ந்து காடாக வளர்ந்திருந்தன. அங்கே மயில்கள் அகவிக் கொண்டிருந்தன. கருநீல நிறத் தோகைகளை அடர்ந்து விரித்து அங்கங்கே கருமேகம்போல் பறந்து இறங்கி்ன. கூடவே வானவில்லும் இறங்கியது போலிருந்தது.

நந்தவனத்தில் பூப்பறிக்கச் சென்றிருந்தாள் பூம்பாவாய். தோழியர் எல்லாம் நந்தியாவட்டை, செம்பருத்தி, இருவாட்சி, அந்திமந்தாரை, செவ்வரளிப்பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். மாசிப்பச்சை, மரிக்கொழுந்து, திருநூத்துப் பச்சை, துளசி, அருகம்புல், எருக்கம்பூ எல்லாமே அங்கே வளர்ந்திருந்தன. சிவனார் சிரசை அலங்கரிக்கும் சரக்கொன்றைப் பூக்களும்,ஷெண்பகப் பூக்களும் வில்வங்களும் கூட அங்கே அடர்ந்திருந்தன. புன்னை மரங்கள், கொன்றை மரங்கள், கடம்ப மரங்களும் அரணாக விளங்கின.

இவற்றின் நடுவே அந்த உந்தியாவனத்தில் பூக்களோடும் பூவையர்களோடும் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் பூம்பாவை. மயில்கள் அகவியபடி ஓடின. சின்னஞ்சிறுமியர் அவற்றின் பயம் கண்டு வெகுளியாய்ச் சிரித்தனர். அவை என்ன சொல்ல விரும்பினவோ தெரியவில்லை. ஆனால் பூம்பாவை இருந்த பக்கம் திருநூத்துப் பச்சை வாசம் அதிகமாக வீசியது.

இதென்ன இப்படி விபூதி வாசம் வீசுகிறதே. இப்படி அதிகமாக திருநூத்துப் பச்சை வீசினால் பூச்சி ( பாம்பு ) இருக்குமென அம்மா சொல்வாளே என நினைத்தபடி திரும்பினாள் பூம்பாவை. என்ன சொல்வது. சரசரவென ஒலி மட்டும்தான் கேட்டது. அந்தப் பெண்குழந்தை கண்மூடிக் கண் திறப்பதற்குள் அங்கே இருந்த புதரில் ஒளிர்ந்திருந்த கருநாகம் ஒன்று என்னவோ கருமவினைப் பயன் தீண்டுவது போல அவளைத் தீண்டி ஓடியது.

வாயில் நுரை தள்ளக் கீழே விழுந்தாள் பூக்களைப் போன்ற மென்மையான பூம்பாவை. சிவநேசச் செல்வரின் அன்பு மகள் சிவனடி சேர்ந்துவிட்டாள். செய்தி கேட்டு ஓடிவந்த சிவநேசருக்கு புத்தி பேதலித்துவிட்டது. அவர் மகள் இறந்ததை அவரால் ஒப்ப முடியவில்லை.

ஆளுடைய பிள்ளைக்கு அல்லவா மணமுடித்துத் தர எண்ணியிருந்தார். அது எப்படி நடக்காமல் போகும். அவர் வரும்வரை அவளைப் பாதுகாக்க வேண்டுமே. ஆனால் ஊரார் ஒப்பவில்லை. விஷம் பாய்ந்து நீலம் பாரித்த உடல் என்பதால் இறுதிக்கடன்களை செய்யக் கோரினர். ஊராருக்காக அவர் மகளின் உடலை எரித்தாலும் எலும்பும் சாம்பலுமான அவள் அஸ்தியை நீர் நிலைகளில் கரைக்காமல் ஒரு குடத்தில் போட்டுக் கன்னி மாடத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தார். 

அவருக்கு நம்பிக்கை இருந்தது ஆளுடையபிள்ளையிடம் ஒப்படைக்கும் வரை தாம் உயிருடன் இருக்கவேண்டும் என்று சிவனிடம் சித்தம் வைத்துக் காத்திருந்தார். ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன.

அஹா அதோ வந்துவிட்டார் ஆளுடையபிள்ளை. அது ஒரு தைப்பூசத் திருநாள். திருமயிலையே மாடவீதியில் இருந்த சிவநேசரின் வீட்டினருகில் குழுமி உள்ளது. உள்ளே அழைத்துச் சென்று சிரமபரிகாரங்கள் செய்துவித்து அதன் பின் தன் மகளின் அஸ்தி கொண்ட குடத்தை ஆளுடைய பிள்ளையிடம் ஒப்புவித்தார் சிவநேசர். கொடுப்பதற்குள் அவரது குரல் நைந்து குழம்பி அழுது நடுங்கிக் கொண்டிருந்தார்.

”இதோ எங்கள் மகள் பூம்பாவை. சிவநெறிச் செல்வரான உங்களுக்கு மணம் செய்வித்து மகிழ எண்ணினோம். ஆனால் அவளது அஸ்தியைக் கொடுக்க வேண்டியதாயிற்று. தேவரீர் அருள வேண்டும். “ என நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார்கள் பூம்பாவையின் பெற்றோர்.

பெற்றவர்களின் முகத்தைப் பார்த்தார் சம்பந்தர். திருஞானம் பெற்றவரல்லவா. திருமயிலை ஈஸ்வரன் மேல் பதினோறு பதிகங்கள் பாடலானார். முதல் பதிகமாக மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை “ என்ற பாடலைப் பாடினார். சிவனடியார்களுக்கு அமுது செய்விப்பதையும் சிவனுக்குத் தொண்டு செய்வதையும் விடுத்து மறைந்து போய்விட்டாயே பூம்பாவாய் என அவர் பதினோராம் பதிகம் பாடப் பாட அந்தக்குடத்தை உடைத்து உயிர்பெற்றெழுந்தாள் பூம்பாவை. 

ஏழுவயதுப் பெண்ணாக மறைந்த பூம்பாவை பன்னிரெண்டு வயதுக் குமரியாக சாம்பலில் இருந்து உயிர்த்தார். ஊரே பார்த்து அதிசயித்து ஆஹாஹாரம் செய்தது. யாருக்கும் பேச்சும் வரவில்லை. மூச்சும் வரவில்லை. திறந்தவாயை மூடாமல் ஆச்சர்யத்தோடு பார்த்தார்கள்.

அகமும் முகமும் ஒருங்கே மலரப் பெற்ற சிவநேசரும் அவர் மனைவியும் ஆளுடைய பிள்ளையிடம் மற்றுமொரு முறை விழுந்து வணங்கி அவளை மனைவியாக ஏற்க வேண்டுகிறார்கள்.

அப்போது சொல்கிறார் சம்பந்தர் அதைக் ஊரே உற்றுக் கேட்டது, “ சிவநேசரே நீர் பூம்பாவையைப் பெற்றவர். நானோ சிவனை வேண்டித் துதித்து அவளது அஸ்தியிலிருந்து அங்கம் கொடுத்தவன். உயிர் கொடுத்து இந்த உலகில் அவளை உலவவிட்ட பெற்றோர் நீங்கள். அவள் மரித்ததும் மீண்டும் நான் வேண்ட இறையருளால் அவள் உயிர்பெற்றாள். அக்கணமே நானும் அவளைப் பெற்றவனாகிறேன். தந்தை ஸ்தானத்தில் இருப்பதால் எனக்கும்  அவள் மகளேயாவாள் “ என்று கூறி விடுகிறார். தன் காலில் விழுந்து வணங்கும் அவளை ஆசீர்வதித்துச் செல்கிறார்.

அவர் சொல்லியது உண்மைதானே என்று ஊரே ஏற்றுக் கொள்கிறது. சிவநேசரின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டாலும் அவள் உயிர்பெற்று வந்ததே இறையருள்தானே. அதனால் சாம்பலில் உயிர்ந்த அந்த அங்கம்பூம்பாவை தன் அங்கம் தந்த சம்பந்தரையும் தந்தையாக ஏற்றுக் கொள்கிறாள். சிவத்தொண்டிற்குத் தன்னை அர்ப்பணித்து அதன் பின் இறைவன் திருவடி சேர்கிறாள்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலின் வெளிப்புற பிரகாரத்தில் பூம்பாவையின் சந்நிதி அமைந்துள்ளது. இந்த சன்னிதியின் கோபுரத்தில் பூம்பாவை உயிர்ப்பெற்று எழும் நிகழ்வு சுதை சிற்பமாக உள்ளது. இதில் திருஞானசம்பந்தர், உயிர்ப்பெற்று எழும் பூம்பாவை, பூம்பாவின் பெற்றோர்கள் உள்ளார்கள்.

திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சியை மயிலாப்பூர் தலத்தில் விழாவாக கொண்டாடுகிறார்கள். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவத்தின் 8ம் நாளின் காலையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் உற்வச சிலைகளை தீர்த்தல் குளிப்பாட்டிய பிறகு, குடத்தில் நாட்டுச்சர்க்கையை இட்டு பூம்பாவையின் சாம்பலாக கொண்டுவருகிறார்கள்.

அதன்பிறகு திருஞானசம்பந்தரின் பதிகம் ஓதப்படுகிறது. இதன் பிறகு பூம்பாவை உயிருடன் எழுந்ததாக பாவனை செய்து நிகழ்வினை முடிக்கின்றார்கள். இந்நிகழ்வினை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். 

திருஞானசம்பந்தர் அருளிய 
#பூம்பாவைத் திருப்பதிகம்:

1.மட்டிட்ட புன்னை அம்கானல் மடமயிலைக் 
கட்டு இட்டம் கொண்டான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல் கணத்தார்க்கு 
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

#பாடல் விளக்கம்‬:

பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ?.

2.மைப் பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக் 
கைப் பயந்த நீற்றான் கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள் 
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்.

பாடல் விளக்கம்‬:

பூம்பாவாய்! மைபூசப்பெற்ற ஒளி நிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைமேல் பயன் தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவ முனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ?

இவ்வாறு பூம்பாவையை தைப்பூசநாளில் திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தாக கூறப்படுகிறது.
ஓம் நமசிவாய 
படித்து பகிர்ந்தது
 இரா இளங்கோவன் 
நெல்லிக்குப்பம்

No comments:

Post a Comment

Followers

சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வு..

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் சூரிய ஒளி நேராக கருவறையிலுள்ள சிவபெருமானுடைய திருமேனி மீது விழும் அதிசய நிகழ்வினை மாதவாரியாக தலங்களின் பட்ட...